செவ்வாய், 7 நவம்பர், 2023

நிஷாகந்தி... - 1

லைச்சேரியில் இருந்து கண்ணனூருக்கு சாலை மார்க்க பயணம் அழகான அனுபவம். மலைச்சரிவின் மேல் அடுக்கில் கட்டிடங்கள். சற்று கீழிறங்கி தேசிய நெடுஞ்சாலை 66. அதற்கு இன்னும் கீ....ழே அலையடிக்கும் அரபிக்கடல். மலைச்சரிவின் கீழே, சாலையின் இடதுபுறம் படு ஆழத்தில் கடலையும், அலையையும் ரசித்துக் கொண்டே கண்ணனூர் சாலையில் பயணிப்பது அலாதி சுகம். தலைச்சேரியில் இருந்து ஏழாவது கிலோ மீட்டர், முழப்பிலாங்காடு கடற்கரையை ஒட்டி இருக்கிற சமுத்ரா பேலஸ் பீச் ரிசார்ட்டின் தனித்த ரெஸ்டாரெண்ட் அறையில் கடலைப் பார்த்த படி அமர்ந்திருந்தேன். எனக்கெதிரே தனுஷ். அவருக்குப் பக்கத்தில் ரெஜிஷா விஜயன்.

ஃபலூடாவை ஸ்பூனில் ருசித்தபடியே, ‘‘இந்த ஊர்... தலைச்சேரி பிரியாணி ரொம்ப, ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா?’’ என்று தனுஷ் பக்கம் திரும்பிக் கேட்டார். திரும்பிய போது, காதில் தொங்கிய சிறிய பறவை வடிவ கம்மலும் சிறகடித்துப் பறப்பது போல படபடத்துத் திரும்பியது.


வெளியே, கடலே கண்ணுக்குத் தெரியாத படிக்கு பெருமழை கொட்டிக் கொண்டிருந்தது. ‘மழை எப்போ நிற்பது... ஷூட்டிங் எப்போ தொடர்வது’ என்ற கவலை என்னை ஆக்கிரமித்திருந்தது. அதே கவலை, மேக்கப் கூட கலைத்திராத தனுஷ் முகத்திலும் தெரிந்தது

முத்ரா பேலஸ் சுவர்களுக்கு வெளியே, மேக உடைப்பு போல கொட்டிக் கொண்டிருந்த அந்த அடர்மழை, எனக்குள் கும்பாவுருட்டி இருள்காடுகளையும், அந்த காடடர்ந்த மழையையும் ஞாபகப்படுத்தியது.

‘‘மதுர சார்... என்ன ரொம்ப சீரியஸ் யோசனை?’’ தனுஷ் கேட்டார்.

‘‘பெரிய மழை இல்ல?’’

பின்னால் திரும்பி மழையின் தீவிரத்தை கவனித்து விட்டு, மீண்டும் என் பக்கம் திரும்பி , ‘‘நிக்கிறதுக்கு எப்படியும் ஒரு மணிநேரத்துக்கு மேல ஆகும் மாதிரி இருக்கே...’’ என்றார்.

‘‘இந்த மழை, எனக்குள்ள ஒரு பழைய சம்பவத்தை ஞாபகப்படுத்துது. ஒரு பத்து வருஷம் இருக்கும். ஜூலை மாசம். இப்போ கடல்ல கொட்டுது இல்லையா? அப்போ காடு. படு பயங்கரமான காடு. கண்ணை இறுக்க்க்கி மூடி நிற்கிற மாதிரி இருள் நிறைஞ்ச காடு.

ந்த இருட்டுக்குள்ள, ஆதிபூமியில பெஞ்ச மாதிரி ஒரு மழை. சாதாரண மழை இல்ல. பைபிள்ல வருமே... நோவா பேழைக்குள்ள ஏறுனதும், ‘பாதாளத்தின் ஊற்றுக்கண்கள் பிளந்தன... வானத்தின் மதகுகள் திறந்தன...’னு. அப்படி ஒரு மழை. அதில தன்னந்தனி ஆளா உயிர்பிழைக்க ஓடுன சம்பவம் ஞாபகம் வந்திருச்சி...’’

‘‘இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயமா இருக்கும் போல இருக்கே. இந்த மழை நிற்க நேரம் ஆகும். அந்த காட்டுமழை கதையைச் சொல்லுங்க சார்...’’ ஃபலூடா கோப்பையை நகர்த்தி வைத்து விட்டு, முன்னகர்ந்து கேட்டார் ரெஜிஷா விஜயன். தனுஷூம் ஆர்வமாக எனது முகத்தைப் பார்த்தார்.

***

கைகளை பின்னுக்கு கட்டிக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தபோது, கும்பாவுருட்டி வனத்துறை பங்களாவின் நீளமான தேக்கு மர நாற்காலி ஞாபகத்துக்கு வந்தது. அது நான் உதவி இயக்குனராக இருந்த நேரம். துரை என்ற எனது பெயரின் முன்பாக, ‘ம’ என்ற இனிஷியல் சேர்த்து ம.துரை என்று எழுதுவேன். அது நாளடைவில் உருமாறி மதுரை என்பதாக எனது பெயர் சினிமா வட்டாரத்தில் நிலை பெற்று விட்டது. ராமிடம் மூன்று ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு, சமுத்திரக்கனியை வைத்து முதல் படம் இயக்க வாய்ப்புக் கிடைத்திருந்த நேரம். படப்பிடிப்பு துவங்குவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பாக, பின்னணி இசை தொடர்பாக யுவனிடம் பேசி விட்டு எழுந்த போது திடீரென கண்கள் இருட்டி, மயங்கி விழுந்தேன்.

பிரெய்ன் எம்ஆர்ஐ, இன்னும் நிறைய சோதனைகள் செய்து முடித்து விட்டு, ‘‘மூளையில சின்னதா ஒரு கட்டி. ஆபரேஷன் அளவுக்கு போகாதுனு நம்புவோம். நான் கொடுக்கிற மாத்திரை சாப்பிடுங்க. ஒரு மாதம் கம்ப்ளீட் ரெஸ்ட் கட்டாயம். ஒரு மாசம் கழிச்சு வாங்க. இன்னொரு ஸ்கேன் பாத்துட்டு அப்றம் முடிவு பண்ணலாம்...’’ என்றார் டாக்டர். சினிமாவில் முதல்பட வாய்ப்பு துவங்கும் நேரத்தில் வந்த எம்ஆர்ஐ பேரிடி, என்னை நிலைகுலையச் செய்தது. ‘‘கவலைப்படாதீங்க தலைவா. கால்ஷீட் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். நல்லா குணமாகி திரும்புங்க...’’ என்று தோளில் தட்டினார் சமுத்திரகனி.

‘‘ரொம்ப மனசைப் போட்டு குழப்பாத. சரியாகிடும்னு நம்பு. ஒரு மாசம் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நல்லா எனர்ஜியோட திரும்ப வந்து ஷூட் ஸ்டார்ட் பண்ணு...’’ என்றான் படத்தின் கேமராமேன் வினய் மேனன்.

வனுக்கும் இது முதல் படம். கொஞ்சம் யோசித்தவன், ‘‘துரை, நீ ஏன் கும்பாவுருட்டி ஃபாரஸ்ட் போகக்கூடாது? எந்த டிஸ்டர்பன்ஸூம் இருக்காது. ஒரு மாசம் நல்லா ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாமே...’’ என்றான்.

து நல்ல யோசனையாக எனக்குப் பட்டது. கும்பாவுருட்டி அருவி இருக்கும் அச்சன்கோவில் வனச்சரகத்தில் அவனது தம்பி விஜய் மேனன் வன அதிகாரியாக இருக்கிறான். ஏற்கனவே லொகேஷன் பார்க்க போயிருந்தபோது, அவனுடன் அறிமுகம் இருக்கிறது. மறுநாளே செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஏறி விட்டேன். ஸ்டேஷனுக்கே வந்திருந்தான் விஜய்.

‘‘வினய் பேசியிருந்தான். கும்பாவுருட்டி பாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு பத்து நாள் தங்கி ரெஸ்ட் எடுங்கண்ணா. ஒரு ரேஞ்சர், ரெண்டு கார்டு அங்க இருக்காங்க. உங்களை அவங்க பார்த்துப்பாங்க...’’ - வனத்துறை வாகனத்திலேயே ஏற்றி அனுப்பி வைத்தான்.

கும்பாவுருட்டி அருவியில் இருந்து மிக அடர்ந்த காடுகளுக்குள் ஒரு மூன்று கிலோ மீட்டர் பயணித்தால் ஆளரவமற்ற, பிரமாண்ட குங்கிலியம் மரங்கள் சூழ்ந்த உள்காட்டுக்குள் கேரள வனத்துறை கெஸ்ட் ஹவுஸ். அது அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை. பிரிட்டீஷ் காலத்து பழமையானது. சிறியது. ஆனாலும், பிடித்திருந்தது.

சூரிய ஒளி புகாத அந்த அடர் வனத்துக்குள், மனிதன் என்பதையே மறந்து மரம், செடிகளுக்கு மத்தியில் நானும் ஒரு மிக எளிய உயிரினமாக முதல் நாளிலேயே மாறிக் கொள்ள முடிந்தது. ஃபாரஸ்ட் கார்டு தங்கச்சனுடன் தினமும் உணவுக்குப் பிறகு வனப்பகுதிக்குள் நீண்ட நடை சென்று வருவேன். அடர்ந்து வளர்ந்திருந்த குமிழ், மலைவேம்பு, இலுப்பை, குதிரைக் கொம்பன், செண்பக மரங்களின் கிளைகளைக் கடந்து உள்ளே நுழைய முடியாமல் சூரிய வெளிச்சம் தோற்றுப் போயிருந்தது. இரண்டாம் நாள் நடை சென்றபோது.... மிக அடர்ந்த வனத்துக்குள் அந்த சிறிய மண் குடிசையை அல்லது குடிலைக் கண்டேன்.

***

(தினகரன் தீபாவளி மலர் - 2023ல் வெளியான ‘நிஷாகந்தி’ சிறுகதையின் முழுமையான uncut version!)

னது பார்வையைக் கவனித்ததும், ‘‘அங்க ஒரு முனிவர்... சித்தர்னு உங்க ஊர்ல சொல்லுவாங்க இல்ல, அவர் இருக்கார். உருட்டிச் சித்தர்னு அவருக்கு நம்மாளுக பேரு வெச்சிருக்காங்க...’’ என்றார் தங்கச்சன்.

‘‘இந்தக் காட்டுக்குள்ள தனியாவா இருக்கார்?’’


‘‘ஆமா. அவங்கல்லாம் நம்மளை மாதிரி இல்லை. இந்த காட்டுல இருக்கிற மரம், செடி, விலங்கு மாதிரிதான் அவரும். நாங்க யாரும் அவரைப் பார்த்ததில்லை. பகல்ல வெளிய வரமாட்டார். குடில் பூட்டியே தான் கெடக்கும். நடமாட்டம் எல்லாம் ராத்திரிதான். இப்ப இல்லை... ஒரு ஆறேழு மாசம் முன்னால ஒருநாள் ராத்திரி  ரவுண்ட்ஸ் போனப்ப, வாட்ச்சர் மாரீஸ்வரன் பார்த்திருக்கார். நம்மளை மாதிரி உடலமைப்பே இல்லையாம். ஆள் ரொம்பக் குள்ளமாம். அந்த மனுஷன் கண்ணைப் பார்த்ததும், வேங்கையோட கண்ணை நேருக்கு நேரா பார்த்தது மாதிரி உதறலெடுத்திருச்சாம். அடிச்சு விழுந்து ஓடி வந்திட்டாராம். சொல்லியிருக்கார்...’’

நீண்டதூரம் நடந்தது கால் வலித்தது. அங்கிருந்த உலக மரத்தடியில் அமர்ந்து கொண்டேன். தங்கச்சன் ஃப்ளாஸ்க் திறந்து கடுங்காப்பி ஊற்றிக் கொடுத்தார். ஒரு வாய் குடித்ததும், ‘‘தங்கச்சன்... நீங்க ரவுண்ட்ஸ் போயிட்டு வாங்க. கால் ரொம்ப வலிக்குது. நான் இங்க இருக்கேன்...’’ என்றேன்.


‘‘பத்திரம் சார். இங்கயே இருங்க. ஒன் அவர்ல திரும்பிடுவேன்...’’ ஃப்ளாஸ்க்கை என்னிடம் கொடுத்து விட்டு தங்கச்சன் கிளம்பியதும், மரத்தின் முதுகில் சாய்ந்து கொண்டு... அந்த காட்டை ஆழமாகக் கவனித்தேன். தரை முழுக்க சருகுகள் அடர்ந்து கிடந்தன. ஏதாவது விலங்குகள் வந்தாலும், சரசரக்கிற சத்தம் காட்டிக் கொடுத்து விடும். தங்கச்சன் போல என்னால் நீண்டதூரங்கள் நடக்க முடிவதில்லை. என்னை ஒரு பாதுகாப்பான இடத்தில் அமர வைத்து விட்டு அவர் ரவுண்ட்ஸ் முடித்து விட்டு வருவது இந்த சில நாட்களில் வழக்கமாகி விட்டது. கையில் கட்டியிருக்கிற கடிகாரம் மணி 11 என்று காட்டியது. காட்டின் சூழல் இரவு 7 மணி போல இருந்தது. அதிகப்பட்சம் 2 மணி்க்குள் கெஸ்ட் ஹவுஸ் திரும்பி விடவேண்டும். அதற்குப் பிறகு மழை ஆரம்பித்து விடும். வனத்திற்குள் பெய்யும் மழையை கணிக்கமுடியாது. பகலில் துவங்கி, இடைவெளியின்றி முழு இரவும், மறுநாள் காலை வரையிலும் கூட கொட்டும். கும்பாவுருட்டி வந்த முதல் நாள் மழை கண்டு நான் பிரமித்த போது, ‘‘இந்த மழையெல்லாம் சாதாரணம் சார். கல்லு கரைஞ்சு போற மாதிரி அடிக்குமாக்கும்...’’ என்றார் தங்கச்சன் சிரித்தபடி.

யோசித்துக் கொண்டிருந்த போது, தொலைவில் சருகுகள் சரசரக்கிற சத்தம். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். தங்கச்சன் அதற்குள் திரும்பி வர வாய்ப்பில்லை. ஏதாவது மிருகமா...? எழுந்து, மரத்துக்குப் பின்புறம் முழுதாக மறைந்து கொண்டு மெதுவாக பார்த்தேன். கொஞ்ச தொலைவில் இருந்த ஒரு அயனி மரத்துக்கு பக்கத்தில் எனக்கு சரிக்கு சமமான உயரத்தில் அது... கரடி நின்று கொண்டிருந்தது. ஒரு நிமிடம் உள்ளுக்குள் வியர்த்தது. கரடியை தனியாக சமாளிக்கிற வித்தை என்னிடமில்லை. சருகுகளில் சத்தம் வராமல் எட்டு மேல் எட்டு வைத்து மெதுவாக அங்கிருந்து பின்னகர்ந்தேன். அப்படியும் எழுந்த சிறிய ஓசை, கரடியின் கவனத்தைத் திருப்ப... தலையைத் திருப்பி நானிருந்த உலக மரத்தின் பக்கமாக தனது பழுப்புக் கண்களால் பார்த்தது. எனக்குள் இப்போது கூடுதல் பதற்றம் தொற்றிக் கொண்டது. நடையில் லேசாக வேகம் கூட்டினேன். காட்டுக்குள் ஒரு புதிய மிருகமாக, ஏறக்குறைய அதன் சாயலில் இருந்த என்னை கவனித்ததும், அதன் நாசி சிலிர்த்தது.

முன்னங்கால்களை தூக்கி தலை உயர்த்தி என்னை கூர்ந்தது. இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் ஆபத்து என்று என மனது அலற... ஒரே ஓட்டம். பின்னால் இருந்து சருகுகளின் சரசர சத்தம் என் வேகத்தை அதிகப்படுத்தியது. முதலில் பாதுகாப்பான இடத்தை தேடிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்தபோது, சற்றுத் தள்ளி இருந்த அந்த குடில் கண்களில் பட்டது. ஒரே பாய்ச்சலாக அதை நோக்கி ஓடினேன். பலகை சட்டங்களால் மூடியிருந்தது. பலம் கொடுத்து தள்ளியதும், படக்கென திறந்து கொண்டது. உள்ளே நுழைந்து பலகை சட்டத்தை அறைந்து மூடினேன். மூடியதும் அதன் மீது முதுகு சாய்ந்து கண்களை அழுந்த மூடித் திறந்தபோது... எனக்கெதிரே அவரைப் பார்த்தேன். நிரம்பியிருந்த இருளுக்குள் கால்களை மடித்து, கண்களை மூடி அமர்ந்திருந்த அந்த மனிதர், கொஞ்சம் வித்தியாசமாக இருந்தார். தங்கச்சன் சொன்ன உருட்டிச் சித்தரா? யோசித்துக் கொண்டிருந்த போதே... அவரது கண்கள் திறந்தன. குடிலுக்குள் நிரம்பியிருந்த இருளை ஊடுருவி பார்வை என்னிடம் பாய்ந்தது.

                                                            ***


‘‘ஐயோ.... அப்றம் என்ன ஆச்சு?’’ முகத்தில் பதற்றத்துடன் கேட்டார் ரெஜிஷா.

‘‘உண்மையைச் சொன்னா, நானும் பயந்திட்டேன். கொஞ்சநேரம் முன்னால நான் பார்த்த கரடி கண்ணுக்கும், அவரோட கண்ணுக்கும் பெரிசா வித்தியாசம் தெரியலை. அதில மனிதத்தன்மை எனக்குத் தெரியல. அந்த அமானுஷ்ய கண்ணால கொஞ்சநேரம் என்னை உத்துப் பார்த்தார். அப்றம் மெதுவா கேட்டாரு... ‘ஆரு நீ?’. கரடி விரட்டின விஷயத்தைச் சொன்னேன். கையைக் காட்டி ஒரு ஓரமா உட்காரச் சொன்னாரு. இன்னொரு ஓரத்தில இருந்த பானையில இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாரு. தண்ணீர் எடுத்து கொடுத்தப்ப கவனிச்சேன். தங்கச்சன் சொன்ன மாதிரிய குள்ளமான உருவம். முழு வளர்ச்சி பெறாத மனிதன் மாதிரி இருந்தார். அவர் என்கிட்ட எதுவும் பேசலை. நம்மளை விட  ஏதோ விசேஷமா அவர்கிட்ட இருக்கலாம்னு எனக்கு தோணுச்சு. அதனால, நானே பேச்சுக் கொடுத்தேன். நிறைய கேள்விகளுக்கு பதிலே அவர்கிட்ட இருந்து வரலை. வந்தாலும் ஓரிரு வார்த்தைகளில் முடிச்சுகிட்டாரு. வித்தியாசமான மனிதர். இவர்கிட்ட பழகினா புதுசா விஷயம் தெரிஞ்சுக்கலாம்னு ஒரு சினிமா காரனா எனக்குத் தோணுச்சு...’’

‘‘இன்ட்ரஸ்டிங்கா இருக்கு தல. சித்தர்கிட்ட சிஷ்யனாவே சேர்ந்திட்டிங்களா?’’ கோப்பையில் சூடாக தேநீர் நிரப்பிக் கொண்டே தனுஷ் கேட்டார்.


‘‘நிஜம்தான். அவர் கூட கொஞ்சநாள் இருந்தா புதுசா கத்துக்கலாம். டிஃபரண்டா ஒரு கதை கூட ரெடி பண்ணிடலாம்னு தோணுச்சு. ஆனா, அது அவ்வளவு சுலபமா இல்லை. அவர் என்னை அங்க தங்க அனுமதிக்கலை. ஆனா நானும் விடலை. அடுத்த மூணு நாள், காட்டுக்குள் வரும்போது கரெக்டா இந்த உலக மரத்தடிக்கு வந்ததும், தங்கச்சனை போகச் சொல்லிட்டு, இவரோட குடிலுக்கு வந்திடுவேன். நம்ம சினிமா மாதிரிதான். முதலில் பிடிவாதமா இருந்த உருட்டி சித்தர், கொஞ்சம் இறங்கி வந்தார். நாலாவது நாள் அவர் மனசு கொஞ்சம் மாறுச்சு. அதுக்குத்தான காத்திருந்தேன். உடனே ரேஞ்சர் பங்களாவை காலி பண்ணிட்டு, குடிலுக்கு வந்திட்டேன். பகல் முழுக்க நிறையப் பேசுவோம். குடில்ல தங்கியிருந்த நான் மட்டுமில்லை... அந்த அடர்ந்த காட்டுக்குள்ள இருக்கிற மரம், செடி, புழு, பூச்சி, பறவை, விலங்கு எல்லாமே அவரோட பார்வையில ஒண்ணுதான். எல்லாமே இந்த மண்ணுல குடியிருக்கிற உயிரினம். இதுதான் அவரோட பார்வை. அந்த குடிலுக்கு வந்த நாலாவது நாள்... ராத்திரி கிழங்கு சாப்பிட்டுகிட்டு இருந்தப்ப திடீர்னு என்னை பார்த்து சொன்னாரு... நான் இந்த பூமிய விட்டு கௌம்புற சமயம் வந்தாச்சு...’’

தேநீர் கோப்பையை கீழே வைத்தார் தனுஷ். ‘‘என்னங்க கதை திடீர்னு ஜானர் மாறுது...?’’

‘‘கரெக்ட் சார். அவர் அப்படி சொன்னதும் எனக்கு எதுவும் புரியலை. ஆச்சர்யமா அவரை நிமிர்ந்து பார்த்தேன். ஒரு மரப்பட்டையை கல்லை வெச்சி இடிச்சுகிட்டே என்னைய நிமிர்த்து பார்த்தாரு. ‘அடுத்த ரண்டு நாளுல இந்த மண்ணை விட்டு போயிருவேன். காட்டுக்குள்ள அந்த வாசனை இன்னிக்கு வந்தாச்சு. இந்தக் காட்டை கட்டிப் போடப்போற வாசனை. ஆமா! என்னைய கூட்டிட்டுப் போற பூ... பூக்கப்போகுது...’ அவர், எந்தச் சலனமும் இல்லாமல் பேச, எனக்கு வியப்பு கூடியது.’’

‘‘வாசனையா? என்ன வாசனை...? என்ன பூ பூக்கப் போகுது?’’ அவரைப் பார்த்து ஆர்வமாகக் கேட்டேன்.

வர் நிமிர்ந்து என் முகத்தையும், இன்னும் கூர்ந்து என் கண்களையும் பார்த்தபடி சொன்னார்.... ‘‘நிஷாகந்தி...’’.

(அடுத்த பாகத்தில்... நிறைவடையும்!)

அடுத்த அத்தியாயம் படிக்க... நிஷாகந்தி... - 2


- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

4 கருத்துகள்:

  1. சூப்பர் பிரதர்... படித்து முடிந்த பிறகே நிஷாகந்தி நினைவின் நிஷ்டை கலைந்தது. அடுத்த பாகம் தொடரும் நிலழுலகம் திரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கொட்டும் மழையுடன் துவங்கிய கதை-கண்
    கொட்டாமல் படிக்க நினைத்தேன் அதை

    பட்டும்படாமல் கடக்க முடியவில்லை
    எட்டும் தொலைவில் காட்டின் எல்லை

    கரடி விரட்டலில் கிடுகிடுவென நகர்ந்தது
    ‘தொடரும்’ பார்த்ததும் ஏமாற்றம் வந்தது
    மொத்தத்தில்....
    நிஷ்டையை கலைத்தது நிஷாகந்தி

    பதிலளிநீக்கு
  3. கதை விறுவிறுப்பாக இருக்கிறது ஒருபுறம் என்றால், இடையிடையே அசையும் + அசத்தல் படங்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
  4. ரவிச்சந்திரன்8 நவம்பர், 2023 அன்று PM 5:30

    கதை செம ஜோராக போகிறது. நிஜ சினிமா கதாபாத்திரங்களையே, கதைக்கான கதாபாத்திரங்களாக பயன்படுத்தியிருப்பது புதுமை. அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...