ஞாயிறு, 9 ஜனவரி, 2022

T 20! - முடிவு

 
‘‘இ
வ்ளோ பேசறியே... உன்னோட குடும்பத்தில ஒருத்தரை அந்த புலி தாக்கியிருந்தா இப்படி பேசுவியா? அவ்வளவு ஏன்? இப்ப உன் முன்னால அந்தப் புலி வந்தா... என்ன பண்ணுவ? போய் கொஞ்சுவியா?’’

என்னை ஆழமாகப் பார்த்தபடி, கைகளை நீட்டி எழுப்பினாள். சிறிதுநேரம் எதுவும் பேசாமல் நடந்தாள். நானும் அமைதியாக அவளைப் பின்தொடர்ந்தேன். சில நிமிட மவுனம் கலைத்து, ‘‘எனக்கு முன்னால அந்தப் புலி வந்தா என்ன பண்ணுவேன்னு காட்டட்டுமா சார்?’’ என்னிடம் திரும்பி கேட்டாள்.

நான் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தேன்.

(குங்குமம் வார இதழின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பிதழ்களில் பிரசுரமான இரு வார சிறுகதையின் நிறைவுப்பகுதி)

தொடரின் முதல் பாகம் படிக்க - T 20!


(குங்குமம் வார இதழில் வெளியான T 20 இரு வார தொடர்கதையின் நிறைவுப்பகுதி)

‘‘நா
ங்க காட்டுக்குள்ள வசிக்கிற மக்கள். எங்களுக்கு தேவை அதிகமா இல்லை. அதனால ஆசையும் அதிகமா இல்லை. இந்தக் காட்டுல இருக்கிற மரத்தை எங்கள மாதிரியே உயிருள்ள ஒரு ஜீவனா நாங்க பார்க்கிறோம். வியாபார பொருளா நீங்க பார்க்கறிங்க. உங்க மேல முழு நம்பிக்கையோட கேட்கிறேன். என்னைய நம்பி, கூட வர்றிங்களா? நீங்க தேடிகிட்டிருக்கிற அந்தப் புலியை நான் காட்றேன்...’’

 ‘‘தயாமணி... என்ன சொல்ற?’’


‘‘உண்மையைத்தான் சொல்றேன். 15 நாளா தேடியும் பார்க்க முடியலைனு சொன்னீங்களே... அந்தப் புலிக்கு ரொம்பப் பக்கத்துலதான் நாம இருக்கோம். கால்ல அடிபட்டு, வேட்டையாட முடியாம உயிருக்குப் போராடுற அதை நாங்கதான் பாதுகாத்து வெச்சிருக்கோம். இப்பக்கூட காட்டுக்கோழி புடிச்சு, அதுக்கு இரையா கொடுத்துட்டு திரும்பி வர்ற வழியிலதான் மயங்கிக் கிடந்த உங்களைப் பார்த்தேன். உங்க ஜிபிஎஸ் கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பா அது ஒரு குகைக்குள்ள இருக்கு... வாங்க...’’

டுமாறிய படி நடந்த எனது கைகளை ஆதரவாகப் பற்றி, ஒரு பாறை ஏற்றத்துக்கு அழைத்துச் சென்றாள். வழித்தடம் எதுவும் இல்லாமல் மண்டிக் கிடந்த புதரை, கையில் இருந்த கம்பால் தட்டி விலக்கிய படி மெதுவாக மேலேறினோம். வலித்த காலுடன் ஏறிய போது, திடீரென ஜெர்கினுக்குள் ‘கிர்ர்ர்’ரென அதிர்வு. திரும்பிப் பார்த்தவள், ‘‘இந்த மரத்துகிட்ட செல்போன் ரேஞ்ச் கொஞ்சம் கிடைக்கும்...’’ என்றாள். கைவிட்டு எடுத்துப் பார்த்தேன். ஒரு பாயிண்ட் வந்திருந்தது. தேங்கியிருந்த வாட்ஸ்அப் மெசேஜ்கள் அடுத்தடுத்து வந்து விழுந்து கொண்டிருந்தன.


வை
ரம் பாய்ந்த குங்கிலிய மரங்களைக் கடந்து குட்டியான ஒரு பசும் சமவெளி மாதிரியான இடத்துக்கு அழைத்துச் சென்றவள், அங்கிருந்து செங்குத்தாக மேலே இருந்த மலைப்பாறையை சுட்டிக் காட்டினாள். ‘‘அந்தக் குகையை பாருங்க...’’ சொல்லி விட்டு, பாறையின் விளிம்பைப் பற்றி மேலேறி குகைக்குள் நுழைந்தாள். படபடக்கிற நெஞ்சோடு நான் குகையையே பார்த்து நிற்க... முழுதாக ஒரு நிமிடத்துக்குப் பிறகு வெளியே வந்தாள். அவளுக்குப் பின்னால்... டி 20!

ளம் ஆரஞ்ச் நிற உடலின் குறுக்காக, அகலமான கருப்புப் பட்டை கோடுகள், கருத்த காதுகளுடன் சுமாராக 3 மீட்டர் நீளத்தில் சற்றே மெலிந்து நின்றிருந்தது, 15 நாட்களாக நாங்கள் தேடிக் கொண்டிருந்த 13 வயது டி 20.

னக்கு உடல் நடுங்கியது. காட்டுக்கு அன்னியனான என்னை கூர்ந்து  பார்த்தது. அதன் கண்களில் கனிவு இல்லை. என்னையறியாமல், எனது கை, ஜெர்கினுக்குள் இருந்த பெரெட்டாவை எடுத்துக் கொண்டது.

‘‘தயாமணி... அதை குகைக்குள்ள அனுப்பிடு. நாம இங்கிருந்து உடனே போயிடலாம். 15 நாளா ராத்திரி, பகலா சரியான சாப்பாடு இல்லாம, குடும்பத்தை பிரிஞ்சு, கொசுக்கடியிலயும், அட்டைக்கடியிலயும் இந்த டி 20ஐ நாங்க தேடி அலைஞ்சுகிட்டு இருக்கோம். இதை நேருக்கு நேரா பார்த்தப் பிறகும், எங்க மேலதிகாரிகளுக்கு தகவல் சொல்லாம இருந்தா... என் மனச்சாட்சி என்னை உறங்க விடாது. நான் உடனே எங்க டீம்க்கு தகவல் அனுப்பணும்...’’

‘‘சார், வேட்டைப்புலியா இருந்திருந்தா இந்நேரம் உங்களையும், என்னையும் இது கடிச்சிருக்கணுமே? நீங்க வன இலாகா ஆளு. என்னைய விடவும் அதிகமா உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். எந்தப் புலியும் மனிதனை இரையா எப்பவும் நினைக்கிறதில்லை. தற்காப்புக்காக மட்டும்தான் மனிதரை தாக்குது. புலியையும், மிருகங்களையும், மரங்களையும், எங்களை மாதிரி ஆதிவாசி மனிதர்களையும் அழிச்சிட்டு, இந்தக் காட்டை என்ன பண்ணப் போறீங்க? இந்தக் காட்டை, கடவுள் எங்களுக்காக படைச்சிருக்கார். இங்க எங்களை அமைதியாக வாழவிடுங்க...’’

‘‘காட்டையும், இங்க உள்ள மரங்கள், செடிகள், விலங்குகளை பாதுகாக்கிறதுக்காக உருவாக்கப்பட்டதுதான் வனத்துறை. இயற்கையையும், வன விலங்குகளையும் அதிகமாக நேசிக்கிற ஆட்கள் இருக்கிற துறையும் இதுதான். இந்தப் புலியை கொல்றது எங்க நோக்கம் இல்லை. எஸ்டேட் மக்களுக்கு அச்சுறுத்தலா இருக்கிற இதை பாதுகாப்பா வனக்காப்பகத்துக்கு கொண்டு போய் சிகிச்சை கொடுக்கறதுதான் எங்க நோக்கம். அதுக்கு ஒத்துழைப்பு கொடு தயாமணி...’’ ஜெர்கினுக்குள் இருந்து செல்போனை எடுத்தேன். ஒரே ஒரு பாயிண்ட் போய், போய் வந்து கொண்டிருந்தது.

னது திடீர் கண்டிப்பு அவளுக்கு அச்சத்தை தந்திருக்க வேண்டும். ‘‘சார்... நீங்க செய்யறது துரோகம். வேண்டாம்... உங்க அதிகாரிகளுக்கு தகவல் சொல்லாதீங்க...’’ பாறை மேலிருந்து தாவி இறங்கி என்னிடம் வந்தாள். டி 20 காதுகளை கூர்மையாக்கி, எங்களை கவனித்தது. ‘‘தயாமணி, காயம் பட்ட ஒரு புலியை நீ எத்தனை நாளைக்கு பாதுகாக்க முடியும்? நாளைக்கு காலேஜ் ஆரம்பிச்சிட்டா, சட்டம் படிக்க போவியா, இதுக்கு சாப்பாடு ஆக்கிப் போடுவியா? இதுக்கு முதல்ல சிகிச்சை கொடுக்கணும்...’’ செல்போனை இயக்கி எனது லொகேஷனை டி.எப்.ஓ.வுக்கு ஷேர் செய்து, ‘‘சார்... டி 20 இஸ் ஹியர்...’’ மெசேஜ் அனுப்பவும், அவள் பாய்ந்து எனது போனை பிடுங்கவும் சரியாக இருந்தது.

‘‘சார், அனுப்பாதீங்க. டெலிட் பண்ணுங்க...’’ அவளது கையில் போன் சிக்கி விடாமல் தடுப்பதற்காக, வேறு பக்கம் நகர்ந்த படி, பாய்ந்து வந்த அவளை உதறினேன். சற்று தடுமாறியவள் மீண்டும் சுதாரித்து என்னிடம் போனை பிடுங்க வந்தாள். ‘‘அமைதியா இரு தயாமணி...’’ அவளிடம் சொல்லி முடிப்பதற்குள், முதுகு மீது பாறை விழுந்தது போல ஒரு தாக்குதல். எனக்கு முன்பாக தயாமணியின் கண்கள் திகிலில் உறைந்ததை பார்த்தபோது ஏதோ பயங்கர விபரீதம் என நொடியில் நூற்றில் ஒரு பங்கு நேரத்தில் புரிந்து, பின்னுக்குத் திரும்ப... பலவீனமான நிலையிலும் ஆக்ரோஷம் துளிக் குறையாமல் என் மீது பாய்ந்தது டி 20. ரம்பம் போன்ற கூரிய நகங்களுடன் முன்னங்கால்களால் அறைய.. எனது நெஞ்சுப்பகுதியில் ஜெர்கின் டாராக கிழிந்து, சதை பிய்ந்து ரத்தம் கொப்பளித்தது. முன்னங்கால்களால் அடித்த வேகத்தில் தூக்கி வீசப்பட்டு பின்னுக்கு விழுந்தவன்... கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் இருந்த பிஸ்டலை உயர்த்தினேன். பிஸ்டலில் இருந்து சீறிப் பாய்ந்த குண்டுகள், பிரமாண்ட மஞ்சள் பறவை போல கால்கள் உயர்த்தி என் மீது பாய்ந்த டி 20யின் கழுத்து, நெஞ்சு, வயிற்றுப் பகுதிகளில் அடுத்தடுத்து பாய... பெரிய பாறை விழுந்தது போல செத்து விழுந்தது.


ன்ன நடந்து கொண்டிருக்கிறது என்று சில வினாடிகளுக்கு எனது மூளை உணரவே இல்லை. விபரீதத்தை மூளை உணர்ந்த அடுத்த வினாடி பதறி எழுந்தேன். உடலின் பல பாகங்களிலும் சதை பிய்ந்து ரத்தம் கொட்டியது. கையில் இருந்த பிஸ்டலை தூர வீசி எறிந்தேன். எனது உடல் நடுங்கியது. ‘‘மன்னிச்சிடு தயாமணி... நான் வேணும்னு பண்ணல... என்னை மீறி நடந்திருச்சு...’’ எனக்கு வாய் குழறியது. திறந்திருந்த கண்களுடன், வாய் லேசாக பிளந்திருக்க... செத்துக் கிடந்தது 15 நாட்களாக நாங்கள் தேடிக் கொண்டிருந்த டி 20.

வள் முகம் உறைந்திருந்தது. மெதுவாக எழுந்து என்னிடம் வந்தாள். ‘‘ஒண்ணும் தப்பில்லை சார். உங்க இடத்தில நான் இருந்தாலும் இதே தான் செஞ்சிருப்பேன். நீங்க என்னை தாக்குறதா அது நினைச்சி உங்க மேல பாஞ்சிருச்சி. அதோட தலையெழுத்து அவ்வளவுதான். உங்களுக்கு ரொம்ப காயமா இருக்கு. ரத்தம் அதிகமா போகுது. உடனே நீங்க ஆஸ்பத்திரியில சேரணும்...’’ மலைச்சரிவுக்கு கீழிருந்து சலசலப்பு சத்தம் கேட்க... எட்டிப் பார்த்தாள். பிறகு என்னிடம் திரும்பி... ‘‘உங்க ஆளுங்க வர்றாங்க...’’ சட்டென சுதாரித்து எழுந்தேன். ‘‘தயாமணி... நீ இங்க இருந்து உடனே கிளம்பு...’’



‘‘இல்லை. முடியாது. உங்களை இப்படியே விடமுடியாது. உங்க ஆளுங்க மலை ஏறி வர இன்னும் இருபது நிமிஷம் ஆகும். அவங்கிட்ட உங்களை ஒப்படைக்காம போகமாட்டேன்...’’

’’தயாமணி... சொல்றதை புரிஞ்சுக்கோ. நீ உடனே இங்கிருந்து கிளம்பு. அவங்க உன்னை சந்தேகப்பட வாய்ப்பிருக்கு. நேரம் வரும்போது நானே உன்கிட்ட பேசுறேன். நீ உடனே கிளம்பு....’’ அவளை வற்புறுத்தி அனுப்பி விட்டு, இறந்து கிடந்த புலியின் உடலுக்கு அருகே தோதகத்தி மரவேரில் சாய்ந்து விழுந்தேன். என் உடலெங்கும் ஆயிரம் ஊசிகள் குத்துவது போல வலி எரிந்தது. கண்களை மூடிக் கொண்டேன்.

***

20 நாட்களுக்குப் பிறகு...

சிறுகுன்றா எஸ்டேட் மேனேஜர் பங்களா பக்கத்தில் இருந்த சிறிய மைதானத்தில் அந்த விழா நடந்து கொண்டிருந்தது. டி 20 புலி பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக, எஸ்டேட் மக்கள் வனத்துறையினருக்கு நடத்தும் பாராட்டு விழா. மேடை நாற்காலியில் அமர்ந்திருந்தேன். நான்கு நாட்களுக்கு முன்புதான் கோவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருந்தேன். டி.எப்.ஓ. நேரில் வந்திருந்தார். ‘‘ஒரு மாசம் நல்லா ஓய்வெடுத்துக்கோ. டிபார்ட்மென்ட்ல இருந்து உனக்கு ஸ்பெஷல் ரிவார்ட் அறிவிக்கப் போறாங்க. அது சஸ்பென்ஸ். சிறுகுன்றா எஸ்டேட் மக்கள் நம்ம வனத்துறைக்கு ஒரு பாராட்டு விழா நடத்தறாங்க. அந்த மக்களோட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து அதில கலந்துக்க சீஃப் கன்சர்வேட்டர்கிட்ட பர்மிஷன் வாங்கியாச்சு. நீ கட்டாயம் வந்திடு...’’ எனக்கான பொன்னாடை மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு தற்செயலாக கீழே பார்த்தபோது, கூட்டத்திலிருந்து விலகி, மரத்தடியில் அவள் - தயாமணி. மெதுவாக மேடையில் இருந்து இறங்கினேன். அவளை நோக்கிச் செல்ல... என்னைப் பார்த்ததும், அவளே என்னருகே ஓடி வந்தாள்.

‘‘சார்... உடம்பு எப்படி இருக்கு?’’

‘‘பரவாயில்லை. உண்மையைச் சொன்னா... இந்த பாராட்டு விழாவில எனக்கு இஷ்டமே இல்லை தயாமணி. டி.எப்.ஓ. சொன்னதால வந்தேன். டி 20ஐ கொன்னது இன்னமும் மனசுல உறுத்தலா இருக்கு...’’

ன்னை குறுகுறுப்பாக பார்த்தாள். ‘‘ரொம்பக் கவலைப்படாதிங்க சார். டி 20 ரொம்ப பத்திரமா, உயிரோட தான் இருக்கு...’’

திர்ச்சியுடன் அவளைப் பார்த்தேன்.

‘‘சத்தியமா சார். உடனே துப்பாக்கியை எடுத்துராதீங்க. அதை இப்ப உங்களால சுடமுடியாது. கேரளா போயிருச்சு...’’

‘‘என்ன சொல்ற...? எனக்கு புரியலை...’’

‘‘புரியிற மாதிரியே சொல்றேன். சின்னக்கல்லார் காட்டுக்குள்ள நீங்க சுட்டது வேற புலி. 13 வயசாச்சு. ரொம்ப வயசானதால, வேட்டையாட முடியலை. காட்டுமாடு முட்டி உடம்பெல்லாம் காயம். உயிருக்கு போராடிகிட்டு இருந்துச்சு. நாங்கதான் அதை அந்த குகைக்குள்ள வெச்சு இரை கொடுத்து காப்பாத்திட்டு இருந்தோம். நீங்க தேடிகிட்டு இருந்த டி 20, இளம் வயசு புலி. அதை காப்பாத்தறதுக்காக, இதை டி 20ன்னு சொல்லிட்டேன். எப்படியும் கொஞ்ச நாள்ல அதுவே செத்திருக்கும். அது தலையெழுத்து... உங்க துப்பாக்கி குண்டு பாஞ்சு செத்துருக்கு. நீங்க தேடுன டி 20 இப்ப கேரள வனப்பகுதிக்குள்ள சுத்திகிட்டிருக்கும்...’’

‘‘அடப்பாவி... நீ சொல்றது நிஜமா...?’’

‘‘சாமி சத்தியமா...’’ என்றவள்... சட்டென்று குனிந்து, கையில் இருந்த மஞ்சள் பையை பிரித்தாள்., ‘‘இந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லாம இருக்கிறதுக்காக... உங்களுக்கு இந்த அன்பளிப்பு!’’ மரத்தில் குட்டிக் குட்டி வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டிருந்த அந்த சின்ன மரச்சிலையை கொடுத்தாள்.

‘‘இது எங்க வன தெய்வம். மந்திரிச்சி கொண்டு வந்திருக்கேன். வீட்ல வெச்சிக்கோங்க. எந்தக் கெடுதலும் வராது. நல்லது நடக்கும்...’’


சி
லையை வாங்கினேன். நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது. ‘‘சந்தனம் மாதிரி இருக்கு...’’ முகர்ந்து பார்த்தேன்.

‘‘மாதிரி இல்லை... சந்தனமே தான்!’’

‘‘தயாமணி... என்ன தைரியம் உனக்கு? காட்டுல இருந்து சந்தன மரத்தை வெட்டி எனக்கே சிலை செதுக்கிக் கொடுக்கறியா? சந்தன மரக்கடத்தல் கேஸ் போடட்டுமா?’’

வள் சிரித்தாள். ‘‘இப்ப வேண்டாம். ரெண்டு வருஷம் கழிச்சு போடுங்க சார்!’’

‘‘அதென்ன ரெண்டு வருஷம்...?’’ ஆர்வமாகக் கேட்டேன்.

‘‘அப்ப நான் சட்டம் முடிச்சுடுவேனே. உங்க வனத்துறை கேஸை எல்லாம் உடைச்சு நொறுக்கீட மாட்டேன்...?’’ காற்றில் பறந்த தலைமுடியை கையால் அழுத்தியபடி முகமெல்லாம் சிரிப்புடன் அவள் சொல்ல... பக்கத்து காட்டுக்குள் இருந்து வந்த குளிர் காற்று ஜில்லென்று மனதை நிறைத்தது!

தொடரின் முதல் பாகம் படிக்க - T 20!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


11 கருத்துகள்:

  1. காட்டுக்குள் நேரடியாக பயனித்த அனுபவம் உணர்ந்தேன்.ஆண்டுகள் பலவாகி விட்டது,எழுத்துக்கள் திரைக்காட்சிகளாய் இதா போல் விழியில் விரிந்து.
    சட்டம் படிக்கட்டும் தயாமணி.உடைத்து நொறுக்கட்டும் வனச்சட்டங்களையும் வலிமையற்ற சில சட்டங்களையும்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வால்பாறையின் அடர்ந்த வனத்திற்க்குள் சென்று பயணிக்கும் அனுபம் கட்டுரையை படிக்கும் போது ஏற்படுகிறது. மேலும் தயாமணி வழியாக உங்கள் மனசாட்சி வனம் குறித்த புரிதலை மேம்படுத்துகிறது

    பதிலளிநீக்கு
  3. நேர்த்தியான நடை.அருமையான புரிதலுடன் கதைகளம் நகர்கிறது.

    பதிலளிநீக்கு
  4. வன விலங்குகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விட்டு தற்போது வன விலங்குகள் அட்டகாசம் என்று பழிபோடும் மானிடர் கூட்டத்தில் மாற்றம் ஏற்படட்டும்.
    - கதிர் செந்திலரசு, பழநி

    பதிலளிநீக்கு
  5. மேன் ஈட்டர்
    டி 20 புலி அல்ல... மனிதத்தோல் போர்த்திய நாம்
    அனிமல் ஈட்டர்...

    சட்டம் படிக்கும் தயாமணி மூலம் வன இலாகா அதிகாரிக்கு மட்டும் சவுக்கடி கொடுக்கல...

    வனத்தை வதைக்கும்
    வன ஈட்டர்கள் அனைவருக்கும் சாட்டையடி கொடுத்திருக்கீங்க சார்...

    பதிலளிநீக்கு
  6. மேன் ஈட்டர்
    டி 20 புலி அல்ல... மனிதத்தோல் போர்த்திய நாம் தான்
    அனிமல் ஈட்டர்...

    சட்டம் படிக்கும் தயாமணி மூலம் வன இலாகா அதிகாரிக்கு மட்டும் சவுக்கடி கொடுக்கல...

    வனத்தை வதைக்கும்
    வன ஈட்டர்கள் அனைவருக்கும் தான்...சவுக்கடி கொடுத்திருக்கீங்க சார்...தயாமணி மூலமா...

    பதிலளிநீக்கு
  7. அருமை சார். உங்கள் நடை என்னையும் இயற்கையோடு வாழ வைக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பதை பதைப்புடன் ஆரம்பமாகி, பக்காவான திருப்பத்துடன் முடிந்தது. சூப்பர் சார்

    பதிலளிநீக்கு
  9. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...