வெள்ளி, 17 ஏப்ரல், 2020

இரு பாட்டில்கள்...

டந்து முடிந்த விஷயங்களை வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை எப்போதாவது அசை போட்டுப் பார்க்கும் போது, ‘அந்த ஒரு தவறை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால்...’ என்கிற நம் கடந்தகால அசட்டுத்தனத்தின் மீதான கோபம் தவிர்க்கமுடியாதது. எனக்கும் அப்படி ஒரு கோபம் இருக்கிறது. என் வாழ்வின் மீது படிந்த தீரா களங்கத்துக்குக் காரணமாக இருந்தவை... இரு பாட்டில்கள். யெஸ்! நீங்கள் நினைப்பது சரிதான். இரு மது பாட்டில்கள்.
நான் ஒரு பத்திரிகையாளன் என்பதால் (நீங்கள் தினமும் காபியுடன் படிக்கிற முன்னணி நாளிதழில் தலைமை நிருபர்) இங்கு சொல்லப் போகிற சம்பவத்தில் நேரடியாக எந்த இடத்தையோ, எவரின் பெயரையோ குறிப்பிடப் போவதில்லை. அந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்களின் மீது மக்கள் இன்றைக்கும் வைத்திருக்கிற அபிமானத்தை, நம்பிக்கையை பொதுவெளியில் நாசம் செய்ய நான் விரும்பவில்லை. யாராக இருக்கும் என்று நீங்களாக யூகித்துக் கொள்ளலாம். தப்பில்லை!

ரைட். அந்த இரு மது பாட்டில்கள்...

ஜனவரி 3ம் தேதி மாலையில், வழக்கமான செய்திகளை கொடுத்து விட்டு, அலுவலகத்தில் இருந்து சற்று முன்னதாகவே கிளம்பிக் கொண்டிருந்தபோது, இன்டர்காமில் எடிட்டர் குணாவிடம் இருந்து அழைப்பு வந்தது. கம்ப்யூட்டரின் இயக்கத்தை முற்றாக அணைத்து விட்டு, எடிட்டர் அறைக்குள் நுழைந்தேன். அப்போதுதான் வடிவாக்கம் செய்யப்பட்டிருந்த கட்டுரை பக்கமென்றை கணினி திரையில் சரி பார்த்துக் கொண்டிருந்த குணா, என்னைப் பார்த்ததும் திரும்பினார்.

‘‘உட்காரு ராஜன். நீ அவசரமா கிளம்புறது தெரியும். இருந்தாலும், ஒரு தகவல். இப்பத்தான் வந்துச்சு. சுனில்தேவ் வந்திருக்கார் தெரியுமா...?’’

சுனில்தேவ்.... இண்டியன் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர். 1980களில் இருந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய, உலக கிரிக்கெட்டின் தவிர்க்கமுடியாத வீரர். பவுண்டரி, சிக்ஸர் என்று பேட்டிங் அனல் பறக்கும். அவர் வீசும் ஸ்விங் பந்துகளுக்கு உலகின் பெரிய, பெரிய  பேட்ஸ்மென்களே திணறுவார்கள். எளிதாக ஏமாந்து எட்ஜில் கேட்ச் கொடுத்து வெளியேறுவார்கள். ‘‘சுனில்தேவ் களத்தில் இருக்கிறார் என்றால் கொஞ்சம் உஷாராக இருப்பேன்..’’ என்று அந்தக் காலத்து சூப்பர் கேப்டன்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், ஆலன்பார்டர் போன்றவர்களே பேட்டி கொடுத்திருக்கிறார்கள். இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து நிறைய கப் ஜெயித்துக் கொடுத்தவர். இந்தக் கால இளம் வீரர்கள் பலரும் கிரிக்கெட்டுக்கு வருவதற்கு இன்ஸ்ப்ரேஷனாக இருந்தவர்.

‘‘தெரியும் குணா. சுனில்தேவ் ஒரு பர்சனல் வேலையா சென்னை வந்திருக்கார். இன்னிக்கு நைட் டிரினிட்டில தங்குறார். நாளை காலை 7 மணி பிளைட்டில் திருவனந்தபுரம் போறார். ஆரம்ப காலத்தில ஸ்போர்ட்ஸ் ரிப்போர்ட்டரா இருந்தவனாச்சே... எனக்கும் தகவல் வந்திச்சு...’’

‘‘உனக்கு தகவல் வந்திருக்கும்னு எனக்கு தெரியும். மேட்டர் அதில்லை. இன்னிக்கு நைட் எட்டுல இருந்து 9 மணி வரைக்கும் அவர் அப்பாயின்ட்மென்ட் கிடைச்சிருக்கு. போயிட்டு வாயேன். ஸ்பெஷலா ஏதாவது கிடைச்சா... நாளைக்கு எக்ஸ்க்ளூசிவா ஒரு  மேட்டர் பண்ணலாமே...? வேற எந்த மீடியாவுக்கும் தெரியாது. உனக்கு வசதிப்படுமானு யோசிச்சிக்கோ...’’

குணாவும், நானும் பத்திரிகை துறையில் ஆரம்பகாலத்து நண்பர்கள். எடிட்டர், தலைமை நிருபர் என்கிற வரையறைகள் கடந்து பழகுகிறவர்கள். சிறிய தயக்கத்துக்குப் பிறகு தலையசைத்தேன். ‘‘ஓகே குணா. நாளை சுனில்தேவ் இன்டர்வியூவோட வர்றேன்...’’.

***


ரவு 8 மணி.
டிரினிட்டி ரிஷப்ஷனில் அமர்ந்து பேப்பர் புரட்டிக் கொண்டிருந்த போது, ‘‘மிஸ்டர் ராஜன்...’’ என்று ரிஷப்ஷனிஸ்ட் குரல். ‘‘ரூம் நம்பர் 434 Aவில் இருந்து உங்களுக்கு அழைப்பு. ப்ளீஸ்...’’ என்றார். அறை எண் 434ல் கதவு திறந்ததும் மிக உற்சாக முகத்துடன் வரவேற்றார் சுனில்தேவ். உலக கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத ஆளுமையாக பத்தாண்டுகளுக்கும் மேலாக வலம் வந்தவர்.

‘‘வெல்கம் மிஸ்டர் ராஜன். உங்களை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. என்னோட டெபுட் டெஸ்ட் இங்க சேப்பாக்ல தான் நடந்தது. மேட்ச் முடிஞ்சதும் என்னைய இன்டர்வியூ எடுத்து, மறுநாள் பெரிசா கவரேஜ் பண்ணுனிங்க. நல்லா ஞாபகம் இருக்கு. சேப்பாக்... மை ஃபேவரிட். ஓ... எத்தனை வருஷம் ஆச்சு. வெல்கம்...’’ சுனில்தேவ் பழைய நினைவுகளுடன் வரவேற்றார்.


ம்பிரதாய பேச்சுகள் முடிந்ததும், ரெக்கார்டரை ஆன் செய்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு உரையாடலைத் துவக்கினேன். கடந்தகால, நிகழ்கால கிரிக்கெட் பற்றி விரிவான உரையாடல்.

‘‘விராட், ரோஹித்கிட்ட இருக்கிற கன்சிஸ்டன்சி ஹர்திக்கிட்ட இல்லை. அதான் அவரோட பிராப்ளம். அதை சரி பண்ணிட்டா டீம்ல அவரோட ப்ளேஸ் கன்பார்ம் ஆகிடும்...’’ என்றார்.

‘‘உலக கிரிக்கெட்ல உங்க காலத்து ப்ளேயர்ஸ்க்கும், இப்ப இருக்கிற ப்ளேயர்ஸ்க்கும் என்ன வித்தியாசம் பார்க்கிறீங்க...?’’

‘‘அப்ப ஐபிஎல் இல்லை. கிரிக்கெட்டை நாங்க ரசிச்சு விளையாடுனோம். இப்ப ஐபிஎல் இருக்கு. பேட்டில்பீல்ட்ல நிற்கிற மாதிரி டென்ஷன், ஸ்ட்ரெஸ். பாருங்க... டெஸ்ட் மேட்ச்க்கு டிமாண்ட் போச்சு. டெஸ்ட் மேட்ச் மேல் மக்களுக்கு பழைய கிரேஸ் திரும்புறதுக்கு ஐசிசி ஏதாவது பண்ணனும்...’’

‘‘இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் உறவு தொடரணும்னு சோயப் அக்தர் வேண்டுகோள் விடுத்திருக்காரே...?’’

‘‘இதுல கவர்மென்ட் தான் முடிவெடுக்க முடியும். அப்றம்... சோயப் அக்தர்... ஹி இஸ் எ அன்சங் ஹீரோ. பாகிஸ்தான் பவுலர்ஸ்ல இம்ரான், வாசிம் அக்ரமுக்குப் பிறகு அக்தரோட பவுலிங் ஸ்டைல் எனக்கு பிடிக்கும். பேஸ்... அந்த வேகத்தை குறைச்சு, அக்யூரஸில கான்சன்ட்ரேட் பண்ணியிருந்தா இன்னும் நிறைய சாதிச்சிருப்பார்...’’

‘‘இண்டியன் டீம்க்கு சச்சினை பேட்டிங் கோச்சா நியமிச்சா நல்லா இருக்கும் இல்லையா? நீங்க கேப்டனா இருக்கும்போதுதான அவர் டீம்ல் வந்தார்?’’

‘‘நோ. அவரோட டெபுட் டெஸ்ட்டுக்கு ஸ்ரீகாந்த் கேப்டன். அது பாகிஸ்தான் டூர். கராச்சி டெஸ்ட்ல அறிமுகம் ஆனார். சச்சின் பற்றி எனக்கு ஒரு விஷயம் சொல்லணும். 90 ரன் கிராஸ் பண்ணிட்டார்னா டென்ஷன் ஆகிடுவார். அதுவரைக்கும் ரிலாக்ஸா பவுண்டரி, சிக்ஸ் அடிச்சவர், அதுக்கப்புறம் டிஃபன்ஸ் மோடுக்கு மாறிடுவார். பார்த்திங்கன்னா நிறைய மேட்ச்ல 90ஸ்ல அவுட் ஆகியிருப்பார். இப்படி விளையாடாத. உன்னோட இயல்பான கேம் ஆடுனு நிறைய அட்வைஸ் பண்ணியிருக்கேன். 90 ரன்னுக்குப் பிறகும் அவர் ரிலாக்ஸ் கேம் ஆடியிருந்தா... இன்டர்நேஷனல் மேட்ச்சஸ்ல இன்னும் கூடுதலா 20 செஞ்சுரியாவது அடிச்சிருப்பார்...’’

ச்சின், சவுரவ் தொடங்கி, ரோஜர் பின்னி, மதன்லால், விவியன் ரிச்சர்ட்ஸ், மால்கம் மார்ஷல், ஜாகிர் அப்பாஸ், அரவிந்த டிசில்வா, ஸ்டீவ் வாக், டீன் ஜோன்ஸ்.... என்று உலக கிரிகெட்டை கட்டி ஆண்ட ஜாம்பவான்கள் குறித்த எங்கள் உரையாடல், திட்டமிட்ட நேரத்தைக் கடந்தும் தொடர்ந்தது.

ன்னை மறந்து பேசிக் கொண்டே இருந்த சுனில்தேவ் இன்டர்காம் சத்தம் கேட்டப் பிறகே இயல்புக்குத் திரும்பினார். போன் எடுத்து பேசி விட்டு என்னிடம் வந்தவர், ‘‘ஓல்ட் மெமரிஸ் பேசினதுல நேரம் போனதே தெரியலை பாருங்க மிஸ்டர் ராஜன். டைம் இப்ப 9.30. டின்னர் முடிச்சிட்டு கிளம்புங்க...’’ என்றார்.

‘‘நோ சார். நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. காலைல பிளைட் பிடிக்கணும். நான் வீட்டுக்குக் கிளம்புறேன்...’’ என்று எழுந்தவனை, தோளைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்தார். ‘‘நீங்க என்னோட ஸ்பெஷல் கெஸ்ட். டின்னர் ஆர்டர் பண்ணிட்டேன். கான்டினென்டல்...’’ என்றவர்... எழுந்து பிரிட்ஜ் திறந்து அதை எடுத்தார். ரெமி மார்ட்டின் லூயிஸ் IX மது பாட்டில்.

வரே இரு கண்ணாடி கோப்பைகள் எடுத்து, பாட்டில் திறந்து ஆளுக்கு கொஞ்சமாக கோப்பைகளை நிறைந்தார். எனது தயக்கத்தைப் பார்த்து, தோளில் தட்டினார். ‘‘ஒரு சீனியர் ஜர்னலிஸ்ட். என்ன தயக்கம்?’’ என்ற சுனில்தேவ், ஒரு கோப்பையை எடுத்து எனது கையில் கொடுத்தார். மற்றொன்றை எடுத்துக் கொண்டு ‘த கப் தட் சீர்ஸ்...’ என்று தட்டி விட்டு ஒரே மூச்சில் குடித்து விட்டு கீழே வைத்தார்.

சிறிதுநேரத்தில் உணவு வந்தது. ரெமி மார்ட்டினுடன், கான்டினென்டல் உணவு வகைகளும்  இணைந்து கொள்ள எங்கள் பேச்சு இன்னும் தீவிரமாக தொடர்ந்தது. சட்டையில் ஒழுகிய மார்ட்டினை துடைத்த படியே, நான் தவிர்த்திருக்க வேண்டிய அந்தக் கேள்வியை கேட்டேன்...

‘‘உங்க காலத்து ப்ளேயர்ஸ் எல்லார் பத்தியும் பேசிட்டோம். உங்க கோ ப்ளேயர், கேப்டன், உலகமே வியந்த லெஜண்டரி பேட்ஸ்மேன்... மனோகர் வடேகர் பற்றி நீங்க எதுவுமே ஷேர் பண்ணலையே...? ஆக்சுவலி, அந்த காலங்களில் உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பெரிய ஈகோ க்ளாஷ் இருந்ததில்லை?  யார் பெரிய ஆளுனு...?’’ எனக்குள் பரவியிருந்த மார்ட்டின் கேள்வி எழுப்பியது.

தேவ் கூட, மார்ட்டின் பிடியில் இருந்திருக்கலாம். டவல் எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டார். சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு என்னை நிமிர்ந்து பார்த்தவர், சிறிய தடுமாற்றத்துடன் எழுந்து எனக்கு பின்னால் வந்தார். எனது தோள்களை அழுத்தமாக பிடித்தபடியே... ‘‘ரொம்ப காலமா என் மனசை உறுத்துற ஒரு குற்ற உணர்ச்சி... மனோகர் வடேகர். அவன் வெரி பெஸ்ட் பேட்ஸ்மேன். சச்சின், லாரா... எல்லாருக்கும் அவன்தான் குரு. அவனுக்கு நான் செஞ்ச தப்பு மறக்க முடியாதது மிஸ்டர் ராஜன்,’’ என்றார்.

நான் திரும்பி சுனில்தேவை பார்த்தேன்.

‘‘இதுவரைக்கு யார்கிட்டயும் ஷேர் பண்ணாத விஷயம் இது மிஸ்டர் ராஜன். என் மனசில பெரிய பாரமா இருக்கிற இந்த விஷயத்தை இறக்கிடறதுக்கு இதுதான் சரியான டைம். ப்ளிஸ், இது பப்ளிஷ் பண்ணிடவேண்டாம். இது ரொம்ப பர்சனல். ஆஃப் தி ரெக்கார்ட்...’’

‘‘கண்டிப்பாக தேவ் சார்.’’


‘‘நீங்க ஒரு சீனியர் ஜர்னலிஸ்ட். அந்தகாலத்தில எனக்கும், மனோகர் வடேகருக்கும் இடையே கிரவுண்டுக்கு உள்ளேயும், வெளியேயும் நடந்த மோதல்கள் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அவன் மும்பை காரன். மும்பை லாபிக்கு முன்னால நான் அவனை சமாளிக்க முடியலை. இண்டியன் டீமுக்கு அவன்தான் கேப்டன். தனிப்பட்ட முறையில் அவன் பேட்டிங்கில் மாஸ்டர். ஆனா, கேப்டனா பெரிசா சாதிக்கலை. 1981ம் வருஷம்னு நினைக்கிறேன். நம்ம டீம் நியூசிலாந்து டூர் கிளம்புற டைம்...’’

‘‘அப்போதான நீங்க ஃபர்ஸ்ட் டைம் கேப்டனா ஆனிங்க?’’

‘‘யெஸ். டீம் ப்ராக்டீஸ் நடந்தபோது மனோகருக்கு முழங்கால்ல காயம். அந்த சீரிஸ்ல விளையாடற அளவுக்கு அவனுக்கு ஃபிட்னஸ் இல்லைனு மெடிக்கல் ரிப்போர்ட் வந்திச்சு. யாருமே எதிர்பார்க்கலை. 23 வயசில, என்னை அந்த டூர்க்கு கேப்டனா போர்டுல இருந்து அறிவிச்சாங்க...’’


‘‘அது ரொம்ப சக்சஸ்ஃபுல் டூர். டெஸ்ட் சீரிஸ் டிரா. ஒன்டே நாம ஜெயிச்சோம். மேன் ஆப் தி சீரிஸ் எனக்கு கிடைச்சது. அதுக்கப்புறம் மனோகர் டீமுக்கு திரும்பவும் பேட்ஸ்மேனா மட்டும் தான் வரமுடிஞ்சது.  கேப்டனா நிறைய இன்டர்நேஷனல் கப் ஜெயிச்சேன். பிரைம் மினிஸ்டர் கூட பாராட்டுனாங்க. என்னோட அசுர வளர்ச்சி பொறுக்க முடியாம மும்பை லாபி நிறைய சிக்கல் பண்ணுனாங்க. ஆனா, என்னோ சக்சஸ் கிராப் அவங்க லாபியை நொறுக்கீருச்சு. உங்க மீடியாவுக்கு நல்லா தெரியும். 1983ல வெஸ்ட் இண்டீஸ் டீம் இந்தியா வர்ற வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் இருந்தது...’’

‘‘ஞாபகம் இருக்கு சார். அந்த சீரிஸ் வாஷ் அவுட். ஆனா, நீங்க பேட்டிங், பவுலிங் ரெண்டுமே அசத்துனிங்க...’’

‘‘உண்மைதான். சரியான சந்தர்ப்பத்துக்கு காத்திருந்த மும்பை லாபி, அந்த தோல்வியை பயன்படுத்திகிட்டாங்க. கேப்டன்ஷிப்ல இருந்து என்னைய தூக்கிட்டு திரும்பவும் மனோகரை கொண்டு வந்தாங்க. மனோகர் வந்த கொஞ்ச நாள்லயே, ஃபிட்னஸ் இல்லைனு சொல்லி என்னைய டீமை விட்டே வெளியே அனுப்பிட்டான். ரஞ்சி மேட்ச் விளையாடி ஃபிட்னஸ் ஃபுரூப் பண்ணாத்தான் திரும்பவும் டீம்ல இடம்னு சொன்னாங்க... எனக்கான சந்தர்ப்பத்துக்காக பொறுமையா காத்திருந்தேன். அப்பத்தான் 1985 வேர்ல்ட் கப், நம்ம இந்தியாவில நடந்தது. ஹோம் கிரவுண்டுங்கிறதால பெரிய எதிர்பார்ப்போட நம்ம டீம் அவன் தலைமையில இறங்கிச்சு...’’

‘‘ஆனா, அன்ஃபார்ச்சுனேட்லி, நியூசிலாந்துக்கு எதிரான அந்த செமிஃபைனல்... வெற்றிக்கு ரொம்ப பக்கத்துல வந்து தோத்திட்டோம். நீங்க கடைசி வரை போராடுனிங்க. வெற்றிக்கு 4 ரன் இருக்கும்போது, அன்ஃபார்ச்சுனேட் ரன்-அவுட். இந்தியாவோட வேர்ல்ட் கப் கனவு நொறுங்கிடுச்சு. நாடே சோகமா ஆன அந்த நாளை, கிரிக்கெட் ரசிகர்கள் யாருமே மறக்க முடியதில்லை சார்....?’’


சில நிமிடங்கள் சுனில்தேவ் எதுவுமே பேசவில்லை. அவர் எதுவோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பிறகு மெதுவாக என் முகத்தைப் பார்த்தார். ‘‘அந்த ரன்-அவுட்... அது அன்ஃபார்ச்சுனேட் இல்லை மிஸ்டர் ராஜன். அது ப்ரி ப்ளாண்ட். யெஸ்! திட்டமிட்ட சம்பவம்..’’

‘‘சா......ர்ர்ர்ர்’’ ரெமி மார்ட்டினையும் மீறி நான் ஜெர்க் ஆனேன்.

‘‘யெஸ் மிஸ்டர் ராஜன். ஒரு எண்ட்ல விக்கெட் போய்கிட்டே இருந்தாலும் மறு எண்ட்ல நான் அழகா செட்டிலாகி விளையாடிகிட்டு இருந்தேன். லாஸ்ட் ஓவர். ஆறு பால்ல வெறும் 4 ரன் வெற்றிக்கு தேவை. நான் அப்ப இருந்த ஃபார்ம்க்கு, ரொம்ப ஈஸியாக ஒரு பவுண்டரி தூக்கீருக்க முடியும். ஆனா...’’

நான் அவரது முகத்தையே பார்த்தேன்.

‘‘என்னை ஓரம்கட்டிய மனோகர் வடேகரை பழிவாங்க அதை ஒரு வாய்ப்பாக பார்த்தேன் ராஜன். பைனலுக்கு நுழைஞ்சா, இங்கிலாந்தை ஜெயிச்சு கப்பை ஈஸியா நம்ம டீம் ஜெயிச்சிருக்கும். வேர்ல்ட் கப் ஜெயிச்சா மனோகர் புகழ் எங்கேயோ போயிடும். எனக்குள்ள இருந்த சாத்தான் கண்ணு முழிச்சிகிட்டான். தேவையே இல்லாம ரெண்டாவது ரன் ஓட டிரை பண்ணி ரன் அவுட் ஆனேன். செமி பைனல்ஸ்ல நாம தோத்திட்டோம். நாடே அப்செட். அவன்கிட்ட இருந்து கேப்டன்ஸி போச்சு. கொஞ்ச நாள்ல அவனும் ரிடையர்ட் ஆகிட்டான்...’’
***

‘‘சுனில்தேவ் இன்டர்வியூ செய்தில ஸ்பெஷலா ஒண்ணும் இல்லை ராஜன். அது ஸ்போர்ட்ஸ் பேஜ்க்கு போதும். ஆனா, நீ கௌம்பு. உனக்கு ஒரு ஸ்பெஷல் பார்ட்டி தர்றேன்...’’ எடிட்டர் குணா அவனது காரில் என்னை ஏற்றிக் கொண்டு ஈசிஆர் சாலையின் பரபரப்புகளுக்கு ஒதுங்கி இருந்த ஒரு ரெஸ்டாரண்ட்டின் ஏசி பாருக்கு என்னை அழைத்துச் சென்றான்.

ங்கள் நாளிதழின் சர்க்குலேஷன், விளம்பர வருவாய், செய்திகளின் தரம் குறித்த பேச்சுகளுக்கு இடையே அந்த இரண்டாவது பாட்டிலில் பாதி முடிந்திருந்தது.

‘‘பரபரப்பான செய்தி பண்ணுனா தான் ராஜன் சேல்ஸ்ல நிக்கமுடியும். தினமும் ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட் பண்ணிடனும். உன் டீம்ல எல்லார்கிட்டயும் சொல்லீடு. இப்பக்கூட... சுனில்தேவ் இன்டர்வியூல ஏதாவது ஸ்பெஷல் கிடைக்கும்னு நெனச்சித்தான் உன்னை அனுப்புனேன். அமையலை...’’

நான் சிரித்தேன். ‘‘அமைஞ்சது குணா. அது மட்டும் பிரிண்ட்ல வந்தா... நாடே தீப்பிடிச்சிக்கும். சேல்ஸ் பிச்சிக்கிடும். ஆனா, அது ஆஃப் தி ரிக்கார்ட்...’’

‘‘என்னடா சொல்ற?’’

சுனில்தேவ் சொன்ன அந்த ரன்-அவுட் மேட்டரை சொன்னேன். ‘‘நம்ப முடியலையே...’’ என்றான்.

‘‘நம்பமுடியாதுதான். இதோ பாரு ரெக்கார்ட் வெச்சிருக்கேன். நீயே கேளு...’’ செல்போனை இயக்கினேன். ‘‘ச்சே... பேட்டரி டவுன். ஸ்விட்ச் ஆப் ஆகிடும். சுனில்தேவ் இன்டர்வியூ ரெக்கார்டை வாட்ஸ்அப்ல உனக்கு ஷேர் பண்றேன்... ம்... டவுன்லோடு பண்ணி அந்த 82வதுநிமிஷத்தில அவன் பேசுறதை கேட்டுப் பாரு. அப்பத்தான் நம்புவ. ஆனா, ரொம்பப் பர்சனல்னு கெஞ்சிட்டான்பா. அதான், நியூஸ் பண்ணலை...’’
***

றுநாள்... காலையி்ல கண் விழித்தவன், என் நாளிதழின் முதல் பக்கத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனேன்...

மனோகரை பழிவாங்க, வேண்டுமென்றே ரன்-அவுட் ஆனேன்...
- -  - -  -
1985 உலகக்கோப்பை தோல்விக்கு என்ன காரணம்?
- - -  -  -
35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பகீர்’ உண்மைகளை வெளியிட்டார் சுனில்தேவ்
- - -  - -

னது ரத்தம் உறைந்து போனது. சுனில்தேவ், வடேகருக்கு செய்ததைக் காட்டிலும் இது மிகப்பெரிய துரோகம். பாய்ந்து செல்போனை எடுத்தேன். குணாவுக்கு அடித்தேன்...

‘‘நீ போன் பண்ணுவனு தெரியும்...’’

‘‘குணா இது தப்பு. ஆஃப் தி ரெக்கார்ட் மேட்டரை நீ ஃபர்ஸ்ட் பேஜ்ல போட்டிருக்க...’’

‘‘நீ இன்னும் போஸ்டர் பார்க்கலையே? போஸ்டரும் உன் மேட்டர் தான்’’

‘‘இது துரோகம் குணா. சுனில்தேவ் போன் பண்ணி கேட்டா என்ன பதில் சொல்லமுடியும்?’’


‘‘கண்டிப்பா போன் பண்ணுவான். நம்ம பேப்பர் நியூஸை காட்டி, நார்த் இண்டியன் நியூஸ் சானல்ஸ் எல்லாம் லைவ் போட்டுகிட்டிருக்கான். டிவி போட்டுப் பாரு. ஓவர் நைட்ல உன்னோட நியூஸ் செம டிரெண்டிங். நம்ம பேப்பர் ஒரு கடையில கூட இல்லை. எல்லாம் சோல்ட் அவுட். இதுக்குத்தாண்டா அந்த அப்பாயிண்ட்மென்ட்டுக்கு உன்னை அனுப்பினேன். இது தாங்கும். இந்த ஒரு நியூஸ் போதும்டா...’’

‘‘ச்சீ... நிறுத்துடா ராஸ்கல். இது பெரிய அயோக்கியத்தனம். கொஞ்சநேரத்தில சுனில்தேவ் நோட்டீஸ் அனுப்பப்போறான்...’’

‘‘அனுப்பட்டும். நாம ஒண்ணும் பொய் எழுதலையே? அவனே பேசுன ரெக்கார்ட் உன்கிட்டயும் இருக்கு. என்கிட்டயும் இருக்கு. ஒண்ணு இல்லை... பத்து நோட்டீஸ் கூட அனுப்பட்டும்...’’

நான் அப்படியே செயலிழந்து அமர்ந்தேன். இத்தனை ஆண்டுகள் பத்திரிகை துறையில் நான் சம்பாதித்த நல்ல பெயர் நொறுங்கி தூள், தூளாக சிதறிப் போயிருந்தது. என் பெயரைக் கெடுத்த இரு பாட்டில்கள். சுனில்தேவ் கொடுத்த முதல் பாட்டில்... அதை நான் தவிர்த்திருந்தால், இந்த ரகசியம் அவனுக்குள்ளேயே இருந்து தொலைத்திருக்கும். சரி... குணா இரண்டாவது பாட்டிலுக்கு அழைத்த போதாவது, மறுத்திருக்கலாம். சுனில்தேவின் ரகசியம் எனக்குள் புதைந்திருக்கும்...


துவும் செய்யத் தோன்றாமல், அப்படியே படுக்கையில் தளர்ந்து சாய்ந்தேன்.

ரைட். இந்தக் கதை இந்த இடத்தில் முடிந்து விட்டதாக நீங்கள் நினைக்கலாம். நானும் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், இல்லை.
***


ரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள்...

‘‘இன்னைக்கு சாயங்காலம் ராயல் லீ மெரிடீயன்ல சினிமா ஃபங்ஷன். சீஃப் கெஸ்ட் யாரு தெரியுமா? உன் ஆளு சுனில்தேவ் தான். போயிட்டு வர்றியா?’’ குணா இன்டர்காமில் கேட்டான்.

‘‘செருப்பால அடிப்பான். ஆளை விடுப்பா...’’ போனை துண்டித்தேன்.

ன்றுமாலை 6.20க்கு எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. ‘‘ராயல் லீ மெரீடியன் ரிஷப்ஷன்ல இருந்து பேசுறோம். கிரிக்கெட்டர் சுனில்தேவ் உங்ககிட்ட பேச ஆசைப்படறார். லைன்லஇருங்க. கனெக்ட் பண்றோம்...’’

ருதயம் துடி துடிக்க நான் காத்திருக்க... 18வது வினாடியில் லைன் கனெக்ட் செய்யப்பட்டு, ‘‘ஹலோ மிஸ்டர் ராஜன்...’’ என்ற சுனில்தேவ் குரல் கேட்டது.

‘‘சார்... ஸாரி சார். ஸாரி... என்ன நடந்துச்சுன்னா...’’ நான் திக்கித் திணறுவதற்குள் மறுமுனையில் சுனில்தேவின் குரல் சிரிப்புடன் என்னைத் தடுத்தது.


‘‘ஆஃப் தி ரெக்கார்டா நான் கொடுத்த தகவலை பப்ளிஷ் பண்ணது தப்புத்தான். ஆனா, அதிலயும் ஒரு பெரிய நல்ல விஷயம் நடந்திருச்சி மிஸ்டர் ராஜன். நியூஸ் சேனல்ல அந்த மேட்டரை பார்த்துட்டு மனோகர் வடேகர் உடனே ட்விட்டர்ல ரிப்ளை பண்ணிட்டான். ‘சுனில்தேவ் ரொம்ப பெருந்தன்மையான ஆள். நான் கேப்டனா இருந்த டைம்ல அவரை நிறைய இன்சல்ட் பண்ணியிருக்கேன். டீமை விட்டே தூக்கியடிச்சிருக்கேன். அதை எல்லாம் மனசில வெச்சுக்காம, என்னைய உயர்த்திப் பேசறதுக்காக, சுனில்தேவ் தன்னை தாழ்த்திகிட்டு பேட்டி கொடுத்திருக்கார். அந்த மேட்ச்சை நான் பல தடவை வீடியோ பார்த்திருக்கேன். அது அன்ஃபார்ச்சுனேட் ரன்-அவுட் தான். சுனில் தப்பு பண்ணலை. நான் தான் அவருக்கு நிறைய துரோகம் பண்ணியிருக்கேன். அதுக்காக, இப்போ மன்னிப்புக் கேட்டுக்கிறேன்...’ அப்படினு ட்விட் பண்ணிட்டான். மட்டுமில்லை... என்னைய அவன் வீட்டுக்குக் கூப்பிட்டு ஒரு விருந்தும் வெச்சிட்டான். கிரிக்கெட் காலத்துக்கு அப்புறம் எங்களுக்குள்ள இருந்த கோபங்கள் எல்லாமே முடிஞ்சு, இப்ப நாங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்....’’

சுனில்தேவ் சொல்லிக் கொண்டே இருக்க... நம்பமுடியாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘‘இந்த விஷயத்தை உங்ககிட்ட நேர்ல சொல்லணும்னு காத்திருந்தேன். இன்னைக்கு ஃபங்ஷன் நீங்க வந்திருந்தா சொல்லியிருப்பேன்....’’ என்றவர், சில வினாடி இடைவெளி விட்டு, ‘‘அப்படியே நீங்க வந்திருந்து, நான் உங்ககிட்ட சொல்லியிருந்தாலும் கூட, கண்டிப்பா... பார்ட்டிக்கு இன்வைட் பண்ணியிருக்க மாட்டேன்...’’ - இணைப்பு துண்டிக்கப்பட்டது!

(குறிப்பு: எந்த நிகழ்வையோ, தனிநபரையோ, சம்பவத்தையோ இந்தக் கதை குறிப்பிடவில்லை. இது முழுக்க, முழுக்க கற்பனை கதை மட்டுமே. வாசிப்பை சுவாரஸ்யப்படுத்தும் நோக்கில் சில நிஜ கிரிக்கெட் வீரர்கள், நகரங்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தவிர.... கதையின் அனைத்து வரிகளும் கற்பனை மட்டுமே.)

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

9 கருத்துகள்:

  1. பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது

    பதிலளிநீக்கு
  2. கற்பனையாகவே எடுத்துக் கொள்கிறேன்... ஆனால்...

    அவரவர் மனம் கேட்கும் கேள்விகளுக்கும், கொடுக்கும் தண்டனைகளுக்கும் நிகர் எதுவுமில்லை...

    பதிலளிநீக்கு
  3. ஊரடங்கில் பூனைக்குட்டியார் பாட்டிகளை கவிழ்த்து கவிழிந்து கிடப்பார் என்று எண்ணினால் பாட்டில் சிறுகதை. ஒரு பாட்டிலுக்கே வழியில்லாமல் இங்கே குடிமகன்கள்.நீரோ இரு பாட்டில்கள் அசத்தும் அசத்தும். விரைவில் பூனைக்குட்டியார் சிறுகதை தொகுப்பு வழங்குவார் என தெரிகிறது. வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  4. நல்ல கற்பனை. ஸ்வாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. குடி...குடியை மட்டுமல்ல... நட்பை...உழைப்பை...நம்பிக்கையை... என எல்லாவற்றையும் கெடுக்கும்... மதுபாட்டில்கள் மூலமே மரமண்டைகளுக்கு நல்லா உரைக்கும்படி பாடம் நடத்தியுள்ளீர்கள் சார்...

    பதிலளிநீக்கு
  6. செம ஸ்டோரி சார் 🔥🔥🔥🔥 Short Film பண்ணா சூப்பரா இருக்கும்.

    ஆனால் இப்ப இருக்குறவனுங்களுக்கு நிஷாகந்தி, இருபாட்டில்கள் மாதிரியான கதைகளின் அருமை புரியாது.

    பெஸ்ட் சஸ்பென்ஸ் ஸ்டோரி சார் 😍😍

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  8. கற்பனை அருமை

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...