பேராசிரியருடனான மூன்றாவது சந்திப்பு, அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்தது. இடைப்பட்ட காலத்தில், மேற்படிப்புக்காக நான் டெல்லி போய் விட்டேன். அரிதாக அவ்வப்போது போனில் உரையாடினாலும், இந்த ஆய்வு பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. எனக்கும் அதில் பெரிய ஆர்வம் இல்லை. படிப்பு முடிந்து ஊர் திரும்பிய இரண்டாவது வாரம்... காலை 10 மணி இருக்கும். பேராசிரியரிடம் இருந்து போன். குரலில் மிகுந்த பதற்றம். ‘‘என்ன சார்?என்ன ஆச்சு?’’ நான் கேட்டு முடிப்பதற்குள், ‘‘நீ கிளம்பி வா. உடனே வா. சீக்கிரம் முத்து. நான் ஆபத்தில இருக்கேன். அவன் தப்பிச்சி ஓடிப் போயிட்டான்...’’ - போனை துண்டித்து விட்டார்.
முதல் பாகம் படிக்க... டா ர் வி ன் - one
(தினகரன் தீபாவளி மலர் - 2024ல் வெளியான சிறுகதை.)
அடுத்த முக்கால் மணிநேரத்தில் அவரது வீட்டில் இருந்தேன். வழக்கமான நிதானத்தை இழந்து, மிகப் பதற்றமாக இருந்தார். ‘‘சார், என்ன ஆச்சு...’’ என்ற என் கேள்வி முடிவதற்குள், தள்ளாட்டமாக எழுந்து என் கைகளைப் பிடித்த படி ‘வா உடனே போலீசுக்கு போவோம்..’’ என்றார்.
‘‘சார், பதற்றம் வேண்டாம். என்ன ஆச்சு. சொல்லுங்க’’
‘‘என்னோட ஆராய்ச்சி சக்சஸ் ஆகிற நேரத்தில... எல்லாமே வீணாகிடுச்சு முத்து....’’
சில வினாடிகள் அமைதிக்குப் பிறகு தொடர்ந்தார். ‘‘அந்த சிம்பன்ஸியை மனுஷனா டிரான்ஸ்பார்ம் பண்ணுற எனது ஆராய்ச்சில எல்லாமே சரியாத்தான் போச்சு. மூளையில பொருத்துன ஹியூமனாய்ட் சிப் வேலை செய்யத் துவங்கி, அந்த குரங்குக்கு மனிதக் கட்டளைகளை பிறப்பிக்க ஆரம்பிச்சிடுச்சி. உடலியக்க ரீதியான மாற்றத்துக்காக நான் கொடுத்த மருந்துகளும் அந்த குரங்குக்கு உடல்ரீதியிலான மாற்றத்தை கொடுத்துகிட்டு இருந்தது. என்ன பிரச்னைனா, இந்த ரெண்டு செயல்பாடுகளும் பேலன்ஸ்டா இல்லாம போயிடுச்சு. அதாவது, சிப் வேலை பார்த்த வேகத்துக்கு, நான் அனுப்புன மருந்து வேலை பார்க்கலை...’’
‘‘அதனால என்ன சார் பிரச்னை?’’
‘‘என்ன... பிரச்னையா? மனுஷன் மாதிரி மூளை முழுசா மாறிடுச்சு. ஆனா, உடம்பு முழு மனுஷனா மாறலை. இன்னும் முழு வளர்ச்சி அடையலை. ஆனா, அது ஒண்ணும் பெரிய பிரச்னை இல்லை. அதோட பிட்யூட்டரி கிளாண்ட்... அப்புறம், செரிப்ரல் கார்டெக்ஸ்னு சொல்ற அந்த வெளிசெல் நரம்பு மண்டலத்தை தூண்டி விடக்கூடிய மருந்து கொஞ்சம் கூடுதல் டோஸ் கொடுத்திருந்தா வேலை முடிஞ்சிருக்கும்...’’
பாட்டில் திறந்து ஒரு மடக்கு தண்ணீர் குடித்து விட்டு, ‘‘அதுக்கு முன்னால முந்திகிட்டான். ரெண்டு நாளா மருந்து கொஞ்சம் கூடுதல் டோஸ் உணவோட சேர்த்து கொடுத்தேன். அந்த டேஸ்ட் அவனுக்குப் பிடிக்காம, முரண்டு பிடிச்சுகிட்டு இருந்தான். இன்னிக்கு காலையில பிரேக் ஃபாஸ்ட் கொடுக்கறதுக்காக உள்ளே நுழைஞ்சேன். ஒரு வாய் சாப்பிட்டதும், மருந்து டேஸ்ட் பிடிக்காம கோபப்பட்டான். நான் தொடர்ந்து வற்புறுத்தினதும், திடீர்னு என்னைய தாக்கி, கழுத்தைப் பிடிச்சு கீழ தள்ளி விட்டுட்டு, தப்பிச்சுப் போயிட்டான்...’’
என்னை வெறித்துப் பார்த்த படி சொல்லிக் கொண்டிருந்தார்.
‘‘சார், இப்ப என்ன பண்றது? வெளியே போய் அது... ஸாரி, அவன் ஏதாவது விபரீதமா பிரச்னை பண்ணீட்டான்னா?’’
‘‘இல்லை. அவனால பெரிய பிரச்னை எதுவும் இருக்காது. ஆனா, ரெண்டு நாள்ல அவனை நாம பிடிச்சுக் கொண்டு வந்தாகணும்.’’
‘‘அதென்ன சார் ரெண்டு நாள் கணக்கு?’’
‘‘உடல் உறுப்பு வளர்ச்சிக்காக பிரெய்ன் நரம்பு மண்டலத்துக்கு நான் கொடுத்துகிட்டு இருக்கிற டோஸ், இடைவெளி இல்லாம தொடர்ந்து எடுத்துக்கணும். கேப் விடக்கூடாது. எதிர்பாராதவிதமாக மருந்து சாப்பிட முடியாம போனாலும், இடைவெளி கண்டிப்பாக 2 நாளை கடந்திடக்கூடாது.’’
‘‘கடந்திட்டா?’’
‘‘மூளை செயலிழப்பு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால, ரெண்டு நாளைக்குள்ள பிடிச்சி, அடுத்த டோஸ் கொடுத்தாகணும். அது மட்டுமில்லை. இந்த ரெண்டு நாளைக்குள்ள என்னைய அட்டாக் பண்ணவும்... அதாவது கொலையே பண்ணவும் கூட அவன் முயற்சி பண்ணலாம்!’’
‘‘உங்களை எதுக்கு சார் கொல்லணும்?’’
‘‘முத்து... உனக்கு புரியலை. நீயும், நானும் மனுஷங்க. அதைமாதிரி, குரங்குனு அவனை வரையறுத்து சொல்லமுடியாது. இன்னிக்கு நிலைமையில, மனுஷனா பார்த்தா அது மனுஷன். குரங்கா பார்த்தா அது குரங்கு...’’
‘‘குழப்பமாக இருக்கு சார்...’’‘‘இருக்கத்தான் செய்யும். எனக்கே நிறைய குழப்பம் இருக்கு. இப்போ, அவன் மூளைக்குள்ள, நான் பதிச்சு வெச்சிருக்கிற சிப் மூலமா, ரெண்டு சிந்தனை ஓடிகிட்டு இருக்கும். ஒண்ணு... குரங்காவும் இல்லாம, மனுஷனாவும் இல்லாம தன்னோட வாழ்க்கையை சீரழிச்ச என்னைய கொல்றதுக்கு திட்டம் போட்டுகிட்டு இருக்கலாம்...’’
‘‘சார்...’’
‘‘பதறாத. உண்மையைத்தான் சொல்றேன். இரண்டாவது, தன்னோட உயிரைக் காப்பாத்திக்கிறதுக்காக அவன் டாக்டர் விஜயனை சந்திக்கப் போயிருக்கலாம்...’’
‘‘விஜயனா? அது யார் சார் சீன்ல புதுசா?’
‘‘சிங்கப்பூர் டாக்டர் வோங் லீயோட ஸ்டூடண்ட். நிறைய நுணுக்கங்கள் தெரிஞ்ச நியூரோ சர்ஜன். இந்தா... இந்த சூட்கேஸை திறந்து துணிகளை எல்லாம் வெளியே எடுத்து போட்டுட்டு, அப்றம் திரும்ப உள்ள வெச்சு மூடுற மாதிரி, மூளையைத் திறந்து பார்ட், பார்ட்டா பிரிச்சு மேயுற ஆளு. சிங்கப்பூர் போயிருந்தப்ப, வோங் லீ, இந்த விஜயனைப் பத்தி சொல்லி, போய் அறிமுகம் ஆகிக்கச் சொன்னாரு. இங்க வந்ததும் வேலை ரொம்ப இருந்ததால, நேர்ல போய் அவரை சந்திக்க முடியலை. ஆனா, போன்ல அடிக்கடி பேசிக்குவோம். அவரோட ஆலோசனைப் படி, இந்த சிம்பன்ஸிக்கு சில நியூரோ மெடிசின்ஸ் நான் செலுத்திகிட்டு இருக்கேன். அடிக்கடி போன்ல பேசுறதால, அந்த சிம்பன்ஸிக்கு, டாக்டர் விஜயனை, அவரோட முகவரியை நல்லாத் தெரியும். அதனால, அவன் தன்னோட உயிரைக் காப்பாத்திக்கிறதுக்காக இப்ப நேரா அவரைத் தேடிப் போயிருக்கலாம்...’’‘‘சார், அப்ப ஒரு நொடி கூட தாமதிக்க வேண்டாம். டாக்டர் விஜயனை உடனே போய் பாக்கலாம் வாங்க. அந்தக் குரங்கை பிடிக்கிற வரைக்கும், நீங்க தனியா இருக்கவேண்டாம். ஆபத்து. நான் உங்க கூட இருக்கேன். இல்லைனா... நீ்ங்க என் கூட வந்திருங்க...’’
‘‘யார் கூட யார் இருக்கறதுனு அப்றம் யோசிக்கலாம். வா, உடனே விஜயனை பாக்கணும். அவர் க்ளினிக் இங்க இருந்து 60 கிலோ மீட்டர் தள்ளி இருக்கு...’’
பேராசிரியர் மிகுந்த பதற்றத்தில் இருந்ததால், அவரை முன் இருக்கையில் அமரச் செய்து விட்டு, காரை நானே ஓட்டினேன். டிராபிக் நெரிசல்கள் எல்லாம் கடந்து சென்று சேர ஒரு மணிநேரத்துக்கும் மேலாகி விட்டது. விசிட்டிங் கார்டு எடுத்துப் பார்த்து விட்டு, ‘‘இந்தத் தெருதான்... காரை நிறுத்து. இந்தா... இந்த மெடிக்கல் ஷாப்கிட்ட நிறுத்து. கரெக்ட்டான அட்ரஸ் கேட்டுக்குவோம்...’’
மெடிக்கல் ஷாப் பையனிடம் கேட்டோம். ‘‘இந்தத் தெருவில கடைசி வீடு...’’ என்றவன், தலையைச் சொறிந்த படி, ‘‘மணி இப்ப 12 தான் ஆகுது. இப்ப டாக்டர் இருக்க மாட்டாரே. அவரு ஜி.ஹெச் போயிருப்பாரு. சாயங்காலம் 6 மணிக்கு மேலதான க்ளினிக் வருவாரு...’’
எனக்கு தலைசுற்றியது. ‘‘சார், நாம க்ளினிக் போய் வெயிட் பண்ணுவோம். நீங்க டாக்டருக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லுங்க. நேரம் வேஸ்ட் பண்ண வேண்டாம்...’’
எங்கள் பதற்றத்தைப் பார்த்த மெடிக்கல் பையன், ‘‘ஆனா, க்ளினிக் தொறந்து தான் இருக்கும் சார். ஆள் இருப்பாங்க. சாயங்காலம் கூட்டம் வந்திரும். இப்பவே போய் பேர் கொடுத்துருங்க’’ என்றான்.
நான் கியரை மாற்றி காரை நகர்த்தினேன். க்ளினிக் திறந்திருந்தது. காரைத் திறந்து இருவரும் ஏறக்குறைய உள்ளே பாய்ந்தோம். ரிஷப்ஷனில் யாரும் இல்லை. டாக்டர் அறை திறந்திருந்தது. திரையை விலக்கி எட்டிப் பார்த்தேன். இன்ப அதிர்ச்சி. பேராசிரியரின் ராசிக்கு இன்று நாள் நன்றாக இருக்கும் போல. டாக்டர் இருந்தார். கருப்பு நிற முழுக்கை சட்டையில், தலைக்கு வித்தியாசமான தொப்பியும், முகத்தில் மாஸ்க்கும், கைகளில் கையுறையும் அணிந்து புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவர்... சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்து, ‘‘யாரு...? உள்ள வாங்க!’’ என்றார் கரகரத்த குரலில்.
இருவரும் உள்ளே நுழைந்தோம். ‘‘டாக்டர், நான் புரஃபஸர் தியோடர். வோங் லீயோட நண்பன். நாம பேசியிருக்கோம்...’’ என்று பேராசிரியர் கை நீட்டினார்.
‘‘வெல்கம் தியோடர் சார். ஸாரி உங்களோட கைகுலுக்க முடியாது. எனக்கு த்ரோட் இன்ஃபக்ஷன். ப்ளு ஃபீவர் சிம்ப்டம் இருக்கு. அதான் மாஸ்க். தள்ளியே உட்காருங்க...’’ குரல் மிகுந்த கரகரப்பாக இருந்தது.
‘‘நோ ப்ராப்ளம் டாக்டர். நாங்க இப்போ எதுக்கு வந்திருக்கம்னா...’’
‘‘அந்த சிம்பன்ஸி தப்பிச்சிட்டான். சரியா...?’’
‘‘டாக்டர்.... அது எப்படி உங்களுக்கு...’’
‘‘காலையில நேரா இங்கதான் வந்திருந்தான்...’’
‘‘அய்யய்யோ... இப்ப அவன் எங்க டாக்டர்? அவன் இப்ப ரொம்ப டேஞ்சர் கண்டீஷன்!’’
‘‘எனக்கு எல்லாம் தெரியும். செடடிவ் கொடுத்து, என்னோட கெஸ்ட் ஹவுஸ்ல அடைச்சி வெச்சிருக்கேன். எந்திரிச்சதும் தப்பிச்சிடாம இருக்க, கூட ரெண்டு பேர் இருக்காங்க!’’
பேராசிரியர், நாற்காலியில் முழுசாக சாய்ந்து பெருமூச்சு விட்டார். ‘‘அப்பாடா. இப்பத்தான் நிம்மதியா இருக்கு டாக்டர். இப்ப உடனே அவனுக்கு டோஸ் கொடுத்தாகணும். இல்லைனா, மயக்கம் தெளிஞ்சு எழுந்ததும், என்னை கொல்லணும்னு கௌம்பிடுவான்...’’
டாக்டர் விஜயன் எழுந்து கொண்டார். ‘‘பயப்படவேண்டாம் சார். அவன் எழுந்திரிக்க ஒரு மணிநேரம் ஆகும். அவனுக்கு கொடுக்கிற மெடிசின் எடுத்துட்டு வந்திருக்கீங்களா?’’‘‘இல்லையே டாக்டர்..’’
‘‘ஒண்ணும் பிரச்னை இல்லை. கார்ல தான வந்திருக்கீங்க?’’
‘‘ஆமா டாக்டர்’’
‘‘நாம கார்ல முன்னால போகலாம். சார், நீங்க அந்த மெடிசின் வாங்கிட்டு, ஆட்டோல பின்னால வந்திடறீங்களா? மெடிசின் இங்க இருக்காது.பெரிய மெடிக்கல்ஸ்ல தான் கிடைக்கும்...’’
பேராசிரியருடன் டாக்டர் லேசாக தடுமாறிய படி நடந்து சென்று காரில் ஏறிக் கொண்டார். பேராசிரியர் சாவியை வாங்கிக் கொண்டு டிரைவிங் சீட்டில் அமர்ந்தார்.
கார் கிளம்பியது.
மனதுக்குள் ஆயிரம் குழப்பங்களுடன், மருந்து சீட்டுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். பேராசிரியருக்கு ஏன் இந்த தேவையில்லாத விபரீத ஆராய்ச்சி? நல்லவேளை, டாக்டர் கிடைத்தார். சிம்பன்ஸியும் கிடைத்தது. இல்லாவிட்டால் என்ன ஆயிருக்கும்.... யோசித்துக் கொண்டிருந்த போது, பெரிய குலுங்கலுடன், ஆட்டோ ஸ்பீட் பிரேக்கரில் ஏறி, இறங்க... முன்னால் இருந்த கம்பியில் பலமாக மோதிக் கொண்டேன்.
மோதிய வேகத்தில் தலை வலிக்க, வலித்த இடத்தை அழுத்தித் தேய்த்த போது... திடீரென மண்டைக்குள் மின்னல் வெட்டியது. ஸ்பீட் பிரேக்கரில் ஏறாமலேயே சீட்டில் ஒரு முறை துள்ளி குதித்து அமர்ந்தேன். ‘‘டிரைவர் சார்... ஒரு நிமிஷம்... ஒரு நிமிஷம்... ஆட்டோவை நிறுத்துங்க...’’ எனது கூச்சலில் அரண்டு போய் ஆட்டோவை ஓரங்கட்டினார்.
தலையை அழுத்திப் பிடித்த படியே... கண்களை முடிந்ந்ந்ந்த மட்டும் இறுக்க்க்க்கமாக மூடியே படி... கடந்து போன ஐந்து நிமிடங்களை எனது மனதுக்குள் ரீவைண்ட் செய்து பார்த்தேன்.
ஏதோ இடறியது.
மீண்டும் கண்களை இறுக்க மூடி, நடந்து முடிந்த சம்பவங்களை இம்முறை ஸ்லோமோஷனில் ஒவ்வொரு காட்சியாக ரீவைண்ட் செய்தேன்.
- டாக்டர் விஜயனும், பேராசிரியர் தியோடரும் எனக்கு முன்னால் நடந்து செல்கிறார்கள்.
- டாக்டரின் நடையில் நிறைய தடுமாற்றம்.
- காரின் சாவியை என்னிடம் வாங்கிக் கொண்டு, டிரைவிங் டோர் திறந்து ஏறுகிறார் பேராசிரியர்.
- மிகவும் தடுமாறிய படி, முன்பக்க டோரை திறக்க டாக்டர் சிரமப்பட, உள்ளிருந்து திறந்து விடுகிறார் பேராசிரியர்.
- டோர் திறந்ததும், உள்ளே ஏறுகிறார் டாக்டர் விஜயன்.
- ஏறும் போது, தலை காரின் மேல்புறத்தில் இடிக்க... தடுமாறுகிறார்.
- காரில் மோதிய வேகத்தில் தலையில் இருந்த தொப்பி நழுவுகிறது.
- நொடிப் பொழுதும் தாமதிக்காமல் விரைந்து தொப்பியை சரி செய்கிறார்.
- தொப்பியை அவர் சரி செய்யும் அந்த மைக்ரோ வினாடி நேரத்தை ஸ்டாப் செய்து, மீண்டும் ஸ்லோமோஷனில் அந்தக் காட்சியை மட்டும் மனதுக்குள் ஓட்டினேன்.
* தலையில் இருந்து தொப்பி நழுவ... அந்த நொடி நேரத்தில் டாக்டர் விஜயனின் தலை பளீரென தெரிகிறது - இன்னும் முழுமையான வளர்ச்சி பெறாத மனிதத் தலை!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
சார், கதை மிக நன்றாக உள்ளது. மேலும் பேச்சு வழக்கில் எழுத்து வடிவம் சூப்பர். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகதை மிகவும் அருமை. படிக்கும் போதே நியாண்டர்தால் காலத்துக்கு போய், கடைசியில் , தலை இடித்து நிஜ உலகுக்கு வந்தது போல் இருந்தது.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குமிகவும் விறுவிறுப்பான கதைக்களம். எழுத்து நடை அருமை. ஆர்வமுடன் படித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் சார்,
பதிலளிநீக்குவிறுவிறுப்பான அறிவியல் புனைவு கதை (சைன்ஸ் பிக்சன் ஸ்டோரி). அழகான எளிய தமிழ் நடை. போரடிக்காமல் செல்கிறது. அடுத்த என்ன என்ன என்று ஆர்வம் கொள்ள வைக்கிறது. குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதை விட குரங்கில் இருந்து மனிதன் பிரிந்தான் என்பதே உண்மை என்பது போன்ற டச்சிங்கான வரிகள் அதிகம். வாழ்த்துகள் சார். நன்றி.
அருமையான கதை... அறிவியல் புனைவு கதை இது. கதையில் வருவது போன்ற சில ஆய்வுகள் உலக அளவில் நடைபெற்று வருகின்றன. கதையில் முடிவு எதிர்பாராத திருப்பம். தொடரட்டும் தோழர் உங்கள் இலக்கியப்பணி.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅழகான எழுத்து வடிவம். தொடக்கத்தில் இது போன்ற ஒரு நிறைவு வரும் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. எங்கோ பயணிக்கிறது இந்த கதை என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அதன் திசை மற்றொரு புதிய வடிவினை நோக்கி சென்றுள்ளது
பதிலளிநீக்கு