தேவமைந்தன் பிறந்ததினத்தை உலகம் மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருந்த அந்த இரவுப்பொழுதில், குளிர் அப்பியிருந்த பிரிட்டீஷ் காலத்து கல் கட்டிடத்துக்குள் நாங்கள் அமர்ந்திருந்தோம். சப்பாத்தியும், பொறித்த கோழியும், குழம்பும் எங்கள் தட்டுகளில் இருந்தன. கட்டிடத்துக்கு வெளியே, உறைபனி அடர்ந்து மூடியிருந்த மலைமுகடுகளின் முதுகுகளில் வண்ண, வண்ணமாய் நட்சத்திரங்கள், மஞ்சு மூட்டத்துக்குள் அமிழ்ந்து மங்கலாய் மின்னிக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு மலைச்சிகரத்து தேவாலயத்தில் இருந்து மணியோசையும், ஆராதனையும் சன்னமாய் கேட்டது. ‘‘ஓ.கே கேடர்ஸ். கோவைல இருந்து சீஃப் கன்சர்வேட்டர் ஆஃப் ஃபாரெஸ்ட் அடுத்த வாரம் வர்றார். அதுக்குள்ள நாம மிஷனை முடிக்கணும். இல்லைனா, நம்ம டீம் ஊருக்கு கிளம்பவேண்டியதுதான். காலையில 7 மணிக்கு கிளம்பணும். சீக்கிரம் தூங்குங்க...’’ சொல்லி விட்டு டி.எப்.ஓ. உள்ளறைக்குள் செல்ல... எழுந்து கைகளைக் கழுவி, வாயைத் துடைத்த படியே, பக்கத்தில் பனித்திரை படர்ந்திருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். கீழ் சரிவில் இருந்த போஸ்ட் ஆபீஸ் கட்டிடத்தில் மஞ்சளாய் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. வால்பாறை, சின்னகல்லார் எஸ்டேட் வன இலாகா தற்காலிக முகாம் கட்டிடத்துக்கு வந்து இன்றோடு இரண்டு வாரங்கள் முடிந்து விட்டன. இன்னமும் எங்கள் கண்களில் சிக்கவில்லை... டி 20.
(குங்குமம் கிறிஸ்துமஸ் சிறப்பிதழில் (31-12-2021) பிரசுரமான சிறுகதை)