ஞாயிறு, 4 ஜனவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 1

நாம் இருக்கிற தரைப்பரப்பில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருக்கிறது வால்பாறை. ஏழாவது சொர்க்கம் என்று இதற்கு செல்லப் பெயர்  இருக்கிறது. காரணப் பெயரும் கூட. மனதை மயக்கும் திறன் வாய்க்கப் பெற்றிருப்பதால் ஏழாவது சொர்க்கமாம். உண்மையாகவே மனம் மயக்கும், ஈர்க்கும்  ஆற்றல் நிரம்பக் கொண்டிருக்கிறது. யானை, புலி, சிறுத்தை என்று மனிதனைக் கண்டு அஞ்சி வாழ்கிற / மனிதனால் உயிர், உணவு, வாழிடம் அனைத்தையும்  பறி கொடுத்து தவிக்கிற உயிரினங்கள் இங்கு எக்கச்சக்கம் இருக்கின்றன. வாருங்கள்... வால்பாறையில் மூன்று நாட்கள்!

னது வாழ்க்கை பயணங்களால் ஆனது. கல்லூரி காலம் துவங்கி, இப்போது வேலைக்குப் போகிறது வரை தினமும் திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கு  சென்று வருகிறேன். திருமங்கலம் - மதுரை தினசரி பயணங்களை, பயணக்கட்டுரையாக எழுதினால், பூனைக்குட்டிக்கு மணி கட்டி விடுவார்கள். என்பதால்,  பயணக்கட்டுரை எழுதுகிற எனது ஆர்வம் நீண்டகாலமாக வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தது. டிசம்பர் 28, 29, 30 (ஞாயிறு - செவ்வாய்) மூன்று நாட்களும்,  பயணக்கட்டுரை ஆசையை வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து கன்ஃபார்ம் லிஸ்ட்டுக்கு உறுதி செய்தன.

வால்பாறை, கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உச்சியில் இருக்கிறது. நான் இருக்கிற திருமங்கலத்தில் இருந்து அங்கு செல்லவேண் டுமானால், மதுரை (ஆரப்பாளையம்), பழநி, பொள்ளாச்சி... பிறகு அங்கிருந்து மலைவழியாக மேலே.. உயரே... உச்சியிலே... பயணம் போகவேண்டும்.  டிசம்பர் 28, ஞாயிறு தினத்தின் மிக அதிகாலையில் கிளம்பி திருமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு சென்றோம் - குடும்பத்துடன். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மறுநாள் (டிச. 29) துவக்குவதாக அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் (எனது பயணம்  காரணமாகவோ... என்னவோ), ஒரு நாள் முன்னதாக, 28ம் தேதியே துவங்கியிருக்க... பயணத்தின் முதல் நிமிடமே பற்றிக் கொண்டது பரபரப்பு.

திருமங்கலம், ஆரப்பாளையம், பொள்ளாச்சி பேருந்து நிலையங்களில், பஸ் கிடைக்காமல் நான் பட்டபாடுகளை பதிவு செய்தால், பயணக்கட்டுரை... பாதியிலேயே பிரேக் டவுன் ஆகிற ஆபத்துகள் அதிகம் இருக்கின்றன. அதுவும் குறிப்பாக, பொள்ளாச்சி. சுமாராக மூன்று மணிநேரம் பஸ் பிடிக்கவும், சீட்  போடவும் நான் எடுத்த முயற்சிகள், ஊழியர்களின் போராட்டத்தைக் காட்டிலும் காத்திரம் மிகுந்தது.

வருடமெல்லாம் சிந்திய வியர்வையின் களைப்பை,  விளைச்சல் காணாமலாக்கி விடுகிற அற்புதம் போல, வால்பாறை பஸ்சின் முன்னிருக்கையில் அமர்ந்து, ஜில் காற்றின் சில்மிஷச் சீண்டல்களுக்கு மத்தியில்  பயணித்த போது... பஸ் பிடிப்பதற்காக அன்றைய தினத்தின் பெரும்பொழுது நான் நடத்தியிருந்த போராட்டங்களின் வலி, மனதில் இருந்து மறைந்து போயிருந்தது.

கோவை மாவட்டத்துக் காரர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளக்கூடாத விஷயங்கள் எதுவும் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனால், கற்றுக் கொள்ளவேண்டிய விஷயம்... அந்த மரியாதை. வால்பாறை போகிற அந்த பஸ்சின் பெயர் தெரியாத டிரைவரும், கண்டக்டரும் உதவியிரா விட்டால், இருக்கை  அவ்வளவு சுலபத்தில் எனக்கு வாய்த்திருக்காது. வால்பாறை மலைப்பகுதி, தமிழகத்தின் மழைக் களஞ்சியம். வருடத்தின் பெரும்பகுதி நாட்கள் இங்கு மழை  பெய்கிறது. மலையில் கொட்டுகிறதெல்லாம், கீழேதானே வரும்? அருவிகளாகவும், ஓடைகளாகவும் பெருகிக் கொட்டுகிற அந்த மலை / மழைத் தண்ணீர்  வீணாகி விடக்கூடாது என்ற திட்டமிடலின் விளைவு, அடிவாரத்தில் இருக்கிற ஆழியாறு அணை. தரையில் இருந்து பார்க்கும் போது விட, மலையில் இருந்து  பார்க்க, இதன் பிரமாண்ட அழகு... இயற்கை குறித்த நேர்மறை சிந்தனைகளை விதைத்துச் செல்கிறது.


ஆழியாறு அணை அருகே பஸ் நின்றது. குளிர்ந்த நேரத்தில், சுடுகிற தேநீரின் சுவையை எழுத்தில் கொண்டு வருவது சிரமம். அங்கு சிறிய இளைப்பாறலுக்குப்  பிறகு, மலையின் விளிம்பில் மலைப்பாம்பென வளைந்தும், நெளிந்தும் உறங்கிக் கிடக்கிற கருநிற தார்சாலையின் வழியே பேருந்தின் திணறல் பயணம்  துவங்கியது. அதிகப்பட்சம், முதல் இரு கியர்கள். அதற்கு மேலோ அல்லது டாப் கியர் அடிப்பதற்கோ ஏற்றம் மிகுந்த அந்த மலைச்சாலை இடம் தரவில்லை.

  மலைப்பாதை துவங்குகிற புள்ளியில் ‘புலிகளின் தேசம்’ என்கிற அறிவிப்புடன் வரவேற்கிற பலகை, கூடுதல் மகிழ்ச்சி தருகிறது. அப்புறம் குரங்கு அருவி.  ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நிறைய, நிறைய வாகனங்களில், அதை விடவும் நிறைய, நிறைய சுற்றுலாப்பயணிகள். வால்பாறைக்கு இதற்கு முன்பாகவும் பலமுறை பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கவனித்ததுண்டு. மலைச்சாலை முழுவதும் குரங்குகள் கூட்டம்  கூட்டமாக, கூட்டம் கூட்டமாக திரண்டிருக்கும். சாலையின் ஓரத்தில், புதர் மறைவுகளில், அருவிக்கரைகளில், மரங்களின் நிழலில், மக்கள் கண்படாத  மறைவுகளில், துணிச்சலாக சாலைகளின் மையத்தில்... என சகல இடங்களிலும் குரங்குகளின் ஆக்கிரமிப்பை பார்த்திருக்கிறேன்.

இந்த முறை ஒரு வித்தியாசம்.  குரங்குகளின் எண்ணிக்கையை விடவும் அதிகப்படியாக காதலர்களின் எண்ணிக்கை. பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனம்... என்று இன்னும் ஒவ்வொரு  படியாக உயர்த்திக் கொண்டே போகலாம். அத்தனை தரம், ரகம் வாரியாக இவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இரண்டு வரிகளுக்கு முன்பாக, குரங் குகள் ஆக்கிரமித்திருந்ததாக நான் குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் இவர்கள்தான் இருந்தார்கள். பாவம் குரங்ஸ்!

மாடிகளில் இருந்து மழை நீர் வெளியேறுகிறதுக்கு சுவரில் மேலிருந்து கீழாக குழாய் பொருத்தி வைத்திருப்பார்கள்... பார்த்திருக்கிறீர்களா? அதுபோல, மலை ச்சாலைத் திண்டுகளில் உட்கார்ந்த படியே, நீ....ளமான தனது வாலை கீழே தொங்கப் போட்டுக் கொண்டு நிறைய குரங்குகள் உட்கார்ந்திருந்தன. குரங்குகள்  அமர்ந்திருந்த பகுதியில் நிறைய அறிவிப்புப் பலகைகள் ‘Don't Feed Monkeys’ என்று ஆங்கிலத்திலும், ‘குரங்குகளுக்கு திண்பண்டங்கள் கொடுக்காதீர்கள்’ என்று தமிழிலும் இருந்தன. அந்த ‘அப்பிராணி’களுக்கு கொஞ்சம் தின்னக் கொடுத்தால் என்ன குறைந்து போகிறது? வனத்துறை ஏன் இப்படி  மிருகநேயம் இல்லாமல் நடந்து கொள்கிறது என்று மனம் பதைத்தது. விசாரித்தப் பிறகுதான் விபரம் தெரிந்தது.

மனிதர்களிடம் வாங்கிச் சாப்பிட்டு, அந்த ருசி பழகி விட்டால், அவ்வளவுதானாம். அதற்குப் பிறகு அந்தக் குரங்குகள் இயற்கையான தங்களது உணவுகளின்  மீது நாட்டத்தை இழந்து விடுமாம். வயிற்றை நிறைக்க, நாலு இடம் அலைந்து திரிந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து உதாரிக் குரங்குகளாக  சாலையோரத்தில் திரண்டு விடுமாம். சிப்ஸ், கார்ன் பிளேக்ஸ், பீட்சா, பர்கர்... என்று வகை, வகையாக ருசி பார்த்து விட்டால், அப்புறம் மரங்களில் கிடை க்கிற கனி வகைகளை ‘ச்ச்சீ... இந்தப் பழம் புளிக்கும்’ என்று ஒதுக்கத்தானே செய்யும்? கையில் திருவோடு ஏந்தி நிற்காத ஒரு குறைதான். மற்றபடி, மலைக்கோயில் சாமியார்கள் போல நம்மிடம் ஸ்நாக்ஸ் கேட்டு சாலையோரம் தவம் கிடக்கின்றன. கிடைக்காத போது, தாவிப் பறித்துச் செல்கிற வன்முறை கலாச்சாரத்தையும் கையிலெடுக்கின்றன.

இதுகூடப் பரவாயில்லை. கார்ன் பிளேக்ஸ் ஆசை கண்ணை மறைத்து விடுகிறது. நம்மிடம் உணவு கேட்டு சாலையில் பாய்கிற வேகத்தில், பல குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு அகால மரணமும் அடைகின்றன. மலைச்சாலையில் பஸ் வளைந்து, நெளிந்து திரும்புகிற போது, கவனித்தேன். நிறையக் குரங்குகள்  ஸ்நாக்ஸ் தேடலின் சிக்கலான ஒரு தருணத்தில் வாகன விபத்தில் சிக்கி... மாற்றுத்திறனாளிக் குரங்குகளாக மலையோரம் அமர்ந்திருக்கின்றன. ஆகவே,  அவற்றுக்கு பொரி உருண்டை, கொக்க மிட்டாய் கொடுக்கிற பழக்கத்துக்கு இனியாகிலும் முற்றுப்புள்ளி வைப்போம். தாங்களாக உழைத்துப் பிழைத்து, வயிறு  நிறைக்கிற பழக்கம், இந்தக் குரங்குகளின் அடுத்த தலைமுறைக்காவது வரவேண்டுமென்றால்... இந்த விஷயத்தை கண்டிப்பாக கடைபிடிப்பது அவசியம்.  இவ்வளவு விரிவாக குரங்குகளின் வாழ்வியல் பிரச்னையை எடுத்துரைத்ததற்காக, வனத்துறை இலாகாவினர் பூனைக்குட்டிக்கு நன்றிக்கடிதம்  அனுப்பவேண்டியதில்லை. காரணம், இது பொறுப்புள்ள ‘கேட்’டிசன்!

திருமங்கலம் பஸ் நிலையத்தில், அதிகாலையில் துவங்கிய எனது பயணம்... அந்திமாலையில், வால்பாறை போஸ்ட் ஆபீஸ் நிறுத்தத்தில் நிறைவடைந்தது.  கைபிடித்து குலுக்கி வரவேற்றது டிசம்பர் குளிர். அங்கு எதிர்பாராத தருணத்தில் நான் சந்திக்க நேர்ந்த காட்டு யானைகள்... அப்புறம் இன்னும் சில வினோத,  வித்தியாச அனுபவங்கள்.... அதெல்லாம் கட்டுரையின் இரண்டாவது பாகத்தில். நீங்கள்.. நான்... வால்பாறை வனப்பகுதி யானைகள்.
இந்தச் சந்திப்புக்காக  காத்திருக்கலாமா?

வால்பாறை மக்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்வியல் பிரச்னைகள், தோட்டத்தொழிலாளர்களுக்கு இழைக்கப்படுகிற ஊதிய அநீதிகள், வன விலங்கு அபாயம் என ‘குங்குமம்’ வார இதழில் வெளியான எனது கட்டுரையின் விரிவான, முழுமையான வடிவத்தைப் பார்க்க...

வரைபடத்தில் இருந்து விடைபெறுது வால்பாறை?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

4 கருத்துகள்:

  1. பயண கட்டுரையில் யுவாங்சுவாங்,இபின் பதுதா களை மிஞ்சுகிறார் பூனையார். என்ன இருந்தாலும் சகாக்களான குரங்கிற்கு இவ்வளவு இடமளித்தது சரி விடுங்கள் யானை, புலி என கலக்கட்டும்

    பதிலளிநீக்கு
  2. பலவற்றை அழியாமல் முதலில் காக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா28 மே, 2023 அன்று 11:13 AM

    பயணக் கட்டுரைகள் அருமை

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...