(2022ம் ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவின் போது குங்குமம் இதழில் - 22 04 2022 - வெளியாகி கவனம் ஈர்த்த கட்டுரை...)
தமிழகத்தில் அதிக மக்கள் கூடும் திருவிழா எது என்று வினாடி வினா போட்டிகளில் இனி கேள்வி வந்தால், உடனே சொல்லுங்கள் மதுரை, சித்திரைத் திருவிழா என்று. முழு மதிப்பெண் நிச்சயம். வருடத்தின் 12 மாதங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும் மாமதுரையில், விழாக்களின் தலைவிழா... சித்திரைத் திருவிழா!
வெளியூர், வெளிநாடுகளில் இருக்கும் மதுரை தலைக்கட்டுகள் கூட, முன்கூட்டியே விடுமுறை சொல்லி விட்டு, சரியாக சித்திரைத் திருவிழாவுக்கு ‘மதுர... குலுங்க....’ ஆஜராகி விடுகிறார்கள். என்ன காரணம்? ‘சாமியைப் பார்த்தோம்.. பிரசாதம் வாங்கினோம்... கன்னத்தில் போட்டுக் கொண்டு நகர்ந்தோம்...’ என்று கிளம்ப, இது சாதாரணத் திருவிழா அல்ல. மதுரையின் குடும்ப விழா. மதுரை மக்கள் ஒவ்வொருவரின் இல்ல விழாவும் கூட!
மதுரை சித்திரைத் திருவிழா என்பது இரு பாகங்கள் கொண்டது. மீனாட்சி திருக்கல்யாணம் முதல் பாகம். 12 நாட்கள் நடக்கும் (பங்குனி 22 - சித்திரை 3). அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என்பது இரண்டாம் பாகம். 10 நாட்கள் நடக்கும் (பங்குனி 29 - சித்திரை 8). சித்திரைத் திருவிழாவுக்கான கொடி மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்றபட்டு, நாளொரு அலங்காரத்தில், தினமொரு வாகனத்தில் சுவாமியும், அம்மனும் நான்மாடக்கூடல் வீதிகளில் வலம் வந்து, மக்களை நலம் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே... திருக்கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் மறுபக்கம் தடபுடலாக நடந்து கொண்டிருக்கும். நமது குடும்பத்தில் நெருங்கிய உறவினரின் பெண்ணோ, பையனுக்கோ திருமணம் என்றால், ஏற்பாடுகளை எப்படி இறங்கி நின்று கவனிப்போம்? அப்படி மதுரை மக்கள் ஒவ்வொருவரும் திருக்கல்யாண வேலைகளை, தங்கள் சொந்த இல்ல விழா போல எடுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். உலகின் வேறெந்தத் திருவிழாவிலும் காணக்கிடைக்காத நிகழ்வு இது.
மிகை வர்ணிப்பு அல்ல. சத்தியமான நிஜம். திருக்கல்யாணத்துக்கு முதலிரு நாட்களில் கல்யாண விருந்துக்கான ஏற்பாடுகள் நடக்கும். மதுரையின் அரசி மீனாட்சியின் கல்யாண விருந்து என்றால் சாதாரணமா? அண்ட சராசரத்துக்கும் அதிமுக்கியமான விஐபி திருமணம் இல்லையா? ஒட்டுமொத்த மதுரையும் அன்று சாப்பிட அங்குதான் வரும். திருமங்கலம், சோழவந்தான், வாடிப்பட்டி... என மதுரைக்கு பக்கத்தில் இருக்கிற அத்தனை இடங்களில் இருந்தும் வண்டி கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். அத்தனை பேருக்கும் வயிறார விருந்தளிப்பது சாதாரண விஷயமில்லையே? ஊரில் இருக்கும் அத்தனை மாஸ்டர்களை அழைத்து வந்தாலும் நடக்கிற காரியமா?
ஆனாலும், இந்த விழா எப்படி துளிப் பிசகு இல்லாமல் படு அமர்க்களமாக சாத்தியப்படுகிறது? ‘இது நம்ம வீட்டு கல்யாணம்டா...’ என்று மதுரை நகரத்தின் ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் இறங்கி வந்து வேலை பார்ப்பார்கள். காய்கறி நறுக்கும் வேலை இருக்கிறது பாருங்கள்... அந்த ஒரு உதாரணம் போதும் மதுரை மக்களின் மீனாட்சி பாசத்தை புரிந்து கொள்வதற்கு. மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கல்யாண விருந்து நகரின் பல இடங்களில் நடக்கும். பெண்கள், தாங்களாகவே முன்வந்து முதல் நாளில் இருந்து காய்கறி நறுக்கிக் கொடுப்பது, மசாலா அரைத்துத் தருவது என அமர்க்களப்படுத்துவார்கள். அவர்களைப் பொருத்தவரை, இது அவங்க வீட்டுக் கல்யாணம். மீனாட்சி என்பது, அவர்கள் குடும்பத்துப் பெண்.
![]() |
(2022ம் ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவின் போது குங்குமம் இதழில் - 22 04 2022 - வெளியாகி கவனம் ஈர்த்த கட்டுரை...) |
திருக்கல்யாணம் நடக்கிற தினத்தன்று பந்தி பரிமாறுகிற இடம் வரைக்கும் இந்த குடும்ப உறவைப் பார்க்க முடியும். சாப்பிட்டு முடிந்ததும், ‘அவங்க வீட்டுப் பெண்’ மீனாட்சிக்கு மொய் எழுதிச் செல்வதெல்லாம் வேறெந்தத் திருவிழாவிலும் பார்க்க முடியாத ஹை-லைட்.
சித்திரைத் திருவிழா என்பது எப்போது இருந்து இப்படி மதுரையின் குடும்ப விழாவாக மாறியது? அதைத் தெரிந்து கொள்ள, கொஞ்சம் வரலாறு தெரிந்து கொள்ளவேண்டியிருக்கும். போராடிக்காத, விறுவிறுப்பான வரலாறு. காரணம், மதுரை சித்திரைத் திருவிழா என்பது வெறும் புராண நிகழ்வுகளால் ஆன ஆன்மீக விழா மட்டுமே அல்ல. இதில் வரலாறும் இணைந்தே வருகிறது. மதுரை மண்ணின் நீண்ட... நெடிய வரலாற்றை காலசக்கரத்தில் புரட்டிப் பார்க்கும் போது, சித்திரைத் திருநாள் கொண்டாட்டங்களின் வரலாறும் அதில் சேர்ந்தே தொடர்வதைக் காணமுடியும்.
12 மாதங்கள்...
12 திருவிழாக்கள்
மதுரை திருவிழாக்களின் நகரம் இல்லையா? ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா இங்கு களைகட்டும். எந்த மாதத்தில், என்ன திருவிழா?
* சித்திரை: சித்திரைப் பெருந்திருவிழா
* வைகாசி: வசந்த விழா (வைகாசி விசாக விழா)
* ஆனி: ஊஞ்சல் விழா
* ஆடி: முளைக்கொட்டு விழா
* ஆவணி: பிட்டுத் திருவிழா
* புரட்டாசி: நவராத்திரி விழா
* ஐப்பசி: கோலாட்ட விழா
* கார்த்திகை: தீபவிழா
* மார்கழி: திருவாதிரை
* தை: தைப்பூசத் தெப்பத்திருவிழா
* மாசி: சகஸ்ர சங்காபிஷேக விழா
* பங்குனி: பங்குனி உத்தர விழா
சித்திரைத் திருவிழாவின் 8ம் நாள் மீனாட்சி பட்டாபிஷேகம் - செங்கோல் வழங்கும் வைபவம், 9ம் நாள் மீனாட்சி திக்கு விஜயம், 10ம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம், 11ம் நாள் தேர்த் திருவிழா, 12ம் நாள் தீர்த்தவாரி என விழா களைகட்டும்.
மதுரையின் புகழுக்கு மகுடம் சூட்டும் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என்ற இந்த குடும்ப - ஆன்மீக விழாக்கள் ஆரம்ப காலத்தில் தனித்தனியான இரு விழாக்களாகக் கொண்டாடப்பட்டன என்றால் நம்புவீர்களா? உண்மைதான்.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, மீனாட்சி திருக்கல்யாணம் மாசி மாதத்திலும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், தேனூர் கிராமம் அருகேயுள்ள வைகை ஆற்றில் சித்திரை மாதத்திலும் நடந்து கொண்டிருந்தது. தனித்தனியாக நடந்த இந்த இரு விழாக்களையும் ஒன்றாக்கியவர் மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர். சைவ - வைணவ ஒற்றுமைக்கு வித்திடும் விதமாக, இரண்டையும் ஒன்றாக்கி... சித்திரைத் திருவிழாவை, மாமதுரை போற்றும் பெருவிழாவாக்கிய பெருமை மன்னர் திருமலை நாயக்கரையே சாரும். மதுரை சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்வது என்பது, உலகின் சகல திசைகளிலும் வசிக்கும் தென்மாவட்டத் தமிழர்களின் பெருங்கனவு. வாய்ப்பிருந்தால், மாமதுரை அரசி மீனாட்சியையும், தங்கக்குதிரையில் வலம் வரும் அழகரையும் தரிசித்துச் செல்ல... காணக்கிடைக்காத அந்த பெருவாய்ப்புக்கு, நீங்களும் ஒருமுறை திட்டமிடுங்களேன்!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
தென் மாவட்டம் அதிலும் மதுரை அருகில் இருக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கே சித்திரைத் திருவிழாவின் முழு வரலாறும் தெரியாது.போவோம் பார்ப்போம் பங்கேற்போம்.மதுரை மீனாட்சியை மட்டுமல்ல மதுரை பெண்களையும் தரிசிப்போம்.ஆனால் இதன் பின்னே இவ்வளவு வரலாறும் (நீங்கள் கதை என்று கதை சொன்னாலும் ) அரிய தகவல்களை நாங்கள் அறிய தந்த தங்கள் பணி மகத்தானது.அதே போல் திருமலை நாயக்கரின் பணி மகத்தானது.அதை மறைக்காமல்,மறவாமல் நீங்கள் குறிப்பிட்டது சாலச் சிறந்தது. மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவர்ணனை ஆகா...!
பதிலளிநீக்குஅருமை பிரதர்👌🏼
பதிலளிநீக்குஅருமையாக உள்ளது அய்யா
பதிலளிநீக்கு