‘ஆயுள் முழுக்க எழுதுவதற்கு நம்மொழியி்ல் விஷயம் இருக்கிறது. என்பதால், ஐம்பதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை ப்ரோ...’ என்று தன்னடக்கக் கலையின் சிகரத்தில் நின்று பதில் சொன்னேன்.
சத்தியத்திலும் சத்தியமாகவே தமிழின் பெருமை குறித்து எழுத லட்சக்கணக்கான பக்கங்கள், பாதுகாப்பாக இன்னும் பாக்கியிருக்கின்றன.
குருமா தெரியும்... இருமா?
ஒரு உதாரணம் பார்க்கலாம். ஒண்ணாம் நம்பர் தெரியுமில்லையா? அதற்குக் கீழே போகவேண்டுமானால், பூஜ்யம் போடுவீர்கள். அதற்கும் கீழே என்றால்...? மைனஸ் போட்டு எழுதுவதைத் தவிர, வேறு வழியில்லையேதானே? -1, -2, -3... இப்படி? தமிழ் மொழிக்காரர்களுக்கு இதெல்லாம் ஜூஜுபி. இந்தப் பட்டியலைப் பாருங்க... ஒன்றுக்குக் குறைவான அளவுள்ள எண்களும், அதை எப்படி உச்சரிப்பது என்றும் (எண், அளவு, அதன் ஒலிப்பு முறை என்கிற ஆர்டரில்) விளக்கப்பட்டிருக்கிறது. எந்த மொழியிலும் இதெல்லாம் சான்ஸே இல்லை ப்ரோ!1 (ஒன்று) ஒன்று, 3/4 (நான்கில் மூன்று பங்கு) முக்கால், 1/2 (இரண்டில் ஒரு பங்கு) அரை, 1/4 (நான்கில் ஒரு பங்கு) கால், 1/5 (ஐந்தில் ஒரு பங்கு) நாலுமா, 1/8 (எட்டில் ஒரு பங்கு) அரைக்கால், 1/10 (10ல் ஒரு பங்கு) இருமா, 1/16 (16ல் ஒரு பங்கு) மாகாணி (வீசம்), 3/16 (16ல் மூன்று பங்கு) மூன்று வீசம், 1/20 (20ல் ஒரு பங்கு) ஒருமா, 3/20 (20ல் மூன்று பங்கு) மூன்றுமா, 1/32 (32ல் ஒரு பங்கு) அரை வீசம், 3/64 (64ல் மூன்று பங்கு) முக்கால் வீசம், 3/80 (80ல் மூன்று பங்கு) முக்காணி, 1/40 (40ல் ஒரு பங்கு) அரைமா, 1/64 (64ல் ஒரு பங்கு) கால் வீசம், 1/80 (80ல் ஒரு பங்கு) காணி, 3/320 (320ல் மூன்று பங்கு) அரைக்காணி முந்திரி, 1/160 (160ல் ஒரு பங்கு) அரைக்காணி, 1/320 (320ல் ஒரு பங்கு) முந்திரி.
ஒண்ணாம் நம்பருக்கு கீழே பார்த்தாச்சு. மேலே...? பில்லியன், டிரில்லியன் என்கிறார்களே... தமிழில் அப்படி பிரமாண்ட கட்டக்கடைசி நம்பர் என்ன இருக்கிறதாம்? அந்த சப்ஜெக்ட்டை அடுத்தவாரத்துக்கு ஒதுக்கி வெச்சிக்கலாமா பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்? இப்போ, குளுகுளு கொடைக்கானல் குரூப்ஸ் கேட்ட சந்தேகத்தை கிளியர் பண்ணிடலாம். சொல்லுக்கு முதலில் வரும் / வராத எழுத்துகள் பற்றி பார்க்கலாமா?
ஆங்கில மொழியைப் பொறுத்தளவில், A முதல் Z வரை எல்லா எழுத்துக்களும் சொல்லுக்கு முதலில் வரும். தமிழில் அப்படி அல்ல. சில எழுத்துகள் சொல்லின் முதலெழுத்தாக வராது. தப்பாக எழுதினால், ஏற இறங்க பார்த்து விடுவார்கள். ‘ஓவர் பில்டப் வேணாம்ப்பு. விஷயத்துக்கு வாப்பு...’ என்று கொடைக்கானலில் இருந்து மெசேஜ் வந்து விடுகிற அபாயம் இருப்பதால்...
தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என்று இரு பெரும் பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். ‘எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப’ என்று தொல்காப்பியமும், ‘உயிரும் உடம்புமாம் முப்பது முதலே’ என்று நன்னூலும் முதலெழுத்துக்கான இலக்கணம் தருகின்றன. அதாவது, ‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான 12 உயிரெழுத்துகளும் ‘க்’ முதல் ‘ன்’ வரையிலான 18 மெய்யெழுத்துகளும் சேர்ந்து மொத்தமுள்ள முப்பதும் முதலெழுத்து என அழைக்கப்படுகிறது. உயிர் + மெய் கூட்டணியான முதலெழுத்துகள்தான் தமிழ் மொழியின் அடிப்படை.
கணக்கில் வராத ஸ, ஷ, ஜ, ஹ!
உயிர் எழுத்துகள் 12ஐ குறில் (அ, இ, உ, எ, ஒ), நெடில் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) என இரண்டாகவும், மெய்யெழுத்துகள் 18ஐ வல்லினம் (க், ச், ட், த், ப், ற்), மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்), இடையினம் (ய், ர், ல், வ், ழ், ள்) என மூன்றாகவும் ஒலி அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள். இந்த முதலெழுத்துகளை சார்ந்து, அவற்றோடு இணைந்து வருவது சார்பெழுத்து. உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பு எழுத்துகள்.சார்பெழுத்துகளில் உயிர்மெய் மட்டும் இப்போ தெரிஞ்சுக்கலாம். உயிரும், மெய்யும் சேர்ந்த எழுத்து உயிரெழுத்து. ‘க்’ என்கிற மெய்யெழுத்து, ‘அ’ என்கிற உயிரெழுத்துடன் சேரும் போது ‘க’ என்கிற உயிர்மெய்யெழுத்து பிறக்கிறது. க்+ஆ= கா, க்+இ= கி, க்+ஈ=கீ, க்+உ=கு. இப்படி மொத்தம் 216 உயிர்மெய்யெழுத்து.
ஆக, தமிழில் உயிர் எழுத்து 12, மெய்யெழுத்து 18, உயிர்மெய் எழுத்து 216, ஆய்த எழுத்து 1 சேர்த்து மொத்தம் 247 எழுத்துகள் சரியா? ஸ, ஷ, ஜ, ஹ போன்ற வடமொழி கிரந்த எழுத்துகள், நமது தமிழ் மொழி கணக்கில் வராது. இந்தப் புரிதல் மட்டும் இருந்தால் போதும். சொல்லின் முதலில் வருகிற எழுத்து எது, வரக்கூடாத எழுத்து எது என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம். மேற்படி மேட்டரை ஒருமுறைக்கு இருமுறை படித்து நன்றாக ஞாபகத்தில் இருத்திக் கொள்ளுங்கள். முதலில் வரும் எழுத்து எது என்று அடுத்தவாரம் முடித்து விடலாம். சரிதானே!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
அட...! சூப்பர்...!!
பதிலளிநீக்குஓட்டப்பந்தயம் ஓடுபவருக்கான ஊக்க சக்தி, அரங்கில் இருந்து வருகிற கரகோஷங்களின்றி வேறில்லை. ‘நம்மொழி செம்மொழி’ தொடர் ஐம்பது வாரங்கள் கடந்து பயணிப்பதற்கும் அது ஒன்றே காரணம். ஒவ்வொரு வார முடிவிலும் ஊக்கப்படுத்திய முகமறியாத ஒவ்வொரு நண்பருக்கும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்கும் சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவிப்பதற்கு இதைத் தவிரவும் சரியான தருணம் வேறு இராது. மிக முக்கியமான ஒருவரைக் குறிப்பிடாவிட்டால், அடுத்த வாரம் பதிவேற்றுப் போது மனச்சாட்சி முள்ளாகக் குத்தும். ‘வலைப்பூ சித்தர், தொழில்நுட்ப ஜாம்பவான், வலைஞர்களின் வழிகாட்டி’ திண்டுக்கல் தனபாலன், இந்தத் தொடரின் ஆகப்பெரிய ஊக்க சக்தி. ஒவ்வொரு வார முடிவிலும் கருத்துச் சேர்த்து, தமிழ் மணம் மதிப்புச் சேர்ந்து, ‘நம்மொழி செம்மொழி’ தொடர் உலகின் பல திசைகளுக்கும் சென்று சேர அவர் ஆற்றிய பணி, வார்த்தைகளுக்குள் அடக்க முடியாதது. அவருக்கும், இன்னும் ஏனைய நண்பர்களுக்கும் தலை வணங்கி நன்றிகளையும், மரியாதையையும் செலுத்தி, இந்தத் தொடரை... தொடர்கிறேன்!
பதிலளிநீக்கு- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
நன்றிகள் பல...
நீக்கு