சனி, 1 ஜனவரி, 2022

T 20!

தேவமைந்தன் பிறந்ததினத்தை உலகம் மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருந்த அந்த இரவுப்பொழுதில், குளிர் அப்பியிருந்த பிரிட்டீஷ் காலத்து கல் கட்டிடத்துக்குள் நாங்கள் அமர்ந்திருந்தோம். சப்பாத்தியும், பொறித்த கோழியும், குழம்பும் எங்கள் தட்டுகளில் இருந்தன. கட்டிடத்துக்கு வெளியே, உறைபனி அடர்ந்து மூடியிருந்த மலைமுகடுகளின் முதுகுகளில் வண்ண, வண்ணமாய் நட்சத்திரங்கள், மஞ்சு மூட்டத்துக்குள் அமிழ்ந்து மங்கலாய் மின்னிக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு மலைச்சிகரத்து தேவாலயத்தில் இருந்து மணியோசையும், ஆராதனையும் சன்னமாய் கேட்டது. ‘‘ஓ.கே கேடர்ஸ். கோவைல இருந்து சீஃப் கன்சர்வேட்டர் ஆஃப் ஃபாரெஸ்ட் அடுத்த வாரம் வர்றார். அதுக்குள்ள நாம மிஷனை முடிக்கணும். இல்லைனா, நம்ம டீம் ஊருக்கு கிளம்பவேண்டியதுதான். காலையில 7 மணிக்கு கிளம்பணும். சீக்கிரம் தூங்குங்க...’’ சொல்லி விட்டு டி.எப்.ஓ. உள்ளறைக்குள் செல்ல... எழுந்து கைகளைக் கழுவி, வாயைத் துடைத்த படியே, பக்கத்தில் பனித்திரை படர்ந்திருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். கீழ் சரிவில் இருந்த போஸ்ட் ஆபீஸ் கட்டிடத்தில் மஞ்சளாய் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. வால்பாறை, சின்னகல்லார் எஸ்டேட் வன இலாகா  தற்காலிக முகாம் கட்டிடத்துக்கு வந்து இன்றோடு இரண்டு வாரங்கள் முடிந்து விட்டன. இன்னமும் எங்கள் கண்களில் சிக்கவில்லை... டி 20.

(குங்குமம் கிறிஸ்துமஸ் சிறப்பிதழில் (31-12-2021) பிரசுரமான சிறுகதை)

ரண்டு வாரங்களுக்கு முன் வனத்துறை டிரெக்கில் வால்பாறை வந்து இறங்கும்போது இருந்த நம்பிக்கை இப்போது வெகுவாக வற்றியிருந்தது. ‘‘இது சின்னக்கல்லார் எஸ்டேட். அதிக மழைப்பொழிவு இருக்கிற டிராபிகல் ரெய்ன் ஃபாரெஸ்ட். ஆனைமலை டைகர் ரிசர்வை சேர்ந்த டைகர் டுவென்டியை உயிரோட பிடிக்கறதுதான் இங்க நம்ம மிஷன். இதுவரைக்கும் மூணு பேரை அந்த புலி கொன்னுடுச்சு. இங்க இருக்கிற மக்கள் வனத்துறை மேல ரொம்பக் கோபமா இருக்காங்க. எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அந்த ஆட்கொல்லியை நாம பிடிக்கணும்...’’ கைகளை உயர்த்திய படி மாவட்ட வன அதிகாரி உற்சாகமாகச் சொல்ல... ‘‘ஓ.கே சார்...’’ என்று ஆரவாரமாக பதில் குரல் எழுப்பினோம்.

னால், அது அவ்வளவு சுலபமான விஷயமாக இருக்கவில்லை. முழங்கால் முழுவதையும் மறைக்கிற கம் பூட்டுகள், கனத்த ஜெர்கின் மாட்டிக் கொண்டு, ஜிபிஎஸ் கருவிகள், உபகரணங்களை தூக்கிக் கொண்டு மிக அடர்ந்த, சூரிய ஒளி படாத சின்னக்கல்லார் வனப்பகுதிக்குள் சுற்றுவது எளிதான காரியமாக இல்லை. அடர்ந்த வனப்பகுதி என்பது, நாம் காண்கிற வெளியுலகம் மாதிரியானது இல்லை. வனத்துறை வாட்ச்சர்களும், ஆதிவாசி மக்களும் நடந்து, நடந்து ஏற்படுத்தி வைத்திருக்கிற சிறிய ஒற்றையடி பாதை தான் பெரும்பாலும் பயண வழித்தடம். முதல்நாள் இரவில் மழையோ, காற்றோ இருந்திருந்தால், பாதையில் மரங்கள் குறுக்கும், நெடுக்குமாக சாய்ந்து கிடக்கும். அதை அகற்றி அப்புறப்படுத்தி விட்டு எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்றே தெரியாது. அக்காமலை கிராஸ் ஹில்ஸில் இருந்து புறப்பட்டு வருகிற கோணலாற்றை ஒட்டியே ஜிபிஎஸ்சை கண்காணித்தபடியே நடந்து உள்காட்டை அணுகுவோம். மாலை 4 மணிக்கு மேல் வாகான இடம் பார்த்து, டென்ட் அடிப்போம். கையோடு எடுத்து வந்த ரேஷன் பொருட்களை பிரித்து சமையல் நடக்கும். உள்ளூர் வேட்டைத்தடுப்பு காவலர்கள் இரண்டு பேர் மரத்தில் ஏறி அமர்ந்து கண்காணிப்பார்கள், இரண்டு - மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் சின்னக்கல்லார் கேம்ப். இப்படித்தான் பொழுது போனதே தவிர... புலியின் வாசம் கூட தெரியவில்லை. கழிவுகள், காலடித்தடங்களைக் கணித்து, ‘‘ராத்திரி முழுக்க இங்கதான் திரிஞ்சிருக்கு சார்.... அநேகமா, இந்த ஏரியால தான் இருக்கணும்’’ என்பார்கள். ஏமாற்றத்துடன் திரும்புவோம்.

(குங்குமம் கிறிஸ்துமஸ் சிறப்பிதழில் (31-12-2021) பிரசுரமான சிறுகதை)

‘‘நாம கிளம்பவேண்டியதுதான். வேற டீம் வந்திடும்...’’ என்று டி.எப்.ஓ. முந்தைய இரவு சொன்னது நினைவுக்கு வந்தது. அட்டைகள் மொய்க்கிற இந்த கானகத்தில் இருந்து கிளம்புவது விடுதலையாக தோன்றினாலும், வந்த வேலையில் தோல்வியுடன் கிளம்பினால் எங்கள் குழுவுக்கு பிளாக் மார்க் விழுந்து விடும். ஜிபிஎஸ் கருவியை கண்காணித்துக் கொண்டே உள்காட்டுக்குள் நுழைந்தோம். காட்டை நன்கு அறிந்த வேட்டைத்தடுப்புக் காவலர்கள் எங்களை வழிநடத்திச் செல்ல... பகல்பொழுதை மீண்டுமொரு முறை காடு விழுங்கியது. ஏமாற்றம் தந்த களைப்புடன், குடையாய் விரிந்திருந்த கோங்கு மரத்தின் வேரில் எங்கள் குழு சாய்ந்தபோது... விதி என்னை தோளில் தட்டி எழுப்பியது.

யக்க ஊசி துப்பாக்கி, ஜிபிஎஸ் கருவி, உணவு, தண்ணீர், உபகரணங்கள் இருந்த முதுகுப்பை எல்லாவற்றையும் கழட்டி வைத்து விட்டு, பக்கத்தில் இருந்த கோணலாறு நோக்கி நடந்தேன். பச்சை பாசம் படிந்திருந்த பாறை கற்கள் வழுக்கி விடாமல் இருப்பதற்காக, கால்களை மிக அழுந்தப் பதித்து இறங்கினேன். கண்ணாடி திரவம் போல ஆறு பளீரென ஓடிக் கொண்டிருந்தது. குனிந்து, ஜில் தண்ணீரை கைநிறைய அள்ளி முகத்திலும், வியர்த்திருந்த கழுத்திலும் நனைத்த படி, கால்களை நகர்த்த குனிந்தபோது... அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. என் உடல் எடை தாங்காமல் அசைந்த நதிப்பாறையின் விளிம்புக்குள் பதுங்கியிருந்த அந்த இரண்டடி நீள விஷப்பாம்பு, ஓய்வு கலைந்த கோபத்தில் ஆவேசமாக தலைதூக்கிய படி நிமிர்ந்தது. இயல்பான மனித உணர்வுகள் உந்தித் தள்ளி, ஒரு நொடி பதறினாலும், மறு நொடியே நான் கற்றிருந்த வன பயிற்சிகள் என்னை இயல்புக்கு கொண்டு வந்தன. கால்களில் கம் பூட் இருக்கும் துணிச்சலில், பாம்பை உதைத்து ஆற்றுக்குள் தள்ளுவதற்காக, வலது காலை உயர்த்திய போது, உடலின் மொத்த பாரமும் இடதுகாலில் இறங்க... பாரம் தாங்காமல், பாசம் அப்பியிருந்த பாறை அசைந்து லேசாக வழுக்க... தடுமாறினேன். எனது வினாடி நேர தடுமாற்றத்தை பாம்பு பயன்படுத்திக் கொண்டது. தலையை இடதாய் சாய்த்து, ஷூ உறைக்கு மேலே முழங்காலில் வெடுக்கென பற்களை பதித்தது. பாம்பு கடித்த பதற்றத்தில், நான் மேலும் தடுமாற... இடதுகால் ஷூ, பாறை பாசத்தில் வழுக்கி... முதல்நாள் பெய்த மழையில் ததும்பி ஓடிக் கொண்டிருந்த கோணலாற்றின் குளிர்ந்த தண்ணீருக்குள் நிலைதடுமாறி விழுந்து, மூழ்கினேன்.


நீண்டநாள் கழித்துப் பார்க்கும் வளர்ப்பு நாய் போல, கோணலாற்று  தண்ணீர் என்னை ஆரத்தழுவி, இறுக்க அரவணைத்து அசுர பலத்துடன் தன்னுடன் இழுத்துச் சென்றது. சூழ்நிலையின் விபரீதத்தை மறுவினாடியே எனது மூளை உணர்ந்தது. இதுபோன்ற காட்டாற்றுச் சுழலில் சிக்குவது பேராபத்து. அடுத்த சிறிதுதொலைவில் இது அருவியாக பாறையில் இருந்து கீழே கொட்டலாம். அணைக்கட்டுக்குச் சென்று சேரலாம். காட்டாற்றில் எதுவும் சாத்தியம். இதுபோன்ற அபாயகரமான தருணங்களில் எப்படி தப்புவது என்று பயிற்சியின்போது கற்றுத் தந்திருக்கிறார்கள். நதியின் சுழல் மிகுந்த நடுப்பாகத்தில் இருந்து விலகி கரையை நோக்கி வருவது தான் முதலில் செய்யவேண்டிய வேலை. ஜில்லிடச் செய்யும் தண்ணீரில் கை, கால்களை முடிந்த மட்டும்  திறன்கொண்டு அசைத்து, நதியின் ஓரப்பகுதிக்கு என்னை நகர்த்திச் சென்றேன். காட்டாறுகளில் ஒரு வசதி... கரையோரங்களில் நிறைய மரக்கிளைகள் நீட்டிக் கொண்டிருக்கும். கொஞ்சநேரத்திலேயே ஒரு கிளை தட்டுப்பட்டது. நீட்டிக் கொண்டிருந்த கிளையை எக்கிப் பிடித்து, நீர்ச்சுழலின் நெருக்குப்பிடியில் இருந்து உடலை விடுவித்து இலகுவாக்கினேன். பிடித்தபடியே சில வினாடி ஆசுவாசத்திற்குப் பிறகு, மரக்கிளையை இறுகப்பற்றி, மேலே எக்கித் தாவ, முழுமையாக ஆற்றில் இருந்து எனது உடல் மேலே வந்தது. சகதி நிறைந்திருந்த கரையில் விழுந்தபோது, கண்கள் இருட்டியது. திறந்திருந்த கண்களுக்கு முன் கானகம் வட்டமடித்துச் சுற்றுவது போல கிறுகிறுத்தது. எவ்வளவு முயன்றும், இயல்புக்குத் திரும்ப முடியாமல் நினைவிழந்து மயங்கினேன். எவ்வளவு நேரம் மயங்கிக் கிடந்தேன் என்று தெரியவில்லை. மீண்டும் கண்களைத் திறந்தபோது... அவளைப் பார்த்தேன் - தயாமணி!

ண்களைத் திறந்ததும், தெரிந்த இளம்பெண்ணின் முகம் என்னை தடுமாறச் செய்தது. சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்டு, தலையை உதறிய படி எழுந்து அமர்ந்தேன். ‘‘யார் நீ...? நான் எப்படி இங்கே...?’’ வாயில் ஏதோ கசப்பாக உணர்ந்தேன். அவள் என்னை அழுத்தி தரையில் சாய்த்து மீண்டும் படுக்க வைத்தாள். ‘‘நாக்குல கசப்பா தெரியுதா?’’ கேட்டாள். ‘‘ஆமா’’ தலையை ஆட்டினேன். ‘‘அப்ப, இன்னும் கொஞ்சநேரம் படுத்திருங்க. மூலிகைச்சாறு கொடுத்திருக்கேன். வாய் கசப்பு போயிருச்சினா, எழுந்திருச்சிக்கலாம்...’’


கோணலாற்றில் இறங்கியதும், காலில் பாம்பு கடித்து, ஆற்றுக்குள் தவறி விழுந்து, மீண்டு மயங்கியதும் இப்போது ஞாபகத்துக்கு வந்தது. யார் இவள்? வாய் கசக்கிறது. மூலிகைச்சாறு கொடுத்ததாகச் சொல்கிறாள். இந்தக் காட்டில் வசிக்கும் ஆதிவாசிப் பெண்ணா? அவளைத் திரும்பிப் பார்த்தேன். அரைக்கை சட்டை போட்டு, முழுநீள பாவாடை அணிந்திருந்தாள். கருஞ்சாரைப் பாம்பு போல ஒற்றைப் பின்னலாக தலைமுடியை பின்னுக்கு தொங்க விட்டிருந்தாள். நீள்வட்ட முகத்தில் காடர் பழங்குடி களை படர்ந்திருந்தது. ‘‘நீ யார்? இங்கே என்ன செய்கிறாய்?’’ அவளிடம் திரும்பிக் கேட்டேன்.

‘‘இங்க உள்காட்டுக்குள்ள இருக்கேன். கிழங்கு எடுக்க வரும்போது நீங்க மயங்கிக் கெடக்கிறத பார்த்தேன். பாம்புக்கடி. பல்லுத்தடம் தெரிஞ்சது. நல்லவேளை... விஷப்பாம்பு இல்ல. மூலிகை அரைச்சு கொடுத்தேன். இப்பச் சரியாகிடும். என்ன... கால் வீக்கமும், கடிவாயில கடுப்பும் இருக்கும். மறுநாள் ஒரு தரம் சாறு குடிச்சா சரியாகிடும்...’’

மெல்ல எழுந்து அமர்ந்தபோது, என்ன வேலைக்காக இங்கு வந்திருக்கிறோம் என தலைக்குள் உறைத்தது. உடனே பதற்றம் தொற்றியது. ‘‘உம் பேரு என்ன?’’

‘‘தயாமணி...’’

‘‘தயாமணி, இது புலி இருக்கிற காடு தெரியுமா?’’

‘‘தெரியும். அதுக்கென்ன?’’

‘‘அதுக்கென்னவா? புலி திரியிற இடத்தில இப்படி தனியாளா நடமாடலாமா?’’

அவள் சிரித்தாள். ‘‘சரி. நீங்க யாரு?’’

‘‘என் பேரு துரை. வன இலாகா ஆளு. இங்க இருக்கிற புலியை விரட்ட வந்திருக்கேன்..’’

‘‘புலியை ஏன் விரட்டணும்?’’

‘‘என்ன பேசுற? புலி இருந்தா, இந்த காட்டுல நீயும், நானும் தைரியமா நடமாடமுடியுமா?’’

‘‘நீங்களும், நானும் நடமாடும்போது, புலி இந்தக் காட்டுல நடமாடக்கூடாதா? உண்மையா பார்த்தா, இந்தக் காட்டுல புலிக்குத்தான் அதிக உரிமை இருக்கு..’’

‘‘விபரமில்லாம பேசாத. அது மேன் ஈட்டர். ஆட்கொல்லி புலி...’’

‘‘ஆட்கொல்லின்னா... என்ன அர்த்தம்? ஒரு புலி குறைஞ்சது மூணு பேரை கொன்னு தின்னதை உறுதிபடுத்தினா மட்டும்தான அதை ஆட்கொல்லினு அறிவிக்கமுடியும்? இந்தப் புலி மூணு பேரை கொன்னு தின்னுட்டேன்னு உங்ககிட்ட வந்து சொல்லுச்சா?’’

வள் சாதாரண காட்டுப்பெண் இல்லை என புரிந்து கொண்டேன். விஷயம் தெரிந்தவளாக இருக்கிறாள். ‘‘நீ படிச்சிருக்கியா தயாமணி?’’

மேலும், கீழுமாக தலையசைத்தாள். ‘‘படிச்சிட்டு இருக்கேன். சட்டம். கோயம்புத்தூர் லா காலேஜ். இது மூணாவது வருஷம். கொரோனாவால இப்ப கிளாஸ் இல்லை. அதான் இங்க வந்திட்டேன்.’’

‘‘நீ இந்த காடர் செட்டில்மென்ட் பொண்ணா? உன் குடும்பம் இங்கியா இருக்கு?’’

‘‘ஆமா. எனக்காக நான் படிக்கலை. எங்க மக்களுக்காக படிக்கிறேன். படிப்பறிவில்லாத எங்க ஆதிவாசி மக்களை, இந்தக் காட்டை விட்டு துரத்த உங்க அதிகாரிகள் துடிக்கிறாங்க. இந்தக் காடு, எங்க உரிமை.’’

‘‘காடு ஆபத்தான இடம் தயாமணி. மிருகங்களுக்கான இடம். உங்களுக்கு வால்பாறையில, மக்கள் வசிக்கிற பகுதியில பாதுகாப்பான இடம் தர்றாங்கள்ல...?’’

‘‘உங்களுக்கு இதை வால்பாறையா மட்டும்தான தெரியும்? இது பூனாச்சிமலையா இருந்த காலத்தில இருந்து... ஏன், அதுக்கும் முன்னால இருந்து எங்களுக்குத் தெரியும். இந்தக் காட்டுல மரம்,செடி, கொடிகளும், மிருகங்களும், நாங்களும் ஆதியில இருந்து ஒண்ணாத்தான் வசிச்சிகிட்டு இருக்கோம். எங்களால அதுகளுக்கு ஆபத்து இருந்ததில்லை. அதுகளால, எங்களுக்கும் ஆபத்து இருந்ததில்லை. காட்டுல இருக்கிற எங்க ஆதிவாசி மக்கள் யாராவது புலி கடிச்சு, சிறுத்தை கடிச்சு, யானை மிதிச்சு சிகிச்சைக்கு வந்து நீங்க பார்த்திருக்கீங்களா?’’

நான் எழுந்து கொண்டேன். இவளிடம் விவாதம் செய்து நேரத்தை வீணாக்குவதற்குப் பதில், உடனடியாக இந்தக் காட்டை விட்டு வெளியேறுவதற்கான வேலையைப் பார்க்கவேண்டும். எனது குழுவுடன் சீக்கிரம் போய் இணையவேண்டும். ஆட்கொல்லி புலி இருக்கும் இந்தக் காட்டில் தனியாக இருக்கிற ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தானது.

‘தயாமணி, இப்ப எனக்கு உடம்பு பரவாயில்லை. எங்க உயர் அதிகாரிகள் சின்ன கல்லார் ஃபாரெஸ்ட் கேம்ப்ல இருக்காங்க. நான் அங்க போறதுக்கு உதவி பண்ணமுடியுமா?’’ எழுந்து நிற்க முயன்றபோது, வலதுகால் உணர்வு குன்றி பலமிழந்து தடுமாற, என்னை தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.

‘‘இப்ப போறது ஆபத்து. இன்னும் கொஞ்சநேரத்தில இருட்டீரும். இருட்டுக்குள்ள இந்தக் காட்டுல திசை கண்டுபுடிச்சு போறது கஷ்டம். இருட்டுக்குள்ள தான் மிருகங்களும் இரை தேடி வெளிய வரும். தவிர, இப்ப நீங்க நடக்கிற நிலையிலயும் இல்லை. கால் வீக்கமும், கடுப்பும் குறைய இன்னும் கொஞ்சநேரம் ஆகும். விடிஞ்சதும் போறதுதான் நல்லது...’’

நான் திடுக்கிட்டேன். ஜெர்கின் உள் பாக்கெட்டில் இருந்து செல்போன் எடுத்து ஒளிர வைத்துப் பார்த்தேன். ரேஞ்ச் சுத்தமாக இல்லை. நேரம், 2 மணி காட்டியது. உள்காடுகளில் மதியம் 2 மணி என்பது, வெளியே 6 மணிக்கு சமம். இரவானால், இன்னும் கொடூரமாக இருக்கும். நிமிர்ந்து பார்த்தேன். வெண் விரிப்பு போல பனிப்புகை காட்டை கொஞ்ச, கொஞ்சமாக மூடி மறைத்தபடி நெருங்கி, நெருங்கி வந்து கொண்டிருந்தது. பத்தடி தொலைவில் இருக்கும் மரம், மஞ்சு மூட்டத்துக்குள் மூழ்கி மறைந்திருந்தது. காடுகளைப் பற்றி அவள் சொல்வதெல்லாம் எனக்கும் தெரியும் என்றாலும், அந்தத் தருணம் எனக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியது.


‘‘இல்லை தயாமணி. என்னால இங்க இருக்கமுடியாது. மழை வேற வரும் போல இருக்கு...’’

‘‘கண்டிப்பா வரும். வரட்டுமே!’’

‘‘காட்டுமழையில ராத்திரி முழுக்க எப்படி சமாளிக்க முடியும்?’’

‘‘உங்க ஊர்ல வெயிலை சமாளிக்கிறீங்கதான?’’

‘‘வெயிலை சமாளிச்சிடலாம்.இது மழை...’’

‘‘வெயிலும், மழையும் இயற்கையோட இரண்டு பக்கங்கள். வெயிலில் நனையறது மாதிரியே, மழையிலயும் நனையலாம். தப்பில்லை. இன்னிக்கு ராத்திரி பாதுகாப்பா நீங்க தங்கறதுக்கு நான் ஏற்பாடு செய்யறேன். எங்க குடியிருப்புக்கு போலாம். பக்கம் தான். விடிஞ்சதும், எங்க ஆளுங்களே உங்களை முகாமுக்கு கொண்டு போய் விட்ருவாங்க...’’ பேசியபடியே பக்கத்தில் உடைந்து கிடந்த ஒரு கனமான பலா மரக்கிளையை எடுத்து தட்டி, உடைத்து ஊன்றுகோல் போல ஆக்கி, எனது கைகளில் கொடுத்தாள். ‘‘இந்த கம்பை வெச்சுக்கோங்க. நடந்து போறதுக்கு உதவும். புலி வந்தாலும் அடிச்சு விரட்ட தேவைப்படும்...’’ சிரித்தாள்.

‘‘புலி வந்தா, எதுக்கு அடிச்சு விரட்டணும்? என்கிட்ட ஹேண்ட் கன் இருக்கு. பெரெட்டா எம் 92. மூணு குண்டு போதும்...’’ எனது பதில் அவளது சிரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

‘‘துப்பாக்கி எதுக்கு? புலியைச் சுடுறதுக்கா...?’’

‘‘டி 20ஐ உயிரோட பிடிக்கத்தான் எங்களுக்கு உத்தரவு. ஆனா, எங்க டீம்ல இருக்கிற ஒரு ரேஞ்சருக்கு அந்த ஐடியா பிடிக்கலை. இதை உயிரோட பிடிச்சு,காப்பகத்துல வெச்சு காலம் முழுக்க சாப்பாடு போடறது வெட்டி வேலை. மேன் ஈட்டர் என்னைக்குமே ஆபத்து. அதை  கூண்டுல அடைச்சு பராமரிக்கிறது ரிஸ்க். பார்த்ததும் சுட்டுத் தள்ளிடணும்னு சொல்லுவார்...’’


வள் முகத்தில் லேசாக திகில் பரவியது. ‘‘புலியை சுட்டுக் கொல்றதுக்காகவா துப்பாக்கி வெச்சிருக்கீங்க?’’

‘‘இல்லை. இது தற்காப்புக்காக. மயக்க ஊசி போட்டுத்தான் புலியை பிடிப்போம். ஒருவேளை, சூழ்நிலை விபரீதம் ஆயிடுச்சினா...? அதுக்காகத்தான் ஹேண்ட் கன்...’’

வீங்கியிருந்த வலது கால் வலிக்க, கம்பை ஊன்றியபடி கீழே அமர்ந்தேன்.

‘‘ஆனா... 15 நாள் ஆச்சு. இதுவரை ஒரு தடவை கூட அது எங்க கண்ணுல படலை...’’ விரக்தியாக நான் பேச, ‘‘இந்த 15 நாள்ல 150 தடவை அதோட கண்ணுல நீங்க பட்டிருப்பிங்க...’’ என்றாள் என் அருகே அமர்ந்தபடி.

‘‘பிரச்னைக்கான காரணம் கண்டுபுடிக்காம, தீர்வை தேடக்கூடாது சார். அது ஏன் ஆட்கொல்லியாச்சு? காட்டை நாளுக்கு நாள் அழிச்சுகிட்டே வர்றீங்க. இந்த வால்பாறையில 70 சதவீதம் காடு இன்னிக்கு இல்லை தெரியுமா? எல்லாத்தையும் அழிச்சு தேயிலைத் தோட்டமா மாத்தி வெச்சிருக்கிங்க. பங்களா, ரிசார்ட் கட்டீட்டிங்க. உங்க வீட்டையோ, இடத்தையோ ஆக்கிரமிச்சா போலீஸ்ல புகார் செய்யறீங்க. கோர்ட்ல கேஸ் போடுறீங்க. புலி, சிறுத்தை, யானையோட இடத்தை ஆக்கிரமிக்கிறீங்களே... அதுங்க எங்க போய் புகார் கொடுக்கும்? அதோட பாதையில நீங்க குறுக்க வரலைனா, உங்க பாதையில அதுகளும் குறுக்க வராது...’’

‘‘இவ்ளோ பேசறியே... உன்னோட குடும்பத்தில ஒருத்தரை அந்த புலி தாக்கியிருந்தா இப்படி பேசுவியா? அவ்வளவு ஏன்? இப்ப உன் முன்னால அந்தப் புலி வந்தா... என்ன பண்ணுவ? போய் கொஞ்சுவியா?’’


TIGER 20... வேட்டை தொடரும்! )


- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

8 கருத்துகள்:

  1. விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. மேலும் படிக்க காத்திருக்கிறேன். தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார். இனிவரும் நாட்கள் இனியதாக அமைய வாழ்த்துகிறேன்.

      நீக்கு
  2. அருமையான திரைகதை போல் சம்பவங்கள் யாவும் கண் முன்னே திரைப்படம் போல் வருகிறது.. வாழ்த்துக்கள் சார்..

    பதிலளிநீக்கு
  3. சார் அருமை சார்... வெறுமனே கடந்து போன ஒரு செய்திக்குள், இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது. கருஞ்சாரைப்பாம்பு ஜடை, பகலை விழுங்கிய காடு, ஆற்று தண்ணீரை நீண்டநாள் கழித்து பார்க்கும் வளர்ப்பு நாயுடன் ஒப்பீடு... போன்ற உருவகங்கள் மிகவும் ரசிக்க வைக்கின்றன. ஆதிவாசிகள் வன விலங்குகளால் தாக்கப்படுவதில்லையே போன்ற வரிகள் யோசிக்க வைக்கின்றன. இது வெறும் கற்பனை கதையல்ல வனமக்களின் , வன விலங்குகளின் குரலாகவே தயாமணி கதாப்பாத்திரத்தின் குரல் ஒலிக்கிறது. அடுத்த வாரத்திற்காக காத்திருக்கிறோம் சார்.

    பதிலளிநீக்கு
  4. வால்பாறை வனத்திற்க்குள் ஓரமாக சில முறை எட்டிப்பார்த்துள்ளேன் ஆனால் இந்த கட்டுரை என்னை எட்டிப்பார்த்த அந்த காட்டிற்க்குள் அழைத்து செல்கிறது. பதட்டம் குறையாமல் அடுத்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    நன்றி சார்

    பதிலளிநீக்கு
  5. ஐயா வணக்கம், நீங்கள் கதையில் சொன்ன வால்பாறைகாரன் நான், T23 புலியை நெருக்கத்தில் பார்த்தவன் நான், உங்கள் கதை போன்று எனக்கும் அந்த அனுபவம் இருந்தது மறந்திடாத நினைவை மீண்டும் தந்தது, கதைக்கும் எனக்கும் தொடர்பு உள்ளதாகவே தோன்றியது, கதையின் திருப்பு முனையை போன்று T23 இன்னும் உயிருடன் இருக்கிறேன் ஆனால் அவனால் இனி மனித உயிர் இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கிறான்,சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...