சனி, 17 அக்டோபர், 2020

நீங்கள் முரளிதரனா, சங்கக்கராவா?

 

முத்தையா முரளிதரன் - கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத பெயர். இலங்கை அணியின் பல்வேறு சாதனை வெற்றிகளுக்கும், அந்த அணியின் விஸ்வரூப வளர்ச்சிக்கும் முக்கியக் காரணமாக இருந்த சுழல்பந்து ஜாம்பவான். இலங்கை அணியின் ஜெர்ஸி அணிந்து விளையாடினாலும் கூட, அவரை ஒரு தமிழராகவே தமிழகம் பார்த்தது. அவரது சாதனைகளை கொண்டாடியது.


கிரிக்கெட் களத்துக்கு வெளியே அவர் காட்டிய மற்றொரு முகம் சகிக்கமுடியாதது. பொதுவெளிகளில் தன்னை ஒரு தமிழராக அவர் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. இலங்கையில் நிலவிய / நிலவுகிற சூழலில் அது சாத்தியமும் இல்லை. ஆகவே, அதுகுறித்து இங்கு யாரும் வருத்தம் கொள்ளவில்லை. ஆனால், இன விரோதம் கொப்பளிக்கும் கருத்துக்களுடன், தன்னை ஒரு முழுமையான சிங்கள பிரதிநிதியாக அடையாளப்படுத்திக் கொண்டப் பிறகு, தமிழ் ரசிகர்கள் மனதில் இருந்து அவர் முற்றிலுமாக அன்னியப்பட்டுப் போனார்.


நாடகமா இது...?


2
009ம் ஆண்டு. இலங்கையில் உச்சக்கட்டமாக போர் நடந்த நேரம். லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டு ஒட்டுமொத்த உலகமும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த தருணம். முள்ளிவாய்க்கால் பகுதியில் கொத்துக் கொத்தாக தமிழர்களின் பிணங்கள் குவிந்து கிடந்த ஒரு மாலைவேளையில், போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார் ராஜபக்ஷே. ‘‘அன்று இரவு தான் நான் நிம்மதியாக தூங்கினேன்...’’ என்று அதற்கு பிற்பாடு ஒரு பேட்டியில் முரளிதரன் சிரித்தபடி கூறியபோது... துரோகிகளுக்கு, எதிரிகள் மேல் என்று தமிழகம் உணர்ந்தது.



‘‘எ
ங்கள் நாட்டில் நிலையான அமைதியை கொடுக்க வல்லவர் ராஜபக்ஷே மட்டுமே...’’ என்று அவர் சர்வதேச மீடியாக்களுக்கு முன் நின்று சொல்லிய போது, தமிழர் என்று அவரைக் கொண்டாடிய தமிழகத்து ரசிகர்கள் மனம் வெடித்துப் போனார்கள். ‘‘நெல்சன் மண்டேலாவுக்கு இணையானவர்...’’ என்று ராஜபக்ஷேவை தூக்கிப் பிடித்தது தான் உச்சக்கட்டம். ‘‘எனக்கு தமிழ் தெரியாது...’’ என்று பொதுவெளியில் சிங்கள இனவாதம் செய்ததைக் கூட (இன்றைக்கு அவர் மறுத்தாலும் கூட) சகித்துக் கொள்ளலாம். ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து போர்க்குற்றம் குறித்த விசாரணைக்காக வந்திருந்த அதிகாரிகளிடம், ‘‘ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட தங்கள் கணவன்மார்கள், மகன்களின் கதி என்ன...?’’ என்று கண்ணீர் விட்டு கதறிக் கேட்ட தாய்மார்களின் செயல்களை, ‘‘இது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம்....’’ என்று பேசினாரே... மறக்க முடியுமா; மன்னிக்கமுடியுமா?


- இப்படியாகப்பட்ட, இன்னும் பல்வேறு சம்பவங்கள் நிறையக் கொண்ட முத்தையா முரளிதரன் என்ற ஜாம்பவான் வீரரின் வாழ்க்கை வரலாற்றை ‘‘800’’ என்ற தலைப்பில் (சர்வதேச போட்டிகளில் அவர் வீழ்த்திய மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை) ‘தார் மீடியா’ என்ற மும்பை நிறுவனம் திரைப்படமாக தமிழில் தயாரிக்கிறது. போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்காக, உலகமெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் ஓங்கி, உரத்துக் குரலெழுப்புகிற வேளையில், இந்தத் திரைப்பட தயாரிப்புக்கான காரணம், சந்தேகங்களை எழுப்புகிறது.


‘இனத்தை’ மறக்கலாமா?


பிறப்பால் அவர் தமிழர். தனது உழைப்பால் யாதொரு தடையுமின்றி முன்னேறி, உலக சாதனையாளனாக முடிகிறது. அந்த அளவுக்கு இலங்கையில் ஜனநாயகமும், மனிதநேயமும் மதிக்கப்படுகிறது. தமிழர்களிடம் இங்கு பாகுபாடுகள் காட்டப்படுவதில்லை  என்று சர்வதேச சமூகத்தை நம்பவைப்பதற்கான கருவியே இந்தத் திரைப்படம். இதற்கு தேர்ந்த முன்னுதாரணங்கள் இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் கொடூரம் முடிந்ததும், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற நடவடிக்கைகள் தீவிரமெடுத்திருந்த நேரம். அப்போது, தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளத்தில் ஒரு படம் வெளியாகிறது. தமிழில் அந்தத் திரைப்படத்தின் பெயர் ‘இனம்’. மற்ற மொழிகளில் ‘சிலோன்’. 


விடுதலைப்புலிகளும், இலங்கைவாழ் தமிழர்களும் மட்டுமே அத்தனை பேரழிவுகளுக்கும் காரணம் என்று பழிசுமத்திய அந்தத் திரைப்படம், இலங்கை ராணுவத்தையும், அங்குள்ள பவுத்த பிட்சுக்களையும், மகா புனிதர்களாக, மனிதநேய மாமுனிகளாக சித்தரித்தது. கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் சிவன் இயக்கியிருந்த இந்தத் திரைப்படத்தில் பிரதான வேடத்தில் நடித்து சிறப்பித்திருந்தார் நடிகரும், இன்றைய அரசியல்வாதியுமான கருணாஸ். (படிக்க: இனம் அல்ல... ஈனம்).


ர்வதேச சமூகத்தின் கவனத்தை திருப்புகிற வேலைகள் இவை. சக்திவாய்ந்த ஊடகமான, திரைப்படங்கள் மக்கள் மனதை மாற்ற வல்லவை. மக்கள் மனதில் ஊடுருவி, ‘‘அட! அப்படியா நடந்துச்சு? நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டோமோ...’’ என்று தவறான கருத்தாக்கத்தை உருவாக்கக்கூடிய ஆற்றல் திரைப்படங்களுக்கு உண்டு. இல்லாத ஒன்றையும் நிஜமென்று நம்பவைக்கிற ஆற்றல் கொண்டவை திரைப்படங்கள். அதனால் தான் திரைப்படங்களில் நியாயவான்களாக வேடம் கட்டிய பலர், பின்னாட்களில் நாடாளவும் முடிந்தது. நம்மூரில் மட்டுமல்ல... அமெரிக்காவிலும் - உதாரணம்: ரொனால்ட் ரீகன்.


கவேதான் அன்று ‘இனம்’ உருவாக்கப்பட்டது. இன்று ‘800’ உருவாக்க முயற்சிகள் நடக்கிறது. சர்வதேச சமூகத்தின் முன்பாக நின்று ‘சிங்களவர்கள் மனிதநேயச் செம்மல்கள்’ என்று சான்றிதழ் வழங்க ஒரு முகம் வேண்டும். அந்த முகம் தமிழ் முகமாக இருக்கவேண்டும். இதோ இருக்கிறார் முத்தையா முரளிதரன். அவரது வாழ்க்கை காவியத்தை ஒன்றுக்குப் பத்தாக கதை சேர்த்து, படம்பிடித்து,பொதுவெளியில் ஒரு மகத்தான பிம்பத்தை உருவாக்கவேண்டும். அதற்கான முயற்சியே இந்த ‘800’. வெறும் யூகம் அல்ல இது. படத்தின் டிரெய்லர் பாருங்கள், புரியும். போர்ச்சூழலில், யுத்த வன்முறைகளுக்கு மத்தியில் வளர்ந்து சாதனையாளனாக பரிமாணம் பெறும் ஒரு வீரனின் கதையை அதில் பார்க்கலாம். இலங்கையில் யாருக்கும், யாருக்கும் யுத்தம் நடந்தது? அமெரிக்காவுக்கும், வியட்நாமுக்குமா? புலிளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் தானே? யுத்த வன்முறைகள் நிகழ்த்தியவர்கள் என்று யாரை இந்தப்படத்தில் சுட்டிக்காட்டப்போகிறீர்கள்? புலிகளையா, இலங்கை ராணுவத்தையா? இருவரில் யார் ‘சமாதானப்புறாக்கள்’ என்று முரளிதரனே பல பேட்டிகளில் விளக்கியிருக்கிறார். இந்தப் படம் யாரை உயர்த்திப்பிடிப்பதற்காக, யாரை  அவதூறு செய்வதற்காக என்று இப்போது புரிந்திருக்கும். சரிதானே?



லாபம் தருமா மண்டி?



ல்லாம் சரி. எப்படிச் சிக்கினார் விஜய் சேதுபதி? தமிழ் திரையுலகத்தைப் பொறுத்தமட்டில், நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு தனித்த அடையாளம் உண்டு. அடித்தட்டு மக்களின் கஷ்டநஷ்டங்கள் அறிந்தவர். பொதுவுடமை சித்தாந்தங்கள் நிறைந்தவர். சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்... இப்படியாக நிறைய. உண்மையில், விஜய் சேதுபதி அந்தளவுக்கு அடித்தட்டு படிநிலை மனிதர்களி்ன் வலி அறிந்தவரா என்பதிலேயே சந்தேகங்கள் நிறைய உண்டு.


நாளெல்லாம் உழைத்து வெறும் நூறும், ஆயிரமும் சம்பாதித்துத் திரும்பும் சிறு, குறு வியாபாரிகளின் வாழ்க்கையில் இன்றைக்கு மண்ணைப் போட்டுக் கொண்டிருப்பவை ஆன்லைன் வர்த்தகம் எனப்படுகிற மாபெரும் வர்த்தக வலைப்பின்னல். சிறு வியாபாரிகளை நேரடியாக பாதிக்கும் ஆன்லைன் டிரேடிங் நடவடிக்கைகளுக்கு தடை கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சாதாரண வியாபாரிகளின் தலையில் நேரடியாகவே கைவைக்கும் ‘மண்டி’ என்கிற ஆன்லைன் டிரேடிங் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘‘இந்த ஆப்பை உங்க மொபைல்ல டவுன்லோடு பண்ணுங்க... லாபம் அள்ளுங்க...’’ என்று ‘மண்டி’ அப்ளிகேஷனின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தூதராக வலம் வந்தவர் தான் விஜய் சேதுபதி. மாநிலம் முழுவதுமுள்ள வியாபாரிகள், வர்த்தக அமைப்புகள் கொந்தளித்து, விஜய் சேதுபதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்தளவுக்கு ‘அடித்தட்டு மக்களின் வலி’ அறிந்தவர் விஜய் சேதுபதி.


இமேஜ் பில்டப் பண்ணலாமா?

கவே, அவரைப் பொறுத்தளவில், ‘800’ படத்தின் நாயகனாக ஒப்பந்தமானது, அறியாமல் நடந்த ஒரு சம்பவமாக இருக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அறியாமல் நடக்கிற தவறுகள் மன்னிப்புக்கு உகந்தவை. ‘800’ திரைப்பட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக விஜய் சேதுபதி அறிவித்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. மகிழ்ச்சி. இந்த உலகத்தின் முன்பாக, தனது பெயரும், வாழ்க்கையும் எப்படி மதிக்கப்பட வேண்டும் என்ற பார்வையை கட்டமைக்க ஒவ்வொரு தனிநபருக்கும் உரிமை உண்டு. ஒரு நடிகராக மட்டுமே இந்த உலகம் பார்த்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டால்... ‘800’ மட்டுமல்ல, இதுபோல இன்னும் நிறைய வாய்ப்புகளை ஏற்கலாம். அது, வெளிநபர் தலையிட முடியாத தனிநபர் உரிமை. ஆனால், நடிகர் என்ற வரையறை கடந்து, நல்ல மனிதனாகவும் மதிக்கப்பட வேண்டுமானால்... செயல்களை தீர ஆலோசித்தும், விளைவுகளை உத்தேசித்தும் மேற்கொள்வதே சிறப்பு. ஏனென்றால், செயல்களை மட்டுமே இந்த உலகம் வெகு காலத்துக்கு நினைவில் கொண்டிருக்கும்.


சபாஷ் சங்கக்கரா...!


தே கிரிக்கெட்டில் இருந்து, அதே இலங்கை அணியில் இருந்து ஒரு உதாரணத்துடன் கட்டுரையை முடிவுக்குக் கொண்டு வரலாம். முத்தையா முரளிதரன் சுழலில் கலக்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக (இந்தியாவின் டோனி போல) மிரட்டிக் கொண்டிருந்தவர் குமாரா சங்கக்கரா. ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கி, பல சாதனைகள் படைத்தவர். 2018ம் ஆண்டு, மே 18 - முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தன்று இவர் பதிவிட்டிருந்த ஒரு ட்விட்... இன்றளவுக்கும் நினைவுகூரப்படுகிறது.



‘‘எ
ங்கள் இழப்புகளை மட்டுமல்ல, மற்றவர்களின் வலியையும் இதயம் திறந்து உணர்ந்து கொள்வதற்கான ஒரு நாள் இது...’’ என்று பொருள்படும்படியான அவரது ட்விட்டர் பதிவு, இன்றைக்கும் பேசுபொருளாக இருக்கிறது. ‘800’ படத்தில் நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதியின் செயலும் கூட ட்விட்டரில் டிரெண்ட் ஆகியிருக்கிறது. இப்போது சொல்லுங்கள், நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் விஜய் சேதுபதி? முரளிதரனாகவா.... குமாரா சங்கக்கராவாகவா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


6 கருத்துகள்:

  1. நிஜத்தை மாற்ற விஜய் சேதுபதி மட்டுமல்ல வேறு எந்த நடிகர்களும் முன்வரக்கூடாது..... ஒருவேளை முன்வந்தால் அவர்களை புறக்கணிக்க தமிழர்கள் முன் வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. தமிழர்களின் வலியையும் உணர்வுகளையும் இதயத்தில் அறைகிறது

    பதிலளிநீக்கு
  3. படித்தேன்... பல தகவல்களை அறிந்தேன்... சூப்பர் சார்... ��������������

    முத்தையா முரளிதரன் மனைவி
    தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்...

    அதாவது மனைவி பெயரில் அவரே எடுக்கும் படம்... விஜய் சேதுபதிக்கு உள்ள மார்க்கெட்டை பயன்படுத்தி இலங்கை ,தமிழகம் உட்பட எல்லா ஏரியாக்களிலும் லாபத்தோடு, ராஜபக்சேக்களின் மூலமும் கோடிகளை பெற்று விக்கெட்டில் மட்டுமல்ல கோடியிலும் 800 யை
    தொட முயற்சிக்கிறார் போல...

    தமிழகத்தில் எழும் எதிர்ப்புக்குப் பின் விஜய் சேதுபதி... இந்த படத்தில் இருந்து விலகுவதாகவும், ஆனால் முத்தையா முரளிதரன் கம்பெனிக்கு வேறு படம் நடித்துக் கொடுப்பதாகவும் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது...

    அடித்தட்டு மக்களின் வலியை அறிந்தவர், ஈழத் தமிழர்களின் உணர்வை மட்டும் அறியாமல் அட்வான்ஸ் வாங்கி விட்டார் போல...

    நாம் சங்கக்கராக்கள் சார்...������

    பதிலளிநீக்கு
  4. பணம் எனும் மாயை அனைத்தையும் காவு வாங்கும் வல்லமை கொண்டது...

    பதிலளிநீக்கு
  5. படித்தேன்... பல தகவல்களை அறிந்தேன்... சூப்பர் சார்... 👍🏻👏🏻🤝🏻💐

    முத்தையா முரளிதரன் மனைவி
    தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்...

    அதாவது மனைவி பெயரில் அவரே எடுக்கும் படம்... விஜய் சேதுபதிக்கு உள்ள மார்க்கெட்டை பயன்படுத்தி இலங்கை ,தமிழகம் உட்பட எல்லா ஏரியாக்களிலும் லாபத்தோடு, ராஜபக்சேக்களின் மூலமும் கோடிகளை பெற்று விக்கெட்டில் மட்டுமல்ல கோடியிலும் 800 யை
    தொட முயற்சிக்கிறார் போல...

    தமிழகத்தில் எழும் எதிர்ப்புக்குப் பின் விஜய் சேதுபதி... இந்த படத்தில் இருந்து விலகுவதாகவும், ஆனால் முத்தையா முரளிதரன் கம்பெனிக்கு வேறு படம் நடித்துக் கொடுப்பதாகவும் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது...

    அடித்தட்டு மக்களின் வலியை அறிந்தவர், ஈழத் தமிழர்களின் உணர்வை மட்டும் அறியாமல் அட்வான்ஸ் வாங்கி விட்டார் போல...

    நாம் சங்கக்கராக்கள் சார்...🤝🏻💓

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...