சனி, 3 செப்டம்பர், 2016

பொன் கிடைக்கும்... புதன் கிடைக்குமா?

‘உஷ்ஷ்ஷ்... அப்பாடா.... என்னா வெயில் அடிக்குதுபா. ஆம்லேட் போடுறதுக்கு அடுப்பே தேவையில்ல போல இருக்கே!’ என்று சட்டை காலரை பின்னுக்கு இழுத்து விட்டபடியே வியர்வை விட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இயற்கையை கொஞ்சமும் சளைக்காமல், முடிந்தளவுக்கு சீரழித்துக் கொண்டே....யிருந்தால், அடிக்காதா பின்னே...? ஆனாலும் நண்பர்களே... வெயிலோ, மழையோ, காற்றோ, பனியோ... தங்களுக்கான ஒழுங்கமைப்பை இன்றைக்கு வரைக்கும் துளி மீறாமல் மிகச் சரியாக வந்து அட்டென்டன்ஸ் போட்டுக் கொண்டிருக்கின்றன. பாருங்கள். மே மாதத்தில் பனி வாட்டியிருக்கிறதா, இல்லை... டிசம்பர் மாதத்தில்தான் அக்கினி அடித்திருக்கிறதா? என்னதான் மரங்களை வெட்டினாலும், மலைகளை பெயர்த்தாலும், இயற்கை இன்னும் மகா பொறுமை காப்பதன் அடையாளங்கள் இவை.


புந்தி, மகரம், மிதுனம்:


ருவகாலங்களுக்கும், நமது சூரியக் குடும்பத்து மெம்பர்களுக்கும் (அதாங்க... கோள்கள்!) மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு என்கிறது Astronomy எனப்படுகிற இன்றைய natural science. ஆனால், ஆயிரம் + ஆயிரம் + ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நமது சங்க இலக்கியங்கள் இந்த ‘சம்பந்தத்தை’ தெள்ளத் தெளிவாக கோடிட்டுக் காட்டி விட்டன. நாம்தான் அதெல்லாம் தெரியாமல், சயின்ஸ் வாத்தியாரிடம் பிரம்படி வாங்கிய படியே, மெர்குரியையும், வீனஸையும் மனப்பாடம் செய்து மார்க் வாங்கியிருக்கிறோம்.

ன்றைக்கிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பரிபாடலில் இருந்து ஒரு செய்யுள் (கொஞ்சம் பெரிசுதான்... ஆனாலும்)
படித்துப் பாருங்கள். நிறைய்யய ஆச்சர்யம் அதில் இருக்கும்.

‘‘விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,

தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,

வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை

மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல்.’’

ந்தப் பாடலை எழுதிய நல்லந்துவனாரிடம் படித்துக் கொள்வதற்கு இன்றைய Meteorology டிபார்ட்மென்ட் காரர்களுக்கு நிறையப் பாடம் இருக்கிறது. பருவமழை எப்போது பெய்யும், பெய்வதற்கான வானியல் அமைப்புகள் என்னென்ன என்று இந்த பாடலில் தெளிவான முன்னறிவிப்பு இருக்கிறது. வெள்ளி, புந்தி, மிதுனம், மகரம் என்றெல்லாம் வார்த்தைகள் வருகிறதே... அவையெல்லாம் விண்ணில் நட்சத்திரம், கோள்களைக் குறிக்கிற சொற்கள்.

அடடே!

நாசாவில், இஸ்ரோவில் பணிபுரிகிறவர்கள் இந்த பாடலைப் படித்தார்களானால், ‘அடடே...’ என்று ஆச்சர்யப்படலாம். நமக்கு கொஞ்சம் குழப்பியடிக்கும். ஆனாலும், மேலோட்டமாகவாவது அர்த்தம் பார்த்து விடலாம்.


தாகப்பட்டது, விண்ணில் ஒளிபரப்பி நிற்கிற சந்திரனுடன் கார்த்திகை, திருவாதிரை, பரணி நட்சத்திரங்கள் சேருகிற நாட்கள்; வெள்ளி (சுக்கிரன்) ரிஷப ராசியில் (Zodiac) சேருகிற பொழுது, புந்தி (புதன் கோள் - Mercury) மிதுனத்தில் சேருகிற பொழுது; மகரம், கும்பம் ராசிகளுக்கு மேலே உள்ள மீனத்தை வியாழன் கோள் சேருகிற பொழுது... இப்படி இன்னும் எக்கச்சக்கமான பொழுதுகளை இந்த பாடல் விரிவாக சொல்கிறது. இந்தப் பொழுதுகளில் மழை ச்சும்மா பிச்சுக்குமாம். பொதுவாக பருவமழை காலம் துவங்குகிற நேரத்தில் வானவியல் கோள்கள், நட்சத்திரங்களின் அமைப்பை இந்தப் பாடல் விவரிக்கிறது.


ந்தப் பாட்டின் ஆறாவது வரியில் ‘புந்தி’ என்று ஒரு வார்த்தை வருகிறது கவனித்தீர்களா? அந்த ‘புந்தி’ என்பது, நாம் ஆங்கிலத்தில் மெர்குரி (Mercury) எனவும், தமிழில் இன்றைக்கு புதன் என்றும் அழைக்கிற கோள். சூரியக் குடும்பத்தில், சூரியனுக்கு பக்கத்தில் ஜம்மென்று அமர்ந்திருக்கிற பாக்கியம் பெற்றது. சார் தான் நம்பர் 1. அதற்கப்புறம் வெள்ளி (Venus), (நம்ம) பூமி எல்லாம் வரிசை கட்டி உட்கார்ந்திருக்கின்றன. பூமிக்கு பக்கத்தில் இருப்பதால், வெள்ளி கோளை நாம் அடிக்கடி வெறும் கண்ணால் பார்க்கிற வாய்ப்பு கிடைக்கிறது. சூரிய உதயத்துக்கு முன்பான அதிகாலையிலும், மறைந்தப் பிறகும் அடிவானில் வெள்ளிக் கோளை பார்த்திருப்போம். அதிகாலையில் நிலாவுக்கு அடுத்தபடியாக பிரகாசமாக ஒளி வீசுகிற இதை, விடிவெள்ளி என்று நம்மாட்கள் கூறக் கேட்டிருப்பீர்கள்.

செய்கூலி, சேதாரம்!

பூமிக்கு பக்கத்து வீடு என்பதால் வெள்ளியை வெறுங்கண்ணில் பார்த்து விடலாம். சங்க கால தமிழர்கள் கண்டுபிடித்து பேரும் வைத்து விட்டனர். சரி; அதற்கும் தள்ளி இருக்கிற புதன் கோளை அவர்கள் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடித்தார்கள் என்றால் எப்படி? ஆதாரம் இருக்கிறதா?

ருக்கிறது பாஸ். புதன் கோளை பூமியில் இருந்து நாம் வெறும் கண்ணில் பார்ப்பது லேசுப்பட்ட விஷயமல்ல. சூரிய சுற்றுவட்டப் பாதையில் கிழக்கு மற்றும் மேற்கு திசை நீட்சிகாலத்தின் போது மட்டுமே மிக அரிதாக புதன் கோள் நம் கண்ணில் தட்டுப்படும். இந்த இடத்தில் ஒரு பழமொழியை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன் சகோஸ். ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ - இந்தப் பழமொழியை பலமுறை, பல சந்தர்ப்பங்களில் நீங்கள் பயன்படுத்தியிருப்பீர்கள். அதென்ன பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது?

ந்தச் சொலவடைக்குள் இருக்கிறது மாபெரும் வானவியல் சீக்ரெட். இதில் குறிப்பிடப்படுகிற பொன் என்கிற சொல்லுக்கு, நீங்கள் செய்கூலி, சேதாரம் இல்லாமல் வாங்குகிற 22 கேரட் தங்கம் என்று அர்த்தமல்ல. பொன் என்கிற சொல் இங்கு வெள்ளிக் கோளை குறிக்கிறது (வெண்பொன் என்று வெள்ளிக் கோள் குறிப்பிடப்படுவதை மறக்கவேண்டாம்). வானத்தில் வெள்ளிக் கோள் காணக்கிடைத்தாலும், புதன் கோள் பார்க்கக் கிடைப்பது அரிதிலும், அரிது என்கிற விஞ்ஞான மேட்டரைத்தான் நம்ம மூத்த குடிகள், ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று ஜஸ்ட் லைக் தட் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...