ஞாயிறு, 2 மார்ச், 2014

வரைபடத்தில் இருந்து விடைபெறுது வால்பாறை?


மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயத்தை ‘செவன்த் ஹெவன்’ (ஏழாவது சொர்க்கம்) என்று ஆங்கிலத்தில் அழைப்பது வழக்கம். தமிழக மலைவாசஸ்தலங்களைப் பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு ஏழாவது சொர்க்கம் என்ற பெயர் உண்டு. காரணம் இல்லாமல் இல்லை. மனதை கவரும் மலை முகடுகள், அழகு தவழும் அருவிகள், பார்க்கும் இடமெல்லாம் பச்சைப்பசேல் சோலைகள், கம்பளம் விரித்தது போன்ற தேயிலைத் தோட்டங்கள், உரசிச் செல்கிற மேகக்கூட்டங்கள், கோடை காலத்தில் கூட குளுகுளு பனிக்காற்று, நாசிக்குள் இறங்கும் கலப்படமற்ற ஆக்சிஜன் என, எவ்வளவு பெரிய சோர்வையும் போக்கி, புத்துணர்ச்சி தருகிற அற்புத உலகம் அது. அதனால்தான், அது ஏழாவது சொர்க்கம்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த ‘ஏழாவது சொர்க்கம்’ மனித நடமாட்டமற்ற, விலங்குகள் மட்டுமே நடமாடக்கூடிய, வரைபடத்தை விட்டு அகலப்போகிற வனாந்திரமாக மாறப்போகிறது என்ற அதிர்ச்சிக் குரல் அந்த மலை முகடுகளில் தற்போது ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. வால்பாறை மலைப்பகுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் குடும்பம், குடும்பமாக மக்கள் ஊரைக் காலி செய்து விட்டு திருப்பூர், கோவை என மூட்டை முடிச்சுக்களுடன் பயணம் கிளம்பி விட்டனர். சில ஆண்டுகள் முன்பு 2 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் தொகை இருந்த நிலைமை மாறி தற்போது, வெறும் 55 ஆயிரம் பேர் மட்டுமே அங்கு வசிப்பதாக தகவல் வருகிறது. அவர்களும், ஊரை காலி செய்ய நேரம் பார்த்துக் காத்திருக்கிறார்களாம்.

இது நிஜமா? நிஜம் என்றால் என்ன காரணம்? உண்மை அறிய, ஒரு பயணம் கிளம்பினோம். அங்கு நாம் சந்தித்த மனிதர்கள், அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள்... தமிழக அரசு, வால்பாறையின் பக்கம் தனது கவனத்தை உடனடியாக திருப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்த்தின.

மேற்குத் தொடர்ச்சி மலையில், ஆனைமலை சரகத்தில் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது வால்பாறை. மலைச்சரிவுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிற இந்த நகரத்தின் எல்லை, அதிகப்பட்சம் 2 கிமீ சுற்றளவுக்குள் முடிந்து விடுகிறது என்றாலும், சிறிதும், பெரிதுமாக 54 எஸ்டேட்டுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது வால்பாறை சட்டசபை தொகுதி. இங்கு வசிப்பவர்களில் நூற்றுக்கு 90 சதவீதம் பேர் தோட்டத் தொழிலாளர்களே. அட்டை கடி, அடித்துக் கொட்டுகிற மழை, ரத்தத்தையும் உறைய வைக்கிற பனி, அத்தனையும் சகித்துக் கொண்டு, தேயிலைத் தோட்டங்களில் வியர்வை மட்டுமல்ல, (அட்டைகளிடம்) ரத்தமும் சிந்தி உழைப்புத் தவமிருக்கிற இந்தத் தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் வியர்வைக்குத் தகுந்த கூலி இன்று வரை கிடைத்ததில்லை என கண்ணீர் வடிக்கிறார்கள்.

‘‘தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவது என்பது சாதாரணப்பட்ட விஷயமல்ல. பனியோ, மழையோ... சகித்துக் கொண்டு தேயிலை பறித்துத்தான் தீரவேண்டும். கொழுந்து கிள்ளிக் கிள்ளி... கைவிரல்கள் நோவு காணும். உடலில் கொஞ்சம் இருக்கிற ரத்தத்தையும் அட்டைப்பூச்சிகள் உறிஞ்சிக் குடித்து விடும். போதாதகுறைக்கு, விஷப்பாம்புகள் நடமாட்டம் வேறு. பாம்பு கடித்து பலர் மரணமடைந்திருக்கிறார்கள். இதெல்லாம் போதாதென்று இப்போது யானைகளும், சிறுத்தைகளும் மாறி, மாறி இம்சை தருகின்றன. யானை மிதித்தும், சிறுத்தை குதறியும் உயிரை இழந்த தோட்டத்தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவ்வளவும் சகித்துக் கொண்டு வேலை பார்க்கிற எங்களுக்கு கிடைக்கிற கூலி எவ்வளவு தெரியுமா? நாளொன்றுக்கு 163 ரூபாய். அவ்வளவுதான்...’’ பெருமூச்சு விட்ட படியே சொல்கிறார் தேயிலைத் தோட்டங்களுக்குள் பணிபுரிந்து இப்போது ஓய்வு பெற்று விட்ட இசக்கி சாமி.

‘‘இருக்கிற விலைவாசிக்கு, 163 ரூபாய் எப்படி பத்தும் சாமி? கோயமுத்தூருக்குச் சென்றால், ஒரு வாட்ச்மேன் வேலை பார்த்தால் கூட தினசரி 400 ரூபாய்க்கு குறையாமல் சம்பளம் கிடைக்கிறது. 163 ரூபாயை வைத்துக் கொண்டு எங்கள் பிழைப்பை எப்படி ஓட்டுவது? குடும்பச் செலவுகளை பார்ப்பதா, குழந்தைகள் படிப்பு, மருத்துவச் செலவுகளை கவனிப்பதா? இருக்கிற விலைவாசிக்கு இந்தப் பணத்தில் என்ன வாங்கி விடமுடியும். அவ்வளவு ஏன்? எங்களது ஒரு நாள் கூலி, இங்கிருந்து கீழே கோயம்புத்தூருக்கு பஸ்சில் போய், வருவதற்குக் கூட பத்தாது என்பதுதான் முகத்தில் அறைகிற நிஜம். கூலி உயர்வு கேட்டு தொண்டைத் தண்ணீர் வற்றிப் போகிற அளவுக்கு குரல் கொடுத்து ஓய்ந்து விட்டோம். அரசாங்கம், எஸ்டேட் நிர்வாகங்களுடன் நியாயமான பேச்சு நடத்தி, எங்கள் உழைப்புக்கேற்ற கூலியை பெற்றுத் தரவேண்டும்...’’ முகம் நிறைய விரக்தியுடன் நம்மிடம் குமுறித் தீர்க்கிறார்கள் பரிதாபத்திற்குரிய தோட்டத் தொழிலாளர்கள். ‘எங்கள் பெயரை போடவேண்டாம் சாமி... இருக்கிறதும் போயிடும்’ என்பது அவர்களது கடைசி வேண்டுகோள்.

‘‘எங்க தலையெழுத்து அவ்வளவுதான் சார். ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க. வால்பாறையில் இருந்து கொஞ்ச தூரத்தில கேரள எல்லை, திருச்சூர் மாவட்டம் ஆரம்பிக்குது. அந்தப்பக்கமும் தேயிலைத் தோட்டங்கள் இருக்கு. அங்க வேலை பார்க்கிற தொழிலாளர்களுக்கு நாள் சம்பளம் 201 ரூபாய். இந்த ஒப்பந்தம் அடுத்த வருஷம் முடியும். அதுக்கு அப்புறமா, நாள் சம்பளம் அவங்களுக்கு 250 ரூபாயா உயரப் போகுது. யோசிச்சுப் பாருங்க... எல்லைக்கு அந்தப் பக்கம் நாள் சம்பளம் 250 ரூபா. இந்தப்பக்கம் 163 ரூபாய். ஏன் இந்த வேறுபாடு? அங்க உள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக போராடி, கூலியையும், உரிமைகளையும் கேட்டு வாங்கித் தர்றாங்க... அவ்வளவுதான். வேற ஒண்ணும் சொல்றதுக்கில்லை...’’ - எஸ்டேட் தொழிலாளராக இருந்து, வேலையை எழுதிக் கொடுத்து விட்டு, இப்போது வால்பாறையில் ஆட்டோ ஓட்டும் சண்முகவேலுவின் கோபம் இது.

சரி. தொழிற்சங்கங்கள் தரப்பில் என்ன சொல்கிறார்கள்? தொமுசவின் இணைப்பு சங்கமான ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் சவுந்திரபாண்டியிடம் கேட்டபோது:

‘‘வால்பாறை தோட்டத் தொழிலாளர்களுக்கான புதிய சம்பள ஒப்பந்தத்தை ஒரு மாதத்தில் அமல்படுத்தவேண்டும். ஆனால், இதுவரை எந்த தொழிற்சங்கத்தையும் முறையான பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. தேயிலைத் தொழில் நசிவடைந்து விட்டது எனக் கூறி கடந்த 2002ல், தினக்கூலியை 76.85 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகக் குறைத்தார்கள். அதன் பிறகுதான், இங்கிருந்து தோட்டத் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் துவங்கினர். 2002 முதல் 2013 வரை மட்டும் 20 ஆயிரம் ரேஷன் கார்டுகள் சரண்டர் செய்யப்பட்டிருப்பதே இதற்குச் சாட்சி. கூட்டம், கூட்டமாக தொழிலாளர்கள் வெளியேறத் துவங்கியதால், இருக்கிற எஞ்சிய தொழிலாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தது.

தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, இயந்திர பயன்பாடு அதிகரிக்கத் துவங்கியது. ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 186 செடிகளுக்கு கவாத்து செய்கிறார் என்றால், இயந்திரத்தைக் கொண்டு ஆயிரத்துக்கும் அதிகமான செடிகளை கவாத்து செய்யமுடியும். சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 24) இயந்திரம் மூலம் கவாத்து செய்த தொழிலாளி, அதன் பிளேடு குத்தி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிவாரணம் வெறும் 40 ஆயிரம் ரூபாய். இந்த மே மாதத்தில், இன்னும் ஐம்பது குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறக் காத்திருக்கின்றன.

கடந்த 2008ல், திமுக ஆட்சியின் போது குறைந்தப்பட்ச கூலியாக ரூ.104 அமல்படுத்தப்பட்டது. தற்போது படிகள் எல்லாம் சேர்ந்து 162.90 ரூபாய் கிடைக்கிறது. தொழிலாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கிறது. அவர்களுக்கான சலுகைகள் குறைந்து கொண்டே வருகின்றன. தொழிலாளர்களுக்கான கம்பளி மானியம் 115 ரூபாய் என்பது, 25 ஆண்டுகளாக உயராமல் அப்படியே இருக்கிறது. இதையெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. இன்ஸ்பெக்டர் ஆப் பிளாண்டேஷன் அலுவலகம் வால்பாறையில் இருக்கிறது. ஆனால், அந்தப் பதவி மூன்று ஆண்டுகளாக காலியாகவே இருக்கிறது. தொழிலாளர்கள் மீது தொழிலாளர் நலத்துறை காட்டுகிற அக்கறையை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்...’’ என்கிறார்.

மொத்தத்தில், வால்பாறை பிழைப்பு போதும் என்ற முடிவுக்கு இங்கிருக்கும் பல தொழிலாளர் குடும்பங்கள் வந்து விட்டது அப்பட்டமாகவே தெரிகிறது. மலையை விட்டு கீழே இறங்கிச் சென்றால், குடும்பத்தில் ஆளுக்கொரு வேலை பார்த்தாலும் போதும்... திருப்தியான பொருளாதார நிலைமை உத்தரவாதம் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்கள். இதனால், இப்போதெல்லாம் வால்பாறைக்கு வருகிற பஸ்களை விட, வால்பாறையில் இருந்து திருப்பூர், கோவை, பொள்ளாச்சிக்குச் செல்கிற பஸ்களில் கூட்டம் அதிகம். மூட்டை, முடுச்சுக்களுடன் ஊரை காலி செய்து செல்கிற ஒரு குடும்பத்தையாவது தினமும் பார்க்கமுடிகிற நிலைமை. குறைந்தபட்சம், இங்கு வேலை பார்க்கிற தொழிலாளர்களின் அடுத்த தலைமுறை, நிச்சயமாக இங்கு வேலை செய்ய (வர) மாட்டார்கள் என்பது உறுதி. அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒற்றுமையாக, ஒன்றிணைந்து கூலியை உயர்த்திக் கொடுக்க முயன்றால் மட்டுமே நிலைமை மாறும்.

சில ஆண்டுகள் வரை இங்கு கல்லூரி வசதி கிடையாது. குழந்தைகள் பள்ளிப் படிப்பு முடிந்ததும், மேல் படிப்புக்காக, குடும்பத்துடன் பொள்ளாச்சி, கோவைக்கு குடி பெயரும் அவலம் நடக்கும். அல்லது, பள்ளி கல்வியுடன் குழந்தைகளின் படிப்பே நிறுத்தப்படும். கடந்த திமுக ஆட்சியில் வால்பாறையில் ஒரு கலைக்கல்லூரி துவக்கப்பட்டது. அந்தக் கல்லூரியில்தான் ஏழை, எளிய தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் இப்போது படிக்கிறார்கள். அரசு கல்லூரி இருப்பதால்தான், தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் மேற்படிப்பு படிக்க முடிகிறது. கஷ்ட நஷ்டங்களை தாங்கிக் கொண்டு இங்கேயே பிழைப்பைத் தொடர்கிறார்கள். இந்தக் கல்லூரியும் இல்லாவிட்டால், இன்னும் நிறையப் பேர் ஊரை காலி செய்திருப்பார்கள். வால்பாறை தொகுதியில் உள்ள 54 எஸ்டேட்டுகளையும் சேர்த்து சுமாராக 2 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் வசித்தார்கள். இப்போது, 55 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்களாம். 2 லட்சம் பேர், ஊரை காலி செய்து விட்டு, பிழைப்புத் தேடி புறப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். இப்படியே போனால், நிலைமை எங்கு போய் முடியும்...?

‘‘வால்பாறை என்கிற ஊர், வரைபடத்திலேயே இல்லாமல் போகிற நிலை வர நீண்டகாலம் ஆகாது...’’ என்கிறார்கள் இங்கிருக்கிற சமூக ஆர்வலர்கள், வர்த்தக சங்கப் பிரமுகர்கள். வால்பாறையின் பொருளாதரம், இங்கு வசிக்கிற மக்களின் நிலைமை சீரடைய என்ன செய்யலாம்? இந்த கேள்விக்கு, வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஷாஜூ கொஞ்சம் விரிவாகவே பதிலளிக்கிறார்:

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே வால்பாறை எஸ்டேட்டுகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் கடுமையான அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். கூலி குறைவுதான் முக்கியப் பிரச்னை. சர்வதேச வர்த்தகச் சந்தையில் மிளகு, தேயிலையின் விலை வீழ்ச்சியைக் காரணம் காட்டி, இங்குள்ள தோட்ட நிர்வாகங்கள், கூலியை உயர்த்த மறுக்கின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்கு, எஸ்டேட் நிர்வாகங்கள் வீடு, குடிநீர் வசதி செய்து தருகின்றன. ஆனாலும் கூட, 163 ரூபாய் தினக்கூலி மிகவும் குறைவு. தோட்டத் தொழிலாளர்களை நம்பியே, இங்குள்ள அனைத்து வர்த்தகங்களும் இயங்குகின்றன. அவர்கள் இல்லை என்றால், வர்த்தகமும் இல்லை. நாங்களும் தொழிலை விட்டு விட்டு, வேறு ஊர் பார்க்க வேண்டியதுதான்.

இரண்டாவதாக, தேயிலைத் தொழில் நசிவடைந்து வரும் நிலையில், மாற்றுத் தொழில்களின் பக்கம் கவனத்தை திருப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். குளிர் பிரதேசம் என்பதால், மலைப்பகுதியில் மட்டுமே செய்ய முடிகிற பல்வேறு தொழில்களை இங்கு ஆரம்பிக்கலாம். குறிப்பாக ஊட்டி, குன்னூர் பகுதிகளில் இருப்பது போல ஹோம்&மேட் சாக்லேட் போன்ற தொழில்கள் துவங்க மானியங்கள், உதவிகள் செய்து தரலாம். புதிய தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம், வால்பாறையில் தலைமுறை, தலைமுறையாக வசித்து வரும் மக்களின் பிழைப்புக்கு மாற்று வழிகள் கிடைக்கும்.

வால்பாறை பகுதி மக்களின் சமீபகாலத்திய மிகப்பெரிய அச்சுறுத்தல் வன விலங்குகள். யானை, சிறுத்தை என வன விலங்குகள் சர்வ சாதாரணமாக எஸ்டேட் பகுதிகளுக்குள் வந்து குடியிருப்புப் பகுதிகளை சூறையாடி சேதப்படுத்துவது, மனிதர்களை தாக்குவது சாதாரணமாகி விட்டது. ஏற்கனவே கைக்கும், வாய்க்கும் பத்தாத நிலையில் இருக்கிற தொழிலாளர் குடும்பங்கள், வன விலங்கு தாக்குதல்களால் நிலைகுலைந்து போகிறார்கள். யானை, சிறுத்தைகள் தாக்குவதால் இங்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நான்கு மாதங்களில் மட்டும் வன விலங்குகள் தாக்கியதில் 5 பேர் பலியாகியிருக்கிறார்கள். வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கவேண்டும். மக்கள் மற்றும் நகராட்சியின் ஒப்புதல் இல்லாமலேயே வால்பாறை பகுதியை புலிகள் காப்பகமாக அறிவித்திருக்கிறார்கள். வால்பாறை நகரப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கக்கூடாது என வலியுறுத்தி, வியாபாரிகள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, அது தற்போது விசாரணையில் இருக்கிறது.

மிக முக்கியமான விஷயம்.... சுற்றுலா. மூணாறு, ஊட்டியைக் காட்டிலும் சுற்றுலாப்பயணிகளை கவருகிற அற்புதமான ஊர் இது. இயற்கையை விரும்பும், ரசிக்கும் பயணிகளுக்கான சொர்க்கம் இது. ஆளரவமற்ற, அமைதியான பள்ளத்தாக்குகள், புல்வெளிகள், அருவிகள், நதிகள்... என பார்க்கப் பார்க்கச் சலிக்காத இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. சுற்றுலாவை வளர்த்தாலே, நகரின் பொருளாதாரம் கிடுகிடுவென உயர்ந்து விடும். ஆனால், அரசாங்கம் அதற்கான எந்த முயற்சியையும் எடுப்பதாகத் தெரியவில்லை. கோவை மாவட்டத்து மக்களைத் தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதி மக்கள் பல பேருக்கு இப்படி ஒரு மலை வாசஸ்தலம் இருப்பதே தெரியாது. கோவை மாவட்டத்தில் இருக்கிற ஒரே மலை வாசஸ்தலம் அந்தஸ்துடன் கூடிய சுற்றுலாத்தலம் வால்பாறை மட்டுமே என்பது உங்களுக்கு ஆச்சர்யமான விஷயமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. மிக அமைதியான இந்த மலைப்பிராந்தியத்தில் காடாம்பாறை, ஆழியாறு, சோலையாறு, நீரார் என மொத்தம் 9 அணைக்கட்டுகள் இருக்கின்றன. இதில், சோலையாறு அணை, ஆசியாவிலேயே, இரண்டாவது ஆழமான அணை என்ற பெருமை பெற்றது.

தமிழகத்தில், அதிக வருமானம் வரும் நகராட்சிகளில் வால்பாறையும் ஒன்று. நகராட்சியில் கிடைக்கிற வருமானத்தை, இங்கு சுற்றுலா வளர்ச்சிக்குத் திருப்பினாலே, பாதி வேலை முடிந்த மாதிரித்தான். நகராட்சிக்குச் சொந்தமான இடம் வால்பாறையில் நிறைய இருக்கிறது. இங்கு படகு இல்லம், பூங்கா, சிறுவர் விளையாட்டு மையம், சுற்றுலாத் தகவல் மையம், சுற்றுலா வாகனங்களை நிறுத்த கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதி போன்றவை செய்து தந்தால், இன்னும் அதிகளவு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கலாம். வெளியூர்களில் இருந்து வருகிற மக்கள் சுற்றிப் பார்த்து ரசித்துச் செல்ல ஏராளமான இடங்களை இயற்கை அள்ளித் தந்திருக்கிறது. அங்கு முறையான வசதிகள் மட்டும் செய்து தந்தால் போதும்... கோவை மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத்தலம் என்கிற பெருமையும் கிடைக்கும். வால்பாறையும், இங்குள்ள மக்களும் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.

வியாபாரிகள் கூட்டமைப்பு, சமூக ஆர்வலர்களின் கோரிக்கை, அரசின் காதுகளை எட்டினால், அழகான வால்பாறையும், அதன் மக்களும் பிழைப்பார்கள்!

எப்போது போகலாம்?

ஜூன் மாதம் துவங்கி கிட்டத்தட்ட... செப்டம்பர், அக்டோபர் வரை மழை வெளுத்துக் கட்டும். வெளியே தலை காட்டமுடியாது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை கிடுகிடு குளிர்காலம். வெயிலில் காய்ந்து, கருவாடாகிப் போன மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட மக்கள், ஒரு மாறுதலுக்கு, இந்த குளிர் அனுபவத்தையும் பார்த்து வரலாம். ஜனவரி முதல் மே இறுதி வரை பிரமாதமான சீசன் காலம். குளிரும் அதிகம் இராது. கொண்டாடலாம்!

எப்படிப் போகலாம்?

பொள்ளாச்சியில் இருந்து அரைமணி நேரத்துக்கு ஒருமுறை பஸ் இருக்கிறது. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை 64 கிமீ. கோவையில் இருந்து 100 கிமீ. பழநியில் இருந்தும் பஸ் வசதி (117 கிமீ) இருக்கிறது. சென்னையில் இருந்து 469 கிமீ.

எங்கு தங்கலாம்?

நிறைய லாட்ஜ் வசதிகள் இருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் இருந்து ‘மெகா டிரீட்’ வரை தங்கும் வசதிக்கு பிரச்னை இல்லை. ஹோம் ஸ்டே, எஸ்டேட் பங்களாக்கள், ரிசார்ட்டுகள் என வசதிக்கு ஏற்றவாறு தங்கும் இடத்தை தேர்வு செய்யலாம்.

என்னென்ன பார்க்கலாம்?

ஆழியாறு அணை மற்றும் பூங்கா, மங்கி ஃபால்ஸ் (குரங்கு அருவி) - இவை இரண்டும் வால்பாறை மலை அடிவாரத்தில் இருக்கின்றன. சோலையாறு அணை, சின்னக்கல்லார் அணை, நீரார் அணை, பாலாஜி கோவில், அக்காமலை கிராஸ் ஹில்ஸ் தேசியப்பூங்கா, நல்லமுடி காட்சிமுனை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி (வால்பாறையில் இருந்து 50 கிமீ தொலைவில் இருக்கிறது)... இன்னும் பார்க்க நிறைய, நிறைய இருக்கிறது.

தேவை, புதிய பாதை!

வால்பாறை - பொள்ளாச்சி இடையே (64 கிமீ தொலைவு) ஆழியாறு, அட்டக்கட்டி வழியாக ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளது. 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதையில், ஆண்டுதோறும் பருவமழை நேரத்தில் அடிக்கடி பாதையில் மண் சரிவு, பாறைகள் உருண்டு விழுவது மற்றும் மரங்கள் சரிந்து விழுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, வால்பாறையில் இருந்து, வறட்டுப்பாறை, வில்லோனி, அணலி வழியாக ஆழியாறு செல்லும் குதிரைவண்டி பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இதன்மூலம் வால்பாறை - பொள்ளாச்சி பயணநேரம் மற்றும் தூரம் குறையும்.

நகராட்சியில் தீர்மானம்!

நகராட்சித்தலைவர் சத்தியவாணி முத்துவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் இந்த மாதம் முடிவாகிறது. சம்பளம் உயர்த்தித் தரப்படவேண்டும். இதுதவிர, சுற்றுலாப்பயணிகளை அதிகளவு ஈர்க்கும் வகையில், பல்வேறு புதிய சுற்றுலாத்திட்டங்கள் கொண்டு வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்,’’ என்கிறார்.

பரதேசி’ எஸ்டேட்

வால்பாறை பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சிரமங்களை மையமாக வைத்து, ‘ரெட் டீ’ நாவலை எழுதினார் பால் ஹாரீஸ் டேனியல். அடிப்படையில் டாக்டரான இவர், வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தனது சொந்த அனுபவங்களில் இருந்து எழுதிய ‘ரெட் டீ’ நாவல், தமிழில் ‘எரியும் பனிக்காடு’ என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு, அதிர்வுகளை ஏற்படுத்தியது. தோட்டத் தொழிலாளர் சோகங்களைச் சித்தரிக்கும் பாலாவின் ‘பரதேசி’ சினிமா, இந்த நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

2 கருத்துகள்:

  1. I like & love the climate. Valparai is good than ooty, kodaikanal. This article shows the picture of the other side of valparai,
    Raja, vadavalli.

    பதிலளிநீக்கு
  2. வால்பாறை பற்றி இவ்வளவு விசயங்களா?
    மிக அருகில் 15 ஆண்டுகள் இருந்தும் செல்ல முடியாத எனக்கு உங்கள் கட்டுரை ஆவலை அதிகம்ஆக்கி விட்டது.இந்த வாரம் ஒரு ஒத்திகை பார்த்து விட வேண்டியது தான்
    நன்று

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...