செவ்வாய், 31 மே, 2016

ரத்தம் குடிக்கும் குட்டி டிராகுலா!

 ‘‘நேத்தைக்கு ஆரம்பிச்ச மாதிரி இருந்திச்சு. பாருங்க... விறுவிறுன்னு 75 வாரம் வந்து, நம்மொழி செம்மொழி தொடர், பவள விழாவே கொண்டாடிடுச்சே சார்...’’ என்று பாம்பனில் இருந்து முகைதீன் தொடர்பில் வந்து ஆச்சர்யப்பட்டார். அத்தோடு விட்டாரா என்றால், இல்லை. ‘‘பவள விழானு சொல்லும் போது ஞாபகம் வருது. அது, பவளமா; பவழமா? எப்டி எழுதுனா சரி சார்?’’ - இந்த வாரத்துக்கான கொக்கியை வீசி விட்டு தொடர்பைத் துண்டித்தார்.


பவழமா, பவளமா... பவலமா?

வழம் - பவளம். எது சரி? தமிழறிஞர்கள் மத்தியில் ஆகப்பெரிய விவாதத்தை கிளப்புகிற வார்த்தைகளுள் இதுவும் ஒன்று (இரண்டு?!). சரி பாதி பேர் பவழமே சரி என்றும், மறு மீதிப் பேர் பவளம்தான் ரைட்டு என்றும் மல்லுக்கு நிற்கிறார்கள். நடுவில் நாம் புகுந்து ரசாபாசம் ஆகி விடக்கூடாது என்பதால், தமிழறிஞர்கள் துணையை நாடுவோம். தமிழில் தேர்ந்த அறிஞர்களிடம் கேட்டால், ‘ரெண்டுமே சரி’ என்கிறார்கள். அதெப்பிடி ஒரு வார்த்தைக்கு இரு ஸ்பெல்லிங் இருக்க முடியும்?

ந்தத் தொடரின் 25வது வாரத்தில் நாம் படித்த இலக்கணப் போலி பாடத்தை இந்த இடத்தில் ஞாபகம் செய்து கொண்டால் மேட்டர் ஈஸி. ‘போல செய்வது போலி’ என்று அதில் படித்திருக்கிறோம். இலக்கணப் படி இல்லாவிட்டாலும் கூட, காலம் காலமாக ஒரு சொல், மக்களால் பேசிப் பழகி விட்டால் அல்லது எழுத்திலோ, பேச்சிலோ சுவை கூட்டிக் காட்டுவதற்காக வரம்புகளுக்குட்பட்டு இலக்கணத்தை மீறலாம். தப்பில்லை. அது இலக்கணப் போலி. அதை (சகித்துக் கொண்டு) ஏற்றுக் கொள்ளலாம் என்கிறது தமிழ். கால்வாய் (வாய்க்கால்), கோவில் (கோயில்), தசை (சதை) என்பது போல பவழம் / பவளம். சரியா? புதிதாக போலி உருவாக்குகிறேன் என்ற பெயரில் ‘பவலம்’ என்று எழுதினால், சார் மார்க் போடமாட்டார்... ஜாக்கிரதை!

குட்டி டிராகுலா!

கூர்மாவதாரம் என்று ஒரு பக்கம் கொண்டாடுகிறார்கள்; உள்ளே புகுந்தால் வீடு உருப்படாது என்று மறுபக்கம் கரித்துக் கொட்டுகிறார்கள். ஆமையின் நிலையை யோசித்துப் பாருங்கள்... ரொம்பப் பாவம் இல்லையா? அதன் மீது ஏன் சேற்றை வாரி இறைக்கவேண்டும்? ஆமையை நாம் ஒதுக்கினாலும், தமிழ் ஒதுக்கவில்லை. கமடம், கச்சபம், கூர்மம், உறுப்படக்கி என அழகு பெயர்களால் அழைக்கிறது. நாணிக் கோணி வெட்கப்பட்டுக் கொண்டு வருகிற பெண் ஆமையாக இருந்தால், துளி என்ற தமிழ் பெயர் சொல்லி அதை இனி அழைக்கலாம்.

ருநந்து, நாகு... இந்தப் பெயரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? முதுகில் அபார்ட்மென்ட் கட்டி வைத்துக் கொண்டு நகர்ந்து போகுமே... நத்தை, அதற்கான தமிழ் பெயர் சார் இது. ‘ஏலெய்... கெவுளியடிக்குதுடா....’ என்று கிராமத்தில் பாட்டி சொல்லுவார், ஞாபகம் வருதா? கெவுளி, புள்ளி ஆகியவை சுவற்றில் திரிகிற பல்லியின் தமிழ் பெயர்கள். மலைப்பிரதேசங்களில் ஜாலியாக நாம் சுற்றுகிற போது மூச்சுக் காட்டாமல் காலில் ஏறி ரத்தம் குடிக்கிற குட்டி டிராகுலா... அட்டைக்கு தமிழில் உரு என்று பெயர்.

கடவுளின் வார்த்தை!

லகத்திலேயே அதிக மொழிகளில் (ஏறக்குறைய 2 ஆயிரத்து 100 மொழிகள்!) மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் எது என்று கேள்வி கேட்டால், கிறிஸ்துமஸ் கொண்டாடி முடித்திருக்கிற சகோதரர்கள், ‘பைபிள் எனப்படுகிற திரு விவிலியப் புத்தகம்தானே...’ என்று கண்ணிமைக்கிற நேரத்தில் பதில் தந்து அசத்துவார்கள். கடவுளின் வார்த்தைகளை மனித வார்த்தைகளில் பதிவு செய்து தருகிற அந்த புனிதப் புத்தகம், நம்மொழி தமிழுக்கும் ஒரு ஒப்பற்ற பெருமை சேர்த்திருக்கிறது.

ந்திய மொழிகளில் பைபிள் முதன்முதலில் மொழி பெயர்க்கப்பட்டு அச்சேறியது (புதிய ஏற்பாடு) நமது தமிழ்மொழியில்தான். ஜெர்மனியில் இருந்து வந்த சீகன் பால்க் அதற்காக பட்ட பாடுகளை இந்தத் தொடரின் 63வது வாரத்தில் படித்திருக்கிறோம். பழைய ஏற்பாட்டில் ‘ரூத்’ பகுதி வரை முடித்திருந்த போது சீகன் பால்க் காலமானார். அவர் விட்ட பணியை தொடர்ந்து முடித்தவர் பெஞ்சமின் ஷூல்ஸ் (Benjamin Schulze 1689 - 1760). ஜெர்மன் காரரான இவர், தமிழ் மீதுள்ள ஆர்வம் காரணமாக தரங்கம்பாடியில் முகாமிட்டு கிறிஸ்துவ தமிழ் பாடல்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஷூல்ஸ்.... தேங்க்ஸ்!

சீகன் பால்க் எதிர்பாராதவிதமாக காலமான தகவல் கிடைத்ததும், அவர் விட்ட பணியை செய்து முடித்தார் ஷூல்ஸ். சீகன்பால்க் தமிழில் மொழிபெயர்த்திருந்த பழைய ஏற்பாட்டுப் பகுதியை ஷூல்ஸ் 1723ல் அச்சேற்றினார். தொடர்ந்து 1726, 1727, 1728ம் ஆண்டுகளில் பழைய ஏற்பாட்டின் எஞ்சிய பகுதிகளை ஷூல்ஸ் அச்சிட்டு வெளியிட்டார். புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பிலும் சில திருத்தங்கள் செய்தார். புதிய ஏற்பாட்டின் திருத்திய இரண்டாம் பதிப்பு தரங்கம்பாடி அச்சகத்திலிருந்து 1724ல் வெளியிடப்பட்டது.

வெறும் சமயப்பணி என்கிற வட்டத்தோடு முடங்கிக் கொள்ளாமல், உலகின் மூத்த மொழியான தமிழை நேசித்து, சுவாசித்து, உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்ததால் மட்டுமே... இன்றைக்கும் புதிய / பழைய ஏற்பாடுகளை தமிழில் நாம் படிக்கிறபோது, நெஞ்சுக்கு மிக நெருக்கமாக உணர முடிகிறது. வரலாற்றில் அதிகம் தெரியாமல் வாழ்ந்து, மறைந்து, தமிழுக்கு பெருமை சேர்த்த பெஞ்சமின் ஷூல்ஸ்க்கு இந்த பண்டிகை சீசனில் நன்றி தெரிவித்து இந்த வாரத்தை முடிக்கலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...