திங்கள், 9 நவம்பர், 2020

ஆன்ட்ராய்ட் குஞ்சப்பனும், சிட்டி ரோபோவும்!

 


ரு நல்ல சினிமா உருவாக்கத்துக்கு எது பிரதானம்? A) பணம் B) முன்னணி நட்சத்திரங்கள் C) கதை. இன்றைக்கு மார்க்கெட்டில் இருக்கிற இயக்குனர்களில் நிறையப் பேர் ஆப்ஷன் பி-யை தேர்வு செய்பவர்களாக இருப்பார்கள். முன்னணி நட்சத்திரங்களின் தேதி கிடைத்து விட்டால் ஓகே. பைனான்ஸ் தேடி வந்து விடும். கதை...? அது கிடக்கிறது. வில்லன் கூட்டத்தை விரட்டி, விரட்டி பழிவாங்குகிற ஹீரோ கதையை எத்தனை வடிவத்தில், எத்தனை காலத்துக்கு எடுத்தாலும் தாங்கும். ஆப்ஷன் சி-யை தேர்வு செய்கிறவர்கள் எண்ணிக்கை இந்திய திரைத்துறையில் குறைவு. மலையாள சினிமாக்கள், இந்த இடத்தில் தான் மற்ற இந்திய சினிமாக்களில் இருந்து வெகுவாக வித்தியாசப்படுகின்றன.


சினிமா என்பது, வெறும் இரண்டரை மணிநேர பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே அல்ல. மக்களின் வாழ்வியல் சூழல், மனநிலை, ரசிப்புத்தன்மையுடன் அவற்றுக்கு நெருங்கிய தொடர்புண்டு. உலகெங்கிலும் சினிமாக்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நிலப்பரப்புகளுக்கு ஏற்ப அவற்றின் முகங்களும் மாறுபடுகிறது. மக்களின் ரசனையை சினிமாக்கள் தீர்மானிக்கின்றனவா அல்லது சினிமாக்களின் வடிவாக்கத்தை மக்கள் தீர்மானிக்கிறார்களா என்பது விடைதெரியாத கேள்வி. காரணம்... கர்நாடகம், ஆந்திரா, தமிழகத்தில் தயாராகிற சினிமாக்களுக்கும், இவற்றுக்கு வெகு அருகே இருக்கிற கேரளத்தில் தயாராகிற சினிமாக்களுக்கும் இருக்கிற வித்தியாசம்.



காலத்துக்குத் தகுந்தது போல கதையோட்டத்தில் புதுமை புகுத்தி, ஈர்ப்பதில் மலையாள சினிமா நீண்டகாலமாகவே முதலிடத்தில் இருக்கிறது. கொரோனாவுக்கு கொஞ்சம் முன்பாக - 2019, நவம்பரில் - வெளியாகி, பல மடங்கு லாபம் அள்ளிய ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் - வெர்ஷன் 5.25 (Android Kunjappan Ver 5.25) படம் சிறந்த உதாரணம்.


ப்பா  - மகனுக்கு இடையிலான உறவு / உணர்வுச்சிக்கல்களை, நவீன தொழில்நுட்ப வண்ணம் பூசி புதிய வடிவத்தில் சொல்கிறது இந்த சினிமா.


என்ன கதை?


80 வயது அப்பா பாஸ்கரன். 34 வயது மகன் சுப்பிரமணியன் (சுப்பன்). இரண்டே இரண்டு பேர் மட்டுமே கொண்ட குடும்பம். முதுமையின் தனிமையில், பேச்சுத்துணைக்கு அப்பாவுக்கு யாருமில்லை. ஆகவே, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த மகன் சுப்ரமணியன் எப்போதும் கூடவே இருக்கவேண்டும் - குறிப்பாக, மரணத்தின் போது மகன் உடன் இருக்கவேண்டும் என்பது அவரது விருப்பம். மகனை பிரிய மனமின்றி, அவனுக்கு நல்ல வேலைகள் கிடைத்தாலும் அனுப்ப மறுக்கிறார். மகனுடன் பழங்கதைகள் பேசவும், அமர வைத்து செஸ் விளையாடவும் பெரு விருப்பம். மகன் அப்படியில்லை. அப்பா மீது நிறைய, நிறைய பாசம் இருந்தாலும் கூட... பேசவோ, செஸ் விளையாடவோ அவர் அழைத்தால் ஏதாவது காரணம் சொல்லி எஸ்கேப் ஆகி விடுகிறான்.


கனுக்கு ரஷ்யாவில் சூப்பர் வேலை கிடைக்கிறது. உடனே வந்து சேரச் சொல்லி அழைப்பு. அப்பா தடுக்கிறார். மகன் இம்முறை கேட்பதாக இல்லை. தனியாக இருக்கும் அப்பாவை கவனித்துக் கொள்ள ஹோம் நர்ஸ் பணியமர்த்த முடிவு செய்கிறான். நண்பர்கள் உதவியுடன் ஓரிருவரை ஹோம் நர்ஸாக நியமித்தாலும், யாரையும் அப்பாவுக்கு பிடிக்காமல் போகிறது. கடைசியாக, ஆசாரம் மிகுந்த பெண்ணை ஹோம் நர்ஸாக நியமித்து விட்டு ரஷ்யா பறக்கிறான்.



னால், ஊரில் நிலைமை சரியில்லை. கவனிப்பு சரியில்லாமல் மனவேதனையில் இருக்கிறார் அப்பா. கீழே விழுந்து காயமும் ஏற்படுகிறது. தகவலறிந்து, மகன் வேதனைப்படுகிறான். வயதான அப்பாவை கூட இருந்து கவனித்துக் கொள்ளமுடியாத வருத்தம். அப்பாவின் கவலை போக்க, வேலையை உதறி விட்டு ஊர் திரும்ப முடிவு செய்கிறான். விஷயத்தை தனது தோழி, மேலதிகாரியிடம் சொல்கிறான். ‘இதற்காக ஏன் வேலையை விடவேண்டும்? அப்பாவை கூடவே இருந்து கவனித்துக் கொள்ள வேறு ஏற்பாடு செய்யலாம்’ என்று அவர்கள் ‘அந்த ஐடியா’ கொடுக்கிறார்கள்.


ன்ட்ராய்ட் வெர்ஷன் 5.25 லேட்டஸ்ட் மாடல் ரோபோவுடன் வீடு திரும்புகிறான் சுப்பன். காபி போடுவதில் இருந்து, துணி துவைப்பது, வீடு கூட்டுவது வரை சகலமும் செய்கிறது அந்த ரோபோ. ஆனால், மனித உணர்வுகளுக்கு ஏங்கும் அப்பாவுக்கு, வெறும் இயந்திரமான அதை பிடிக்க வில்லை. அவரை ஒருவழியாக சமாதானப்படுத்தி விட்டு மீண்டும் ரஷ்யா திரும்புகிறான் மகன். ரோபோவுடன் சிறு, சிறு மோதல்களுக்குப் பிறகு, யாருமற்ற தனிமைகளில் அதுவே அவருக்கு பேச்சுத்துணையாகிறது. உணவு சமைப்பது, குளித்ததும் தலை துவட்டி விடுவது, துவையல் அரைத்துத் தருவது என சகல உதவிகளும் செய்கிறது. கொஞ்சம், கொஞ்சமாக அதன் மீது பரிவு காட்டத் துவங்கும் அப்பா, ஒரு கட்டத்தில் அதை தனது மகனாகவே நினைக்க ஆரம்பித்து விடுகிறார்.


தற்குள், ஊருக்குள் அந்த ரோபோ ஃபேமஸ் ஆகி விடுகிறது. குஞ்சப்பன் என்று அதற்கு பேரும் வைத்து விடுகிறார்கள். அதை சொந்த மகனாகவே முற்று முழுதாக நம்ப ஆரம்பித்து விடுகிற அப்பா, குஞ்சப்பனை டெய்லர் கடைக்குக் கூட்டிச் சென்று டிசைன், டிசைனாக சட்டை தைத்து போட்டு விடுகிறார் பாஸ்கரன். தெருக்களில் கையைப் பிடித்துக் கொண்டு வாக்கிங் அழைத்துச் செல்கிறார். கோயில்களுக்குக் கூட்டிச் செல்கிறார். உச்சக்கட்டமாக, ஜோதிடரிடம் கூட்டிச் சென்று அதற்கு ஜாதகமும் கணித்து எழுதி வாங்குகிறார். மகனிலும் மேலாக அதன் மீது பாசம் கொட்டும் பாஸ்கரன், இனி குஞ்சப்பன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்கிற நிலைக்கு வருகிறார். படத்தின் கிளைமாக்ஸ் நெருங்குகிறது. இங்கு தான் வருகிறது ட்விஸ்ட்.


சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட அந்த ரோபோவை திரும்ப ஒப்படைக்குமாறு சுப்ரமணியிடம், அவரது மேலதிகாரி கேட்கிறார். தவிர, அந்த ரோபோ தயாரிப்பில் சிறிய தவறுகள் இருப்பதால், அது அவனது அப்பாவின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடலாம் என்றும் எச்சரிக்கிறார். ரோபோவை அழித்து, அப்பாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஊர் திரும்புகிறான் சுப்ரமணி. மகனா, ரோபோவா என்கிற பாசப்போராட்டத்தில், ரோபோ ஜெயிக்கிறது. தன்னிடம் இருந்து குஞ்சப்பனை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில், மகனுக்குத் தெரியாமல் இரவோடு இரவாக குஞ்சப்பன் ரோபோவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார் அப்பா. யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் நுழைந்து விடுகிறார். நுணுக்கமான உணர்வுகளால் இயங்கும் மனிதனுக்கும், கட்டளைகளால் உருவாக்கப்பட்ட இயந்திரத்துக்குமான வித்தியாசங்களை கடைசி 15 நிமிடங்களில் பொட்டில் அடித்தது போல படம் விளக்குகிறது. காட்டுக்குள் இருந்து, அப்பாவை மகன் பைக்கில் வீட்டுக்கு அழைத்து வருகிறான், ‘‘குஞ்சப்பா...’’ என்று மனதின் ஆழத்தில் இருந்து விளித்தபடி, ஆயாசமாக மகன் சுப்ரமணியனின் முதுகில் அப்பா சாயும் காட்சியுடன் படம் நிறைவு பெறுகிறது. 


யதான காலத்தில் பேச்சுத்துணைக்கு யாருமற்றிருக்கிற முதியவர்களின் வேதனை பேசும் படம். ஆனால், சென்டிமென்ட் பூச்சுற்றல்கள் இல்லாமல், படம் முழுக்க மென் நகைச்சுவையுடன் படு இயல்பாக நகர்கிறது. மொத்தக் கதையிலும் ஆறோ, ஏழோ கதாபாத்திரங்கள் தான். ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் பிரமாதமாக செதுக்கப்பட்டிருக்கிறது.


Soubin shahir

ப்பா பாஸ்கரனாக சுரஜ் வெஞ்ஞாரமூடு, மகன் சுப்ரமணியனாக ஷாபின் ஷாகிர் நடித்திருக்கிறார்கள். இருவருமே, சமகால மலையாள சினிமாக்களில் பேராதிக்கம் செலுத்தும் அற்புத நடிகர்கள். அதுவும், ஷாபின் ஷாகிர் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பதில் ஜாம்பவான். சுடானி ஃப்ரம் நைஜீரியா, அம்பிளி போன்ற படங்கள் சாட்சி. ஆனால், இந்தப் படத்தில் அவரை ஓரங்கட்டி விட்டார் சுரஜ் வெஞ்ஞாரமூடு.


Suraj venjaramoodu
80 வயது முதியவராக நடித்திருக்கும் அவருக்கு நிஜத்தில் 40 வயது. காமெடி வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், தளர்ந்த முதியவருக்கான உடல்மொழியுடன், இத்தனை அழுத்தமான பாத்திரத்தை போகிறபோக்கில் கையாண்டு பிரமிப்பை ஏற்படுத்துகிறார். நடிப்பு என்றே பிரித்துப் பார்க்கமுடியாத அளவுக்கு பாஸ்கரன் என்ற முதியவரை முழுமையாக பிம்பப்படுத்துகிறார் சுரஜ். அதுவும் கடைசி 15 நிமிடங்கள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. குஞ்சப்பனுடன் அவர் காட்டுக்குள் தப்பிச் செல்லும் கிளைமாக்ஸ் தருணத்தில், க்ளோஸ் அப் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார். இந்தப்படத்துக்காக, கேரள அரசின் சிறந்த நடிகர் விருதும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.




டத்தை இயக்கியிருக்கும் ரதீஷ் பாலகிருஷ்ணனுக்கு இது தான் முதல் படம். ரிஸ்க் பற்றிய கவலைகளின்றி, முதல் படத்திலேயே இப்படி ஒரு வித்தியாசக் கதையை தேர்வு செய்கிற சுதந்திரத்தையும், துணிச்சலையும் அவருக்கு மலையாள சினிமா கொடுத்திருக்கிறது. சினிமாவுக்கே உரித்தான மரபான காட்சியமைப்புகளை உடைத்து, நவீன தொழில்நுட்பத்தையும், மனித உணர்வுகளையும் ஒரே கலவையாக நெய்து கொடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குனர் மாநில விருது வாங்கியிருக்கிறார். சிறிய, சிறிய காட்சியமைப்புகளில் இயக்குனரின் தனித்த முத்திரை தெரிகிறது. விழுந்து புரண்டு சிரிக்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் படம் முழுக்க பல இடங்களை புன்னகையுடன் கடக்க முடிகிறது.



ரோ
போவை கிராம மக்கள் வந்து பார்த்து பிரமித்துச் செல்லும் காட்சிகள் உதாரணம். சுப்ரமணியனின் நண்பர் பிரசன்னன் ரோபோவை பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போகிறார். வியப்பில் கண்கள் விரிய, அதனுடன் பேசுகிறார்.

‘‘பேரெந்தா...?’’

‘‘ரோபாட்’’

‘‘ராபர்ட்... ஓ! கிறிஸ்டியனோ...?’’

பின்னர். படம் முழுக்க, பிரசன்னனுக்கு அது ரோபாட் அல்ல. ராபர்ட்.


மகாலத்து மத அரசியல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்று பல விஷயங்களை சிறு, சிறு வசனங்களின் மூலம் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன். சுரஜ் வெஞ்ஞாரமூடு, ஷாபின் ஷாகிர் இருவரும் படத்தின் மிகப்பெரிய ஆளுமைகள் என்றாலும், பார்வையாளர்களை அதிகம் கவரும் பாத்திரம் என்றால்... குஞ்சப்பன் ரோபோ தான்.

ந்த சினிமா வெளியான 75வது நாளில் ஒரு ரகசியத்தை மலையாள மக்களிடம் உடைத்திருக்கிறார் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன். ‘‘உண்மையில் ரோபோ காட்சியமைப்புகள் முழுவதும் VFX கம்ப்யூட்டர் வரைகலை தொழில்நுட்பம் மூலமாக செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால், படம் முழுக்க VFX தொழில்நுட்பம் பயன்படுத்தினால், பட்ஜெட் எகிறி விடும் என்பதால், ரோபோ வேடத்தில் மிமிக்ரி கலைஞரும், வளர்ந்து வரும் டிவி நடிகருமான சூரஜ் தெலக்காடு நடிக்க வைக்கப்பட்டார்...’’ என்று அவர் பேட்டி கொடுக்க, பிரமித்துப் போனது மலையாள திரையுலகம்.


‘‘படம் முழுக்க வருகிற பாத்திரம் என்றாலும் கூட, ஒரு காட்சியில் கூட எனது முகம் தெரியாது. படம் ரிலீஸ் ஆனப் பிறகு, நடித்தது நீ என்று அறிவிக்கிறோம் என்று டைரக்டர் உறுதியளித்தார். ரோபோவாக நடிப்பதற்காக எடையை குறைக்கவேண்டியிருந்தது. ரோபோ டிரஸ் போட்டு நடிக்கும் போது சூடும், வியர்வையுமாக ரொம்பக் கஷ்டம். ரோபோ மாதிரியே இயந்திரக் குரலில் நானே டப்பிங் பேசியிருந்தேன். படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் முடிந்தும் படக்குழுவினர் யாரும், என்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. சரி, ரோபோவாக நாம் நடித்ததை வெளியில் சொல்ல மாட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன். சுரஜ் சேட்டனிடம் கேட்டேன். கொஞ்ச நாள் பொறுமையாக இரு... என்றார். இப்போது, விஷயம் தெரிந்ததும், எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன...’’ என்கிறார் முகமெல்லாம் மலர்ச்சியாக! (Exclusive Interview with Cast & Crew of Android Kunjappan Ver 5.25 : Reveals Original Kunjappan: https://www.youtube.com/watch?v=NNFtyk70N98).


ரு ரோபோவை பிரதானப் பாத்திரமாக்கி, அதைக் கொண்டு, மனித உணர்வுகள், உறவுகளைப் பற்றி பேசுகிறது இந்த மலையாள சினிமா. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு அதன் இயக்குனர் ரோபோவை அல்லது கம்ப்யூட்டர் வரைகலை தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பவில்லை. மாறாக, அழுத்தமான கதை, நேர்த்தியான திரைக்கதை, வலுவான காட்சியமைப்புகள், தேர்ந்த நடிகர்கள் என ஒரு நல்ல திரைப்படத்துக்கு என்ன தேவைப்படுகிறதோ, அதை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கிறார்கள். 1982களில் வெளியான ET (E.T. the Extra-Terrestrial) படத்தின் சாயல் தெரிந்தாலும் கூட, கதையோட்டத்தில் மலையாள மண்வாசமே முழுக்க நிரம்பிப் பரவியிருக்கிறது. கைகளையும், கால்களையும் அசைத்த படியே, 80 வயது பாஸ்கரனிடம் பேசிக் கொண்ட பையனூர் தெருக்களில் நடந்து செல்லும் குஞ்சப்பன் ரோபோவை திரையில் பார்த்துக் கொண்டிருக்கும்போது, நவீன தொழில்நுட்பத்தையும், பெரும் நட்சத்திரங்களையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு தமிழில் வலம் வந்த 2.0 சிட்டி ரோபோக்கள் நமது மனதில் வந்து செல்வதைத் தவிர்க்க முடியவில்லை.


- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


8 கருத்துகள்:

  1. சிறப்பான விமர்சனம். இத்தகைய சினிமாக்களால் தான், சினிமா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. தமிழில் இப்படம் வர போவதாக கேள்வி பட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. தம்பி அற்புதமான அனாலிசிஸ். உன் படத்தை மிக மிக ஈடுபாட்டோடு உள்வாங்கி ரசித்தால் தான் இப்படி எழுத முடியும். என்னதான் இயந்திர மனிதன் பாத்திரம் இருந்தாலும் அதிலும் ஒரு மனிதன் தானே நடிக்க வேண்டியிருக்கிறது. சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி.

    பதிலளிநீக்கு
  3. உடனே பார்த்து ரசிக்க வேண்டும் எனும் ஆவல் பிறக்கிறது... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. R.கிட்டுத் துரை , கொடைக் கானல்9 நவம்பர், 2020 அன்று PM 8:36

    மிக அருமை, நல்ல முயற்சி

    பதிலளிநீக்கு
  5. 300,400 என கோடிகளை கொட்டி ஷங்கர்களால் உருவாக்கப்படும் ரோபோக்களை விட...கடவுளின் தேசத்து ரோபோ உணர்த்துவது??? படத்தை எப்படி எடுக்க வேண்டும் என ஷங்கருக்கு மட்டுமல்ல... சினிமாவை தாண்டி பெற்றோரை பேண வேண்டிய நம் அனைவருக்குமான நல்ல பாடம்... மலையாள ரதீஸ் பாலகிருஷ்ணன்களிடம் தமிழக ஷங்கர்கள் வாங்கி குடிக்க வேண்டியது நிறைய உள்ளது போல...

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் விமர்சனம் சார்...💐

    பதிலளிநீக்கு
  7. அழகாாாான ..அருமையாாாான..
    ரோாாபோவை வைத்து சொாாான்ன பாசப் போாாராாாட்டக் கதை. சூப்பர்..

    பதிலளிநீக்கு
  8. நன்றி.. பார்க்கும் ஆவல் தூண்டும் பதிவு.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...