சனி, 21 நவம்பர், 2015

காளை.. காளை... முரட்டுக்காளை!

‘நம்மொழி செம்மொழி கட்டுரையில் நிறைய தப்பு இருக்கிறது...’ - கொடைக்கானல் காரர்கள் விடுவதாக இல்லை. நுணுக்கி, நுணுக்கி கேள்விகளாக அடுக்கி ஒரு போஸ்ட்கார்டு அனுப்பியிருக்கிறார்கள். கார்டின் முதல் வரியில் இப்படி குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
என்ன தப்பாம்?
ஆங்கிலத்தில் ‘A, AN’ எங்கே போடுவது என்று விதி இருப்பது போல, தமிழில் ‘ஒரு, ஓர்’ எங்கே போடவேண்டும் என்கிற விதி பற்றிய அவர்களது சந்தேகத்துக்கு போனவாரம் பதிலளித்திருந்தேன் இல்லையா? அதில்தான் தப்பு இருக்காம்!


பாரதி பாட்டில் குற்றமா?
யிர் எழுத்துக்கு முன் ‘ஓர்’ (ஓர் அணில், ஓர் இரவு), மெய்யெழுத்துக்கு முன் ‘ஒரு’ (ஒரு வீடு, ஒரு மாடு) போடவேண்டும் என்று விளக்கியிருந்தேன். பிடித்துக் கொண்டார்கள் கொடைக்கானல் பார்ட்டீஸ். ‘‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி பாடியிருக்கிறார். ஒரு பாலம் அமைப்போம் என்றில்லையா பாடியிருக்கவேண்டும்? பாரதி எழுதியது தப்பா, இல்லை நீங்க எழுதியது தப்பா?’’ என்று தேர்ந்த வழக்கறிஞர் போல மடக்கியிருந்தார்கள். பாரதியாரிடம் தப்பு இருக்க வாய்ப்பில்லை. இந்தக் கேள்வியைப் பொறுத்தளவில்... என்னிடமும் தப்பில்லை.

மிழில் போலி இலக்கணம் தெரிந்திருந்தால், இந்தக் கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். ‘நம்மொழி’ தொடருக்கு நம்மவர்கள் புது வரவு என்று நினைக்கிறேன். இந்தத் தொடரின் 25வது அத்தியாயத்தில் போலி இலக்கணம் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறோம். ஒரு பாடலில்  / இலக்கியத்தில் சுவை கூட்டிக் காட்டுவதற்காக வேண்டுமென்றே சில நேரம் இலக்கணத்தை மீறுவார்கள். அது இலக்கண போலி. வரம்புகளுக்குட்பட்டு அதை தமிழ் இலக்கணம் அனுமதிக்கிறது. ஆனால், விபரம் தெரியாமல் தப்பு செய்யக்கூடாது. தப்பு செய்து விட்டு, போலி இலக்கணம் என்று கதை விடக்கூடாது. பரிட்சையில் மார்க் தரமாட்டார்கள், சரியா?

கொடை நண்பர்களின் அடுத்தடுத்த கேள்விகளுக்குச் செல்வதற்கு முன்பாக, தமிழ் மொழிக்கு மட்டுமே இருக்கிற ஸ்பெஷல் சிறப்புகளை கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம். யானை என்கிற சிங்கிள் விலங்கிற்கு அதன் வயது, பருவம், உருவம், உடல் அமைப்புகளுக்கு ஏற்ப தமிழ் மொழி எத்தனை வகையாக பிரித்து பெயர் சூட்டி வைத்திருக்கிறது என்று தொடரின் முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். யானைக்கு மட்டும்தானா... மற்ற விலங்குகளுக்கு இல்லையா என்று யாரும் கேள்வி எழுப்பவேண்டாம். நம்மொழி பாகுபாடு பிரிப்பதில்லை. விலங்கு வாரியாக, இனி தமிழ் பெயர்கள்...

ஒரு குட்டி; அது கிட்டி!
கூலம், கோ, குடம், சுரபி, ஆ, நிரை, தேனு, பெற்றம்... இதில் எந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலும் ‘செண்பகமே... செண்பகமே’ பசுக்கள் ஆசையாகத் திரும்பிப் பார்க்கும். இதெல்லாம் பசுவின் அக்மார்க் தமிழ் பெயர்கள். தனக்கொரு வாரிசு இல்லாத பசுவை ‘வசை’ என்றும், ஒரே ஒரு வாரிசுடன் ஃபேமிலி பிளானிங் செய்த பசுவை ‘கிட்டி’ என்றும் அழைக்கலாம். சிங்கிளாக வந்தால் பசு. கூட்டமாக நின்றால்...? நிரை, தொறு, காலி, கோட்டம், காலேயம். பசுவைப் பற்றி மட்டும் பேசி விட்டுப் போனால், காளைகள் கோபித்துக் கொள்ளலாம். பாறல், சே, பெற்றம், பூணி, பாண்டில், கொட்டியம், இறால், ஏறு, மூரி, புல்லம் - இது காளைகளின் தமிழ் பெயர். கொள்ளி வைக்க பிள்ளையில்லையே.... என்று ஏதாவது ஒரு காளை புலம்பினால், அதை ‘மை’ என்று அழைக்கலாம். அல்லது நல்ல வெட்னரி டாக்டரிடம் அழைத்துச் செல்லலாம்.

‘ஐநூறு ரூபாய்க்கு சேஞ்ச் இருக்கா சார்...?’ - இப்படி யாரும் கேட்டு வந்தால், இனி கொடுக்காதீர்கள். தமிழை இப்படியுமா தப்புத் தப்பாக பேசுவது? 500 என்பதை ஐநூறு என்றுதானே எழுது / பேசுகிறோம். அது தப்பு சார் தப்பு. ஐந்து + நூறு = ஐந்நூறு. இலக்கணப்படி இதுதான் சரி. ஐநூறு என்று எழுதினால், ‘ஐ..! நூறு...!!’ என்று நீங்கள் ஆச்சர்யப்படுவதாகத்தான் அர்த்தம். ஐந்நூறு என்றே இனி எழுதலாம் சரியா?

துவக்கம்.... சரியில்லை!
சிலேட்டு, புத்தகங்களுடன் உங்கள் அப்பா அல்லது தாத்தா பாடம் படித்திருப்பார்களே... அது துவக்கப்பள்ளியா, தொடக்கப்பள்ளியா? ‘போட்டி இன்று துவங்குகிறது’ - இது சரியா, ‘போட்டி இன்று தொடங்குகிறது’ - இது சரியா? இந்தக் குழப்பம் உங்களுக்கு இருந்தால் கவலை வேண்டாம். தொடக்கம் என்கிற சொல்லின் ஆணி வேரை பாருங்கள். தொடு / தொட / தொடக்கு / தொடங்கு - ஒரு விஷயத்தை (கைகளாலோ அல்லது சொற்களாலோ) தொட்டுத்தானே தொடங்க வேண்டும். ஆக, தொடக்கம் என்கிற சொல்தானே சரியாக இருக்கமுடியும்? துவக்கம் என்கிற சொல்லின் வேர்... துவ. இதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? துவக்கம் என்கிற வார்த்தைக்குப் பதில் தொடக்கம் என்று இனி பேசி, எழுதிப் பழகலாமா?

கொடைக்கானல் குரூப்பின் கடிதத்துக்கு வருவோம். ‘ஒரு, ஓர் ரைட்டு. தமிழில் எந்த வார்த்தை முதலில் வரும், எந்த வார்த்தை முதலில் வராது?’ - இது போஸ்ட் கார்டில் அவர்கள் எழுதியிருந்த இரண்டாவது கேள்வி. ஏற்கனவே படித்த விஷயம்தான். குளுகுளு கானலில் இருந்து வந்த கேள்வி என்பதால், சிம்பிளாக... ஈஸியாக புரிந்து கொள்கிற வகையில் அவர்களுக்காக மீ்ண்டும் ஒருமுறை. அடுத்தவாரம். சரியா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...