புதன், 25 மே, 2016

மச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்!

துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட சரி பாதிக்கும் மேலாக மதுரையில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையே நிரம்ப இருக்கிறது. மக்கள் வந்து போவதும் கோயில்களை விட இவ்விடத்திலேயே அதிகம். எனில், மதுரையை டெம்பிள் சிட்டி என்பது சரியா; இல்லை டாஸ்மாக் சிட்டி என அழைப்பது சரியா? மதுரையை விடுங்கள்... ஒட்டுமொத்தமாக தமிழகமும் டாஸ்மாக் தேசமாக... குடிகாரர்களின் தேசமாக அல்லவா இன்றைக்கு இருக்கிறது?



து என்பது ஏதோ இன்றைக்கிருந்து, ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர்கள் கொண்டு வந்து இங்கு அறிமுகம் செய்த விசித்திர திரவம் அல்ல. அது ஆங்கிலேயர்களுக்கு முன்பாகவே இருந்தது - மிக, மிக முன்பாகவே. சங்க இலக்கியங்களைப் புரட்டிப் பார்க்கும் போது தேசம் ஆண்ட அரசன் துவங்கி, தெருவோரப் பாமரன் வரை அத்தனை பேரும் மது அருந்தியிருக்கிறார்கள். இலக்கியங்களில் ஆதாரம் இருக்கிறது. ஆனால், இன்றைக்கு நமது மக்கள் பயன்படுத்துகிற முறைக்கும், மதுவை அன்று அவர்கள் பயன்படுத்திய விதத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

ன்று மது இல்லாத இடம் எங்கே இருக்கிறது. பாருக்குள் பாருங்கள்... வகுப்பறைகளை மிஞ்சுகிற அளவுக்கு மாணவர்கள் அட்டென்டென்ஸ் அங்கே மிக அதிகம். பத்தாவது படிக்கிற மாணவன் கூட, மதுவுக்கு அடிமையாகிக் கிடக்கிற பேரவலத்தை டாஸ்மாக் பார்களின் இருள் சூழ்ந்த நாற்காலிச் சிதறல்களின் மையங்களில் காணமுடியும். மது நுழையாத இடமாக எதை நாம் இப்போது காட்டமுடியும்?

பாஸ் ஆனாலும் குடி - கொண்டாட்டமாம். பெயில் ஆனாலும் குடி - கவலை மறக்கவாம். நல்லதுக்கும் குடி; கெட்டதுக்கும் குடி. இன்பத்துக்கும் குடி; துன்பத்துக்கும் குடி. பிறப்புக்கும் குடி; இறப்புக்கும் குடி. லவ்வில் ஜெயித்தாலும் குடி; தோற்றாலும் குடி.

னித வாழ்வியலின் சகல அணுக்களிலும் நுழைந்து ஆக்கிரமித்திருக்கிறது மது. நான் மாணவனாக இருந்த காலத்தில், மன வருத்தம் மிக அதிகமிருந்த நாளில், வீட்டில் இருந்து கிளம்பி நேராக.... சினிமா தியேட்டருக்குச் சென்றேன். மூன்று மணிநேரம் முடிந்து திரும்புகையில் திரையில் நான் கண்ட வீர, தீர வெளிச்சச் சிதறல்கள் மனதில் இருந்த சோக அழுத்தத்தை அடியோடு அப்புறப்படுத்தியிருந்தது. இன்றைக்கு நிலைமை அப்படியா இருக்கிறது? ‘மனசு சரியில்லையா...? ஓபன் தி பாட்டில் மச்சி...’ என்பதுதானே இன்றைய மாணவர்கள் கண்டறிந்து வைத்திருக்கிற உடனடி நிவாரணி?

த்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்தன. அங்கு போவதற்கு பெரியவர்கள் கூட தயக்கப்படுகிற ஒரு சமூகச் சூழல் இருந்தது. இன்றைக்கு நிலைமை எப்படி இருக்கிறது? தெருவுக்கு தெரு பார்கள். குடியிருப்புப் பகுதியிலும் கூட டாஸ்மாக் கடைகள், பார்கள் கிளை பரப்பி செழித்து வளர்ந்திருக்கின்றன. பெண்களும், குழந்தைகளும் புழங்குகிற குடியிருப்புக்குள் பலசரக்குக் கடைகள் இருந்தால் அது நியாயம். பல ‘சரக்கு’ விற்கிற மதுக்கடை இருந்தால்... அது என்ன நியாயம்?

லகின் மூத்த குடி என்று இப்போது யாராவது நம்மை அழைத்தால்... மேலிருந்து கீழாக அவர்களை சந்தேகமாகவா இல்லையா பார்க்கத் தோன்றுகிறது.

ங்க இலக்கியங்களை எந்தப் பக்கத்தில் இருந்து புரட்டினாலும் மது இருக்கிறது என்று நான்கு பாராவுக்கு முன்பாக பார்த்தோமில்லையா? இப்போது போல பிராந்தி, விஸ்கி, ஜின், ரம், பீர் என்று அவர்கள் அதை பகுத்திருக்க வில்லை. மதுவுக்கு அவர்கள் வைத்திருந்த ஒரே பெயர் - கள். களித்திருத்தல், அதாவது ஜாலியாக இருத்தல். களித்தல் என்கிற வார்த்தையில் இருந்து கள் என்கிற சொல் வந்திருக்கலாம் என இலக்கியம் படித்தவர்கள் சொல்கிறார்கள். கள் என்றதும் பனை மரத்தில் இருந்து, தென்னை மரத்தில் இருந்து எடுப்பது மட்டும்தானே நமக்குத் தெரியும்? இது தவிரவும், டிசைன் டிசைனாக கள் தயாரிப்பதில் நமது முன்னோர்கள் எக்ஸ்பர்ட்டாக்கும்.

நெல், மூங்கில் அரிசி, தேன், பூக்கள், பழங்கள், செடிகள் என்று கிடைத்தது எல்லாம் பயன்படுத்தி கள் தயாரித்திருக்கிறார்கள். தென்னங்கள், பனங்கள் தவிர்த்து தேக்கள், தோப்பி, தேறல், பிழி, நறவு, நறும்பிழி என்று நிறைய பிராண்ட் இருந்திருக்கிறதாக்கும். நெல்லை பயன்படுத்தி தயாரித்த கள்ளுக்கு நறவு, தேன் மூலம் தயாரிக்கப்படுவது தேறல் என்றெல்லாம் பெயர் இருந்ததை தெரிந்து கொள்வதன் மூலம் ஜெனரல் நாலெட்ஜை நாம் அதிகரித்துக் கொள்ளலாம். இந்த கள் தயாரிப்பு ரெஸிபி சங்க இலக்கியங்களில் சூப்பராக விவரிக்கப்பட்டிருக்கிறது. டிவி சமையல் குறிப்பு போல தேவையான பொருட்கள், அது ஒரு தேக்கரண்டி, இது இரண்டு கிண்ணம் என்று ‘கிக்’காக சொல்லி வைத்திருக்கிறார்கள்.

னால், மக்கழே....
அதே சங்க இலக்கியங்கள், மது விலக்குக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு எத்தனை பெரிய பிரசாரம் செய்திருக்கின்றன எனத் தெரிந்தால்... ஆடிப் போவீர்கள் (சரக்கடிக்காமலேயே!). தொல்காப்பியத்துக்கு அடுத்தபடியாக, தமிழ் மொழிக்கு இலக்கண விளக்கம் அளிக்கும் நூலான நன்னூல் சூத்திரம் எழுதிய பவணந்தி முனிவர், ‘சரக்கடிக்கிறவர்கள், படிப்புக்கு லாயக்கில்லை’ என்று சாபம் கொடுக்கிறார். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை வலியுறுத்துகிற ஐந்து ஒழுக்கங்களில் (கள்ளுண்ணாமை, பொய் உரையாமை, கொலை செய்யாமை, களவு செய்யாமை, தீய நடத்தை இல்லாமை) முதலிடம் பிடித்து நிற்பது மது விலக்கே.

திருக்குறளைச் சொல்லி கட்டுரையை முடிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். பொருட்பாலில் 93வது அதிகாரம் கள்ளுண்ணாமை. இதில் இருக்கிற பத்து குறட்பாக்களும் பொட்டில் அடித்தது போல மதுவின் தீமையை மண்டைக்குள் புகுத்துகின்றன. அதை மட்டும் (நமது விளக்கவுரையுடன்) ஒரு எட்டு பார்த்து விட்டு கிளம்பலாமா?

குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

சதா போதையில் கிடக்கிற ஆசாமியைப் பார்த்து நாயும் அஞ்சாது. துளி மரியாதையும் கிடைக்காது.

குறள் 922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

நல்லவங்க சகவாசம் நமக்கெதுக்குன்னு முடிவெடுத்தவங்க மட்டும் டாஸ்மாக் கடைக்குப் போங்க.

குறள் 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

சரக்கடித்து சாக்கடையில் கிடக்கிறவனை பெற்ற தாய் கூட சகிக்க மாட்டாள். அப்புறம்... மற்றவர்கள் எல்லாம் வரிசையா வந்து முத்தமா கொடுப்பாங்க?

குறள் 924
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

உற்சாக பானம் உள்ளே போயிடுச்சினா, மவனே... வெக்கம், மானம் சூடு, சொரணை... இதெல்லாம் பஸ் புடிச்சி எஸ்கேப் ஆயிடும்.




குறள் 925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

பித்துப் பிடித்து தெருவில் விழுந்து கிடப்பதற்காக, பணம் செலவு செய்து பாட்டில் வாங்குவது மடத்தனம் ஆகாதா?

குறள் 926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மட்டையாகிக் கிடப்பதும் ஒன்றுதான்; மரணமடைந்து கிடப்பதும் ஒன்றுதான்.

குறள் 927
அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

ஏசி பாருக்குள் என்னதான் ரகசியமாக அடித்து விட்டு வந்தாலும், முகத்தைப் பார்த்ததும் குட்டு வெளிப்பட்டு விடும்.

குறள் 928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

நாலு ரவுண்டு ஏற்றிக் கொண்டு வெளியே வந்ததும், ‘நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்...’ என்றெல்லாம் ஓவர் பில்டப் கொடுக்கப்படாது; உலகம் நம்பாது!


குறள் 929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

தண்ணிவண்டி பார்ட்டிகளை திருத்திக் கரை சேர்ப்பது என்பது, தண்ணீருக்குள் முங்கித் தேடுவதற்கு தீப்பந்தம் எடுத்துச் செல்வதற்கு சமம்.

குறள் 930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

சாக்கடையில் விழுந்து கிடக்கிற சக குடிமகனைப் பார்த்தாவது, ‘நாமும் இப்படி கேவலப்படலாமா’ என்று திருந்த வேண்டாமா?

- உலகப் பொதுமறையான திருக்குறள், நம்மூர் குடிமகன்களை எப்படி பின்னி பெடலெடுத்திருக்கிறது பாருங்கள்... தெய்வப் புலவரின் வாக்கை கடைபிடித்து, மதுவுக்கு குட்பை இனியாவது சொல்லலாமா?

முடிப்பதற்கு முன்பாக...




க்களின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆறாவது முறையாக அதிமுக அரசு அமைத்திருக்கிறார் ஜெயலலிதா. அவர் வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், ‘‘மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, பூரண மதுவிலக்கு நிலை எய்தப்படும். அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும்; பிறகு கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்...’’ என்று வாக்குறுதிகள் அளித்திருந்தார்.

னது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மே 23ம் தேதி பதவியேற்றதும், டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்களின் நேரத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இதுவரை காலை 10 முதல் இரவு 10 மணி வரை இயங்கி வந்த கடைகள் மே 24 முதல் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை இயங்கும். இதுதவிர, 500 டாஸ்மாக் சில்லரை மதுபானக் கடைகள் மூடப்படும் என்கிற அறிவிப்பும் வந்திருக்கிறது.

றிவித்தது போல படிப்படியாகவோ... அல்லது அதிரடியாகவோ டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என, குடியால் வாழ்வு தொலைத்த கோடிக்கணக்கான குடும்பங்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. அப்படிச் செய்தால்... தமிழ் கூறும் நல்லுலகம் தலை சாய்த்து தனது நன்றியைப் பதிவு செய்யும்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

  1. மகாகவி பாரதி ஒரு தீர்க்கதரிசி.. பாருக்குள்ளே நல்ல நாடு என காலம் அறிந்து எழுதி வைத்து விட்டுச் சென்று விட்டான். ஒரு காலத்தில் பெரியவர்கள் முன்ப சிகரெட் குடிக்க பயந்த சமூகம், இப்போது வீட்டுக்குள்ளேயே பாட்டிலை பொங்க விடுகிறது. பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிக்க மறுப்பதன் காரணமாகவே சமூக குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளை தறுதலையாய் போவதை கண்டிக்காமல் வளர்த்து விடும் சமூகமும் குற்றவாளி தான். அதற்காக கோயில் இல்லா ஊரில் குடியிருக்காதே என்ற பழமொழியை மாற்றி விட்ட குவார்ட்டர் கிடைக்காத ஊரில் குடியிருக்காதே என மாற்றிய அரசியல்வியாதி இப்போதாவது படிப்படியாக குறைக்கும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சி. மது இல்லாத மாநிலம் .. கேட்கவே நன்றாக இருக்கிறது. அப்படியிருந்து விட்டால்?
    , ப.கவிதா குமார் மதுரை

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...