பேராசிரியர் தியோடர் மற்றும் அவருடனான எனது கடைசி மூன்று சந்திப்புகள் குறித்து ஓரளவுக்கு சுருக்கமாகவேனும் அறிந்திருப்பது... மகா குழப்பமான, நம்பத்தகாத இந்தக் கதையின் கடைசித் திருப்பங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு கொஞ்சமாவது உதவலாம். எனவே...
(தினகரன் தீபாவளி மலர் - 2024ல் வெளியான சிறுகதை.)
டா ர் வி ன் - one
![]() |
தினகரன் தீபாவளி மலர் - 2024ல் வெளியான சிறுகதை.... டார்வின் |
பேரா. தியோடர், இன்றைய தேதியில் ஜெனடிக் சயின்ஸ் துறையில் மிக முக்கியமான நபர். மரபியல் விஞ்ஞானம் சார்ந்த அவரது ஆய்வுகளுக்கும், ஆய்வுக்கட்டுரைகளுக்கும் அறிவார்ந்த சமூகத்தினரிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அவரது மாணவன் நான். படிக்கிற காலத்தில், பாடங்கள் கடந்தும் நிறைய விவாதங்கள் செய்திருக்கிறோம். என்பதால், என்னை அவருக்குப் பிடிக்கும். படிப்பு முடிந்தப் பிறகும் அவருடன் நட்பு தொடர்கிறது. ஆராய்ச்சிப் பணிகளுக்கு இடையே களைப்பான தருணங்களில் எனக்கு போன் செய்து அழைப்பார். அவரது அலுவலகத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வெயில் மறைக்கும் மர நிழலுக்குள் நடந்து கொண்டே நிறைய, நிறைய்ய்ய பேசுவோம்.
கொரோனா லாக் டவுன் காலகட்டம் முடிந்த சமயத்தில், ஒரு நாள் அழைத்திருந்தார். அலுவலகம் சென்று சந்தித்தேன். ஆராய்ச்சிப் பணிகள் பற்றி பேசிக் கொண்டிருந்தவர், ஒரு தேநீருக்குப் பிறகு, பின்புறம் பண்ணை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். மிகக் கனமான பூட்டுக்களைத் திறந்து உள்ளே நுழைந்ததும் ஒரு நிமிடம் ஷாக்கடித்து, ‘‘சார் என்ன இது?’’ என்றேன், பதற்றத்துடன். உள்ளே இருந்த இரும்புக் கூண்டுக்குள் ஒரு சிம்பன்ஸி உட்கார்ந்திருந்தது. ஏழெட்டு வயது இருக்கும். மிதமான வளர்ச்சி, என்னைப் பார்த்ததும் உதடுகளைத் திறந்து கொக்கிப் பற்களைக் காட்டி ‘க்க்ர்ர்ர்ர்’ என்று, தொன்மையான அதன் மொழியில் மிரட்டியது.
‘‘சிம்பன்ஸிப்பா. சொல்லி வெச்சு வாங்கியிருக்கேன்...’’
‘‘சார், சிம்பன்ஸி தெரியுது. இது எதுக்கு இப்போ?’’
‘‘உட்காரு இப்படி..’’ அருகில் இருந்து நாற்காலியை காட்டியவர், எனக்கு எதிரே அமர்ந்து கொண்டார்.
‘‘புதிய ஆராய்ச்சி ஆரம்பிச்சிருக்கேன் இல்லையா, அதுக்காக!’’
‘‘சிம்பன்ஸிய வெச்சு என்ன சார் ஆராய்ச்சி?’’
‘‘சார்லஸ் டார்வின் தெரியும் தான?’’
‘‘சொல்லுங்க...’’
‘‘குரங்குல இருந்து தான் நம்ம மனித இனம் தோன்றியதுனு பரிணாம வளர்ச்சி கோட்பாடு சொன்னார் இல்லையா?’’
‘‘சரி...’’
‘‘பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் அடுத்த கட்டம் தான் என்னோட ஆராய்ச்சி. டார்வின் தியரியை பேஸா வெச்சு, அதோட அடுத்த கட்டத்துக்குப் போறதுதான் நான் கையில எடுத்திருக்கிற சப்ஜெக்ட். இப்போ, இந்த சிம்பன்ஸியை ஜெனடிக் மியூட்டேஷன் பண்ணப் போறேன். இதோட மரபணுக்களை கொஞ்சம் மாத்துறது மூலம், இந்த சிம்பன்ஸிய, நம்மை மாதிரி முழுமையான ஒரு மனுஷனா மாத்தப் போறேன்!’’
- நான் திடுக்கிட்டு, வாய் பேச இயலாமல் அமர்ந்திருந்தேன்.
‘‘கேக்கறதுக்கு பைத்தியக்காரத்தனமா இருக்கே... இதெல்லாம் சாத்தியமானு மனசுக்குள்ள நெனைக்கிற... அப்படித்தான?’’
நான் பதில் சொல்லவில்லை.
‘‘சூட்சுமம் தெரிஞ்சவனுக்கு எல்லாமே சாத்தியம்பா. தெரியாதவன் பார்வைக்குத்தான் இது பைத்தியக்காரத்தனம். நான் விஷயம் தெரிஞ்சவன். என்னால முடியும். நடக்கிறத பொறுமையா பாரு!’’
எங்களது இரண்டாவது சந்திப்பு, அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து, ஒரு நள்ளிரவு நேரத்தில் நடந்தது. இம்முறை சந்தித்தது சென்னை சர்வதேச விமானநிலையத்தில். சிங்கப்பூரில் இருந்து நள்ளிரவு விமானத்தில் திரும்பியவரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக கார் எடுத்து வந்திருந்தேன். விமானநிலையத்தில் காபி வாங்கிக் கொண்டு நடந்தபோது, ‘‘வோங் லீ தெரியுமா?’’ என்னிடம் கேட்டார்.
‘‘ஜெட் லீ தெரியும்!’’
‘‘உனக்கு அதுதான் தெரியும். வோங் லீ முக்கியமான மரபணு ஆராய்ச்சியாளர். என்னோட ஆய்வு சம்பந்தமாக அவரோட நாலு நாள் தங்கியிருந்து டிஸ்கஸ் பண்ணிட்டு வந்திருக்கேன்...’’
‘‘சார், இன்னுமா அந்த சிம்பன்ஸி ஆராய்ச்சியை செஞ்சுகிட்டு இருக்கீங்க?’’
எனதுகேள்வி அவருக்கு லேசான கோபத்தை கொடுத்திருக்க வேண்டும். சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. ‘‘என் ஆராய்ச்சி மேல உனக்கு நம்பிக்கை இல்லையா முத்து?’’ என்றார்.
‘‘உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு சார். ஆனா, நீங்க ஆராய்ச்சிக்கு எடுத்திருக்கிற தியரி மேல எனக்கு நம்பிக்கை இல்லை. இத்தனை வருஷம் ஆகியும் டார்வின் தியரியை இந்த உலகம் இன்னும் முழுசா ஏத்துக்கலையே? அது இன்னமும் உறுதிப்பட நிரூபணம் ஆகலையே?’’‘‘டார்வின் தியரில உனக்கு என்ன சந்தேகம்? அதுல உனக்கு என்ன நிரூபணம் ஆகணும்?’’
‘‘குரங்கில இருந்து தான் மனிதன் வந்தான்கிறது நம்புற மாதிரி இல்லை சார். அப்படிப் பார்த்தா, இத்தனை வருஷத்தில, வேற எந்தக் குரங்கும் நமக்கு தெரிஞ்சு மனுஷனாகலையே?’’
‘‘சப்ஜெக்ட்ல இவ்ளோ வீக்கா இருக்கியே தம்பி? குரங்கில இருந்து மனிதன் வந்தான்னா... நைட்டு படுத்த குரங்கு மறுநாள் காலையில மனுஷனா கண்ணு முழிக்கிற மாதிரி சினிமாட்டிக்கா கற்பனை பண்ணிக்காத. இது பரிணாம வளர்ச்சி. புரிஞ்சுக்கோ. சிம்பிளா சொல்றேன். டார்வின் தியரிப் படி, இந்த உலகத்தில இருக்கிற மனுஷன், சிங்கம், புலி, பாம்பு... அத்தனை உயிரினங்களும் பொதுவான ஒரு உயிர்ல இருந்து உருவாகி, கால மாற்றத்துல இன்னிக்கு இருக்கிற இந்த உருவத்தில, வடிவத்துல இருக்குது. கால மாற்றம்கிறது ஒரு மாசம், ரெண்டு மாசம் இல்லை. பல லட்சம் வருஷம். வசிக்கிற சூழல்கள், தேவைகளைப் பொறுத்து, ஒவ்வொரு உயிரினமும் லட்சக்கணக்கான வருஷங்கள்ல இந்த உருவ மாற்றங்களையும், குண மாற்றங்களையும் அடைஞ்சிருக்கு. பரிணாம வளர்ச்சிக்கு தாக்குப்பிடிக்க முடியாம அழிஞ்சு போன உயிரினங்களும் இருக்கு. சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் தெரியும்தான?’’
‘‘எவ்வளவோ உயிரினங்கள் இருக்கும்போது, குரங்கில இருந்து தான் மனுஷன் பிறந்தான்னு சொல்றது சரியா இருக்குமா சார்?’’
‘‘யாரும் உன் ஜாதகத்தை புரட்டிப் பார்த்துட்டு, நீ குரங்குல இருந்து பிறந்திருக்கிற தம்பினு சொல்லலைபா. இது சயின்ஸ். மனிதனோட டிஎன்ஏவையும், மத்த மிருகங்கள் டிஎன்ஏவையும் ஒப்பிட்டு பார்த்திருக்காங்க. நீ நம்ப மாட்ட. சிம்பன்ஸியோட மரபணுவும், மனுஷனோட மரபணுவும் 99 சதவீதம் சரியா ஒத்துப்போகுது. வெறும் ஒரு சதவீதம் வித்தியாசத்தால தான் அது சிம்பன்ஸியாவும், நாம மனுஷனாவும் இருக்கோம்...’’
‘‘அப்போ, அந்த ஒரு சதவீத வித்தியாசம் இல்லைனா... சிம்பன்ஸி இனமே அழிஞ்சு, அது எல்லாமே மனுஷனா மாறிடுமா சார்?’’
அவர் தலையை உதறிக் கொண்டார். ‘‘உனக்கு இன்னும் சரியா புரியலை. முதல்ல குரங்குல இருந்து மனுஷன் பிறந்தான்னு சொல்லாத. அது தப்பு. குரங்குல இருந்து மனுஷன் பிரிஞ்சான். இதுதான் கரெக்ட்டு. புதுசா ஒரு உயிரினம் இந்த பூமியில உருவாகுதுனா, அதோட ஏன்செஸ்டர் ஸ்பீசிஸ் மரபணுல ஏற்படுற மாற்றம் தான் அதுக்குக் காரணம். மூதாதையர் மரபணுல ஏற்படுற சின்ன மாற்றம்... புதுசா ஒரு உயிரினம் உருவாக காரணமா அமைஞ்சிடுது. உருவ அமைப்புல மட்டும் இல்லை... சிம்பன்ஸியோட மரபணு தொகுப்பும், மனுஷனோட மரபணு தொகுப்பும் பிரமாதமா ஒத்துப்போகுது. அதனால தான் மனுஷனோட ஏன்செஸ்டர்ஸ்... அதாவது மூதாதையர் குரங்குனு சொல்றோம். புரீதா?’’
அதன் பிறகு நீண்டநேரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பயணக்களைப்பில் அவர் முன்னிருக்கையை படுக்கை வசமாக்கி சாய்ந்து விட, அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருந்தேன். சிம்பன்ஸி குரங்கை மனிதனாக்கும் முயற்சியில் படு மும்முரமாக இறங்கி விட்டார். இவரைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். பொதுவாக, சாத்தியமில்லாத விஷயங்களை கையில் எடுக்கமாட்டார். சாத்தியம் என்று தெரிந்து கையில் எடுத்து விட்டால்... எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும் வரை ஓயமாட்டார். உண்மையிலேயே இவரால் அந்த கூண்டுக் குரங்கை மனிதனாக்கி விடமுடியுமா? அப்படி மனிதனாக்க முடிந்து விட்டால், அதனால் இந்த உலகம் புதிதாக என்னென்ன பிரச்னைகளை சந்திக்கவேண்டியிருக்கும்.... குழப்பங்களுடன் யோசித்த படியே ஓட்டியதில்... வீடு வந்து சேர்ந்திருந்தது.
உள்ளே நுழைந்ததும், சூடாக தேநீர் தயார் செய்து கொண்டு வந்தார். ‘‘இங்க படுத்துக்கோ. விடிஞ்சதும் போகலாம்...’’ என்றார். நான் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது, சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்திருந்த புத்தகத்தை ஆர்வமாக எனக்கெதிரே புரட்டிக் கொண்டிருந்தார்.
‘‘சார்... திரும்பவும் கேட்கிறேன். இந்த ஆராய்ச்சி தேவைதானா? ஒரு குரங்கை மனுஷனாக்கி என்ன சாதிச்சிடப் போறீங்க?’’
அவர் சிரித்த படியே புத்தகத்தை மூடி வைத்தார். ‘‘இருக்கிற குரங்கை எல்லாம் மனுஷனாக்க ஆரம்பிச்சா, உலக மக்கள் தொகை இன்னும் ரொம்பக் கூடிடும். இதுதான உன் கவலை?’’
‘‘அப்பிடி இல்லை சார்...’’
‘‘பொறு. ஜஸ்ட்... குரங்கை மனுஷனாக்கிப் பார்க்கிறது மட்டும் இல்லைபா என்னோட நோக்கம். என்னோட இந்த ஆராய்ச்சி, எதிர்காலத்துல மனித இனத்துக்கு பெரிய அளவில உதவியா இருக்கும்...’’
‘‘எப்படி சார்?’’
‘‘இன்னிக்கு மனித இனம் சந்திக்கிற பெரிய பிரச்னை மரபணு சார்ந்த நோய்கள், மரபணு கோளாறுகள் தான். இந்த ஜெனடிக் டிஸார்டர் பிரச்னையில் இருந்து மீள முடியாம நாம பரிதவிச்சுகிட்டு இருக்கோம். ரொம்ப குழப்பாம சிம்பிளா சொல்றேன். ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு, அவன் எவ்வளவு ஹெல்தியா இருந்தாலும் அவன் குடும்பத்துல பரம்பரை, பரம்பரையா வர்ற டயாபடீஸ், ஹார்ட், கிட்னி, கேன்சர் பிரச்னைகள் மரபணு மூலமாக வந்து பாதிக்குது இல்லையா? இதுக்கு ஒரு தீர்வே இல்லாம இருக்கு இல்லையா? இப்போ, இந்த குரங்கோட மரபணு சங்கிலியை என்னால உடைச்சு, அதை புதிய உருவத்துல ஒரு மனுஷனா மாத்த முடிஞ்சுதுன்னு வெச்சிக்கோ, அந்த ஃபார்முலா படி, மனுஷனோட மரபணு சங்கிலியையும் என்னால உடைக்க முடியும். தாத்தாவுக்கு இருக்கிற வியாதி பேரனுக்கு, அப்பாவுக்கு இருக்கிற வியாதி மகனுக்கு வராம, அந்த மரபணு சங்கிலியை பிரேக் பண்ண முடியும். இந்த ஆராய்ச்சியோட அல்டிமேட் கோல் அதுதான் ராஜா...’’
அவர் பேசிக் கொண்டே போக... நம்ப முடியாமல் குழப்பத்துடன் அமர்ந்திருந்தேன்.
‘‘கூண்டுக்குள்ள நீ பார்த்தியே, அந்த சிம்பன்ஸி மூளையில ஒரு ஹியூமனாய்ட் சிப் பதிச்சிட்டேன். அந்த சிப், அந்த சிம்பன்ஸியை ஒரு மனுஷனா உணர வைக்கும். மனுஷங்களுக்குரிய கமாண்ட்டை மூளையில இருந்து அதுக்கு கொடுக்கும். சிப் கொடுக்கிற கமாண்ட்ஸ் மூலமா அந்தக் குரங்கு செயல், சிந்தனை, எண்ணம்... எல்லாத்திலயும் தன்னை ஒரு மனுஷனா உணர ஆரம்பிக்கும். இப்ப நீ கதவைத் திறந்து போய் பார்த்தா... முகத்தில சிரிப்போட, ‘வாங்க... என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம்’ங்கிற மாதிரி ரியாக்ட் பண்ணும். ஒரு புது ஆள் போனா... ‘சாரை யார்னு தெரியலையே. உங்களுக்கு என்ன வேணும்?’னு கேட்கிற மாதிரி அதால ரியாக்ட் பண்ணமுடியும். மூளையில நான் பொருத்தியிருக்கிற சிப் பண்ற வேலை இது. சரியா? இது தவிர, அதோட டிஎன்ஏவை அதாவது மரபணுவை உருமாற்றம் பண்ணுறதுக்காக ஊசி மூலமாக சில பயலாஜிக்கல் சப்ஸ்டன்ஸ் தொடர்ந்து ஏத்தப் போறேன். மூளையில இருக்கிற சிப், அதோட உணர்வுகள்ல மாற்றத்தை கொடுத்தா, ஊசி மூலமாக நான் செலுத்துற மருந்துகள் அதோட உடலில மாற்றத்தைக் கொண்டு வரும். நடக்குதா, இல்லையான்னு பாரேன்!’’‘‘அப்போ, இந்த குரங்கு, இவல்யூஷன் தியரிப்படி முழு மனுஷனா மாறப் போறது சாத்தியம் தானா சார்?’’
‘‘சாத்தியம் தான். ஆனா, இவல்யூஷன் தியரிக்கும் மேல, நான் சில புது விஷயங்களை கொண்டு வர்றேன். பொதுவா, மரபணு கோளாறுகள் நம்ம டிஎன்ஏவில மோனோஜெனிக், பாலிஜெனிக் பிரச்னைகளால வரலாம். சமயத்தில குரோமோசோம் குறைபாடுகளாலயும் வரலாம். என்னோட ஆராய்ச்சியோட முடிவு, உலகம் முழுக்க மரபணு கோளாறுகளால அவதிப்பட்டுகிட்டு இருக்கிற மனுஷங்களுக்கு பெரிய விடுதலையா அமையும்.’’‘‘ஆனாலும்... நேத்து வரைக்கும் ஒரு குரங்கு.... இன்னைக்கு மனுஷனா... அதை மனசு ஏத்துக்க மறுக்குது சார்...’’
‘‘தப்பில்லை. உனக்கு தெரிஞ்ச விஷயங்களை வெச்சுத்தான் உன்னோட மூளை ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும். இவல்யூஷன் தியரி புரியிற மாதிரி இன்னும் சிம்பிளா உனக்கு ஒரு உதாரணம் சொல்றேன். வவ்வால் பாத்திருக்கியா?’’
‘‘ஓ!’’
‘‘இப்ப என் கேள்விக்கு பதில் சொல்லு. வவ்வால் பறவையா, விலங்கா?’’‘‘வவ்வால்ங்கிறது ஒரு வித்தியாசமான உயிரினம் சார். மம்மல்ஸ்... அதாவது குட்டிகளுக்கு பால் கொடுக்கக்கூடிய ஒரே பறக்கும் உயிரி அதுதான் சார்.’’
‘‘வெரிகுட். சரியாச் சொல்லணும்னா வவ்வால்ங்கிறது பறவைக்கும், விலங்குக்கும் இடைப்பட்ட ஒரு உயிரினம். அதைப் பத்தி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கு. விஞ்ஞானிகள் கருத்துப்படி, நாம இதுவரைக்கும் அறிந்தேயிராத ஏதோ ஒரு பறவை இனம் தான், பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்டத்தில இந்த வவ்வாலா உருமாற்றம் அடைஞ்சிருக்கு. ஒரு பறவை இனம், விலங்கு இனமா உருமாற்றம் ஆகுது. விலங்கு இனத்துக்கான அடையாளமா குட்டிகளுக்கு பால் கொடுக்கக் கூடிய அமைப்பும், முதுகெலும்பும் அதுக்கு கிடைச்சிடுச்சி.
வவ்வாலோட முகத்தை கூகுள்ல குளோஸப் பண்ணி பாரு. அதோட முகம் ஒரு பறவை மாதிரியா இருக்கு? நரி, எலியோட முகம் தான அதுக்கு இருக்கு? அது இன்னும் முழு விலங்கா பரிணாமம் அடையலை. பரிணாம வளர்ச்சி அங்க நடந்துகிட்டு இருக்கு. யாருக்குத் தெரியும்? இன்னும் ஆயிரம் வருஷத்துல வவ்வால் அதோட பறக்கிற தன்மையை சுத்தமா இழந்துட்டு, முழுமையான ஒரு விலங்கா மாறலாம். அப்போ டார்வின் தியரியை இந்த உலகம் சரின்னு முழுமையா ஆமோதிக்கலாம். என்ன நான் சொல்றது?’’அவரே தொடர்ந்தார். ‘‘அவ்வளவு ஏன்பா? இந்தா, நான் கண்ணுல மாட்டியிருக்கிற இந்த கண்ணாடியைப் பாரு. இந்த கண்ணாடிங்கிறது சிலிக்கான் மெட்டீரியல். சிலிக்கான்னா என்ன? வெறும் மண்ணு. இந்தக் கண்ணாடியை மண்ணுனு சொன்னா இப்போ நீ நம்புவியா? பரிமாண வளர்ச்சி தத்துவத்தை நம்பணும்னா, சயின்ஸ் தெரிஞ்சிருக்கணும். சரி படு. காலையில எனக்கு வோங் லீ கூட ஒரு ஜூம் மீட்டிங் இருக்கு!’’
அவர் எழுந்து கொள்ள... நான், அங்கிருந்த படுக்கையில் சாய்ந்தேன். அவருடன் பேசியது மிகுந்த குழப்பத்தைக் கொடுக்க... தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். நீண்ட சிந்தனைகளுக்குப் பிறகு, மெதுவாக களைத்து நான் உறக்கத்துக்குள் நுழைந்த சமயத்தில்... எனது மூளையின் அடி ஆழத்துக்குள் கேட்டது அந்த கேட்டறியாத புதிய ஓலம். நொடியில் தூக்கம் கலைந்து, திடுக்கிட்டு எழுந்தமர்ந்தேன். ஒரு விலங்கின் அடித்தொண்டை ஒலியாகத் துவங்கி... கொஞ்சம் கொஞ்சமாக விஸ்தீரணம் அடைந்து மனிதக் குரலாக உருமாற்றம் பெற்ற அந்த ஓலம், ஒரு ஊளைச் சத்தம் போல ஓங்கி ஒலித்தது. ஏ.சி குளிரிலும் எனக்குள் வியர்த்தது. எனது தூக்கம் அடியோடு கலைந்து சுற்றிலும் பார்த்தேன். எங்கும் ஆழ்ந்த அடர்ந்த இருள் பரவி இருந்தது. பயணக்களைப்பில் பக்கத்து கட்டிலில் பேராசிரியர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த அந்த ஓலம்... அவரது தூக்கத்தை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. மெதுவாக எழுந்து, அந்த ஊளைச் சத்தம் வந்த திசையைக் கவனித்தேன். வீட்டுக்குப் பின்புறம்... அந்த சிம்பன்ஸி அடைக்கப்பட்டிருந்த அறைப்பக்கம் இருந்து அந்தச் சத்தம் வந்து கொண்டிருந்தது. அதன் பிறகு எனக்கு தூக்கம் வரவில்லை. விடியும் வரை புரண்டு கொண்டிருந்து... விடிந்ததும் முதல் வேலையாக முகத்தைக் கழுவி விட்டு கிளம்பி விட்டேன்.
கருத்தாழமிக்க பதிவு. ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடைப்பட்ட கருத்து. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதை மறுக்கும் ஆன்மீகவாதிகளுக்கு , புரியும் படியான எழுத்து நடை. ஒருவேளை இப்படியும் இருக்குமோ என்று எண்ண தோன்றும் அளவுக்கு உள்ளதுசிறப்பு.
பதிலளிநீக்கு