புதன், 8 நவம்பர், 2023

நிஷாகந்தி... - 2

ன்றாடப் பிரச்னைகளில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன் கற்பனை கூட செய்யமுடியாத ஒரு சுதந்திர வாழ்க்கையை, செல்போன் சிக்னல் கூட கிடைக்காத அந்த வனத்தில் நான் வாழ்ந்தேன்.

முதலில் பேசாமல் இருந்த உருட்டி சித்தர், ஓரிரு நாட்களில் இயல்பாகி விட்டார். பகல் பொழுதுகள் பெரும்பாலும் உரையாடல்களால் நிரம்பின. உரையாடல் என்றால், ‘இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல..’ என்கிற மாதிரி இல்லை. விஞ்ஞானம், கேலக்ஸி, இகாலஜி... என்று நவீன உலகம் எதிர்கொள்கிற பிரச்னைகள் பற்றி!

(தினகரன் தீபாவளி மலர் - 2023ல் வெளியான ‘நிஷாகந்தி’ சிறுகதையின் முழுமையான uncut version!)

‘‘மனுஷன் நுழையிற வரைக்கும் தான் இயற்கை, இயற்கையா இருக்குது. அவன் காலடி பட்டா அவ்வளவுதான். பூமி கிரகம்கிறது, மனுசனுக்கு மட்டுமில்லப்பா. இங்க இருக்கிற எல்லா உயிரினத்துக்கும் உரிமை இருக்கு. இயற்கையை அழிக்கக்கூடாதுனு கதை எழுதி படமா எடு..’’ என்றார் இலைகளை அரைத்துக் கொண்டே.


‘‘நிச்சயமா. இயற்கை பாதுகாத்தலை நம்ம கடவுள்களே சொல்லியிருக்காங்களே...’’ என்றவன், ஒரு நிமிடம் நிறுத்தி, ‘‘உங்க குடில்ல ஒரு சாமி படம் கூட இல்லையே? வந்த முதல் நாள்லயே கவனிச்சிட்டேன். ஏன்?’’ என்றேன்.

த்தம் வராமல் சிரித்தார். ‘‘சாமியை யாருப்பா படம் புடிச்சி வெச்சிருக்காங்க?’’

‘‘அப்ப... கடவுள் நம்பிக்கை இல்லையா?’’

‘‘கடவுள்ங்கிறது என்ன, சொல்லு!’’

‘‘நீங்களே சொல்லுங்க...’’

‘‘கடவுள்ங்கிறது இயற்கை சக்தி. இயற்கை சக்திதான் கடவுள். உருவங்கள் கற்பனை...’’

‘‘அப்ப கடவுள் படங்களை நீங்க ஏத்துக்க மாட்டீங்களா?’’

‘‘உனக்குப் புரியற மாதிரி சொல்றேன். இந்த பூமியை படைச்சவர் கடவுள்னு நம்புற. அப்ப, பூமியில இருக்கிற மனிதன், மிருகம், பறவை, புழு, பூச்சி, தாவரம் அத்தனைக்கும் அவர் தான கடவுள்?’’

‘‘ஆமா’’

‘‘இப்ப நீ வரைஞ்சு வெச்சிருக்கிற ஒரு உருவத்தை, எப்படி இந்தக் காட்டுக்குள்ள இருக்கிற ஒரு புலியோ, குருவியோ, குங்கிலிய மரமோ கடவுளா உணரமுடியும்? இன்னும் கொஞ்சம் ஆழமா சொல்றேன். பூமி மட்டுமில்லை. இந்த பேரண்ட வெளியையும் படைச்சவர் கடவுள். அப்போ, பூமியில இருக்கிற உயிரினங்கள் மட்டுமில்லை. பூமிக்கு வெளியில மற்ற கிரகங்களில இருக்கிற உயிரினங்களுக்கும் அவர்தான கடவுள்? நீ வரைஞ்சு வெச்சிருக்கிற உருவத்தை, இங்க பூமிக்கு வர ஒரு வேற்றுக் கிரகவாசியால, கடவுளா உணரமுடியுமா?’’

‘‘வேற்றுக் கிரகவாசிகளா? அப்படி யாரும் இருக்காங்களா?’’

‘‘வேற்றுக் கிரகங்கள் இருக்கறது உண்மைதான?’’

‘‘உண்மைதான்’’


‘‘அப்ப வேற்றுக்கிரக வாசிகள் இருக்கிறதும் உண்மையாத்தான இருக்கணும்?’’

‘‘சரி. உண்மைன்னு வெச்சிகிட்டாலும், அவங்களுக்கு பூமியில என்ன வேலை? அவங்க எதுக்காக பூமிக்கு வரணும்?’’

‘‘சென்னைக்காரன் நீ. உனக்கு கும்பாவுருட்டில என்ன வேலை?’’

‘‘அப்ப பூமியில வேற்றுக்கிரகவாசிகள் இருக்காங்கன்னு சொல்றீங்களா?’’

‘‘கண்டிப்பா. உனக்கு ஒரு விஷயம் தெரியலைனா, அப்படி ஒரு விஷயமே இல்லைனு ஏன் நினைக்கிற?’’

‘‘வேற்றுக்கிரக வாசிகள் இங்க இருக்காங்கன்னே வெச்சிக்குவோம். அவங்களை எப்படி அடையாளம் கண்டுபிடிக்க முடியும்?’’

வர் சிரித்தார். ‘‘யோகம் பண்ணுப்பா. யோகக்கலையோட உச்சத்துல, இருக்கிற பொருள் மட்டுமில்ல; இல்லாத பொருளும் உன் பார்வையில படும்...’’

‘‘எனக்குக் கொஞ்சம் கத்துக் கொடுங்களேன். எப்படி கண்டுபுடிக்கிறது?’’

வர் சிறு சிரிப்புடன், ‘‘உடம்புங்கிறது அவங்களுக்கு ஒரு ஆடை மாதிரி..’’ என்றார்,

‘‘உள்ள இருக்கிற ஆன்மாவுக்கு, இந்த உடம்புதான ஆடை? அது எல்லா உயிரினத்துக்கும் பொதுதான?’’

‘‘அப்படி இல்லை. பூமியில இருக்கிற உயிரினங்களுக்கு உடம்பு, மாற்றவே முடியாத ஆடை. வெளியில இருந்து வர்றவங்களுக்கு அது கழட்டி மாட்டக்கூடிய ஆடை.’’


ன்று மாலை நாங்கள் மீ்ண்டும் வனத்துக்குள் சென்றோம். மாலை 4 மணிக்கே இருட்டியிருந்தது. மேகக்கூட்டம் மஞ்சுப்பொதியாக இறங்கி எதிரே இருந்த மரங்களையும், வழித்தடத்தையும் மறைத்தது. அடர்ந்த மரங்களின் செரிந்த கிளைகளில் இருந்து உதிர்ந்த இலைகள் ஏற்படுத்திய ஓட்டை வழியாக உள்நுழைந்திருந்த சூரிய கதிரை, சூழ்ந்து மூடி, அதன் வெளிச்சம் வெளியில் தெரியாமல் ஆக்கியிருந்தது மூடுபனி. அதை ஊடறுத்து நடந்தோம். சிறு ஓடை குறுக்கிட்டது. ‘‘பயப்படாத... ஆழம் இல்லை...’’ என்னை கைபிடித்து அழைத்துச் சென்றார். கால்களுக்குள் ஆயிரம் ஊசி நுழைந்தது போல, தண்ணீர் ஜில்லிட்டது. மிளா கூட்டமொன்று நிமிர்ந்து எங்களை ஓரக்கண்ணால் கவனித்து விட்டு மீண்டும் தலைகுனிந்து புல் மேய்ந்தது.


‘‘இருட்டின பிறகும் இவ்வளவு தைரியமா நடமாடுறீங்களே, இந்த விலங்குகள் நம்மளை எதுவும் பண்ணீடாதா?’’ அவரிடம் கேட்டேன்.

‘‘நீ ஏன் இந்த காட்டுல உன்னைய அன்னியமா நெனச்சுக்கிற? காட்டுல உள்ள நூறு விலங்குகளில் நீயும் ஒண்ணுனு நெனச்சிக்கோ. பயம் வராது.இந்தக் காடு எல்லாத்தையும் பார்த்துகிட்டே இருக்கும்...’’

‘‘காடு எப்படி பார்க்கும்?’’

நான் கேட்டதும் என்னை நிமிர்ந்து பார்த்தார். ‘‘இங்க உள்ள விலங்குகள், பறவைகளின் கண்கள் வழியா காடு உன்னையும், என்னையும் இப்பவும் பாத்துகிட்டுத்தான் இருக்கு. தெரிஞ்சுக்கோ...’’

டக்க, நடக்க ஒரு விதமான நறுமணம் லேசாக என்னை எட்டியது. தொடர்ந்து சுவாசித்துக் கொண்டே இருக்கத் தூண்டும் ஒரு பிரத்யேக ஈர்ப்பு அந்த நறுமணத்தில் நிரம்பியிருந்தது. புதர்களடர்ந்த ஒரு இடத்துக்கு வந்ததும், நடையை மெதுவாக்கி, ஓரிடத்தில் நின்றார். ‘‘நம்ம இடம் வந்தாச்சு...’’ கையில் கொண்டு வந்திருந்த சாக்குப்பைகளை கீழே வைத்தார். அந்த இடத்தில் கொத்தாக அடர்ந்து புதர்போல செடிகள் முளைத்திருந்தன. அந்தச் செடிகளில் குமிழ், குமிழாக வெள்ளை நிறத்தில், அளவில் பெரிய பூக்கள் கூம்பு வடிவில் குவிந்து தொங்கின. இன்னும் அவை முழுதாக மலர்ந்திருக்கவில்லை. மலராத அந்தப் பூக்களில் இருந்து மயக்கும் வாசனை வந்து கொண்டிருப்பதை இப்போது உணரமுடிந்தது.


ப்போது மிக நன்றாகவே இருட்டியிருந்தது. சாக்குப்பைகளை பிரித்து உள்ளே இருந்து கொஞ்சம் பூக்கள், இலைகள், மலைக்கனிகள், தண்ணீர் எடுத்து வைத்தார். வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. என் பக்கம் திரும்பி ஆழமாக ஒருமுறை பார்த்தார். என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்று எதுவும் புரியவில்லை. எது நடந்தாலும் எனக்கு அது புதிய அனுபவமே. ஆகவே, எதுவும் கேட்காமல் அவரை கவனித்துக் கொண்டிருந்தேன். சாக்குப்பைகளை விரித்து, அதன் மேலே கனிகள், மலர்களை பரப்பினார். அதற்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். அருகே என்னையும் உட்காரச் சொன்னார்.

ழுப்புக் கண்களால் என்னைப் பார்த்தபடியே, ‘‘இதுதான் நிஷாகந்தி செடி. தெரியுமா?’’ கேட்டார். நான் தலையசைத்தேன். ‘‘இல்ல. தெரியாது.’’


‘‘தெரிஞ்சுக்கோ. லட்ச ரூபா கொடுத்தாலும் பாதுகாத்து வெச்சிக்க முடியாத ஒரே பூ, இந்த நிஷாகந்தி பூ. வருஷத்தில ஒரு நாள், இந்த மாசத்தில மட்டும், நிஷாகந்தி பூக்கும். அதுவும் ராத்திரி நேரத்திலதான். ராத்திரி பத்து மணிக்கு மேல பூ கொஞ்சம், கொஞ்சமா மலர ஆரம்பிக்கும். நடுராத்திரில முழுசா மலர்ந்திடும். அப்ப ஒரு வாசனை வரும் பாரு...தெய்வீகம். இந்த உலகத்தில அதுமாதிரி வாசனை நீ அனுபவிச்சிருக்கவே மாட்ட. உன் ஆன்மாவை அந்த வாசனை பரிசுத்தமாக்கும். உனக்குள்ள இருக்கிற எல்லா அழுக்கையும் அந்த வாசனை கழுவி சுத்தமாக்கும். அந்த நறுமணத்தை ஆழமா உள்ளிழுத்து, உன் உடம்பு முழுக்க நிறைச்சுக்கோ. உன் உடம்பு முழுக்க அந்த வாசனையால நிரம்பியிருக்க நேரத்தில... மனசில என்ன விருப்பம் இருக்கோ, அதைச் சொல்லு. அது நடக்கும். கண்டிப்பா நடக்கும்...’’

வர் சொல்லிக் கொண்டே போக... நான் அந்தச் செடியைப் பார்த்தேன். கூம்பி இருந்த மலர்கள் மெதுவாக வாய் திறந்து மலர்வதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தன.

‘‘முழுசா மலர்ந்து கொஞ்ச நேரம் இருக்கும். அவ்வளவுதான். திரும்பவும் மூட ஆரம்பிச்சிடும். நாம பார்த்துகிட்டு இருக்கும்போதே, விடியறதுக்குள்ள முழுசா மூடிரும். அந்த குறிப்பிட்ட ஒரு நாள் ராத்திரி, அதுவும் ஒரு சில மணிநேரம் மட்டும்தான் நிஷாகந்தி பூத்திருக்கும். ராத்திரியானா நாம தூங்குறோம். ஆனா, ராத்திரிலதான் காடு முழிக்குது. இன்னிக்கு விட்டா... இன்னும் ஒரு வருஷம் இதைப் பார்க்க காத்திருக்கணும்...’’

ப்போது மலர்கள் இன்னும் பெரிதாக பிளந்து மலரத் துவங்கியிருந்தன. அவற்றினுள் பதுங்கியிருந்த அந்த நறுமணம் பீறிட்டு வெளியே பாய்ந்தது. அவர் சொன்னது போலவே அது ஒரு ஆன்மீக நறுமணம். இதற்கு முன் நான் அனுபவித்திராத நறுமணம். காட்டின் ஓங்கி உயர்ந்த மரங்களின் கிளை இடுக்குகளின் வழியே கசிந்து புகுந்த நிலவொளியில் மிகப்பெரிய வெண் தாமரை போல அந்தப் பூக்கள்... நிஷாகந்தி பூக்கள் கொத்துக் கொத்தாக இப்போது முழுதாக மலர்ந்திருந்தன. அலங்கார விளக்குகள் போல அந்தச் செடியில் அவை மின்மினுத்துத் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றில் இருந்து கிளம்பிய அந்த கிறக்கும் வாசனை, அந்த ஒட்டுமொத்த காட்டையும் நிரப்பியிருந்தது. எனக்கு அருகில் அவர் பூக்களையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவரது கைவிரல்கள் வித்தியாசமான சைகை குறியீடுகள் காட்டிக் கொண்டிருந்தன.

நிஷாகந்தியில் இருந்து பரவிய அந்த வாசனை என்னை ஒரு விதமான பரவச மயக்கத்துக்கு அல்லது ஆழ்ந்த உறக்கத்துக்கு தள்ளியது. மழை ஈரத்தில் பாசம் படிந்திருந்த அந்தக் காட்டுத்தரையில் அப்படியே சாய்ந்து விட்டேன். எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை. என் தலையில் யாரோ ஓங்கி அடிப்பது போல இருந்தது. திடுக்கிட்டு விழித்தேன். பக்கத்தில் அவர் எழுந்து சாக்குப்பைகளை எடுத்து மடித்து வைத்துக் கொண்டிருந்தார். என் கண்கள் இப்போது நிஷாகந்தி செடிகளின் பக்கம் திரும்பியது. பூக்கள் மூடிக் கொண்டிருந்தன. இன்னும் கொஞ்சநேரத்தில் முழுவதுமாக மூடிவிடும்.

‘‘எந்திரி. கிளம்பலாம்...’’ சாக்குப்பைகளை எடுத்துக் கொண்டே என்னிடம் சொன்னார்.

னக்கு அந்த இடமும்,சூழலும் மிகவும் பிடித்திருந்தன.‘‘இங்கேயே இருந்துட்டு, விடிஞ்சதும் போலாமே?’’

வர் தலையசைத்து மறுத்தார். ‘‘உடனே கௌம்பணும். இன்னும் பத்து நிமிஷம். ரொம்பப் பெரிய மழை கொட்டப்போகுது.’’

‘‘கொட்டட்டும். நனையலாம்...’’

‘‘இல்ல. நீ நெனைக்கிற மழை இல்ல. இது நீ பார்த்திருக்காத காட்டுமழை. இந்த காட்டை முழுசா கழுவி சுத்தம் செய்யப்போற மழை. கிளம்பு!’’


வே
று வழியின்றி கையூன்றி எழுந்தேன். அடிபட்டது போல தலை வலித்தது. அவரைப் பின்தொடர்ந்தேன். அவரது நடையில் ஒரு அசாத்திய வேகம் இருந்தது. அவரை பின்தொடர ஏறக்குறைய ஓடவேண்டியிருந்தது. பத்து நிமிடத்துக்கும் முன்னதாகவே குடிலை வந்தடைந்து விட்டோம். அவர் எச்சரித்தது போல மழை எதுவும் இல்லை. மழைக்கான அறிகுறியும் இல்லை. குடிலுக்குள் நுழைந்ததும், எனக்கான இடத்தில் படுத்து விட்டேன். விளக்கு இல்லாத குடிலுக்குள் இரு மடங்கிற்கும் அதிகமாக இருள் நிறைந்திருந்தது. ஓட்டமும், நடையுமாக வந்திருந்த களைப்பு... உறக்கமாக உடனே என்னுள் நிரம்பியது.

***

வ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. யாரோ பலவந்தமாகப் பிடித்துத் தள்ளுவது போல உணர்ந்து திடுக்கிட்டு கண் விழித்தேன். குடிசையில் சுவர்கள் அதிர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தன. குடிசையை யாரோ உருட்டித் தள்ளுவது போல தடதடத்து கிடுகிடுத்தது. வெளியில் இருந்து யுத்தம் நடப்பது போல பயங்கரமான சத்தம். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஒன்றன் மேல் ஒன்றாக பத்து கருப்புக் கம்பளிகள் போர்த்தியது போல இருள் மூடியிருந்தது. இருட்டுக்கு கண்களை பழக்கப்படுத்திக் கொண்டே, செவியை கூர்மை படுத்தினேன். குடிலுக்கு வெளியே உக்கிரமான சூறாவளிக் காற்றுடன் பெருமழை பெய்து கொண்டிருப்பதை உணரமுடிந்தது. ஓங்கி அடித்த ஒரு சூறைக்காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் குடிலின் மூங்கில் கதவுகள் பெயர்ந்து, பறந்து விழுந்தன. வெளியே மின்னல் கிளைகளாய் விரிந்து பரவி வானத்தை நிரப்பி மறைவது தெரிந்தது. வினாடிகள் இடைவெளியில் மீ்ண்டும் விரிந்து பரவிய மின்னலின்  வெளிச்சத்தில் தற்செயலாக திரும்பிய போது... ஒரு வினாடி எனது உள்ளங்கால் உறைந்தது.

குடிலின் வலது ஓரத்தில் படுத்திருந்த உருட்டி சித்தரின் உடலமைப்பு எனக்கு வேறு மாதிரியாக, வினோதமாகத் தெரிந்தது. மின்னல் மறைந்ததும் மூடிக்கொண்ட இருளால், மேற்கொண்டு அவரை பார்க்க முடியவில்லை. மின்னல் ஒளி குடிலில் நிரம்பிய அந்த ஒரு வினாடியின் பத்தில் ஒரு பங்கு நேரத்தில் என் கண்களில் பட்ட காட்சி, எனக்குள் லேசான நடுக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்த மின்னல் வெட்டிய போது அவரை முழுமையாக பார்க்க திரும்பினேன். சில வினாடி நேரம் நீடித்த அந்த மின்னல் வெளிச்சத்தில் நான் கண்ட காட்சி... வாழ்நாளில் அதற்கு முன் நான் பார்த்திராத பயங்கரம்.

ருட்டி சித்தரின் உடலில் பாதி இல்லை. காலில் இருந்து இடுப்புப் பகுதி வரை இல்லை. இடுப்புக்கு மேல் தலை வரை மட்டுமே இருப்பது அந்த வெளிச்சத்தில் கண்களுக்கு புலனானது. அந்தக் கொடூரமான காட்சி என்னை நிலைகுலைய செய்தது. நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு இரண்டடி பின்னுக்கு நகர்ந்தேன். மீண்டும் மின்னல் வெட்டியது. அவரை கூர்ந்து கவனித்தேன். காற்றின் வேகத்தில் மரமும், செடியும் அசைவது போல அவரது உடலும் இடதும், வலதுமாக ஆடிக் கொண்டிருந்தது. என் கண்களுக்கு முன்பாகவே, அவரது உடல் கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து, உருகிக் கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த மாற்றத்தை உணர்ந்தேன். இருள் முற்றாக நீங்கி குடில் முழுவதுமாக பளீர் வெளிச்சம் திடீரென நிறைந்திருந்தது.

ப்படி...? குடிலுக்கு வெளியே பார்த்தேன். அந்த இரவு மிகவும் கொடூரமானது என்று என் மனம் அந்த வினாடியில் அஞ்சியது. வெளியே வானத்தில் பல்வேறு கிளைகளாக தோன்றியிருந்த மின்னல்கள், மீண்டும் மறையாமல் விண்ணில் பதித்த மின் விளக்குகள் போல பிரகாசித்து ஒளிர்ந்த படியே வெளிச்சம் உமிழ்ந்து கொண்டிருந்தன. எனது கால்கள் தளர்ந்தன. எந்த நேரத்திலும் கீழே விழுந்து விடும் அளவுக்கு உடல் நடுங்கியது. நான் பார்க்க வேண்டாம் என தவிர்க்க நினைத்தாலும் கூட, என்னை மீறி எனது பார்வை உருட்டி சித்தரின் உடலை நோக்கிச் சென்றது. அறையில் நிரம்பியிருந்த மின்னல் வெளிச்சத்தில் அவரது உடல் தெளிவாகவே தெரிந்தது. இப்போது அவரது நெஞ்சுப்பகுதி வரை உடல் கரைந்திருந்தது. கண்கள் திறந்திருந்தன. திறந்திருந்த இமைகளுக்கு உள்ளாக அந்த பழுப்பு நிற விழிகள் இல்லை. இமைகளுக்கு உள்ளே கண்கள் இருந்த இடம் வெற்றுக் குழியாக இருள் நிரம்பியிருந்தது.

ருகிக் கரைந்து கொண்டிருந்த உடலின் தலைப்பகுதி லேசாக அசைந்தது. அது என்னை நோக்கி திரும்பியது. காற்றுக்கு ஆடுகிறது என்ற எண்ணம் எவ்வளவு தவறானது என்பதை அடுத்த நொடியே புரிந்து கொண்டேன். வெறும் குழிகளாக இருந்த அவரது கண்கள் என்னை நோக்கின. விழிகளற்ற அந்தக் கண்களில் இருந்து வந்த பார்வையின் தீட்சண்யம் என் மீது உஷ்ணமாகப் பாய்ந்தது. கரைந்து கொண்டிருந்த கரங்கள் லேசாக என்னை நோக்கி உயர்ந்தன.


வ்வளவுதான். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்த எனக்குள் அந்த பலம் எப்படி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. ஒரே பாய்ச்சலாக நின்ற இடத்தில் இருந்து கதவு நோக்கித் தாவினேன். குடிலுக்கு வெளியே இருந்து வாளியில் அள்ளி ஊற்றியது போல மழை என் மீது மோதியது. காற்று வெளியேற விடாமல் என்னை மீண்டும் குடிலுக்குள் தள்ளியது. தேக்கி வைத்திருந்த பலம் அனைத்தும் சேர்த்து காற்றை கிழித்துக் கொண்டு முன்னே பாய்ந்தேன். குடிலுக்கு வெளியே காடு அந்த சூழலில் மிகப் பிரமாண்டமாக திகிலூட்டியது. மழை என்னை முற்றாக நனைக்க, காற்று நாலாபுறமும் தள்ளி நிலைதடுமாற வைத்தது. தலைக்கு மேலே விளக்கு பதித்து வைத்தது போல மின்னல் நிலைகொண்டு நின்று வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருந்தது.


ந்தத் திசையில் செல்கிறேன்... எதை நோக்கிச் செல்கிறேன் என்று தெரியவில்லை. அந்த நிமிடத்தில் அங்கிருந்து அகன்று விடவேண்டும் என்ற ஒற்றை இலக்கு என்னை உந்தித் தள்ளியது. மழையைக் கிழித்து கொண்டு பேய் போல அந்தக் காட்டுக்குள் ஓடிக் கொண்டே திரும்பிப் பார்த்தேன். மின்னல் வெளிச்சம் இப்போது திசை மாறியிருந்தது. ஃபோகஸ் லைட் போல வானத்தில் இருந்த மின்னலின் வெளிச்சம் நேராக குடிலின் மீது மட்டும் குவிந்தது. மின்னலில் இருந்து ஒற்றை நேர்கோடாக குடிலின் மீது குவிந்த வெளிச்சத்தின் சீற்றம் தாங்காமல் சில நிமிடத்தில், இடி இடித்தது போன்ற சத்தத்துடன் குடில் தீப்பிடித்து வெடித்தது. அத்துடன் மின்னல் வெளிச்சம் மறைந்தது. காடு மீண்டும் அதன் ஆழ்ந்த இருளுக்குள் நுழைந்து கொண்டது.

நான் இப்போது எந்தப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கிறேன் என்றே தெரியவில்லை. கால்கள் கண்மூடித்தனமாக அந்த இருளில் ஓடிக் கொண்டிருக்க... ‘உருட்டிச் சித்தர் யார்...? அவருக்கு என்ன நடக்கிறது?’ எனது மனம் கிடுகிடுத்தபடியே யோசித்தது. ‘‘வெளியில இருந்து வர்றவங்களுக்கு உடம்புங்கிறது கழட்டி மாட்டக்கூடிய ஆடை...’’ முந்தைய தினம் அவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. அப்படியானால்.... அப்படியானால்.... உருட்டிச் சித்தர்...? ஓடிக் கொண்டிருந்த எனது கால்களில் எதுவோ மாட்டி சுற்றி நெளிந்தது. குனிந்து பார்த்தேன். இருளில் ஒன்றும் தெரியவில்லை. அந்த வழுவழுப்பிலும், நெளிவிலும் அது ஒரு பெரிய பாம்பு என்று தெரிந்தது. கால்களை ஓங்கி உதறினேன். தள்ளிப் போய் விழுந்தது. இருளுக்குள் ராட்சதர்கள் நிற்பது போல எனக்கு முன்னே மரங்கள் காற்றை எதிர்கொண்டு அசைந்து நிமிர்ந்தன. ஓட்டத்தின் வேகத்தில் எதிரே இருந்த பிரமாண்ட குங்கிலிய மரத்தின் மீது போய் மோதினேன். இனி ஓடமுடியாது என்கிற அளவுக்கு என் உடல் தளர்ந்து தடுமாற... பச்சைப்பாசம் படர்ந்து, மழை நீர் ஒழுகிக் கொண்டிருந்த குங்கிலிய மரத்தின் மீது சரிந்து சாய்ந்தேன். அப்போது தான் அந்த பயங்கரத்தைப் பார்த்தேன். மரத்தின் பின்புறமிருந்து திடீரென தோன்றிய மிகப்பெரிய வெளிச்சமொன்று... வட்டமாக என் உடலை அடையாளப்படுத்தி என் மீது குவிந்தது. அதன்பிறகு நான் நானாக இல்லை. கண்கள் சுழன்று, தலை கிறுகிறுத்து... நினைவிழந்து குங்கிலிய மரத்தின் கனத்த வேர்களில் சரிந்து மயங்கி விழுந்தேன்.

***

னுஷூம், ரெஜிஷா விஜயனும் எனக்கெதிரே பேச்சிழந்து அமர்ந்திருந்தனர். ரெஜிஷா முகத்தில் குளிரை மீறி வியர்த்திருந்தது. டம்ளரில் இருந்து ஒரு மடக்கு தண்ணீர் குடித்தபோது,தொண்டை குமிழ் ஏறி இறங்கியது. ‘‘அப்றம்... என்ன சார் ஆச்சு?’’ ஒட்டியிருந்த உலர்ந்த உதடுகளை சிரமமாக பிரித்து என்னைப் பார்த்து கேட்டார்.

‘‘நல்லவேளையா விபரீதமா எதுவும் இல்லை. காட்டுக்குள்ள மர்மநபர்கள் நடமாட்டம் இருக்கிறதை கண்காணிக்கிறதுக்காக ஃபாரஸ்ட்டும், எஸ்டிஎப்பும் அன்னிக்கு நைட் ஸ்பெஷல் ரவுண்ட்ஸ் போயிருக்காங்க. மழையால ரவுண்ட்சை பாதியில முடிச்சிட்டு திரும்பினப்ப... திசை தெரியாம ஓடி வர்ற என்னை, அந்த டீம்ல இருந்த தங்கச்சன் பார்த்திருக்காரு. அவங்க கையில வெச்சிருந்த சக்திவாய்ந்த சர்ச் லைட்டோட வெளிச்சம்தான் என்னை அந்த ராத்திரியில மயக்கமடையச் செஞ்சிருக்கு. என்னை அடையாளம் பார்த்து, மீ்ட்டு ரேஞ்சர் ஆபீசுக்கு கொண்டு போயிட்டாங்க. ரெண்டு நாள் நான் கண்ணு தெறக்கலை. அப்படி ஒரு காய்ச்சல். கொஞ்சம் காய்ச்சல் குறைஞ்சதும், சென்னை அனுப்பி வெச்சாங்க...’’

‘‘பயங்கரமான கதையா இருக்கு ம.துரை சார்... நம்ம கம்பெனில அடுத்தபடமா இதையே பண்ணிடலாம்...’’ தனுஷ் முகத்தில் பிரமிப்புடன் சொன்னார்.

‘‘கதை இன்னும் முடியலை சார்...’’ - தனுஷையும், ரெஜிஷாவையும் பார்த்த படி மெதுவாகச் சொன்னேன். ‘‘ஒரு பெரிய ட்விஸ்ட் இதுக்கப்புறம் தான் இருக்கு...’’

‘‘சார்... ரொம்ப மிரட்டுறீங்க. அதென்ன ட்விஸ்ட்...’’ ரெஜிஷா ஆர்வமாகக் கேட்டார்.

‘‘சென்னை வந்ததும், காய்ச்சல் குணமாகி, என்னோட டாக்டரை போய் பார்த்தேன். திரும்பவும் பிரெய்ன் எம்ஆர்ஐ, கம்ப்ளீட் டெஸ்ட் எடுத்தார். மறுநாள் ஹாஸ்பிடல்ல அவரை பார்த்தேன். ஸ்கேன் ரிப்போர்ட்டை ரொம்ப நேரம் பார்த்தாரு. அப்புறம் என்னை நிமிர்ந்து பார்த்து, வேற எதாவது மெடிசின் எடுத்துகிட்டிங்களானு கேட்டார். என் கையை பிடிச்சு குலுக்கிட்டு, உங்கள் பிரெய்ன் ட்யூமர் கம்ப்ளீட்டா க்யூர் ஆகிருக்கு சார். என்னாலயே நம்பமுடியலை. நான் கொடுத்த மெடிசினையும் தாண்டி ஏதோ வேலை நடந்திருக்கு.எது நடந்தாலும் ரைட்.... நல்லதுதான் நடந்திருக்கு. எந்தப் பிரச்னையுமே இப்ப இல்ல. யு ஆர் ஆல்ரைட்...னு தட்டிக் கொடுத்து அனுப்பி வெச்சார். அதுக்கப்புறம் சமுத்திரக்கனி சாரோட என்னோட முதல் படம். நல்ல சக்சஸ். அடுத்து விக்ரம் சார், மூணாவது விஷால் சார். இப்ப நாலாவது படம் உங்களோட. எந்தப் பிரச்னையும் இல்லாம, ஆரோக்கியமா இருக்கேன்...’’


‘‘உருட்டி சித்தரோட அருளாசியா இருக்கும். கலக்குங்க சார்...’’ தனுஷ் உற்சாகமாக சிரித்தார்.

‘‘சார்... மழை விட்ருச்சு. ஷூட் கிளம்பலாம்...’’ அசிஸ்டென்ட் வந்து மெதுவாகச் சொல்ல... மூன்று பேரும் எழுந்து கொண்டோம். படப்பிடிப்பு தளத்துக்கு செல்வதற்காக காருக்குள் ஏறியபோது, அந்த புதிய வித்தியாசத்தை எனது நாசி உணர்ந்தது... அந்த நறுமணம்... ஏற்கனவே நான் நுகர்ந்திருந்த... அந்த தெய்வீக நறுமணம்! குழப்பமாக திரும்பிய போது, காரின் மறுபக்க கண்ணாடிக்கு வெளியே தற்செயலாக அதைப் பார்த்தேன். ஒரு வினாடி... அல்லது அதற்கும் குறைவான நேரம். என்னை உற்றுநோக்கி மறைந்த அந்தக் கண்கள்... கும்பாவுருட்டி காடுகளுக்குள் நான் பார்த்த அதே பழுப்பு நிற கண்கள்!

(நிஷாகந்தி நிறைவடைந்தது... இப்போதைக்கு!)

முதல் அத்தியாயம் படிக்க... நிஷாகந்தி... - 1

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


6 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த கதை. அடுத்த ஆண்டும் மலரட்டும்🌺

    பதிலளிநீக்கு
  2. ராத்திரில தான் காடு முழிக்குது, இந்த காட்டை முழுசா கழுவி சுத்தம் செய்யப்போற மழை, ஒன்றன் மேல் ஒன்றாக பத்து கருப்புக் கம்பளிகள் போர்த்தியது போல இருள் மூடியிருந்தது போன்ற வரிகளை வாசித்துவிட்டு உடனே அடுத்த வரிக்கு கடந்து செல்ல முடியவில்லை.

    இந்தக் கதையை வாசிக்கும் எல்லோரும் ஓர் இரவு காட்டுக்குள் சென்று திரும்புவீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. ரவிச்சந்திரன்8 நவம்பர், 2023 அன்று PM 5:32

    கதை அருமை சார். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். அதுவும் குறிப்பாக, உருட்டி சித்தரின் குடிசையில் இருந்து கொட்டும் மழையில் தப்பி ஓடி வரும் காட்சிகள், சினிமாவை மிஞ்சும் வண்ணம் மிக விறுவிறுப்பாகவும், திகில் நிரம்பியதாகவும் இருந்தது. ஒரு திகில் சினிமா பார்க்கும் விறுவிறுப்பை எழுத்தில் கொடுத்து விட்டீர்கள். சபாஷ்.

    பதிலளிநீக்கு
  4. https://www.facebook.com/groups/1801710140004463/posts/2740031869505614/?comment_id=2745583808950420

    அருமையான கதையாடல்.அந்த பிற்பகுதியைப் படிக்காமல் இருந்தால் கதை வேற லெவல்...நிஷா கந்தி தலைப்பைப் பார்த்தே கதையைப் படிக்கத் தோன்றியது..செம்மீனீன் நிஷாகந்தி பூத்தல்லோ..பாடல் சட்டென்று நினைவுக்கு வந்தது...கடைசியில் சினிமா இயக்குநர்களுக்கான அமானுஷ்யம் போல கதையின் முடிவு எனக்கு ஏமாற்றம் தான்...எனக்கு.....

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...