வெள்ளி, 17 மே, 2019

கோட்சே: கொலையாளியா, தீவிரவாதியா?

நாதுராம் கோட்சே யார்? தீவிரவாதியா அல்லது வெறும் கொலையாளி தானா? இந்திய அரசியலில் ‘மய்யம்’ கொண்டு சுழல்கிற இந்தக் கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளவேண்டுமானால், அதற்கு முன்பாக வேறு சில கேள்விகளுக்கான பதிலை நாம் அறிந்திருப்பது அவசியம். தீவிரவாதிக்கும், கொலையாளிக்கும் என்ன வித்தியாசம்? யார் ரொம்ப ஆபத்து? இந்தக் கேள்விகளுக்கான பதில்களின் வாயிலாக, நாதுராம் கோட்சேவுக்கு ‘தீவிரவாதி - கொலையாளி - இரண்டில் எந்தப் பட்டம் பொருத்தமாக இருக்கும் என்று நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.


கோட்சேவுக்கு என்ன பிரச்னை?

தீவிரவாதம் (Terrorism) என்கிற ஒற்றை வார்த்தை உணர்த்த வருகிற பொருள் என்ன? அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவி மக்கள் மீது நடத்த முனைகிற தாக்குதல், அசம்பாவிதச் சம்பவங்களை தீவிரவாதம் என வரையறுக்கலாம் (unlawfully using violence and intimidation, especially against civilians, in the pursuit of political aims). இப்போது 1948, ஜனவரி 30ம் நாள் நடந்த மேட்டருக்கு வரலாம்.

காந்தியை கொல்கிற அளவுக்கு நாதுராம் கோட்சேவுக்கு என்ன பிரச்னை? கோட்சேவின் இடத்தை அத்துமீறி ஆக்கிரமித்தாரா? பணம் வாங்கி விட்டு, திரும்பக் கொடுக்காமல் இழுத்தடித்தாரா, இல்லை... கோட்சே குடும்பத்துப் பெண்களை கேலி, கிண்டல் செய்து விட்டாரா? இந்தக் கொலைக்கான மோடிவ் என்ன?


து, இரு தனிநபர்களுக்கு இடையிலான பிரச்னை அல்ல. இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான பிரச்னை. நீதிமன்றத்தில் கோட்சேவே பதிவு செய்திருக்கிறார். காந்தியின் சிறுபான்மையினர் மீதான ஆதரவு கோட்பாடு, புதிதாக உருவாக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் எனும் நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் குறித்த அழுத்தம், தேசபக்தி என்று வெற்றுக் கூச்சல் போட்டுக் கொண்டு மதவாத பயங்கரம் பரப்புகிறவர்களுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு - இவையே கொலைக்கான முக்கிய காரணிகள்.

ஸ்வீட் எடு... கொண்டாடு!காந்தி கொலை என்பது, உணர்ச்சிவசப்பட்டு, ஏதோ திடீரென நடந்து முடிந்த நிகழ்வு அல்ல. மிகத் தேர்ந்த நுணுக்கங்களுடன், திட்டமிட்டு, தீர ஒத்திகை பார்க்கப்பட்டு, ஐந்தாறு முறை குளறுபடிகளுடன் தோற்று, கடைசியாக 1948, ஜனவரி 30ல் சம்பவம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட சம்பவம். கொல்லப்பட்டதற்கான காரணம் தனிநபர் பகை இல்லை எனும்போதே, இது கொலை என்கிற குறுகிய வரையறையைக் கடந்து, அடுத்தகட்டத்திற்கு சென்று விடுவதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

னிநபர் பகை இல்லை. சரி, அப்படி என்ன சித்தாந்த ரீதியிலான பிரச்னை? காந்தி கொல்லப்பட்ட தகவல் வெளியானதும் இந்து மகாசபா, ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இனிப்புக் கொடுத்து கொண்டாடியிருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. அன்றைக்கு மட்டும் அல்ல. காந்திக்கு எதிரான ஆர்எஸ்எஸ், இந்து மத அமைப்புகளின் வன்மம் இன்றளவும் தொடர்வதை நாம் பார்க்கிறோம். இந்த ஜனவரி 30 - காந்தி நினைவு தினத்தன்று உத்தரபிரதேச மாநிலம், அலிகாரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் காந்தி உருவப்படத்தை அந்த அமைப்பின் நிர்வாகி பூஜா பாண்டே துப்பாக்கியால் சுட்டு போஸ் கொடுத்துக் கொண்டாடியதை செய்திகளில் பார்த்தோம் இல்லையா?

ஜீயரின் டென்ஷன்!


‘முதல் தீவிரவாதி இந்து...’ என்ற சர்ச்சைப் பேச்சை கண்டித்து மன்னார்குடி ஜீயர் மே 15ம் தேதி கொடுத்த கண்டன அறிக்கையின் வரிகளை ஒருமுறை கூர்ந்து கவனியுங்கள். ‘‘மகாத்மா காந்தியை, கோட்சே சுட்டுக் கொன்றது, அவரது தேசபக்தியைக் காட்டுகிறது...’’ - காந்தி மீது கோட்சே கொண்டிருந்த வன்மத்தின் நீட்சி, ஜீயரின் வார்த்தைகளில் பிரதிபலிப்பது தெரிகிறதா? அவர் மட்டுமல்ல... பெண் துறவியும், வெறுப்பு நிறைந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வரும் பாஜ நிர்வாகியுமான சாத்வி பிரக்யா சிங் ‘கோட்சே அன்றும், இன்றும், என்றும் தேசபக்தர். உண்மையான தேசபக்தர்’ என்று சர்டிபிகேட் கொடுக்கிறாரே. ஏன்? காந்தி மீது அதிதீவிர இந்துமத இயக்கங்களும், இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஏன் கொலைவெறி தணியாமல் இன்றைக்கும் கோபம் கொப்பளிக்கிறார்கள்? யோசித்ததுண்டா?

காரணம் மிக எளிமையானது. இந்து - முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியவர் காந்தி. முஸ்லீம், தலித், சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, மார்பில் குண்டு பாய்கிற நிமிடம் வரை குரல் கொடுத்தவர். குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் சாகச முயற்சியாக மட்டுமே இருந்த சுதந்திரப் போராட்டத்தை, மக்களின் போராட்டமாக மாற்றியவர் அவர். அவரது தலைமைக்குப் பிறகே இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் இஸ்லாமியர்கள், தலித்துகள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர்.

பச்சை (குத்திய) பொய்!

நாகரிகம் வளர்ந்த இந்த காலகட்டத்திலேயே மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டி ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துகிற கும்பல், அன்றைய காலகட்டத்தில் இன்னும் கோர முகத்துடன் அல்லவா அலைந்திருக்கும்? ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கிற காந்திக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டது. பலமுறை தோல்விக்குப் பிறகு, 1948, ஜனவரி 30ல் அவர்கள் கனவு மெய்ப்பட்டது.

காந்தியை சுட்டுக் கொன்றப் பிறகு அங்கிருந்து தப்புவது சாத்தியமற்றது என்பது கோட்சேவுக்கும் தெரியும். அவரை பின்னிருந்து இயக்கி, வழியனுப்பி வைத்தவர்களுக்கும் தெரியும். கொலை நடந்த மறு வினாடி கூட்டத்தில் இருப்பவர்கள் அடித்தே கொன்று விடக்கூடிய அபாயம் உண்டு. அப்படி நடந்தால், அதிலும் ஒரு சாதகமான அம்சத்தைச் சேர்த்து விடவேண்டும் என்கிற திட்டமிடலுடன், கையில் ‘இஸ்மாயில்’ என்று பச்சை குத்திக் கொண்டு போய் இந்தக் கொலையை கோட்சே நிகழ்த்தியதாகவும் தகவல்கள் உண்டு.

நேரு - பெரியார்..

வர்கள் நினைத்தது போலவே, படுகொலை நடத்தியதும், கோட்சேவை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து செம்மையாக ‘கவனித்திருக்கிறார்கள்’. போலீசார் விரைந்து வந்து மீட்டிருக்காவிட்டால், கோட்சேவுக்கும் அன்றைய தினமே இரங்கல் கூட்டம் நடத்தியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். மதவாதிகளின் படுபயங்கர முகத்தை அன்றைய தினம் நாடு பார்த்தது. காந்தி சுட்டு வீழ்த்தப்பட்ட தருணத்திலும், ‘‘காந்தியை ஒரு முஸ்லீம் கொன்று விட்டான்...’’ என்று ஒரு கும்பல், ஒத்திகை பார்த்த செயல்திட்டத்தின் படி வதந்தி பரப்பி, வன்முறைக்கான விதைகளை டெல்லியின் தெருக்களில் விதைத்தது.

ல்லவேளை. நேரு, மவுண்ட்பேட்டன் ஆகியோரின் தேர்ந்த முடிவால் ஒரு மிகப்பெரிய மதக்கலவரம் அன்றைய தேதியில் தவிர்க்கப்பட்டது. அகில இந்திய வானொலியில், ‘‘காந்தியை, கோட்சே என்னும் ஒரு இந்து சுட்டுக் கொன்று விட்டான். தேசத்தின் தந்தை இப்போது நம்மிடையே இல்லை..’’ என்று தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் தந்தை பெரியார் வானொலி மூலமாக, ‘‘காந்தியை கொன்றது முஸ்லீம் அல்ல. கோட்சே என்ற இந்து...’’ என்று பேசி மக்களுக்கு உண்மையைக் கொண்டு சேர்த்தார். காந்தியை கொன்றது ஒரு இந்து என்று தொடர்ந்து வானொலி மூலமாக அறிவித்ததன் விளைவாக, முஸ்லீம்கள் மீது அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த மிகப்பெரிய வன்முறை தவிர்க்கப்பட்டது.

மூன்று குண்டுகள்...

முஸ்லீம்களின் பாதுகாவலராக இருந்த காரணத்தால் காந்தியின் மார்பில் முதல் குண்டு பாய்ந்தது. நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே, அமெரிக்காவின் பிரபலமான ‘டைம்’ இதழுக்கு 2000ம் ஆண்டில் அளித்த பேட்டியில் இதை உறுதி செய்கிறார். கோபால் கோட்சேவிடம் ஏன் காந்தியைக் கொல்ல திட்டமிட்டீர்கள் என்று கேட்கப்பட்டது. ‘‘காந்தி ஒரு கபடதாரி. முஸ்லீம்கள், இந்துக்களை படுகொலை செய்த பின்னரும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். எவ்வளவு அதிகமாக இந்துக்கள் கொல்லப்பட்டனரோ அந்தளவு உயரப் பறந்தது அவரது மதச்சார்பின்மை கொடி...’’ என்கிறார்.

ரு இந்து தேசமாக இந்தியாவை கட்டமைக்க காந்தி பெரும் தடையாக இருந்த காரணத்தால் காந்தியின் மார்பில் இரண்டாவது குண்டு பாய்ந்தது. ‘சுதந்திர இந்தியா என்பது அனைவருக்கும் பொதுவானது...’ என்ற சமத்துவக் கொள்கையை பிரகடனப்படுத்தியதால், அவரது மார்பில் மூன்றாவது குண்டு இறங்கியது.

நிச்சயமாக இது தனிநபர் விரோதத்தாலோ, பகையாலோ நடந்த கொலை அல்ல. மாறாக, தேசத்தின் இரு பெரும் சமூகங்களுக்கு இடையே பெரு மோதலைத் தூண்டி, நாட்டை ரத்தக்களறியாக்க நடத்தப்பட்ட தேர்ந்த சதி. அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலுக்கு தீவிரவாதம் என்று பெயர். கோட்சேயும், அவரைச் சார்ந்தவர்களும் சுட்டது காந்தி என்ற தனிநபர் மீது அல்ல. சமத்துவமும், சமாதானமும் பூத்துக் குலுங்கியிருக்க வேண்டிய ஒரு தேசத்தின் கட்டமைப்பு மீது. என்பதால், கோட்சே மட்டுமல்ல... அவரது சித்தாந்தம் சார்ந்தவர்களும் கூட, சமூக ஒற்றுமைக்கு தீங்கு செய்கிற ஆபத்தான தீவிரவாதிகளே என்ற தீர்மானத்துடன், இந்தக் கட்டுரையை நாம் இங்கு நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

6 கருத்துகள்:

 1. சிறப்பு. கட்டுரை அருமை. தொடர்ந்து வெளிவரட்டும் பூனைக்குட்டி கட்டுரைகள்.

  பதிலளிநீக்கு
 2. சார் அருமை ....
  சரித்திர உண்மையை உறுதியான வரலாற்று சான்றுகளுடன் பதிவு செய்துள்ளீர்கள்...

  பதிலளிநீக்கு
 3. சார் அருமை ....
  சரித்திர உண்மையை உறுதியான வரலாற்று சான்றுகளுடன் பதிவு செய்துள்ளீர்கள்...

  பதிலளிநீக்கு
 4. "திலும் ஒரு சாதகமான அம்சத்தைச் சேர்த்து விடவேண்டும் என்கிற திட்டமிடலுடன், கையில் ‘இஸ்மாயில்’ என்று பச்சை குத்திக் கொண்டு போய் இந்தக் கொலையை கோட்சே நிகழ்த்தியதாகவும் தகவல்கள் உண்டு."
  .
  இந்த கருத்துக்கு ஆதாரம் இருக்கா ?
  சும்மா அடிச்சு விட கூடாது

  போலீஸ் கைது செய்த போது கோட்சே தன்னுடைய முழுப்பெயரையும் சொன்னார்

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...