செல்போன்கள் மக்களின் கைகளில் சரளமாக புழங்கத் துவங்கிய காலம். சந்தையை முழுமையாக கைக்குள் வைத்திருந்தது நோக்கியா. செல்போன் பேசுகிறவர்களில் 80 சதவீதம் பேர் நோக்கியாவில் தான் பேசினார்கள். போனால் போகிறதென்று நோக்கியா விட்டு வைத்திருந்த பாக்கி 20 சதவீத வெற்றிடத்தை சாம்சங், பிலிப்ஸ் உள்ளிட்ட பிற கம்பெனிகள், சீன போன்கள் பகிர்ந்து கொண்டன. செல்போன் என்றாலே நோக்கியா என மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்த அந்த பிராண்ட்.... இன்றைக்கு இல்லை. செல்போன் மார்க்கெட்டில் அதற்கு இன்று இடமே இல்லை. காணாமல் போய் விட்டது. அசைக்க முடியாத சக்தியாக நோக்கியா வலம் வந்த தருணங்களில் குட்டி நிறுவனமாக களத்தில் இருந்த சாம்சங், இன்றைக்கு நோக்கியாவின் இடத்தை கைப்பற்றியிருக்கிறது. எப்படி நடந்தது இந்த மாற்றம்...? கணிக்க முடியாத தலைகீழ் மாற்றம்??
காலத்துக்கு ஏற்றவாறும், களத்துக்கு தக்கவாறும் தன்னை மாற்றிக் கொள்ள தவறி விட்டது நோக்கியா. சாம்சங் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் கொண்டு வந்த இரட்டை சிம் போன்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்த போது, பிடிவாதமாக ஒற்றை சிம் போன்களை மட்டுமே தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. பேட்டரி உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் பல புகார்களுக்கும் காது கொடுக்கவில்லை. பின்னர் ஒரு நாள் தனது முடிவுகளை மாற்றிக் கொண்டு இரட்டை சிம் போன்களை நோக்கியா தயாரித்து அள்ளி எடுத்து சந்தைக்கு வந்தபோது, அங்கே அதன் இடம் காணாமல் ஆகியிருந்தது. அந்த இடத்தில் சாம்சங் அழுத்தமாக அமர்ந்திருந்தது. அதன் பிறகு நோக்கியாவுக்கு மீண்டெழ வாய்ப்பே கிடைக்கவில்லை.
காங்கிரஸ்.... இனி?
செல்போன் களத்தில் நோக்கியா செய்த தவறுகளை அரசியல் களத்தில் காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறது. காலத்துக்கு ஏற்றவாறு தன்னை அந்தக் கட்சி மாற்றிக் கொள்ளவே இல்லை. சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் ஆட்சியமைத்த போதிருந்த அதே அசுர பலத்துடன் இப்போதும் இருப்பதாக நினைத்த படி அந்தக் கட்சி தேர்தல் களங்களை அணுகுகிறது. அதன் விளைவாகவே... மாநிலக் கட்சிகள் கூட மதிக்காத மகா பரிதாப நிலைக்கு இன்று தள்ளப்பட்டிருக்கிறது. காலத்திற்கேற்ப தன்னை அப்டேட் செய்து கொள்ளாத எதுவொன்றும் இங்கு நிலைத்து நிற்கமுடியாது - மனிதர்கள் உள்பட!
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுமோசமான தோல்வியை பெற்றிருக்கிறது. ஏறக்குறைய, இந்திய அரசியல் களத்தில் இனி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் என்று எதுவும் இல்லை என ஜோதிடமே தெரியாதவர்கள் கூட ஆரூடம் கணி்த்து அடித்து விடுகிற நிலைமையை இந்தத் தேர்தல் முடிவுகள் உருவாக்கியிருக்கின்றன. உண்மையில் காங்கிரசிற்கு இனி எதிர்காலமே இல்லை என்கிற ஆரூடங்கள் நிஜம்தானா? அதைத் தெரிந்து கொள்வதற்கு முன், அந்தக் கட்சிக்கு ஏன் இப்படி ஒரு அய்யோ பாவம் நிலை என குட்டியாக ஒரு ப்ளாஷ்-பேக் போகவேண்டும்.
டிரைவரை காணோமே...?
தலைவரே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற கட்சி எது என்று டிஎன்பிஎஸ்சி.யில் கேட்டால், காங்கிரஸ் என்று எழுதி விடலாம். மார்க் உறுதி. 2019 பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியால் மனம் தளர்ந்து, தலைவர் பொறுப்பை உதறினார் ராகுல் காந்தி. அன்று துவங்கி, இன்று வரைக்கும் அந்தக் கட்சிக்கு தலைவர் இல்லை. கட்சிக்கு நிரந்தரத் தலைவர் வேண்டும் என்று வலியுறுத்திய சீனியர்கள் கட்டம் கட்டப்பட்டனரே தவிர, ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்கவில்லை. இன்றைக்கு வரை, டிரைவர் இல்லாத பஸ்சாக காங்கிரஸ் ஓடிக் கொண்டிருக்கிறது.
இரண்டாவது, சரியான கூட்டணி வியூகங்கள் வகுக்காமல் தேர்தலை சந்திப்பது. கூட்டு இருந்தால் உணவுக்கு கூடுதல் ருசி கிடைப்பது போல, கூட்டணி இருந்தால் அரசியலில் கூடுதல் பலம் பெறலாம். இதைத் தெரிந்து கொள்ள பொலிடிக்கல் சயின்ஸ் படித்திருக்க வேண்டியதில்லை. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் காங்கிரஸ் தோற்ற தேர்தல்களை எல்லாம் எடுத்துப் பார்க்கும் போது, அத்தனையிலுமே கூட்டணி வியூகத்தில் கோட்டை விட்டிருப்பது பளீரென தெரியும். இப்போது நடந்த ஐந்து மாநில தேர்தலில் கூட, சரியான கூட்டணியை காங்கிரஸ் அமைந்திருந்தால், உத்தரப்பிரதேசத்தில் தாமரை மலர்ந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஈகோ பார்க்காமல் இறங்கி வந்து, அகிலேஷின் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைந்திருந்தால் வேறு ரிசல்ட் வந்திருக்கும்தானே? செய்யாதது யார் தவறு? குறைந்தது, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடனாவது கூட்டணி பேசியிருக்கலாமே? கொஞ்சம் கவுரவமான இடங்களாவது கிடைத்திருக்கும். உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தளவில், பாரதிய ஜனதாவுக்கான ஆதரவு ஓட்டுக்கள் அந்தக் கட்சிக்கு போகிறது. சரி. எதிர்ப்பு ஓட்டுக்கள் எங்கே போகிறது? அதை பகிர்ந்து கொள்ள சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஆம் ஆத்மி... என நீண்ட வரிசை நின்று கொண்டிருக்கிறது. எதிர்ப்பு ஓட்டுக்களை தட்டிப் பறிக்க ஏழெட்டு கட்சிகள் அடித்துக் கொண்டிருக்கும் வரையிலும், பாரதிய ஜனதாவை வீழ்த்துவது என்பது பகல் கனவாக மட்டுமே இருக்கமுடியும். கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் அதுதான் நடந்தது. (அதுகுறித்து விரிவாகப் படிக்க: இது, இது, டெல்லி கணக்கு!)
சிக்ஸர்.... சித்து!
காங்கிரசின் பப்பி ஷேம் பலவீனம் என்றால்... உள்ளுக்குள் அடித்துக் கொள்ளும் அந்த கோஷ்டிமோதல் பிரச்னை தான். உள்குத்து மோதல் இல்லாத மாநிலமே அந்தக் கட்சியில் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக பஞ்சாப் மாநில காங்கிரசில் நடந்த நீயா... நானா மோதல் சந்தி சிரித்தது. அங்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்தது காங்கிரஸ். பஞ்சாப்பில் மிகவும் செல்வாக்கான கட்சியும் அதுதான். அந்த செல்வாக்குக்கு வேட்டு வைத்தவர் சித்து. முதல்வராக, ஓரளவுக்கு மக்கள் ஆதரவுகடன் இருந்த அமரீந்தர் சிங்கிற்கு அதிரடி... சரவெடியாக அட்டாக் கொடுத்தார் மாஜி கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து. ஒருகட்டத்தில் குழாயடி சண்டை லெவலுக்கு இருவரும் மோதலில் இறங்க... கட்சித்தலைமை, சித்து பக்கம் சாய்ந்தது. அமரீந்தர் வெளியேறி தனிக்கட்சி கண்டார். சித்து, தனக்கு ஆதரவான சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் ஆக்கினார். அவரையாவது விட்டு வைத்தாரா என்றால்... நோ! முதல்வர் வேட்பாளராக சன்னியை அறிவித்ததும் மீண்டும் உள்குத்தில் இறங்கினார் சித்து. காங்கிரசின் இந்தத் தோல்வி அப்போதே உறுதியாகி விட்டது.
உண்மையில், இந்த ஐந்து மாநிலத் தேர்தலில் குறைந்தது பஞ்சாப்பில் மட்டுமாவது காங்கிரஸ் கட்டாயம் ஜெயித்திருக்க முடியும். வேளாண் சட்டப் பிரச்னையில் ஒட்டுமொத்த பஞ்சாப்பும், பாரதிய ஜனதாவுக்கு எதிராக அணிதிரண்டது. தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற பிரதமர் நரேந்திர மோடியை ஏரியாவுக்குள் என்ட்ரி கொடுக்கவிடாமல் திருப்பி அனுப்பிய சம்பவமெல்லாம் கூடநடந்தது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான பஞ்சாபியர்களின் இந்த ஆத்திரத்தை நியாயமாக காங்கிரஸ் இல்லையா அறுவடை செய்திருக்க வேண்டும்? ஆனால், ‘நேத்து வந்தவன் கொண்டு போனான்...’ கதையாக சம்பந்தமே இல்லாமல் ஆம் ஆத்மி ஜெயித்திருக்கிறதே? அமரீந்தர் சிங், சித்து, சரண்ஜித் சிங் சன்னி என்று மூன்று பேருமே தோற்றிருக்கிறார்களே? அப்படி என்றால், பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக காங்கிரசை ஏற்றுக் கொள்ள பஞ்சாபியர்கள் தயார் இல்லை என்பதுதானே அர்த்தம்? பஞ்சாபியர்களின் அந்த மனநிலைக்கு இந்தியாவில் ஏறக்குறைய பல மாநிலங்கள் ஏற்கனவே வந்து விட்டன. உண்மையில், இன்றைய தேதியில் தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு மாற்று யார் என்றால்.... யாருமே இல்லை! கசப்பான உண்மை இது. சரி, அப்படியானால் பாரதிய ஜனதா வீழ்த்தவே முடியாத கட்சியா?
மாவோ என்ன சொன்னார்?
நிச்சயமாக இல்லை. காங்கிரஸ் கட்சி தன்னை அரசியல் அப்டேட் செய்து கொள்ளாததும், காலத்திற்கேற்ற அணுகுமுறைகளைக் கையில் எடுக்காததுமே அடுத்தடுத்த தொடர் தோல்விகளுக்கான காரணம். பாரதிய ஜனதா முன்னெடுக்கும் அரசியலை காங்கிரசும் கையில் எடுக்கவேண்டும். ‘‘நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டுமென்பதை எனது எதிரியே தீர்மானிக்கிறான்’’ என்று மாவோ சொன்னார் இல்லையா, அதுதான் இப்போது மேட்டர். ஆளுங்கட்சியாக தினசரி பாரதிய ஜனதா மீது பல்வேறு சர்ச்சைகள். வேளாண் சட்டப் பிரச்னை, விலைவாசி உயர்வு, பெட்ரோல் - டீசல் - காஸ் விலையேற்றம், லக்கிம்பூரில் விவசாயிகளை பட்டப்பகலில், பலர் பார்க்கையில் மத்திய மந்திரி மகன் கார் ஏற்றிக் கொன்ற விவகாரம், ரபேல் ஊழல், குடியுரிமைச் சட்டம், சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல், ஹிஜாப், மாட்டுக்கறி விவகாரம், சிறுபான்மையின சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள்.... என்று தேர்தல் பிரசாரத்தில் எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள ஒன்றுக்கு பத்தாக பாரதிய ஜனதா காரர்களே கன்டென்ட் எடுத்துக் கொடுக்கிறார்கள். ஒன்றையாவது உருப்படியாக பயன்படுத்தியதா காங்கிரஸ்?
மலராத தாமரை!
‘வாக்காளப் பெருமக்களே...’ என்று மேடையில் ஏறி பிரசாரம் செய்கிற காலம் இப்போது மவுண்டைன் ஏறி விட்டது. சோஷியல் மீடியாக்கள் எனப்படுக்கிற சமூக வலைத்தளங்கள் தான் இப்போது பிரசார மேடைகள். சினிமா சிரிப்புகளை தொகுத்து துணுக்கு, துணுக்காக மீம்ஸ் கிரியேட் செய்து அட்டாக் செய்வது, இல்லாத பொல்லாத பொய்களையும் நிஜம் போலவே உருவாக்கி கட்சிகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது, அதன் மூலமாக, மக்களை யதார்த்த நிலை பற்றி சிந்திக்கவே விடாமல் செய்வது.... என சமூக வலைத்தளங்கள் மிகச் சிறந்த அரசியல் பிரசாரக் களங்களாகி விட்டன. இந்த சோஷியல் மீடியாக்களை மிகத்திறன்பட கையாண்டு அரசியல்ரீதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதில் பாரதிய ஜனதாவுக்கு இருக்கிற சாமர்த்தியத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட காங்கிரசுக்கு இல்லை. சோஷியல் மீடியாக்களில் எதிர்கட்சிகளின் காலை வாருவதற்கென்றே கன்டென்ட் மேக்கர்களை பணியமர்த்தி, கலக்கிக் கொண்டிருக்கிறது தாமரை. அதற்கு கவுன்ட்டர் கொடுக்கக் கூட வழியற்று நிற்கிறது காங்கிரஸ்.
தவிர, சித்தாந்த ரீதியிலும் பாரதிய ஜனதாவை சமாளிக்க வழியே தெரியாமல் முட்டுச்சந்தில் சிக்கியது போல முழிக்கிறது காங்கிரஸ். இந்த விஷயத்தில் தமிழகத்தில் திமுகவிடம் அவர்கள் பாடம் படிக்கலாம். கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து, ஆதரித்து, அவர்களது குரலுக்கு முழுமையாக காது கொடுப்பதில் தமிழகம், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணம். இந்து மத விரோதக் கட்சி என்று திமுக மீது தாமரையாளர்கள் முத்திரை குத்த முயன்ற போது படு லாவகமாக அதை முறியடித்தார்கள் உடன்பிறப்புகள். சட்டசபை தேர்தலின் போது, பழநியில் நடந்த பிரசார மேடையில் மு.க.ஸ்டாலின் முருகனின் வேலுடன் நின்ற காட்சி மிகச்சிறந்த உதாரணம். மட்டுமல்ல... இப்போதும் சக பகுத்தறிவுத் தோழர்கள் கண்டனக் குரல் எழுப்பினாலும் கண்டுகொள்ளாமல், மத விவகாரங்களில் படு சாமர்த்தியமான நகர்வுகளை முன்னெடுக்கிறது திமுக. சமீபத்திய மகா சிவராத்திரியின் போது தமிழக முக்கிய சிவன் கோயில்களில் கலைவிழாக்கள் நடத்தியது ஒரு உதாரணம். பாரதிய ஜனதாவையும், அதன் பிற்போக்குக் கொள்கைகளையும் மிகக் கடுமையாக எதிர்க்கும் அதே வேளையில், தங்களுக்கு எதிராக மதம் என்ற ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்து விடாதபடிக்கு நேர்த்தியான அரசியல் செய்கிறது திமுக. கம்யூனிஸ்ட்டுகள் ஆள்கிற கேரளாவில் கூட கால்பதித்த தாமரைகள், தமிழகத்தில் மலர முடியாமல் மண்டையை பிய்த்துக் கொள்வதற்கு இதுதான் காரணம்.
ஓவைசி டெக்னிக்!
பாரதிய ஜனதாவின் வியூக அரசியலை முறியடிப்பது சாதாரண விஷயமல்ல. தேர்தல்களின் போது தனக்கு எதிரான வாக்குகளை, எதிர்கட்சிக்கு செல்லும் நிச்சய வாக்குகளை வேறு பல திசைகளுக்கு பிரித்து விடும் வியூக அரசியலில் அவர்கள் கில்லாடிகள். இதற்காகவே அசாதுதீன் ஓவைசி மாதிரியான பல அரசியல்வாதிகளை அவர்கள் கையில் வைத்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் உரிமை பேசும் கட்சி என பிம்பம் வளர்த்து வைத்திருக்கும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைசி, இந்த உத்தரப்பிரதேச தேர்தலில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நூறு தொகுதிகளில் போட்டியிட்டு வாக்குகளை பிரித்தார். தொகுதிக்கு சராசரியாக 20 ஆயிரம் வாக்குகளை அவர் கட்சி பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதிகளில் எல்லாம் வெறும் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா வென்றிருக்கிறது. இந்த வாக்குகள் எதிர்கட்சிகளுக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டியவை என்பதை மறக்கக்கூடாது.
வாய்ப்பு இருக்கா...?
இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் தந்த வெற்றி குஷியில் 2024ல் நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது பாரதிய ஜனதா. இன்னும் கைமீறிப் போய் விடவில்லை. தனது தவறுகளை உடனடியாக திருத்திக் கொள்வதன் மூலம், மீண்டும் தன்னை அரசியல் களத்தில் முக்கியப் போட்டியாளராக முன்னிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு காங்கிரசிற்கு இன்னும் இருக்கிறது.
முதலில், கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை. கட்சியின் சீனியர்களுக்கு பொறுப்புப் பிரித்துக் கொடுத்து, தொடர் தோல்விகளால் மனம் தளர்ந்து போயிருக்கும் தொண்டர்களை அமைப்புரீதியாக ஒருங்கிணைத்து பலப்படுத்த வேண்டும். நாடு முழுக்க மாநிலக் கட்சிகளுடன் அமர்ந்து பேசி வலுவான கூட்டணியை கட்டமைக்கவேண்டும். இப்போதைக்கு ஒட்டுமொத்த இந்திய அளவிலும், தமிழகத்தில் மட்டும்தான் அவர்களுக்கு (பக்க) பலமான, நம்பிக்கையான கூட்டணி வாய்த்திருக்கிறது. ஆந்திராவில் ஜெகன் மோகன், மேற்கு வங்கத்தில் மம்தா, உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ், மாயாவதி, ஒடிசாவில் நவீன் பட்நாயக், பீகாரில் தேஜஸ்வி, பஞ்சாப்பில் அகாலிதளம், தெலங்கானாவில் சந்திரசேகர ராவ்... என்று மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கவேண்டும். அதுவும் 2024க்குள். தமிழகத்தில் திமுகவுடன் இருப்பது போல, இணக்கமான பரஸ்பர நட்புணர்வுடன் கூடிய கூட்டணியை உருவாக்கவேண்டும். 2024 பாராளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் தலைமையில் சந்திக்கத் தயார் என்று மம்தா பானர்ஜி பச்சைக் கொடி காட்டியிருப்பது வரவேற்கத் தக்க அம்சம். அதை திறம்பட செய்து முடிக்கக்கூடிய அனுபவமிக்க தலைவர்கள் காங்கிரசில் இருக்கிறார்கள். அவர்களது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இதைச் செய்து முடித்து விட்டால்... தமிழகத்துக்கு திமுக தந்தது போல இந்தியாவுக்கு காங்கிரஸ் விடியல் தரமுடியும். அல்லாதபட்சத்தில்... நோக்கியா போன்களைப் போல, காங்கிரஸ் கட்சியின் பெயரும் வரலாற்றில் பதிவாகி விடும் சோகம்... தவிர்க்கமுடியாதது!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
எதார்த்த நிலைமையை, கண்ணாடி போல் எடுத்துக் காட்டி விட்டீர்கள்... சபாஷ்... முறிந்த "கை" நிமிருமா என்று பார்ப்போம்
பதிலளிநீக்குஎதார்த்த நிலைமையை, கண்ணாடி போல் எடுத்துக் காட்டி விட்டீர்கள்... சபாஷ்... முறிந்த "கை" நிமிருமா என்று பார்ப்போம்
பதிலளிநீக்குமாற்றம்...? யார் தருவது? நோய்க்கு நோய் மாற்று ஆகாது.. மருந்து தான் மாற்று... இதை கட்சிகள் உணர்ந்தால்.. இந்தியாவிற்கே விடியல் பிறக்கும்... (நீங்கள் சொல்லும் விடியல் அல்ல.. 😀) மக்களை இன்னும் கட்சிகள் ஒரு ஓட்டு எந்திரமாகவே பார்க்கும் பார்வையில் மாற்றம் வந்தால் தான் விடியல் பிறக்கும் (உண்மையான)...
பதிலளிநீக்குகாங்கிரஸ் கட்சி களத்தில் பலமாகஇருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். ஆனால் காங்கிரசின் தலைவர்கள் மாறவேண்டும். இந்த கட்டுரை காங்கிரசாரின் கவனத்திற்கு செல்ல வேண்டும்.
பதிலளிநீக்குசிறுகுழந்தையாய் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான சிம்பு... ஹீரோவான பிறகு ஜீரோவானார்...
பதிலளிநீக்குமுதல்படத்தில் கேலி கிண்டலுக்குள்ளான தனுஷ்... தற்போது கோலிவுட் டூ
ஹாலிவுட் என கலக்கி கொண்டிருக்கிறார்...
தனுஷ்க்கு சினிமா மீது இருந்த வெறி... சிறுவயதிலேயே சினிமா புகழைக் கண்ட சிம்புக்கு இல்லை... பாத்ரூமில்
டப்பிங் பேசும் அளவுக்கு தொழில் பக்தி படுமட்டமானதால், ஒருதரமான வெற்றியை தர முடியாமல் தள்ளாடினார்...
சிம்பு-காங்கிரஸ்
தனுஷ்-பாஜக
சிம்பு திருந்தி திரும்பியதால் பல ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி "மாநாடு" நடத்தியுள்ளார்...
காங்கிரஸ்???
தங்கள் கட்டுரை ராகுலை சேர்ந்தடைந்தால்... 2024ல் காங்கிரஸ் வெற்றி "மாநாடு" நடத்தலாம்...
காங்.கின் நிலையும் அதை மீட்டெடுக்கும் வழியும் அருமையாக கூறப்பட்டுள்து.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅ.இருளப்பன்/திருமங்கலம்.
பதிலளிநீக்குஆழமான ஆய்வு.நல்ல அறிவுரை.
கடைசி நேரம்வரை மயிலாடுதுறை வேட்பாளர் முடிவுசெய்யாமல்
அசிங்கப்பட்டது அண்மைச்சான்று.
ராசீவ்கொலைக்குற்றச்சாட்டில் *ஏழுபேர் விடுதலை*-தொடர்பாக
த.நா.காங்.தலைவராக இருந்த அழுகரி வீண்பிடிவாதமாக எதிர்த்தார்....என்பதும் இன்னொரு சான்று.
நோக்கியாவாக அல்லாமல் ... தொலை'நோக்கி' பார்வையோடு காங்கிரஸ் செயல்பட வேண்டியது அவசியம்.
பதிலளிநீக்கு