சனி, 10 செப்டம்பர், 2016

குலிங்கம்... புலிங்கம்... காணவே காணோமே?

‘தெக்கால போன வெள்ளி, வடக்க வந்தா மழை...’ - கிராமத்துப் பக்கம் போகும் போது, காது வளர்த்த பாட்டி, வேப்ப மரத்தடியில் வெற்றிலை இடித்துக் கொண்டே சொல்லக் கேட்டிருக்கலாம். நிஜமாகவே மழையும் கொட்டித் தீர்க்கும். சென்னை, கல்லூரிச் சாலையில் இருக்கிற Meteorology டிபார்ட்மென்ட் காரர்கள் செய்கிற வேலையை, மரத்தடியில் குத்த வைத்த படி பாட்டி செய்கிறார். பாட்டி கல்லூரிக்குப் போய் கட்டடிக்காமல் Natural Science எனப்படுகிற Astronomy படித்திருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. எனில், அவருக்கு எப்படி இத்தனை அசாத்தியமான சயின்ஸ் நாலெட்ஜ்?


கொக்கரக்கோ கோழி!

டீன் ஏஜ் கோழிகளிடமும், அவற்றின் பாய் பிரெண்டுகளான சேவல் அண்ணன்களிடமும் ஒரு அதிசயிக்கத்தக்க டேலண்ட் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அவை செல்போனில் அலாரம் செட் பண்ணி வைக்காமலேயே அதிகாலையில் மிகச் சரியாக கண் விழிக்கின்றன. அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ‘கொக்கர... கொக்கர... க்கூ....வ்வ்வ்’ என்று ராகமாக கூவி நமது தூக்கத்தையும் டிஸ்டர்ப் பண்ணுகின்றன. இல்லையா?

ந்தக் கோழிகளுக்கு நமது தமிழில் வேறு என்னென்ன பெயர்கள் இருக்கின்றன? குக்குடம், ஆண்டலைப்புள், வாரணம், குருகு, காலாயுதம் - கோழியை கோழி என்றும் கூப்பிடலாம். மேற்சொன்ன இந்த ஐந்து பேர் சொல்லியும் கூப்பிடலாம். தமிழ் தெரிந்த கோழியாக இருந்தால் ‘கெக்.. கெக்... கெக்...’ என்று விக்கல் குரல் எழுப்பி மகிழ்ச்சி தெரிவிக்கும். கானாங்கோழி (அல்லது கூவாங்கோழி - Rails, Rallidae) என்று ஒரு குரூப் இருக்கிறது. உண்மையில் கோழி குடும்பத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. அண்டார்டிகா தவிர்த்து, உலகின் சகல பாகங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகிற இந்த பறவைகள் பற்றியும் சங்க இலக்கியங்களில் குறிப்பு இருக்கிறது. கலிங்கம், கம்புள் என்று இந்தப் பறவைகளை பெயர் சூட்டி அழைக்கிறது நம்மொழி.

செல்போன் ‘சிட்டு’

கோழி பார்த்தாச்சு. குருவியும் பார்த்திடலாம். பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு வரைக்கும் சிட்டுக்குருவிகளை நிறைய பார்த்திருக்கலாம். ஷாக் அடிக்குமோ என்றெல்லாம் துளி பயமில்லாமல் பத்து, இருபதாக செட்டு சேர்ந்து மின் கம்பிகளில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும். மின் கம்பிகளில் பாய்கிற மின்சாரத்திடம் இருந்து கூட தப்பிய இந்த ‘சிட்டு’களை செல்போன் கதிர் வீச்சு சிதைத்து விட்டதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பார்க்க அரிதாகி வருகிற இந்த சிட்டுக்குருவிகளுக்கும் தமிழில் அழகழகான பெயர்கள் இருக்கின்றன. சடகம், குலிங்கம், புலிங்கம் - இதெல்லாம் சிட்டுக்குருவிகளை குறிக்கிற தமிழ் பெயர்கள்.

பாட்டி சொல்லை தட்டாதே!

பாட்டி மேட்டருக்கு வருவோம். அவருக்கு எப்படி கிடைத்தது அந்த அறிவியல் அறிவு என்கிற முதல் பாரா கேள்விக்கு ஆன்ஸர் யோசித்து வைத்திருக்கிறீர்களா? சங்க இலக்கியங்களில் சயின்ஸ் கொட்டிக் கிடக்குது என்று இந்தத் தொடரில் தொடர்ச்சியாக நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். பாட்டி மகளிர் கல்லூரிக்குச் சென்றோ அல்லது அஞ்சல் வழியிலோ பி.ஏ. லிட்டரேச்சர் படிக்கா விட்டாலும் கூட, செவி வழியாக அவர் இலக்கிய அறிவு நிரம்பப் பெற்றிருக்கலாம். அதன் வெளிப்பாடே ‘‘தெக்கால போன வெள்ளி, வடக்க வந்தா மழை...’’.



சூரியக் குடும்பத்தில் சூரியனில் இருந்து இரண்டாவதாக இருக்கிற வெள்ளிக் கோள் (Venus) பற்றி நமது சங்க இலக்கியங்கள் நிறைய, நிறைய தகவல்கள் சொல்லுகின்றன. வெள்ளி கோளின் நகர்வு, நமது பூமியின் பருவநிலை மாற்றங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது பற்றி சங்க இலக்கியப் பாடல்கள் முன்னறிவிப்பு செய்திருக்கின்றன. அது பற்றி, இந்தத் தொடரின் 83, 85வது வாரங்களில் ரொம்பவே அதிகமாகப் பார்த்தாச்சு. நம்ம தாத்தாவுக்கும், தாத்தாவுக்கும், தாத்தாக்கள் விதைப்பு, அறுப்பு, நல்லது, கெட்டது என்று சகல விஷயங்களையும் வானம் பார்த்து, மழை வருமா, வெயிலடிக்குமா என்று தெரிந்து கொண்டுதான் செய்திருக்கிறார்கள் என்று 83வது வாரத்தில் பார்த்தோம். ஞாபகம் இருக்குதானே?

மழை பிச்சிக்கும்?!

கோள்களின் நகர்வுகளுக்கு ஏற்ப, தங்கள் தினசரி வாழ்வியல் திட்டமிடல்களை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
* இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (புறம் 35:7)
* தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும் (புறம் 117:2)

- இந்த புறநானூற்று பாடல் வரிகளின் எளிமையான மொழிபெயர்ப்பே தெக்கால போன வெள்ளி, வடக்க வந்தா மழை. ‘வெள்ளி வடக்க வருதப்பா... ராவுல மழ கொட்டுமாக்கும்...’ என்று வானம் பார்த்து வானிலை கணிக்கிற அறிவை, ஆற்றலை நமது முன்னோர்களுக்கு இலக்கியங்களே கொடுத்திருக்கின்றன. பாட்டியின் சயின்ஸ் அறிவுக்கு காரணம் இப்போ தெரியுதா?

வெள்ளிக்கோள் வடக்கு திசையில் நகர்ந்தால் மழை பிச்சிக்கும். தென் திசைக்குச் சென்றால் தண்ணீர் லாரிகளுக்கான டிமாண்ட் எகிறும் என புறநானூறு துவங்கி பதிற்றுப்பத்து, சிலம்பு என பல சங்க இலக்கியங்களிலும் பதிவு இருக்கிறது.

வரலாறு மறக்கலாமா?

ருமை சகோஸ்.... அறிவியல் என்பது நமது வாழ்வின் சகல நொடிகளிலும் பிணைந்திருப்பதை நவீன காலத்து விஞ்ஞானிகள் உறுதி செய்து எழுதுகிறார்கள். ஆனால், இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்கள், மிகப் பெரிய வாழ்வியல் அறிவியலையும் போகிற போக்கில், பாடல் வரிகளுக்குள் அடக்கித் தந்திருக்கின்றன. நமது இலக்கியங்களைப் புரட்டும் போது அதில் அறிவியல் இருக்கிறது, மருத்துவம் இருக்கிறது. நவீன கணிதம் இருக்கிறது. இல்லாத விஷயங்கள்... தேடினாலும் இல்லை. அதனால்தான் நம்மொழியை... செம்மொழி என்று, உயர்தனிச் செம்மொழி என்று உலகம் வியக்கிறது. அந்தப் பெருமையை ஒரு கணமேனும் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா...? அல்லது, வரலாறு மறந்தவனின் வாழ்க்கை போல வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...