வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

அனுஷ்கா... இலையா; தளிரா?

ச்சின், ரோஹித், கம்பீர்... வர்ஷா, தீப்தி, அனுஷ்கா - ஒரு காலத்தில் மும்பை எக்ஸ்பிரஸில் ஏறி வடக்காக பயணம் செய்கிற போதுதான் இதுமாதிரி பெயர்களெல்லாம் காதில் படும். இப்படியும் பெயரா என ஆச்சர்யமாக இருக்கும். அப்புறம் கிரிக்கெட்டும், சினிமாவும் இந்தப் பெயர்களை அறிமுகம் செய்தன. இப்போதெல்லாம், ‘ஏலெய் சச்சின்... இங்கன வால!’ என்று நம்ம வயக்காடு, வரப்புகளில் கூட கூவி அழைக்கப்படும் பெயர்களாக இவை மாறி விட்டன. ஏன்? வடக்கில் இருந்து இறக்குமதி செய்கிற அளவுக்கு தமிழில் பெயர்களுக்கு எப்படி ஏற்பட்டது பற்றாக்குறை?


டெக்னாலஜி தெரியுமா?


ல்லணைக்கு ரசிகர் மன்றம் திறந்த காட்டன் சார் பற்றி கடந்தவாரம் படித்த நண்பர்கள் சிலர் ஆச்சர்யப்பட்டு மிஸ்டு கால் கொடுத்தனர். இன்னும் சிலர், ‘இதெல்லாம் தெரிஞ்ச விஷயங்ணா... காட்டன் அண்ணா பார்த்து பிரமிக்கிற அளவுக்கு நம்மாளுங்க எப்படி அணையக் கட்டுனாங்க? அந்த டெக்னாலஜிய சொல்லுங்ணா!’’ என்று வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியிருந்தார்கள். உண்மையிலேயே அது பிரமாண்டமான டெக்னாலஜிதான்.

ன்றைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வாங்குவதற்கு கிடையாய் கிடக்கிறோம். அது கிடைத்தாலே அகமகிழ்ந்து போகிறோம். அப்படியே டைம் மெஷின் ஏறி ஒரு 3 ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் போய் காவிரியைப் பார்த்தால்... நல்ல மழைகாலத்தில் (இருதய பலஹீனமானவர்கள் உஷார்!) வினாடிக்கு சுமாராக 2 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் கரைபுரண்டு பாய்ந்து கொண்டிருக்கும். பார்க்கவே... பாகுபலி போல படு பிரமாண்டமாக இருக்கும். இதை தடுத்து எப்படி அணை கட்டினார்கள்?

கல் + களிமண் = பிரமாண்டம்!

தைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஒரு கேள்வி. கடற்கரையில் கால் புதைத்து நின்றிருக்கிறீர்கள்தானே? ஒரு அலை வந்து கால்களைத் தழுவிச் சென்றதும்... நமது காலுக்குக் கீழே பிடிமானம் சிறிது தளர்வதை கவனித்திருக்கலாம். காலுக்கு கீழே இருந்த மணலை அந்த அலை திரும்பிப் போகும் போது நகர்த்திக் கொண்டு போய் விட்டது. நமது கால்கள் சில சென்டி மீட்டர் ஆழத்துக்கு கீழே இறங்கி விட்டது. இல்லையா? இதுதாங்க சீக்ரெட் ஆப் கல்லணை டெக்னாலஜி. இன்றைக்கு இருக்கிறது போல நவீன சிமென்ட், நம்பி கட்டுகிற கம்பிகள் இல்லாமல், காரை எதுவும் பூசாமல் வெறும் கற்களை மட்டும் ஒன்றன் மேல் ஒன்றாக இட்டு நிரப்பி கட்டப்பட்டது கல்லணை.

மிகப்பெரிய பாறைகளை வெட்டிக் கொண்டு வந்து, ஆற்றின் போக்கில் குறுக்காகப் போட்டார்கள். நீர் அரிப்பு காரணமாக அந்தப் பாறை மணலில் ஆழப்பதிந்து இறங்கியது. அதன் மேலாக இன்னும் ஒரு கல். அதற்கு மேல் இன்னும் ஒரு கல். இப்படி கல் மேல் கல் போட்டு மேலும், மேலும் கீழே இறக்கி இயற்கையாக ஒரு சுவர் உருவாக்கினார்கள். ஒரு கல்லுக்கும், மற்றதுக்கும் நடுவே, தண்ணீரில் கரையாத களிமண் கொண்டு லேசாக ஒட்டு வேலை செய்யப்பட்டது. ஓடும் ஆற்றின் மணல் படுகை மீது உறுதியாக வேர் பதித்து அரண் போல எழுந்து நின்ற கருங்கல் பாறைகளை அடித்தளமாகக் கொண்டு கல்லணை எழுப்பப்பட்டது. வெறும் கல்லும், களிமண்ணும் கொண்ட கூட்டணி, காவிரியின் அடாத நீர்ப்போக்கை பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டுக்குள் வைத்திருந்தது ஆச்சர்யமாக இல்லை? இந்த விஷயம் பார்த்தே காட்டன் பிரமித்தார். இதே பாணியில் கோதாவரி ஆற்றின் குறுக்காக 1852ல் தாளேஸ்வரம் அணையை (Dowleswaram Barrage) அவர் கட்டினார்.

இலை என்றால்... வாலிபம்!


வேளாண், நீர்ப்பாசன தொழில்நுட்பங்களில் இன்றைக்கும் உலகின் முன்னோடிகள் என்றால் அது நிச்சயம் நமது படா தாத்தாஸ்களே. பாய்கிற ஆறுகளின் பிரதான நீர்வரத்து பகுதியில் இருந்து எத்தனை எத்தனை கால்வாய்கள் கிளை பரப்பிச் செல்லும் பாருங்கள்.
எத்தனை குளம், கண்மாய்கள்? மொத்தம் 48 வகையான நீர்நிலைகள் நமது மண்ணில் இருந்ததை இந்தத் தொடரில் இதற்கு முன்பாக பார்த்திருக்கிறோம். தண்ணீர் தாராளமாகப் புழங்கியதால் ஓஹோவென்று வளம் கொழித்தது. ‘ஏணி எய்தா நீள் நெடு மார்பின்...’ என்று வேளாண் பெருங்குடிகளின் இல்லத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது பெரும்பாணாற்றுப்படை (245). தானியம் சேமிக்கிற குதிர்கள் அவ்ளோ உயரமாம். இருப்பு திருப்தியாக இருந்ததால் கலைகளும்,. இலக்கியங்களும் செழித்து வளர்ந்தன. நமது சங்க இலக்கியங்களில் பெரும்பகுதி மேட் இன் மருத நிலமாக்கும்!
பிறக்கிற குழந்தைக்குக் கூட வடபுலத்தில் இருந்து பெயர் இறக்குமதி செய்கிற அவலத்தை சொல்லி முதல் பாராவில் வருத்தப்பட்டோம். ஆனால், நம்மாட்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல... செடி, கொடி, பறவை, விலங்கு, பூ, காய், இலை என்று ஒன்று விடாமல் தமிழில் பெயர் சூட்டி அழைத்திருப்பதை இலக்கியங்களில் பார்க்கமுடிகிறது. செடி, பூக்களுக்கு, அவற்றின் உருவம், பருவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டியிருக்கிறார்கள். மரத்தடியில் உதிர்ந்து கிடக்கிற இலைக்கு, அதன் பருவத்துக்கு ஏற்ப எத்தனை பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்களேன். குழந்தை பருவம் என்றால் கொழுந்து. இளவட்டப் பருவத்தில் தளிர். வாலிப பருவம் என்றால் இலை. வயதானால் பழுப்பு. இப்பவோ... அப்பவோ இறுதிக்காலம் என்றால் சருகு.

பஸ் கிளம்பியாச்சு


ருத நிலத்தில் இருந்து பஸ் ஏறுகிற நேரம் வந்தாச்சு. உப்புக் காற்றடிக்கிற ஒரு இடத்தை நோக்கி நமது பயணம் துவங்குகிறது. அடுத்த இடம் சென்றிறங்கும் முன் நாம் சிந்திக்க சில விஷயங்கள் இருக்கின்றன. நமது இலக்கியங்கள் காட்டுகிற வளமான மருத நிலம், பாலையாக இன்றைக்கு மாறிக் கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறோமா? நீராதாரங்கள் நிர்மூலமாக்கப்பட்டு, பயிர் வளர்ந்த, நம் உயிர் வளர்த்த நிலமெல்லாம், கான்க்ரீட் கட்டடமில்லையா வளர்ந்திருக்கிறது? தமிழர் வகுத்த திணைகளுள் மருதம் என்கிற திணை அதன் அபாயக்கட்டத்தில் இருப்பதை யார் உணர்ந்திருக்கிறார்கள்? ஒரு விவசாய நிலப்பரப்பு விற்பனை செய்யப்படுகிறது என்றால், அந்த நிலத்தில் அடுத்தும் வேளாண் தொழில் மட்டுமே நடக்கவேண்டும் என்று நமது பக்கத்து மாநிலங்களில் சட்டம் இருக்கிறது. அப்படி ஒரு நிலைப்பாடு இங்கும் வரும் சூழலில்... மருதம் மீண்டும் செழிக்கும்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...