வெள்ளி, 22 ஏப்ரல், 2022

ராஜா & பா.ஜ : ஏன் சர்ச்சை?

ர்ச்சையில் சிக்காத ராஜாக்கள் சரித்திரத்தில் கிடையாது. இசை ராஜாவும் விதிவிலக்கல்ல. அவரையும் அடிக்கடி சர்ச்சைகள் மையம் கொள்வது உண்டு. இப்போதும் ஒரு சர்ச்சை சுழன்றடிக்கிறது. பேசுவதற்கு, பிரதான பிரச்னையாகவும் அது இன்று மாறியிருக்கிறது. முற்போக்காளர்கள், முற்போக்காளரல்லாதவர்கள் என கருதப்படும் இரு தரப்பினரும் இறங்கி நின்று, வலைத்தளங்களை போர்க்களங்களாக்குகிறார்கள். சரியா, தப்பா சண்டைகளால், சமூக வலைத்தளங்களுக்கு ஆகும் டேட்டா செலவு கடந்த சில நாட்களில் கணிசமாக அதிகரித்து, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பெருமகிழ்வை தந்திருக்கிறது. இருக்கட்டும். பிரதமர் மோடியின் செயல்கள் கண்டு உண்மையிலேயே அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பாரா?


ஆன்டி இந்தியன்?

ந்தியராய் பிறந்த அத்தனை பேருக்கும், தங்கள் கருத்துகளை பொதுவெளியில் சுதந்திரமாகத் தெரிவிக்கிற உரிமையை, அரசியலமைப்பு சாசனம் உறுதி செய்திருக்கிறது (all citizens shall have the right to freedom of speech and expression... - article 19 (1) (a). ‘ஆன்டி இந்தியன்’ போன்ற அவதூறுகள் கிளம்பினாலும் கூட,  கருத்துச் சொல்ல கண்டிப்பாக உரிமை உண்டு.

கவே, ‘‘...அம்பேத்கர், நரேந்திர மோடி இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்ல; செயல்படுவதிலும் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதிகள். முத்தலாக் உள்ளிட்ட சட்டங்களின் மூலம் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். மோடியின் செயல்பாடுகளை இப்போது அம்பேத்கர் கண்டால் பெருமைப்படுவார்...’’ என்று எழுதுவதற்கு இசைஞானிக்கு உரிமையும், ‘article 19 (1) (a)’-ன் படி  சுதந்திரமும் இருக்கிறது. அதெப்படி பேசலாம் என்று யாரும் தாவிக் குதிக்கமுடியாது. மீறி, தாவிக்குதிப்பவர்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும். அவர் இசையில் தான் ஞானியே தவிர, அரசியல், விஞ்ஞானம், பொது விஷயங்களில் அல்ல. அவரிடம் இருந்து ஆன்மாவை நனைக்கிற இசையை மட்டுமே நாம் எதிர்பார்க்கவேண்டும்.சீனாவை ராஜதந்திர ரீதியில் மடக்குவது எப்படி என்ற அரசியல் நகர்வுகளை அல்ல!


கிருஷ்ணரும், அர்ஜூனரும்...


பிரதமர் மோடியை இளையராஜா புகழ்ந்து எழுதிய விவகாரம் பெட்ரோல், டீசல், காஸ் விலை பிரச்னைகளை பின்னுக்குத்தள்ளி தொடர் விவாதங்களுக்குள்ளாவது வியப்பளிக்கிறது. காரணம், மோடியை புகழ்ந்து எழுதுகிற முதல் திரைப்பிரபலம் அல்ல இசைஞானி.


 அவருக்கும் முன்பாகவே, திரைத்துறையைச் சேர்ந்த 80 சதவீதம் பேர் மோடியை உலகம் காக்க வந்த ரட்சகராக பிம்பப்படுத்தியிருக்கிறார்கள். இந்திய நடுத்தர வர்க்கத்தினரை நடுரோட்டில் நிறுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நமது உச்சமும், உலகமும் புகழ்ந்து வரவேற்றதை மறந்திருக்க மாட்டோம். மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணரும், அர்ஜூனரும் மாதிரி என்று உச்சிகுளிர வைத்தவர் உச்சம். நிஜமாகவே, யாரும் அப்போது இதுமாதிரி ஆவேசப்படவில்லை.


லகம் மட்டும் சாதாரண ஆளா... என்ன? ஸ்வச்பாரத் திட்டத்தின் தமிழக தூதராக களமிறங்கியவர். இன்றைக்கு வரை தமிழக தேர்தல் களங்களில், பாரதிய ஜனதாவின் வெற்றிகளுக்கு மறைமுகமான காரணகர்த்தா. சந்தேகம் இருப்பவர்கள், கோவையில் வானதி சீனிவாசன் எப்படி ஜெயிக்க முடிந்தது; அவருக்கு எதிரான ஓட்டுக்கள் எப்படி லாவகமாக பிரிக்கப்பட்டது என்று  விசாரித்து அறிக. ரொம்ப பழைய கதை எதற்கு?



 ‘‘பிரதமர் மோடியை எதிர்ப்பவர்கள் குறைமாதத்தில் பிறந்தவர்கள்...’’ என்று இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியது கூட, இந்தளவுக்கு சர்ச்சையாக வில்லையே? இசைஞானி பேசியது மட்டும் ஏன் இப்படி தீப்பிடிக்கிறது? அவரது பிறப்பு, வளர்ப்பு, குடும்பப் பின்னணி எல்லாம் தோண்டி எடுத்து துவைத்துக் காயவைக்கப்படுகிறது? இந்தியா போன்றதொரு தேசத்தில், சரி என்பதும், தவறு என்பதும், செய்கிற நபர்கள் யார் என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படுமா?


சித்தாந்தச் சிக்கல்!?


மிழகத்து முற்போக்காளர்கள் ஏன் இந்தளவுக்கு இசைஞானி மீது கோபம் கொள்கிறார்கள்? உளவியல்ரீதியில் இதை வேறுமாதிரி யோசிக்கலாம். மோடியையும், அவரது சித்தாந்தங்களையும் உச்சமோ, உலகமோ அல்லது பாக்யராஜ்களோ... புகழ்ந்து பேசுவது அவர்களுக்குள் பெரிய சலனத்தை ஏற்படுத்துவது இல்லை. அதேசமயம், இசைஞானியை அவர்கள் அந்த இடத்தில் வைக்கவில்லை. தமிழகத்தில் பிறந்தவர்கள் எவரானாலும், தாயின் குரலுக்கு அடுத்தபடியாக அவர்கள் அதிகம் கேட்டறிந்தது இசைஞானியின் ராகமாக மட்டுமே இருக்கும். தமிழகத்து மக்கள் ஒவ்வொருவரும், அவர்களது மகிழ்ச்சி, கொண்டாட்டம், வெற்றி, உற்சாகம்... மட்டுமல்ல, இழப்பு, சோகம், பிரிவு,தோல்வி, துயரம்... அனைத்துத் தருணங்களிலும் இசைஞானியின் கரங்களின் அரவணைப்பை உணர்ந்தவர்கள்.


சைஞானி என்பவர், வெறும் சினிமா இசையமைப்பாளர் மட்டுமே அல்ல. தமிழர்களின் வாழ்க்கை வழித்துணை. சாலைப்பயணங்களில் மட்டுமல்ல... வாழ்க்கைப் பயணங்களிலும் அவரது இசை உடன் வருகிறது. இன்னொருவராக பிரித்து உணர முடியாதபடிக்கு உணர்வுப்பூர்வமாக அவரை தங்களுக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். சாலையில் செல்லும்போது, இளைஞர் கூட்டம் அட்டகாசம் செய்து கொண்டிருப்பதை பார்ப்போம். சலனமற்று கடந்து சென்று விடுவோம். அந்தக் கூட்டத்தில் நமது வீட்டுப் பையன் இருப்பது தெரிந்தால்... ஆத்திரம் பொத்துக் கொண்டு வரும்தானே? திட்டித் தீர்த்து விடுவோம், இல்லையா? ராஜா விஷயமும் கூட அதுமாதிரியான ஒரு உணர்வே.

பொதுவாகவே, தமிழக மக்கள் மதவாத சித்தாந்தங்களுக்கு எதிரானவர்கள். தாங்கள் நேசிக்கும் இசைஞானி, தங்களில் ஒருவரான இசைஞானி... தங்களது சித்தாந்தத்துக்கு நேர் எதிரான ஒரு நபரைப் புகழும் போது அவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. பொங்கித் தீர்க்கிறார்கள். இது தான் மேட்டர். அவர்கள் கோபத்திலும் நியாயம் இருக்கிறது. மனிதர்களுக்குள் பேதங்களை எதிர்த்து நின்றவர் அம்பேத்கர். பெண்களின் கல்வி உள்பட அனைவருக்குமான உரிமைகள், நியாயமான வாய்ப்புகளை உருவாக்க போராடியவர்.


ன்று அனைத்து சமூகத்தினரும் அனுபவித்து வரும் இட ஒதுக்கீடு பலன்களுக்கான காரண கர்த்தர். அவரை, ஆர்எஸ்எஸ் சித்தாந்த வழித்தோன்றல்களுடன் ஒப்பிடும் போது ஏற்படும் கோபம் புரிந்து கொள்ளக்கூடியது தான். கிருஷ்ணருடன் ஒப்பிட்டு உச்ச நட்சத்திரம் பேசியபோது ஆன்மீக அன்பர்கள் அமைதி காத்திருக்கலாம். மானுட சகோதரத்துவம், சமத்துவத்துக்காகவே வாழ்ந்த அம்பேத்கருடன் ஒப்பிடும்போது, சமூக ஒற்றுமை ஆர்வலர்கள் சகித்துக் கொள்ள இயலாதுதானே?


பாரத ரத்னாவா... பால்கே விருதா?


தேசமயம், இளையராஜா மீது திடீர் அக்கறையும், கரிசனமும் காட்டும் பாரதிய ஜனதாவினரின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. இங்குள்ள மக்களை வலையில் வீழ்த்துவதற்காக ரஜினிகாந்த்தை கையில் எடுத்துப் பார்த்தார்கள். தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கும்பிடு போட்டு விட்டு அவர் தப்பித்து விட்டார். அவருக்கு இணையாக தமிழக மக்களிடம் செல்வாக்கு கொண்டவர் எவரோ... அவரை இப்போது கையில் எடுக்கப் பார்க்கிறார்கள். ‘‘இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்...’’ என்கிறார் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை. எட்டு வருடங்களாக மத்தியில் பாரதிய ஜனதா தானே ஆட்சி நடத்துகிறது? வழங்கியிருந்திருக்க வேண்டியதுதானே? ஏன் இத்தனை நாள் தோணவில்லை? இன்றைக்கு மட்டும் திடீரென ஏன் இவ்வளவு அக்கறையும், கரிசனமும்? மோடியை புகழ்ந்து எழுதியது தான் காரணமா?

பாரத ரத்னா ஒரு பக்கம் இருக்கட்டும். இந்திய திரைத்துறையின் மிக உயர் விருதான தாதா சாகேப் பால்கே விருதை இளையராஜாவுக்குக் கொடுத்து சிறப்பித்திருக்கலாமே? 2014ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து எட்டு ஆண்டுகள் பா.ஜ கட்சிதானே மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இந்த எட்டு ஆண்டுகளில் சசிகபூர் (2014) மனோஜ் குமார் (2015) கே.விஸ்வநாத் (2016) வினோத் கண்ணா (2017) அமிதாப் பச்சன் (2018) ரஜினிகாந்த் (2019) ஆகிய ஆறு பேருக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் இளையராஜாவுக்கு இந்த விருது கொடுக்கவேண்டும் என்று இன்றைக்கு இசைமேதை என்று அவரைக் கொண்டாடும் பா.ஜ தேசியத் தலைவர்களுக்கு தோணவில்லை? இதற்கு முன்பாக ரஜினிகாந்த்திற்கு, என்ன காரணத்துக்காக இந்த விருது கொடுக்கப்பட்டது?


இசை ஆயுதம்!

பாரதிய ஜனதாவினருக்கு இன்னும் ஒரு கேள்வி. சில மாதங்களுக்கு முன்பு வரை, பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் இளையராஜா கண்ணீருடன் அலைக்கழிக்கப்பட்டாரே... அப்போது அவர்கள் எல்லாம், எங்கே... உக்ரைனில் இருந்தார்களா?


41 ஆண்டுகளாக அவரது இசை முகவரியாக இருந்த, காலத்தால் அழிக்கமுடியாத எண்ணற்ற ராகங்களை உருவாக்கிய அந்த இடத்தில் இருந்து இளையராஜா பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டாரே... அன்றைய நாளில், அவருக்காக இன்றைக்கு வரிந்து கட்டிக் கொண்டு பேசுகிறவர்கள் ஒருவரும் வரக்காணோமே... ஏன்? அன்று அவருக்காக அண்ணாமலை உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் குரல் கொடுக்காதது ஏன்?

மிழக மக்களை தங்கள் வலைக்குள் வீழ்த்த, பாரதிய ஜனதா கட்சியினர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் - இளையராஜா. அதை, சிந்திக்கும் ஆற்றல் கொண்ட தமிழக மக்கள் புரிந்திருக்கிறார்கள். இசையே வாழ்க்கையாகக் கொண்ட ராஜாவும், சீக்கிரமே அதைப் புரிந்து கொள்வார்!

இவற்றையும் படிக்கலாம்...

ராஜா நோட்டீஸ்... (காப்பி)ரைட்டா?

ராஜாவுக்கு கிடையாதா தமிழ் மகுடம்?


- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


7 கருத்துகள்:

  1. சர்ச்சைகளின் தாய் வீடும், நாயகனும் குறித்து விளக்கமாய் வாசிக்க கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  2. இந்த பிரச்சனைக்கு ராஜாவோ... பாஜகவோ காரணம் அல்ல.. திமுகவின் ஐடி விங் தான்.. பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாக போய்விட்டது.. ராஜா மேடை நாகரிகம் கருதி கூட அப்படி பேசி இருக்கலாம்.. ஆனால் அதை பெரிதுபடுத்தியது இவர்கள் தான்.. இதற்கு முன்னால் ராஜா பல முறை பேசி இருக்கிறார்.. அப்போது எங்கே போனார்கள் இந்த எதிர்பாளர்கள்.. அப்போது எதிர்த்தால் ஆதாயம் இல்லை.. இப்போது உண்டு அல்லவா..

    பதிலளிநீக்கு
  3. எந்தவொரு பெரிய தலைகளை முன்நிறுத்தியும் தமிழக மக்களின் மனதை மாற்ற நினைப்பது முடியாத காரியம் என்பதை பிஜேபி இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

    பதிலளிநீக்கு
  4. ஒ.சந்திரமோகன்22 ஏப்ரல், 2022 அன்று PM 3:57

    இளையராஜா அவர்கள் மீது வரும் விமர்சனம் அவர் மோடியை புகழ்ந்தார் என்பதற்காக அல்ல. மாமனிதர் அண்ணல் அம்பேத்கர் அவர்களோடு தப்பிப்பதற்காக...

    பதிலளிநீக்கு
  5. ஒ.சந்திரமோகன்22 ஏப்ரல், 2022 அன்று PM 4:12

    தவறு நண்பரே
    மேற்படி சர்ச்சை பேசியதால் அல்ல. ஒரு புத்தகத்துக்கு எழுதப்பட்ட அணிந்துரையில்....
    மேலும் மரியாதைக்குரிய இளையராஜா அவர்கள் பொது வெளியில் அரசியல் கருத்துகளை பதிவிட்டதில்லை

    பதிலளிநீக்கு
  6. அனைத்து தரங்கெட்ட வேலைகளையும் செய்யும் வெங்கோலன் அரசு..

    பதிலளிநீக்கு
  7. இளையராஜா பிரச்னையில் மிகத் தெளிவான பார்வை. சோஷியல் மீடியாக்களில் அவர் மீது அவதூறுகள் கொட்டப்படுகின்றன. இந்தக் கட்டுரை மிக நேர்மையாக, நடுவுநிலையாக நின்று இரு தரப்பையும் சீர்தூக்கி எழுதாப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...