டிவி சேனல் நிருபருக்கு பிரச்னை மேல் பிரச்னை. வாழ்க்கையில் எதுவுமே சாதகமாக இல்லை. தொட்டதெல்லாம் தோல்வி. உச்சக்கட்டமாக, டிவி சேனல் நிருபர் வேலையும் காலி. எனக்கு மட்டும் ஏன் இப்டி... என்று மனம் வெறுத்து, கடவுளிடம் கேட்கிறான். சர்தான் என்று கடவுள், மனித வேடத்தில் அவன் முன்பாக வருகிறார்; வழிநடத்துகிறார். சில உண்மைகளை புரிய வைக்கிறார். - தீபாவளி ரிலீஸ் ‘மூக்குத்தி அம்மன்’ படக்கதை அல்ல இது. 2003ல் வெளியான ‘புரூஸ் அல்மைட்டி (Bruce Almighty)’ ஆங்கில சினிமாவின் கதை.
கொரோனா சாமியார்கள்!
இது பிரச்னைசூழ் உலகு. நீதியும், நியாயமும் கடைசியாக கிடைக்கிற இடம் எதுவென்று நம்பிக் கொண்டிருந்தோமோ... அங்கேயே ‘நோ சான்ஸ்...’ என்று கையை விரிக்கிற நிலைமை. கடவுளை நம்புவதைத் தவிர, கடைநிலை மனிதனுக்கு இப்போது வேறு வழியே இல்லை. கடவுளும், பக்தகோடிகளின் துயர் துடைக்க குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்துவதாக இல்லை. விளைவு... தாயத்து, அதிர்ஷ்டக்கல் விற்கிற ஆசாமிகளுக்கு அடிக்கிறது ஜாக்பாட். மந்திரம், தந்திரம், எந்திரம் செய்யும் சாமியார்கள் காட்டில் கொட்டுகிறது கஜா புயல் மழை.
பக்தி என்பது இப்போது ரொம்ப காஸ்ட்லியான பிசினஸ். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நாங்க தீர்க்கிறோம்... என்று கார்பரேட் சாமியார்கள் அழைக்கிறார்கள். கடவுளுக்காக காத்திருக்கிற நேரத்தில், கார்பரேட் சாமியார்களிடம் ஒரு விசிட் அடித்துப் பார்க்கலாம் என்று கொத்துக் கொத்தாக சென்று விழுகிறார்கள் அப்பாவி மக்கள். ஜியோவுக்கு போட்டியாக கோடி, கோடியாக வாரிச்சுருட்டுகிறார்கள் சாமியார்கள். மக்களை ஏமாற்றுவதுடன் நிற்காமல், இயற்கை வளங்களை அழிப்பது, மதமோதல்கள், சர்ச்சைகள் என மக்களுக்குள் பிரிவினை செய்வதால், இன்றைய தேதியில் கொரோனாவுக்கு இணையான ஆபத்து இவர்களாலும் இருக்கிறது.
இது காப்பி - பேஸ்ட்டா?
இந்த கார்பரேட் சாமியார்கள் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறது தீபாவளி OTT ரிலீஸான, ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம். அந்தத் துணிச்சலுக்காக, பாராட்டுகள்.
கதை...? முதல் பாராவில் பார்த்த அதே ‘புரூஸ் அல்மைட்டி (Bruce Almighty)’ ஆங்கில சினிமா கதை தான். டிவி ரிப்போர்ட்டராக ஜிம் கேரி, மனித உருவில் கடவுளாக மோர்கன் ஃப்ரிமன் கலக்கியிருப்பார்கள். செம ஜாலியாக இருக்கும். அந்தப்படத்தை பார்த்து இதை காப்பி செய்திருக்கிறார்கள் என்று குற்றம் சொல்லவில்லை. புரூஸ் அல்மைட்டி வந்தப் பிறகு, அதை காப்பி செய்து இந்தியிலும், தமிழிலும் நிறையப்படங்கள் வந்து விட்டன. கார்பரேட் சாமியார்கள் கதையைக் கையாளுவதற்கு புரூஸ் அல்மைட்டி உத்தி இங்கு கைகொடுத்திருக்கிறது.பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் கதாநாயகன் ஏங்கெல்ஸ் ராமசாமிக்கு (ஆர்.ஜே.பாலாஜி) அவரது குலதெய்வமான மூக்குத்தி அம்மன், ஒரு நாள் இரவில் திடீரென காட்சி தருகிறார். வரம் தருகிறார். பாட்டுப் பாடி கூப்பிட்டால் வருகிறார். தனது கோயிலையே கபளிகரம் செய்து, நிலத்தை அபகரிக்கத் திட்டமிடுகிற ஒரு கார்பரேட் சாமியாரை டிவி நிருபர் ஒத்துழைப்புடன் தெறிக்க விடுகிறார். இது கதை. சாமி VS சாமியார் என்று டைட்டில் கார்டு போட்டு விறுவிறுப்பு ஏற்றுகிறார்கள். ஆனால், ஆவரேஜ் திரைக்கதை காரணமாக, உள்ளூர் டவுன்பஸ் போல படம் வேகமெடுக்கத் திணறுகிறது.
சாமியார்களுக்கு செக்!
ஆர்.ஜே.பாலாஜியின் முதல் படமான, LKG பெற்ற அபார வெற்றி காரணமாக, இந்தப்படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. LKG, சமகால அரசியலை நையாண்டி செய்த திரைப்படம். என்பதால், அந்தப் படம் அனைத்துத் தரப்பினராலும் விரும்பி ரசிக்கப்பட்டது. சாதாரண கவுன்சிலராக இருக்கிற இளைஞன், அதிரடி காய் நகர்த்தல்களால் மாநில முதல்வராகிற கதை அது. அப்பல்லோ ஆஸ்பத்திரி சம்பவங்கள் துவங்கி, டெல்லிக்கு காவடி எடுக்கிற அரசியல்வாதிகள் வரை... முழுக்க, முழுக்க தினமும் நாம் நாளிதழ்களிலும், சேனல்களிலும் கடந்து செல்கிற டிரெண்டிங் மேட்டர்களை, நகைச்சுவை கலந்து கொடுத்து கலக்கியிருந்தார் பாலாஜி.
நகைச்சுவை ஏரியா தான் தனது பலம் என்பதால், மூக்குத்தி அம்மனையும் அதுபோலவே உருவாக்கியிருக்கிறார். ஆனால், LKG அளவுக்கு அது முழுமையாக இங்கே கைகொடுக்கவில்லை. ஆனாலும் கூட, இன்றைய தேதிக்கு தேவையான சில விஷயங்கள் படத்தில் இருக்கின்றன. குடும்பத்தைக் கவனிக்காமல் சாமியார்கள் பின் ஓடும் சமூகத்தை நோக்கி கேள்விகளை எழுப்புகிறது இந்தப் படம். 100 ரூபாய் வாட்ச்சுக்கு கூட வாரண்டி இருக்கும்போது, லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மந்திரித்துத் தரும் அதிர்ஷ்டக்கல், தாயத்துகளுக்கு ஏன் வாரண்டி தரக்கூடாது என்று சாமியார்களுக்கு செக் வைக்கிறது படம்.
தூண்டி விடும் நாடு எது?
ஆனந்த நடனம் ஆடுகிறவர், அருள்வாக்கு தருகிறவர், சூரியனை தாமதமாக உதிக்க வைக்கிறவர்... என நாம் தினம்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிற சாமியார்கள் தான் படத்தின் டார்கெட். அவர்கள் செய்யும் டுபாக்கூர் செயல்களை இன்னும் விரிவாகவே அம்பலப்படுத்தியிருக்கலாம். நகைச்சுவை கலந்து சொல்லும் போது மக்களிடம் நன்றாகவே ரீச் ஆகியிருக்கும். ஆனால், சென்டிமென்ட் ஏரியாக்களே படத்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து விட்டதால், சாமியார்களின் தில்லாலங்கடி போர்ஷனுக்கு இன்னும் அதிக ஸ்பேஸ் இல்லாமல் போகிறது.
‘‘தமிழ்நாட்டுல மட்டும் தான் இன்னும் மதத்தை வைச்சு மக்களிடம் ஓட்டு வாங்க முடியலை. கடவுள் பேரைச் சொல்லி, மக்களை பிரிக்கிறது தான் நம்ம வேலை. அதுக்காகத்தான் ஆசிரமம் அமைக்க நமக்கு இவ்வளவு இடம் கொடுக்குறாங்க...’’.
‘‘130 நாடுகளில் கிளையை வெச்சு பக்தியையா பரப்புறோம். இங்க போடுற 100 கோடி ரூபாயை அங்க எடுத்துக்கிற மாதிரி அன்னியச் செலாவணி வேலைதான செஞ்சுகிட்டு இருக்கோம்,’’.
- போன்ற வசனங்கள், இன்றைய கோடீஸ்வர சாமியார்களின் நிஜ முகத்தை அம்பலப்படுத்துகின்றன. படக்குழுவினருக்கு சபாஷ். மட்டுமல்ல, எந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தாலும் உடனே, ‘‘உன்னை தூண்டி விடுற மதம் எது? உனக்கு பின்னணியில இருக்கிற நாடு எது?’’ என்று பிரச்னையின் கோணத்தை ‘ஆன்டி இந்தியன்’ திசையில் திருப்புகிற இன்றைய ஆன்மீக அரசியல் சரியான கோணத்தில் காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது.
குறைகளும் உண்டு. ஆன்மீக அரசியல் விவகாரத்தை அறிவுப்பூர்வமாக அம்பலப்படுத்துவதற்குப் பதில், சிறு குழந்தைகள் பார்க்கிற சோட்டா பீம் ரேஞ்சுக்கு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் ஒரு கட்டத்துக்கு மேல் கொட்டாவி விட வைக்கின்றன. தாத்தா கம்யூனிஸ, பெரியாரியல் சித்தாந்தங்கள் கொண்டவர் என்பதால் தனக்கு ‘எங்கெல்ஸ் ராமசாமி’ என்று பெயர் வைத்ததாக கதாநாயகன் சொல்கிறார். பெயருக்கு நியாயமாக அவரது பாத்திரப் படைப்பு இல்லை. படம் முழுக்க ஜோதிடத்தையும், ஜாதகத்தையும் நம்புகிறவராகவே அவரது கதாபாத்திரம் இருக்கிறது.
யாருக்கான படம் இது?
அதெல்லாம் கூடப் பரவாயில்லை. கருப்புச் சட்டைக்காரர்கள் மீட்டிங் ஒன்று நடக்கிறது. கதாநாயகனும், மூக்குத்தி அம்மனும் மீட்டிங் பார்க்க போகிறார்கள். மேடையில் பேசுகிற கருப்புச் சட்டைக்காரர், ‘‘நான் நோன்புக் கஞ்சி குடிப்பேன். புனித அப்பத்தை புசிப்பேன். ஆனால், ஆடி மாத கூழ் மட்டும் குடிக்க மாட்டேன்...’’ என்று பேசுவதாக காட்சி. உடனே, ‘‘ஒரு கடவுளை உயர்த்தி, இன்னொரு கடவுளை தாழ்த்துறான் பாரு... அவன் ரொம்ப ஆபத்தானவன்’’ என்று மூக்குத்தி அம்மன் ‘பஞ்ச்’ வைக்கிறார். படம் எடுக்கப்பட்டதன் நோக்கத்தையே, இந்தக் காட்சி கேள்விக்குள்ளாக்குகிறது. இது யாருக்கான படம், யாருக்கு எதிரான படம் என்கிற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் இயங்குகிற பகுத்தறிவு இயக்கங்கள், கட்சிகள் இஸ்லாமிய, கிறிஸ்துவ சார்புநிலையில் இருந்து கொண்டு, இந்து சமயத்தையும், இந்துக்களையும் புறக்கணிப்பதாக இந்தக் காட்சி நம்ப வைக்க முயல்றது. இது தற்செயலானதா அல்லது திட்டமிட்டு சேர்க்கப்பட்ட காட்சியா என தெரியவில்லை. காரணம், பகுத்தறிவு இயக்கங்கள் மீது மிக நீண்டகாலமாக வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. இஸ்லாமிய, கிறிஸ்துவ பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்கிற திராவிட கட்சிகள், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை. இந்து சமயத்தின் மூடப்பழக்க வழக்கங்களைச் சாடும் அளவுக்கு,பிற மதங்களை குறைசொல்வதில்லை என்று மிக நீண்டகாலமாக குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்கிற வலதுசாரி மதவாத அமைப்புகளின் கருத்தையே இந்தக் காட்சி பிரதிபலிக்கிறது.
யாரை நோக்கிய கேள்வி?
உண்மையில் வலதுசாரி அமைப்புகளின் இந்தப் பிரசாரம் அபத்தமானது. இந்தியா என்பது இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு. இங்கு நடப்பில் இருக்கிற சகல ஏற்றத்தாழ்வு பிரச்னைகளுக்குமான காரணம் இந்து மத சம்பிரதாயங்களும், அதன் வேத நெறிமுறைகளுமேயன்றி, பிற இஸ்லாமிய, கிறிஸ்துவ, பவுத்த மதக் கோட்பாடுகளோ, அந்த மதத்து வேதப்புத்தகங்களோ அல்ல. அப்படியானால், சமூகநீதிக்கான குரல் எழுப்பும்போது, உயர்வு - தாழ்வு பேதம் பிரித்துப் பார்க்கிற இந்து மதத்து சம்பிரதாயங்களின் மீது மட்டும்தானே இங்குள்ள திராவிட, பெரியாரியல் அமைப்புகள் விமர்சனம் வைக்கமுடியும். கேள்வி எழுப்பமுடியும்?
இயக்குவது யார்...?
மது ஒழிப்புக்காக, இங்குள்ள அனைத்து அமைப்புகளும் குரல் கொடுக்கின்றன. போராட்டங்கள் நடத்துகின்றன. ‘‘மது ஒழிப்புக்கு மட்டும்தான் குரல் கொடுப்பீர்களா? ஏன் சிகரெட், பான்பராக் ஒழிப்புக்கு போராட மாட்டீர்களா...?’’ என்று யாராவது எதிர்கேள்வி எழுப்பினால், கேள்வி எழுப்புகிறவருக்கு போதிய அளவுக்கு பக்குவம், முதிர்ச்சி இல்லை என்று புரிந்து கொள்ளலாம். அல்லது, வீம்புக்கு, பிரச்னை செய்வதற்காக கேள்வி எழுப்புகிறார் என்று தெரிந்து கொள்ளலாம். இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கும், மதுவுக்கு எதிராக மட்டும் தான் குரல் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. மூடப்பழக்கங்கள், ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் மையநோக்கம். இதில் இந்த மதம், அந்த மதம் என்ற பேதம் சத்தியமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால், திராவிட அமைப்புகளால் இஸ்லாமிய, கிறிஸ்துவ வேதப்புத்தகங்களும், மத நெறிமுறைகளும் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. பைபிள், குர்ஆனை விமர்சனம் செய்யும் நிறையப் புத்தகங்கள் இங்கு படிக்கக் கிடைக்கின்றன.
திராவிட இயக்கங்களோ, பெரியாரியல் அமைப்புகளோ சிறுபான்மை மதம், பெரும்பான்மை மதம் என்று எந்த பேதமும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒருவேளை இந்தியா என்பது பவுத்தர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நாடாக இருந்திருக்குமேயானால்... அந்த மதத்து மூட நம்பிக்கைகளே இங்கு அதிகம் விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அதுவே உண்மையான மதசார்பின்மை தத்துவத்தின் கருதுகோள். முற்போக்கான நிறைய விஷயங்களை போகிறபோக்கில் பேசி விட்டு, கடைசியில், சமூகநீதி சித்தாந்தத்தின் அடித்தளத்தை கேள்விக்குள்ளாக்கும் காட்சியமைப்பை பார்க்கும் போது.... இந்தப் படத்தில் வருகிற கார்பரேட் சாமியார் போலவே நாமும், ‘‘மூக்குத்தி அம்மனை, பின்னணியி்ல் இருந்து இயக்குவது யார்...’’ என்று கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
உண்மை சார்
பதிலளிநீக்குகாது குத்தி அம்மன். சூப்பர் தலைப்பு தம்பி. இதையே படத்திற்கு வைத்திருக்கலாம். இன்னும் நன்றாக இருக்கும்
பதிலளிநீக்குஇந்து vs ஹிந்து...
பதிலளிநீக்குஎப்போது...?
எதனால்...?
ஏன்...?
கறுப்பாடை போர்த்திய காவியாளன்...
பதிலளிநீக்குபாமர மக்கள் கும்பிடும் மூக்குத்தி அம்மனை நயன்தாரா வடிவில் ஏதோ காமெடியம்மனாக
உலாவ விட்டு, தான் நூல் போட்ட டைரக்டர் என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளார் அரைசங்கி பாலாஜி...
எந்திரன் படத்தில் ஆடி மாதத்தில் அம்மனுக்கு ரேடியோ செட் போட்டு அம்மன் பாடல்களை ஒலிக்க விடுவதால்... படிக்கும் மாணவர்கள், முதியவர்கள் கஷ்டப்படுவதாக... ரோபோ ரஜினி அவர்களை அடித்து நொறுக்குவதாக காட்சிப்படுத்தியிருப்பார்... அந்த நூல் போட்ட ஷங்கர டைரக்டர்... ஏன் ஐயப்பன் பாடல்களோ, சுப்ரபாதம் பாடல்களோ இங்கு சத்தமாக ஒலிப்பதில்லையா... இந்த நூல் டைரக்டர்களுக்கு எப்போதுமே பாமரர்கள் விரும்பும் அம்மன்கள் என்றால் இளக்காரம் தான் போல...
நித்தி, ஜக்கி சாமியார்களை எதிர்த்து காட்சி வைத்த அரைசங்கி... காஞ்சிபுரம் (ஆ)பாச அர்ச்சகர் தேவநாதன் , கருவறையில் பெண்களுக்கு செய்த அர்ச்சனைகள் குறித்த ஒரு காட்சியையோ, வசனத்தையோ படத்தில் வைக்க முடியுமா???
கம்யூனிசம் பேசும் காவியாளரால்... கண்டிப்பாக அது முடியாது... நூல் திமிரு அவரிடம் அதிகம்... அதை காமெடியாக காட்டுவதால் அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது... அவர் பேச்சிலும்... வெள்ளித்திரையிலும்...
-எகின்பாலா
தெளிவான கருத்து
பதிலளிநீக்குதெளிவான கருத்து
பதிலளிநீக்குதீர்க்கமான அலசல்
பதிலளிநீக்குதீர்க்கமான பதிவு
பதிலளிநீக்கு