ஞாயிறு, 2 மார்ச், 2014

செயலற்ற பிரதமர்’ - கட்டுரை அல்ல... கட்டளை!

‘அண்டர் அச்சீவர்’ - இந்த வார்த்தை, இந்தியாவில் இப்போது பிரபலம். மவுனச்சாமியார் போன்ற அதே, வழக்கமான பிரதமர் மன்மோகன் சிங் புகைப்படத்தைப் போட்டு, படத்துக்கு மேலே இந்த வார்த்தையையும் பிரசுரித்திருக்கிறது அமெரிக்காவின் பிரபலமான ‘டைம்’ பத்திரிகை. அதுவும், அட்டைப்படத்தில். அது சம்பந்தமான விரிவான கட்டுரை உள்ளே இடம் பெற்றிருக்கிறது. விரிவான அந்த பல பக்க கட்டுரையின் ஒற்றை வரி சாராம்சம்தான் ‘அண்டர் அச்சீவர்’ அதாவது; செயலற்றவர்!

‘செயலற்ற பிரதமர்’ என்ற குற்றச்சாட்டு இன்று, நேற்றல்ல... மிக நீண்டகாலமாகவே மன்மோகன் மீது சுமத்தப்படுவது நாம் யாவரும் அறிந்த விஷயம். அது, ‘டைம்’ சொல்லித் தெரிகிற புதிய தகவல் அல்ல. ஆனால், ‘செயலற்ற பிரதமர்’ என இந்தியாவின் எதிர்க்கட்சிகளும், தலைவர்களும் குற்றம் சொல்கிற தொனிக்கும், ‘டைம்’ குரலுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. ‘டைம்’ சொல்லி விட்டது என்பதற்காக, மையமாய் தலையை ஆட்டி ஆமோதிப்பது, புத்திசாலித்தனமாக இருக்கமுடியாது. ‘டைம்’ பத்திரிகையின் இந்த திடீர் விமர்சனத்துக்குப் பின்புலமாக, மிகப்பெரிய சர்வதேச அரசியலும் இருக்கிறது.


செயலற்ற பிரதமர் என்று மன்மோகனை விமர்சனம் செய்வதற்கு ‘டைம்’ பத்திரிகைக்கு இப்போது என்ன அவசியம்?

- இந்தக் கேள்வியை கொஞ்சநேரத்துக்கு ஓரம் கட்டி வைத்து விட்டு, இந்திய அரசியலின் லேட்டஸ்ட் நிலவரத்தை ஒரு எக்ஸ்பிரஸ் பார்வை பாருங்கள். நிதி அமைச்சர் பொறுப்பை மடித்துக் கொடுத்து விட்டு, ஜனாதிபதி மாளிகைக்கு பயணம் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. நாட்டின் நிதி இலாகாவை இப்போது கையில் எடுத்திருப்பது பிரதமர் மன்மோகன் சிங். அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே, இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உயர்த்தவும் முடியும் என்கிற அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் அவர். நிதி இலாகா அவரது கைகளுக்குச் சென்றிருப்பது, வெளிநாட்டு -முக்கியமாக, அமெரிக்க - தொழில் ஜாம்பவான்கள் முகத்தில் மகிழ்ச்சியை பரவச் செய்கிற விஷயம்.

சில்லரை வர்த்தகத்தில் நூறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டை பெறும் மன்மோகன் அரசின் நீண்டகால குறிக்கோள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குரல், கூட்டணிக்கட்சிகளின் கலகக்குரல்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அரசின் அறிவிப்பு மட்டும் வந்து விட்டால், அடுத்த விமானத்தைப் பிடித்து இந்தியா வந்திறங்குவதற்காக அமெரிக்காவின் ‘வால்-மார்ட்’, பிரிட்டனின் ‘டெஸ்கோ’ உள்ளிட்ட எக்கச்சக்கமான மேல்நாட்டு வர்த்தக நிறுவனங்கள் சூட்கேசும், கையுமாக தயாராகக் நிற்கின்றன. அவர்களுக்குத் தேவை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே.
மத்திய அரசும் அதற்கு முழுமனதுடன் தயார்தான். சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம் அளவுக்கு அன்னிய முதலீடுக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரியில் அனுமதி அளித்து விட்டது. அறிவித்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் கூட, அடுத்தக்கட்ட நடவடிக்கை இல்லை. அதற்குக் காரணம், இங்குள்ள உள்ளூர் அரசியல். அரசியல் நிலவரங்களுக்காக, மன்மோகன் சிங் திடமான முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெரு நிறுவனங்களை நிறையவே அதிருப்தி அடையச் செய்திருக்கிறது. உள்ளூர் அரசியலை எப்படி வேண்டுமானாலும் சமாளித்துக் கொள்ளட்டும். அது முக்கியமில்லை. மன்மோகனிடம் இருந்து அவர்கள் எதிர்பார்ப்பது தடலாடி நடவடிக்கை. அதன் எதிரொலிப்பே ‘டைம்’ பத்திரிகையின் ‘அண்டர் அச்சீவர்’ கட்டுரை.

‘டைம்’ பத்திரிகை தனது கட்டுரையில், மன்மோகனை ‘செயலற்றவர்’ என நியாயப்படுத்துவதற்கு பரிந்துரை செய்யும் பல்வேறு காரணங்களில், மிக முக்கியமான நான்கை மட்டும் தனியாக எடுத்து படித்தாலே, விஷயம் புரிந்து போகும்.

* பொருளாதாரச் சீர்திருக்க நடவடிக்கைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் மானியக்குறைப்பு விஷயத்தில், துணிச்சலான முடிவை எடுக்க (முடிய)வில்லை.
* பெட்ரோல் போல, டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் அறிவிப்பை வெளியிட (முடிய)வில்லை.
* பெரும் தொழில் நிறுவனங்களுக்கான சலுகைகள் போதிய அளவில் இல்லை.
* சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் வால்-மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு இன்னும் முழுமையான அனுமதி அளிக்கவில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் கடும் நெருக்கடிகளை சந்திக்கவேண்டியிருக்கிறது.

- இதுதான் அவர் செயலற்றவர் என்பதற்கு ‘டைம்’ கண்டுபிடித்திருக்கும் காரணங்கள்.

மானியக்குறைப்பில் மன்மோகன் துணிச்சலான நடவடிக்கை எடுக்கவில்லையாம். இன்னும் எதை குறைக்கவேண்டும் என்று ‘டைம்’ எதிர்பார்க்கிறது? இருப்பதை எல்லாம் பிடுங்கி விட்டதால், உள்ளபடியே, மக்கள் விலைவாசி உயர்வை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழை, நடுத்தர மக்களின் கடைசி நம்பிக்கையான ரேஷன், மருந்து, உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றுக்கு அளித்து வரும் மானியங்களுக்கும் அழுத்தமான முற்றுப்புள்ளி வைத்து விட்டால்... சந்தோஷம்தானே? கஜானா நிரம்பி வழிந்து, பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கே சவால் விட்டு விடலாம். ஏழைகளும் இருக்கமாட்டார்கள்... அவர்களெல்லாம் ஒரேடியாக செத்து ஒழிந்து விடுவார்கள்.

டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கவேண்டும் என்ற பொருளாதார மேதைகளின் வலியுறுத்தலை மன்மோகன் அமல்படுத்தவில்லையாம். பொருளாதார மேதைகளுக்கு டவுன் பஸ்சிலோ, ரயிலிலோ ஏறவேண்டிய அவசியம் என்றைக்கும் இருந்திருக்காது. அப்படியே சென்றாலும், அது ஓசிப் பயணமாகத்தான் இருக்கும். பெட்ரோல் விலை ஏற்றங்களால் நாக்குத்தள்ளிப் போய் கிடக்கிறது இந்திய நடுத்தர வர்க்கம். டீசலுக்கும் அந்தக் கதி என்றால், அகதிகளாக அடுத்த நாடு தேடிப் போய் விடவேண்டியதுதான்.

அடுத்ததுதான் வேடிக்கை. பெரும் தொழில் நிறுவனங்களுக்கு போதிய சலுகைகள் இல்லையாம். தடையில்லா மின்சாரம் துவங்கி, விவசாய நிலங்களை அரசே ஆக்கிரமித்துக் கொடுப்பது, ஆதிவாசிகளை எல்லாம் நக்சலைட்டுகள் என முத்திரை குத்தி அடித்து விரட்டி விட்டு, இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாட அனுமதிப்பது வரை எல்லாமே இருக்கையில், இன்னமும் என்னதான் சலுகை தேவைப்படுகிறது? ஏழை மக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசியை நிறுத்தி விட்டு, அதில் கிடைக்கிற வருவாயை மிச்சம் பிடித்து கோடீஸ்வர தொழிலதிபர்களுக்கு சலுகைகளாகக் கொடுத்தால்... நாடு சுபீட்சமாகும் என்பது குரூரமான முதலாளித்துவ ரசனை இல்லையா?

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு முழுமையாக தலை ஆட்டவில்லையாம். இந்தக் கருத்தை பிரதானமாகக் கொண்டு, இந்த ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்வதற்காக மட்டுமே எழுதப்பட்டது ‘டைம்’ கட்டுரை. இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் கத்தரிக்காய், தக்காளி, பருப்பு வாங்குவதென்றாலும் கூட, வால்-மார்ட்டுக்கு மட்டுமே போகவேண்டும் என்கிற நிலையை உருவாக்குவதே இவர்கள் நோக்கம். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள் வந்து விட்டால், இப்போது இந்தியாவில் அந்தத் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் பல கோடிக் குடும்பங்களின் கதி... அதோ கதி என்பதில் இரண்டாவது கருத்து இருக்கமுடியாது.

பெப்சி, கோககோலா நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு வரை, எத்தனை எத்தனை உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தன. இப்போது, அவையெல்லாம் எங்கே போனது? வெளிநாட்டுப் பணம் உள்ளே இறங்கும் போது, உள்நாட்டு நிறுவனங்கள் வாரிச்சுருட்டிக் கொண்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியே இல்லை. பெப்சி நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்கும் முன்பாக, மார்க்கெட்டிங் சர்வே ஒன்றை நடத்தியது. சர்வே முடிவில், இந்தியாவில் தங்களது போட்டியாளராக அவர்கள் கருதியது யாரைத் தெரியுமா...? சொன்னால் நம்ப மாட்டீர்கள். டீக்கடைகளை.
நிஜம்தான்.

‘‘இந்தியாவில் எந்த நேரமும் ஆள் புழக்கம் இருக்கும் ஒரே இடம் டீக்கடைகள் மட்டுமே. எப்போதும் நான்கு பேர் அங்கு அமர்ந்து டீ குடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த டீக்கடைகள்தான் நமது போட்டியாளர்கள். டீ குடிக்கிற இந்தியனை, பெப்சி குடிக்க வைத்து விட்டால், நாம் ஜெயித்து விடலாம். இந்திய தெருக்களில் டீக்கடைகளில் எல்லாம் டீ விற்கிறார்களோ; இல்லையோ... பெப்சி விற்கிற ஒரு சூழலை உருவாக்குவதே நமது லட்சியம்...’’ - இது பெப்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள், இந்தியாவுக்குள் நுழையும் முன் தங்கள் விற்பனை இலாகாவுக்கு வகுத்துக் கொடுத்த திட்டம். யோசித்துப் பாருங்கள்... அந்த நிறுவனம் இந்தியாவில் ஜெயித்து விட்டதா, இல்லையா? டீக்கடைகள் தோறும் பெப்சி இன்றைக்கு விற்கப்படுகிறதுதானே?

மற்றொரு உதாரணமும் பார்க்கலாம். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள் வந்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கான முன்னோட்டத்தை, தற்போதைய ரிலையன்ஸ் மெகா மார்ட் செயல்பாடுகளைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். காய்கறி, கருவேப்பிலை துவங்கி, அரிசி பருப்பு என வீட்டின் அத்தியாவசிய தேவைகளுக்கு அருகேயிருக்கும் பெட்டிக்கடைகள்தான் இப்போதைக்கு கை கொடுக்கின்றன. வேலை இல்லாத இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என கோடிக்கணக்கானவர்கள் இப்படி பெட்டிக்கடை நடத்தி பிழைப்பு நடத்துகிறார்கள். இதுதவிர, தள்ளுவண்டிகளிலும், தலைச்சுமையாகவும் காய்கறிகள், பலசரக்குகளை வீடுகளுக்கே கொண்டு வந்து விற்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு நாளில் அதிகப்பட்சமாக இவர்களுக்கு நூறு ரூபாய் லாபம் கிடைத்தால் அதிகம்.

ரிலையன்ஸ் கடைகள் வந்தப் பிறகு, இவர்களது பிழைப்பில் மண் விழுந்திருக்கிறது. (இன்னமும் ரிலையன்ஸ் மெகா மார்ட்டுகள் எட்டிப் பார்க்காத நகரங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள்... பாக்கியவான்கள்) படு பிரெஷ்ஷாக... விமானத்தில் வந்து இறங்கியிருக்கிறது; விலையும் மலிவாக இருக்கிறது என்று போட்டி போட்டு வண்டியெடுத்துச் சென்று நடுத்தர மக்கள் ரிலையன்சில் காய்கறிகளை அள்ளிக் குவிக்கிறார்கள். காய்கறி மட்டுமா... அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள், குளிர்பானங்கள் துவங்கி எல்லாமே கிடைக்கிறது. வெளி கடைகளை விட ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் குறைவாகவே கொடுப்பதால், மக்கள் கூட்டம் எப்போதும் ரிலையன்ஸ் படிக்கட்டுகளில் தவம் கிடக்கிறது. வெற்றிலையும், தெக்கம்பாக்கும், தடவிக் கொள்ள கொஞ்சம் சுண்ணாம்பும் பாக்கெட் போட்டு விற்கவேண்டியது மட்டுமே ரிலையன்சில் இனி பாக்கி.

ஒரு இடத்தில் ரிலையன்ஸ் கடை வந்து விட்டால், அதை மையமாகக் கொண்டு இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்; தொழிலை இழக்கிறார்கள் என உறுதி செய்கின்றன மார்க்கெட்டிங் ஆய்வுகள். ரிலையன்ஸ் மட்டும் இருக்கும் போதே இந்தக் கதி என்றால், அமெரிக்காவில் இருந்து வால்-மார்ட், பிரிட்டனில் இருந்து டெஸ்கோ, ஜெர்மனியில் இருந்து மெட்ரோ, பிரான்ஸ் நாட்டில் இருந்து கார ஃபோர் உள்பட இன்னும் எக்கச்சக்கமான நிறுவனங்கள் நம்மூரில் கடை பரப்பினால்... என்ன ஆகும், யோசித்துப் பாருங்கள்? குளுகுளு வசதியுடன், சலுகை விலை, இலவசப் பரிசுகள், ஸ்க்ராட்ச் கார்டுகள், தள்ளுபடி கூப்பன்கள், கண்ணைக் கவரும் சகல அம்சங்களும் நிறைந்திருந்தால்.... கூட்டம் தீக்குச்சி வாங்கக் கூட அங்குதான் கிளம்பிச் செல்லும்.

அப்படியானால்... காய்கறிகள் விற்றுக் கொண்டிருக்கிற பெட்டிக்கடைகள்? அதையெல்லாம் பெட்டியில் வைத்து மூடி அடக்கம் செய்யவேண்டியதுதான். மன்மோகன் அரசு விரும்புவதும் இதைத்தான். ‘டைம்’ பத்திரிகை தனது கட்டுரையில் அழுத்தம் கொடுத்து வலியுறுத்துவதும் அதைத்தான். ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டிருப்பது கட்டுரை அல்ல... அது கட்டளை. ஆனால், அது புரியாமல் இங்கிருக்கிற சமூக உத்தமர் அன்னா ஹசாரே, யோகா வியாபாரி ராம்தேவ் துவங்கி, மாற்றத்தைக் கொண்டு வரும் கனவில் தங்களுக்குள் மண்டையை உடைத்துக் கொள்கிற பாரதிய ஜனதா தலைவர்கள் வரை அத்தனை பேரும் ‘டைம்’ கட்டுரையை தாங்கிப் பிடித்துப் பேசுகிறார்கள்.

நம்பிக்கை இல்லைதான்; ஆனாலும் சொல்லவேண்டியிருக்கிறது...
எல்லாம், தலையெழுத்து!


-  திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...