சனி, 12 நவம்பர், 2022

ஒரு தேயிலைக் காட்டின் கதை...

மவெளி பகுதிகளில் இருந்து செல்பவர்களுக்கு மலையும், மலைசார்ந்த பகுதிகளும் மண்ணில் கிடைத்த சொர்க்கம். சிலுசிலுவென சிறு ஓடை பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்க... பச்சைக் கம்பளம் போர்த்திப் படுத்திருக்கும் மலைத் தொடர்களை சும்மா உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதும் சுகம்!

(முழுமையான வாசிப்பனுபவத்திற்கு, அகன்ற கணினித்திரையில் படிக்கவும்!)


ட்டி, கொடைக்கானலை விடவும் அதிகம் ஈர்த்திழுக்கிற மூணாறு மலைப்பிரதேசம்... இன்றைக்கிருப்பது போல ஒரு 50 - 60 வருடங்களுக்கு முன், பூலோக சொர்க்கமாக எல்லாம் இல்லை. ‘தண்ணியில்லா காட்டுக்கு மாற்றம்...’ என்ற நம்மூர் மிரட்டல் போல, ‘மழையும், கடுங்குளிரும் உள்ள மூணாறுக்கு தூக்கியடிக்கட்டுமா...’ என்று கேரளாவில் அரசாங்க ஊழியர்கள் மிரட்டப்படுகிற அளவுக்குத்தான் இந்த ஏரியாவின் நிலைமை இருந்திருக்கிறது. 50 - 60 வருடங்களுக்கு முந்தைய நிலைமையே இது என்றால்... அதற்கும் முன்பாக, 150 வருடங்களுக்கு முன் இந்த மலைக்காட்டின் நிலை எப்படி இருந்திருக்கும்?


நான் பிறந்த மண்  - பழைய மூணார்!

ன்று நாம் ரசிக்கிற இந்த அழகிய மூணாறை வடிவமைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்களது எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து உருவாக்கியவர்கள் தமிழர்கள். மூணாறில் இன்று நீக்கமற நிறைந்திருக்கும் பனிக்காற்றில்.... பல நூற்றாண்டுகளுக்கு முன் அதை உருவாக்கிய தமிழர் மூச்சுக்காற்றும் கலந்தே இருக்கிறது. மூணாறின் வரலாறும், அந்த மண்ணின் தமிழர் வரலாறும் வெவ்வேறானது அல்ல. பல நூறாண்டுகால பாரம்பரியம் கொண்ட மூணாறு தேயிலைத் தோட்டங்களின் வரலாறு தமிழில் இன்னமும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. அந்தக் குறையை ஓரளவுக்குப் போக்குகிறது ‘நான் பிறந்த மண் - பழைய மூணார்’ நூல்.


1948ல் மூணாறு மலையில் பிறந்து வளர்ந்து, இங்கேயே பள்ளி கல்வி, பாலக்காடு சித்தூரில் கல்லூரி படிப்பு முடித்து, கோவையில் மத்திய அரசுப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் டாக்டர் பி.ஆறுமுகம். 13 வருடங்களாக மகன்களுடன் அமெரிக்கா, சிங்கப்பூரில் வசிக்கும் இவர், தனது 75வது பிறந்தநாளுக்காக எழுதி வெளியிட்டுள்ள ‘நான் பிறந்த மண் - பழைய மூணார்’ இந்த மலைப்பிரதேசம் குறித்து பல அரிய, வியப்பான வரலாற்றுத் தகவல்களை பதிவு செய்கிறது. அதில் இருந்து கொஞ்சம்....


உறைந்து நிற்கும் காலம்...

மூணாறு நகரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று, காலத்தால் பழமையான கிறைஸ்ட் சர்ச். பழங்கால பிரிட்டீஷ் கட்டிடக் கலையில் உருவாகியிருக்கும் இந்த தேவாலயத்தில் காலம் இன்னமும் உறைந்து நிற்பதைக் காணமுடியும். இந்த தேவாலயம் உருவானதற்குப் பின்னணியில் ஒரு சோகக்கதை இருக்கிறது. ஹைரேஞ்ச் தேயிலைத் தோட்டத்தின் முதல் ஜெனரல் மேனேஜர் எனக் கருதப்படும் ஹென்றி மான்ஸ்பீல்ட் நைட் துரை, அவரது 24 வயது இளம் மனைவி எலியானர் இஸபெல் மே இருவரும் 1894ல் குதிரைகளில் மூணாறு நோக்கி வருகிறார்கள். வரும் வழியிலேயே இஸபெல் மே காலரா பாதிப்பு ஆளாகிறார். கடும் காய்ச்சலுடன் 1894, டிசம்பர் 20ல் மூணாறு வருகிறார்.


 இப்போது கிறைஸ்ட் சர்ச் அமைந்திருக்கும் அந்த பசும்புல்வெளி மலைக்குன்றின் அழகில் மயங்கி, அங்கேயே அமர்ந்து ரசித்திருக்கிறார்கள். இன்றைக்கு போல மருத்துவ வசதிகளற்ற காலம். மூணாறு வந்திறங்கிய சில நாட்களில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, டிசம்பர் 23ல் இஸபெல்லை காவு வாங்கி விடுகிறது காலரா. அவர் மனம் கவர்ந்த அந்த பச்சைப் புல்வெளி சரிவில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. தேயிலைத் தோட்டங்களின் வரலாறு இப்படி ஒரு சோகத்தில் தான் துவங்குகிறது. அதன் பின் இன்னும் நிறைய ஆங்கிலேயர்கள் தங்கள் இளம் வயதில் இங்கு மரணமடைகிறார்கள். அவர்களது உடல்களும் இங்கு அடக்கம் செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் பிரிட்டனில் இருந்து அவர்களது உறவினர்கள் வந்து கல்லறைகளின் முன் ஜெப ஆராதனை செய்வது வழக்கம். ஒரு கட்டத்தில், இஸபெல்லை அடக்கம் செய்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்ட ஆங்கிலேயர்கள் முடிவு செய்கிறார்கள். அதன்படி, 1905ல் துவங்கி 1911ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது இந்த சிஎஸ்ஐ  கிறைஸ்ட் சர்ச்.


பார்வதியும்... பின்னே, லட்சுமியும்...


மூணாறில் உருவான முதல் தேயிலை எஸ்டேட் என்ற பெருமைக்குரியது பார்வதி எஸ்டேட். அதன் பின்னர் உருவானது லட்சுமி எஸ்டேட். 19ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மகாராணியான மூலம் திருநாள் பார்வதி பாய் (இளைய தம்புராட்டி) பெயரில் பார்வதி எஸ்டேட் என்றும், திருவிதாங்கூர் தாய்வழி மகாராணி சேதுலட்சுமி பாய் (வலிய தம்புராட்டி) பெயரில் லட்சுமி எஸ்டேட் என்றும் பெயர் சூட்டப்பட்டது.


ஸ்டேட் பேங்க் ஆஃப் ‘திவான்’கூர்!

1936 முதல் 1947 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர் சி.பி.ராமசாமி ஐயர், தனது மனைவி சீத்தம்மாவுடன் மூணாறுக்கு வரும்போது ஹைரேஞ்ச் கிளப்பில் தங்குவது வழக்கம். திவான் முயற்சியில் உருவானதுதான் மூணாறு நகரின் மையத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் (1945).


You mean... Trout மீன்...?

தாயகம் விட்டு வந்து, ஹைரேஞ்சில் பணிபுரிந்த பிரிட்டீஷ் துரைகளின் பொழுதுபோக்கு... இங்குள்ள ஆறுகளில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது. ஸ்காட்லாந்து தேசத்தின் காலநிலையும், சுத்தமான தண்ணீரும், மூணாறு பகுதியுடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்கும். குளிர் பிரதேசங்களில், சுத்தமான தண்ணீரில் மட்டுமே வளரக்கூடிய Brown Trout, Rainbow Trout, Stock Fish உள்ளிட்ட நன்னீர் மீன் குஞ்சுகள், அவற்றின் முட்டைகளை லண்டன் மற்றும் ஸ்காட்லாந்தின் ஸ்டெர்லிங்ஷயர் பகுதிகளில் இருந்து பீப்பாய்கள் மூலம் 1909ல் கப்பல் மூலம் மதராஸ் / பம்பாய் / சிலோன் துறைமுகங்கள் வழியாக மூணாறு கொண்டு வந்து ஆற்றில் விட்டிருக்கிறார்கள். டிரவுட் மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்காக எஸ்டேட்களின் சுத்தமான நீர்நிலைகளில் மீன்குஞ்சு பண்ணைகளையும் உருவாக்கி பாதுகாத்திருக்கிறார்கள். பிற்காலத்தில், பிரிட்டீஷ் துரைமார்கள் மட்டுமே உறுப்பினராகக் கூடிய ஹைரேஞ்ச் தூண்டில் மீன்பிடிப்போர் சங்கம் (High Range Angling Association) 1933ல் உருவாக்கப்பட்டது.


புள்ள குட்டிகளை படிக்க வைங்க...

தராஸ் மகாண கவர்னராக இருந்த லார்ட் பென்ட்லாண்ட் 1916ல் மூணாறு வந்திருந்தார். அப்போது, தோட்டத்தொழிலாளர்களின் குழந்தைகளும் ஆங்கிலக் கல்வி கற்க வசதியாக ஏடிபி (Anglo Tamil Primary School) பள்ளி உருவாக்கவும், அதற்கு தேர்ந்த ஆசிரியர்களை நியமிக்கவும் உதவினார்.


எஞ்சாய்... எஞ்சாமி!

ணியாளர்களின் பொழுதுபோக்கிற்காக மனமகிழ் மன்றங்கள் துவக்கப்பட்டன. வெள்ளைக்கார துரை, மேனேஜர்களுக்காக ஹைரேஞ்ச் கிளப் (High Range Club), அலுவலக ஸ்டாப்களுக்காக கேடிஹெச்பி கிளப் (KDHP Club), ஒர்க்‌ஷாப் பணியாளர்களுக்காக ரிக்ரியேஷன் கிளப் (Workshop Recreation Club) தனித்தனியாக துவங்கப்பட்டன. அவரவர் மெம்பராக இருக்கும் கிளப்புக்கு மட்டுமே செல்லமுடியும்.


பென்னி கிரவுண்ட்... பார்க்க மறக்காதீங்க!

ரண்டாம் உலகப்போர் (1939 - 45) சமயத்தில் ஹைரேஞ்ச் மலைப்பிரதேசத்தில் பணிபுரிந்த பலரும் ஹைரேஞ்ச் பாரா மிலிட்டரியில் (ஜேம்ஸ் பின்லே கம்பெனியின் சொந்த படைப்பிரிவான Southern Province Mounted Rifles - SPMR) சேர்ந்து பணிபுரிந்தனர். இவர்களுக்கு பல பிரிட்டீஷ் ராணுவ உயர் அதிகாரிகள் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போர் பயிற்சிகள் அளித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் கலோனெல் ஜான் பென்னிகுக். ஆம்! பெரியாறு அணையைக் கட்டித் தந்த அதே பென்னிகுக் தான். இவர் பயிற்சி அளித்த மைதானம் இன்றைக்கும் பென்னி கிரவுண்ட் என்ற பெயரில் இங்கிருக்கிறது.


மறக்கமுடியாத... பங்கஜம்!

மூணாறு மக்களால் என்றைக்கும் மறக்கமுடியாத ஒரு பெயர்... பங்கஜம் தியேட்டர். 1920ல் கட்டப்பட்டது. ஹைரேஞ்சில் உள்ள எஸ்டேட்டுகள்  துவங்கி மறையூர் வரையுள்ள மக்களுக்கு உலக சினிமாக்களை அறிந்து கொள்ள கிடைத்த ஒரே வாய்ப்பு, இந்த பங்கஜம் தியேட்டர்.


அந்தக் காலத்தில் இங்கு வசித்த பிரிட்டீஷ் துரைமார்கள், அவர்களது குடும்பத்தினருக்காக, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு 7 மணிக்காட்சியாக  பிரபலமான ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும். அந்தக் காட்சியில் பால்கனி இருக்கைகள், வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும். சினிமா பார்க்க வெள்ளைக்கார துரைமார்கள் வரும் வித, விதமான வெளிநாட்டுக் கார்களை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் தியேட்டருக்கு தனியாக வருமாம். 2021ல் இந்தத் தியேட்டர் ‘சில்வர் டிப்ஸ்’ என்ற அதிநவீன சொகுசு விடுதியாக மாறிவிட்டது. ஆனாலும், பழமை மறக்காமல், தியேட்டரில் முதன்முதலில் பயன்படுத்திய புரஜெக்டர் உள்ளிட்ட சாதனங்களை இன்னும் இங்கு காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.


ஆடுபாலமும்... அருள்மணி பாலமும்!

டுபாலங்களும், இரும்பு கிராதிகளால் கட்டப்பட்ட பிரமாண்ட கர்டர் பாலங்களும் அப்போதைய மூணாறு நகருக்கு கூடுதல் அழகு சேர்த்தன. பிரிட்டீஷார் இங்கு தேயிலைத் தோட்டப் பணிகளுக்காக வந்தபோது, தங்களது போக்குவரத்து வசதிகளுக்காக குறுக்கும், நெடுக்குமாக ஓடும் ஆறுகளுக்கு மேல் ஆடுபாலங்களும், இரும்பு பாலங்களும் கட்டினர்.


ஹைரேஞ்ச் கிளப் ஆடுபாலம், மூணாறு டவுன் ஆடுபாலம் என அழகிய பாலங்கள் நிறைய இருந்தாலும், ஆலுவா ரோட்டையும், ஹைரேஞ்ச் கிளப்பையும் இணைக்கும் அருள்மணி பாலம் முக்கியமானது. இந்தப் பாலம் கட்டுமானப் பணிகளுக்காக, பாறைகளை வெடிவைத்துத் தகர்ப்பதில் நிபுணரான அருள்மணி என்பவரை மதராஸில் இருந்து அழைத்து வந்திருந்தனர். பாறைகளை வெடிவைத்துத் தகர்த்த போது எதிர்பாராதவிதமாக பயங்கர விபத்து ஏற்பட்டு அருள்மணியின் கை துண்டாகி விட்டது. நீண்ட சிகிச்சைக்குப் பிறகு மறுபிறவி எடுத்து வந்த அருள்மணி, ஒற்றைக்கையுடன் மீண்டும் பால வேலைகளில் ஈடுபட்டார். அவரது அர்ப்பணிப்பை போற்றும் விதமாக இந்தப் பாலத்துக்கு அருள்மணி பாலம் என்று பெயர் வைக்கப்பட்டது. அலுமினிய பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததால், மக்களால் இது அலுமினிய பாலம் என்று அழைக்கப்பட்டது. 2012 வரை பயன்பாட்டில் இருந்த இந்தப் பாலம், மிகவும் பலவீனமடைத்து விட்டதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது. 2013ல் பாலம் முழுமையாக இடிக்கப்பட்டு, புதிய கான்க்ரீட் பாலம் கட்டப்பட்டது. (ArulMani Bridge Conservation Project, Munnar: https://www.youtube.com/watch?v=Nqc17d7NyGU).


பச்சை தேசம்... பனிக்காற்று...!

- செவிவழிச் செய்தியாக தலைமுறைகள் கடந்து தொடரும் நூலாசிரியரின் குடும்பக் கதையுடன், இந்த மலங்காட்டு வரலாறும் சேர்த்தே பதிவு செய்யப்பட்டிருந்தாலும்... பக்கங்களுக்குள் நுழைந்ததும், அந்த பச்சை  தேயிலை தேசத்தின் பனி நிரம்பிய தூய குளிர்காற்றின் மென்மையை நுகர்ந்து உணரமுடிகிறது!

(வால்பாறை பயணத்தொடர் படிக்க: https://poonaikutti.blogspot.com/2015/03/blog-post.html#more)


- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


2 கருத்துகள்:

  1. வியக்க வைக்கும் வரலாற்றுத் தகவல்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
  2. ராமச்சந்திரன் முத்தையா21 நவம்பர், 2023 அன்று PM 8:44

    நீண்டகாலமாக விடுமுறைகளில் மூணார் செல்வது குடும்ப வழக்கம். சில வாரங்கள் முன்புதான் உடுமலையில் இருந்து சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். இந்தக் கட்டுரை படிக்கும் போது, மூணாறின் பசுமை நினைவுகளை மனதுக்குள் தூண்டி விடுகிறது. அழகான, மனதுக்குள் நிரந்தரமாக பதிந்து நிற்கும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கட்டுரையை செதுக்கியிருக்கிறீர்கள். அதுவும், ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் கொடுத்திருக்கும் தலைப்பு (உறைந்து நிற்கும் காலம்..., பார்வதியும்... பின்னே, லட்சுமியும்..., ஸ்டேட் பேங்க் ஆஃப் ‘திவான்’கூர்!, You mean... Trout மீன்...?, புள்ள குட்டிகளை படிக்க வைங்க... எஞ்சாய்... எஞ்சாமி!) இந்த கட்டுரையை இந்த நவீனகாலத்துக்கு ஏற்றதாக வடிவமைத்து காட்டுகிறது. வாழ்த்துகள் bro.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...