வியாழன், 14 ஏப்ரல், 2016

தமிழ் வளர்த்த அமெரிக்க டாக்டர்!

ராமேஸ்வரம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வந்த இரு கடிதங்கள், இரு கேள்விகளை நம்முன் வைத்தன.
1) தமிழ் வளர்த்த வெளிநாட்டு அறிஞர்கள் பற்றி வார வாரம் வந்ததே...? இரண்டு, மூன்று வாரங்களாக அது வராததற்கு என்ன காரணம்? வெளியுறவுக்கொள்கை எதுவும் மாறி விட்டதா?
2) தமிழர் இலக்கியங்களில் நீர் சுழற்சி / நீர் மேலாண்மை பற்றி வண்டி, வண்டியாக குறிப்பிட்டிருக்கும் போது, வெகு சுருக்கமாக பட்டினப்பாலையை மட்டும் உதாரணம் காட்டி முடித்திருப்பது ஏன்?
- இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். இருக்கிற இடத்துக்குள் அத்தனை விஷயங்களையும் சொல்லி முடித்தாக வேண்டியிருக்கிறது. ஒரு வாரம் விடுபட்டாலும், அடுத்தடுத்த வாரங்களில் கூடுதல் தகவல்களை குறிப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்? மற்றபடி, நமது வெளியுறவுக் கொள்கையில் யாதொரு மாற்றமும் இல்லை என இந்த வாரமே நிரூபித்து விடலாமா?


மக்களின் டாக்டர்!



ன்று மெடிக்கல் டூரிஸம் விளம்பரம் போட்டுக் கொள்கிற அளவுக்கு நாம் மருத்துவ வளர்ச்சி பெற்றிருந்தாலும் கூட, சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை நமக்கு எட்டாக்கனியாக இருந்தது இரண்டு விஷயங்கள். 1) கல்வி. 2) மருத்துவம். கல்வி இல்லாமல், அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மருத்துவம் இல்லாமல், அந்த அர்த்தமற்ற வாழ்வைக் கூட வாழ முடியாமல் செத்தார்கள். சமயம் பரப்ப வந்த ஐரோப்பியர்களுக்கு ஒரு விஷயத்தில் நாம் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்த இரு விஷயங்களையும் அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சென்று சேர்த்தது அவர்கள் மட்டுமே!

ப்படி வந்தவர்களில் சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் (Dr Samuel Fisk Green, அக்டோபர் 10, 1822 - மே 28, 1884) முக்கியமானவர். அமெரிக்காவைச் சேர்ந்த தேர்ந்த மருத்துவரான இவர், சமயப்பணிக்காக, 1847 அக்டோபரில் சென்னை வந்திறங்கினார். அங்கிருந்து இலங்கையில் உள்ள வட்டுக்கோட்டை சென்ற அவர் அங்கு மருத்துவ சேவையை அடித்தட்டு மக்களுக்கு வழங்கினார். மறு ஆண்டே மனிப்பாய் (Manipay) நகருக்கு இடம் பெயர்ந்த கிரீன், அங்கு ஏழை மக்களுக்காக ஒரு மருத்துவமனை துவக்கினார்.

தமிழ் மருத்துவம்!

Dr.Green_s First Hospital at Manipay

ங்கு வசித்த தமிழ் மக்களுக்கு மருத்துவ சேவையாற்றியதுடன் பணி முடிந்தது என்று நிறுத்திக் கொள்ளவில்லை.
இலங்கை மண்ணின் முதல் மருத்துவக் கல்லூரியை 1848ல் அவர் துவக்கினார். இன்றும் கூட அந்த மருத்துவக் கல்வி நிலைய மருத்துவமனை Green Memorial Hospital என்ற பெயரில் பிரமாண்டமாக சேவையாற்றி வருகிறது. 1998, அக்டோபர் மாதம் தனது 150வது ஆண்டு விழாவையும் கொண்டாடியது. அதெல்லாம் சரி. கிரீன் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்ன? ‘நம்மொழி’ தொடருக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்? அது பற்றி ஒரு வார்த்தை காணமே... என்ற கேள்வி இந்நேரம் எழுந்திருக்குமேயானால்... உங்களுக்கான பதில் அடுத்த பாராவில் இருக்கிறது!


னது மருத்துவக் கல்வி நிலையத்தில், மருத்துவப் பாடத்தை தமிழ் வழியில் மட்டுமே கற்பிப்பது என 1855ல் அதிரடியான முடிவுக்கு வந்தார். அந்த ஆண்டில் இருந்து அவரது கல்லூரியில் தமிழ் வழி மருத்துவக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. சும்மா இருப்பார்களா? தமிழ் வழிக்கல்வி முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. துளி அசரவில்லை கிரீன். ‘‘ஏழை மக்களுக்கும். கிராமப் புறங்களுக்கும் மருத்துவ சேவை முழுமையாக சென்று சேர வேண்டுமானால், தாய்மொழியில் மருத்துவக் கல்வி முறை அவசியம். சேவை எண்ணத்துடன் மருத்துவம் படிக்க நினைப்பவர்கள், இங்கே தமிழில் படிக்கலாம். அல்லாதவர்கள்... வேறு தொழிலை தேடிக் கொள்ளலாம்....’’ என்று திட்டவட்டமாக அறிவித்தார் கிரீன். அதற்கப்புறம் யாரும் வாய் திறந்தார்களில்லை!

200 ஆண்டுகளுக்கு முன்...

யோசித்துப் பாருங்கள் நண்பர்களே. ஒன்றாம் வகுப்பில் கூட தமிழ் வழிக்கல்விக்கு இன்றைக்கு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.  மருத்துவக் கல்வியில் தமிழ் என்பதெல்லாம்... சான்ஸே இல்லை. இன்றைக்கும், நாம் யோசித்துப் பார்க்க முடியாத ஒரு விஷயத்தை  / தமிழ் வழியில் மருத்துவக் கல்வி என்கிற இமாலய இலக்கை 1855லேயே செய்திருக்கிற டாக்டர் கிரீன், நம்மொழிக்கு எத்தனை பெரிய சேவையாற்றியிருக்கிறார். அவரது கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவம் படித்து ஏராளமான டாக்டர்கள் வெளியேறினார்கள். தமிழ் வழி மருத்துவக் கல்வி என்று அறிவித்தால் போதுமா? அதற்கான புத்தகங்கள் வேண்டாமா? டாக்டர் கிரீன் அந்தப் பொறுப்பையும் குறையின்றி நிறைவேற்றினார். தமிழ் மொழியை கற்றுத் தேர்ந்து, நிபுணத்துவம் பெற்றார். அடுத்தவேலையாக உடலியல், உடற்கூறியல், மருத்துவம், மருந்து தயாரித்தல், மகப்பேறு மருத்துவம் என மேற்கத்திய மருத்துவத்தின் சகல துறைகளையும் விட்டு வைக்காமல் 24 மருத்துவ நூல்களை ஆங்கிலத்தில் இருந்து அழகு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழில் மருத்துவக் கலைச்சொல் அகராதியையும் தயாரித்து அளித்தார்.

மிழ் மொழி உயர்வுக்காக தன்னையே அர்ப்பணித்து சேவையாற்றிய அமெரிக்கர், டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீனுக்கு ஒரு ஆசை இருந்தது. மரணத்துக்குப் பிறகு, தனது கல்லறையில், ‘தமிழருக்கான மருத்துவ ஊழியர் (Medical Evangelist to the Tamils)’ என வாசகம் பொறிக்க வேண்டும் என்பது அவரது உன்னதமான விருப்பம். எழுத்துப்பூர்வமாகவே தனது இந்த விருப்பத்தை அவர் வெளியிட்டார். 1884ல் கிரீன் இறந்தப் பிறகு, அமெரிக்காவின் வொர்ஸ்டர் நகரில் உள்ள அவரது கல்லறையில் அந்த வாசகம் பொறிக்கப்பட்டது. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, தாய்மொழி மருத்துவக் கல்வி என்கிற, நம்மால் செய்ய முடியாததை, செய்து காட்டி, நம்மொழிக்கு மகுடம் சூடிய அந்த மாமனிதருக்கு மரியாதை செலுத்தி, இந்த வாரத்தை நிறைவு செய்யலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...