வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

ஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்!

சில ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் வேடிக்கையாக இருக்கும். சென்னைக்கு மிக, மிக, மிக அருகே... என்று ஒரு கொக்கி போட்டு கவனத்தை இழுப்பார்கள். அடுத்த ஷாட்டில், திருப்பரங்குன்றத்தை காட்டி அங்கு பிளாட் போட்டிருக்கிறோம் என்று கலர் கொடி கட்டிய இடத்தைக் காட்டுவார்கள். விசாரித்தால், ‘ஜஸ்ட் ட்வென்டி மினிட்ஸ் ஸார் - விமானம் பிடித்து வந்தால்...’ என்று சொல்லக்கூடும். ஆனால், பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்... நாம் இங்கு பேசப்போவது ரியல் எஸ்டேட் மேட்டர் பற்றி அல்ல. ஆதியிலேயே நம்மாட்கள் பிளாட் போடக் கற்றுக் கொண்ட / கற்றுக் கொடுத்த விதம் பற்றி!

பிரம்ம்மாண்டமாய்...!

வ்வொரு ஏப்ரலிலும் பலப்பல ஆயிரம் இளைஞர்கள் இன்ஜினியர்களாக உருமாற்றம் பெற்று கல்லூரிகளில் இருந்து வெளியே வருகிறார்கள். இவர்களில் எத்தனை பேரின் மூளைக்குள் இன்ஜினியரிங் அறிவு மெய்யாகவே நிரம்பியிருக்கிறது? சதுரமாக கட்ட வேண்டிய கட்டடத்தை, செவ்வக வடிவில் இழுத்துக் கட்டி, பக்கத்துப் பிளாட் காரரிடம் பஞ்சாயத்துப் பேச வைத்த பொறியியல் புலிகளும் ஃபீல்டில் இருக்கிறார்கள். இவர்களுடன் ஒப்பிடுகையில், பழந்தமிழர்களின் பொறியியல் அறிவு... பிரம்ம்ம்ம்ம்மாண்டமானது. தஞ்சை பெரிய கோயிலும், அதற்கு கொஞ்சம் தள்ளி இருக்கிற கல்லணையும் மிகச் சிறிய உதாரணங்கள். கல்லணையின் கட்டுமான வீச்சைக் கண்டு இன்றளவும் ஆங்கில இன்ஜினியர்கள் பிரமித்துப் போய் தண்ணி குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


‘‘ஆழம் கண்டறிய முடியாத மணற்படுகைகளின் மீது அடித்தளம் (Foundation / Basement) அமைப்பது எப்படி என்ற அறிவியல் தொழில்நுட்பத்தை நாங்கள் தமிழர்களிடம் கற்றுக் கொண்டோம். தமிழர்களிடம் கற்றுக் கொண்ட இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே மிகப் பெரிய பாலங்களையும், அணைக்கட்டுகளையும், தண்ணீருக்கு அடியில் உருவாக்கிய கட்டுமானங்களையும் நாங்கள் கட்டி முடித்தோம். எங்களது மகத்தான கட்டுமான சாதனைகளுக்குப் பின்புலமாக இருந்த தமிழ் மக்களின் தொழில்நுட்ப அறிவுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்...’’ - கண்களில் நீர்ப்பெருக்கெடுக்க இப்படி மெய்சிலிர்த்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பவர் சர் ஆர்தர் தாமஸ் காட்டன் (Sir Cotton once told, after analysing the Kallanai Dam and the basement of the dam, they learned how to build basement in place full of bed of sand - நன்றி விக்கி).

கிராண்ட் அணைக்கட் எங்க இருக்கு?


முதல் மரியாதை சிவாஜி போல சர் ஆர்தர் காட்டன் (Sir Arthur Thomas Cotton, மே 15, 1803 – ஜூலை 24, 1899) உடல் சிலிர்த்துப் போய் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க என்ன பின்னணி? அவர் பற்றி இரண்டே இரண்டு பாரா அளவுக்கு தெரிந்து கொள்ளலாம்.
‘இந்திய நீர்ப்பாசனத் துறையின் தந்தை’ என்று சரித்திரத்தில் சார் பெயர் பதிவாகியிருக்கிறது. காரணம் இல்லாமல் இல்லை. பிரிட்டீஷ் இன்ஜினியரான இவர், தனது வாழ்நாள் முழுவதையும் இந்தியாவில் நீர்ப்பாசனத் திட்டங்களையும், கால்வாய், அணைகள் அமைத்துத் தருவதற்கும் அர்ப்பணித்தவர். கோதாவரி  நதியில் அணை கட்ட அவருக்கு ஒப்புதல் கிட்டவில்லை (1878ம் ஆண்டு). அணையின் நீர்ப்போக்கை முழுவதுமாக ஆய்வு செய்து லண்டனுக்கு அறிக்கை அனுப்பினார். ‘‘மை லார்ட்... கோதாவரி நதியில், வெள்ள காலங்களில் ஒரு நாளில் ஓடுகிற நீரின் அளவு, லண்டன் தேம்ஸ் நதியில் ஒரு ஆண்டு முழுவதும் ஓடுகிற தண்ணீரின் அளவுக்கு சமம்... (My Lord, one day's flow in the Godavari river during high floods is equal to one whole year's flow in the Thames of London...)’’ - உடனே கிடைத்தது கிரீன் சிக்னல். தென்னிந்தியாவில் இன்னமும் இவர் பெயர் சொல்லிக் கொண்டிருக்கும் அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

காவிரி பாசனப்பகுதிக்கு தனிப்பொறுப்பாளராக ஆங்கில அரசு நியமித்த போதுதான், கல்லணையை பார்க்கிற வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த அணையின் உறுதியான அடித்தளம், கட்டுமானத் தொழில்நுட்பங்கள் கண்டு பிரமித்துப் போன காட்டன், அதுதொடர்பாக விரிவாக ஆராய்ந்தார். ஆய்வு, அவரை வேறொரு உலகுக்கு கூட்டிச் சென்றது. பழந்தமிழரின் படு நுட்பமான கட்டுமான தொழில்நுட்ப அறிவு, அணை கட்டும் திறன், பாசன மேலாண்மைகளை அறிந்து மெய்சிலிர்த்துப் போன அவர், பிரிட்டீஷ் ஊடகங்களில் நிறையக் கட்டுரைகள் எழுதி, நமது இணையற்ற அறிவுத்திறனை உலகமறிய வைத்தார். மட்டுமல்ல... கல்லணைக்கு ‘தி கிராண்ட் அணைக்கட் (The Grand Anicut)’ என்று பெயர் சூட்டி உலகமறிய வைத்தார். இன்றைய தேதிக்கு, ‘தி கிராண்ட் அணைக்கட்’ என்றால்... ‘அது எங்க இருக்கு?’ என்று நம்ம ஸ்டூடண்ட்ஸ் கேட்கலாம். லண்டனில் இன்ஜினியரிங் படிக்கிற ஒரு வெள்ளைக்கார பையனோ, பொண்ணோ அப்படிக் கேட்கமாட்டார்கள். ‘‘The Grand Anicut (Kallanai) is an ancient dam, which is built (in running water) across the Kaveri river in Thanjavur District in the state of Tamil Nadu in South India...’’ என்று அழகாகச் சொல்வார்கள்.

செம கூட்டணி!

ந்த தொழில்நுட்ப அறிவு, மருத மண்ணில் தோன்றியது. காட்டை அழித்து நாடாக்கி, அங்கு சிறந்த கட்டுமானங்களுடன் கூடிய குடியிருப்புகள் கட்டி, ஒழுங்கான வடிவமைப்புகளுடன் நகரங்களாக உருவாக்கியவர்கள் மருத நிலத்து மைனர்கள்.

‘‘காடு கொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கி...’’

- மருத காரர்கள் காடுகளை அழித்து குளங்கள், பாசனப்பரப்புகளை உருவாக்கி, நகரங்களை வடிவமைத்ததை பட்டினப்பாலை (283 - 284) இப்படி குறிப்பிடுகிறது. ஓடும் ஆற்றின் குறுக்கே அணை கட்டி, அதன் போக்கு திருப்பி பாசனத்துக்குப் பயன்படுத்தினார்கள். மழை நீரை சேமித்து வைப்பதற்காக செயற்கையான குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் வெட்டினார்கள். மண் வளமும், நீர்வளமும் கூட்டணி சேர்ந்து கொள்ள... நெல் விவசாயம் பிரமாதமாக இருந்தது. மனித நாகரிகம் அதன் அடுத்தகட்டத்துக்குச் சென்றது. அரசு என்கிற ஒரு முறையான ஒரு அமைப்பு மருத மண்ணில் பிறந்தது.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...