சனி, 14 நவம்பர், 2015

சொத்துக் குவிப்பு வழக்கு... சீக்ரெட்!

ன்றைய தேதியில் உங்கள் சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்? வெள்ளைப் பேப்பரை விரித்து வைத்துக் கொண்டு பட்டியலிடுங்கள். சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியெல்லாம் பயப்படாமல், லிஸ்ட் போடுங்கள். சொந்தமாக வீடு, ஏக்கர் கணக்கில் நிலம், லாக்கர்களில் நகை, வங்கிகளில் லட்சக்கணக்கில் டெபாசிட், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள்... என்று எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கி எழுதுகிற அளவுக்கு பட்டியல் நீ...ண்டு கொண்டே போனால், முகத்தில் கம்பீரம் டாலடிக்கும்தானே? இதெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற அளவுக்கு சொத்துக்களை நீங்கள் பேசுகிற மொழி பதுக்கி வைத்திருக்கிறதே, உங்களுக்குத் தெரியுமா? நியாயமாக மற்ற மொழிகள் எல்லாம் சேர்ந்து நம்மொழி மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடுக்கலாம். அந்தளவுக்கு, வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவு இலக்கண / இலக்கியச் சொத்துக்கள் தமிழில் ஏராளம்.


நீயும் பொம்மை; நானும் பொம்மை!
சொந்தக்காரரின் பெருமை; அண்டைவீட்டாரின் பொறாமை என்று விளம்பரம் போடுகிற அளவுக்கு குவிந்து கிடக்கிற தமிழின் இலக்கண, இலக்கிய வளங்களை இந்தத் தொடரில் தொடர்ச்சியாக படித்து வருகிறோம் (இல்லையா?). நான்கைந்து வாரங்கள் பார்த்து வந்த காரணப் பெயர்கள் (Casual Noun) பட்டியலை இந்த வாரத்தோடு முடித்துக் கொள்ளலாம்.

புல்லாங்குழல்: புல்லால் செய்யப்பட்ட குழல். (மூங்கில் என்பது புல் வகையைச் சேர்ந்த தாவரம்,தெரியும்தானே?).
பொம்மை: பொய்மை என்ற வார்த்தையின் மருவல் (நிஜம் போலவே இருக்கிற பொய்யான வடிவம்தானே பொம்மை?).
மரம்: தரையோடு மருவி நிற்பதால் இந்தப் பெயர்.
விலங்கு: முதுகெலும்பு குறுக்காக இருந்தால்... அது. (நிமிர்ந்து நடக்கணும்னு பெரியவங்க சொல்றது ஏன்னு இப்ப புரியுதா?).
விழா: விழைந்து (விரும்பி) நடத்தினால், அதுதாங்க விழா.

ழுதும் போது செய்கிற தவறுகளைத் திருத்திக் கொள்கிற சப்ஜெக்ட்தான் கடந்த சில வாரங்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது (நன்னூல், தொல்காப்பியம் துணையோடு!). கொடைக்கானல் கான்வென்ட்டில் படிக்கிற நண்பர்கள் குரூப்பாக கடிதம் போட்டிருந்தனர். ‘‘ஆங்கிலத்தில் எந்த வார்த்தைக்கு முன் ‘A’ போடவேண்டும், எந்த வார்த்தைக்கு முன் ‘An’  போடவேண்டும் என்று இலக்கணம் இருக்கிறது. தமிழில் அப்படி எதுவும் இருக்கிறதா?’’ - அருமையான சந்தேகம் கேட்ட கொடைக்கானல் காரர்களுக்கு நன்றி.

ஒரு வீடு; இரு வாசல்!
‘ஆங்கிலத்திலேயே இருக்கிற போது, தமிழில் ஏன் இருக்காது?’ என்பது அவர்களுக்கான பதில். புரிகிற மாதிரி பார்க்கலாம். ஒருமையைக் (Singular)  குறிக்க தமிழில் ஓர், ஒரு என்கிற இரு சொற்களைப் பயன்படுத்துகிறோம். எந்தெந்த இடத்தில் ஓர் / ஒரு போடவேண்டும்? அலாரம் வைத்து 5 மணிக்கு எழுந்து மனப்பாடம் செய்யவேண்டிய அவசியமில்லை. இது ரொம்ப ஈஸி. உயிரெழுத்துத்து முன் ‘ஓர்’ போடுங்க. மெய்யெழுத்துக்கு முன் ‘ஒரு’ போடுங்க. அம்புட்டுத்தேன்!

ஓர் அணில், ஓர் உரல், ஓர் இரவு, ஓர் ஊர் - சரியா?
ஒரு வீடு, ஒரு சொல், ஒரு மாடு - ரைட்டா?

சிங்குலர் எனப்படுகிற ஒருமை முடிந்தது. அடுத்து பன்மை (Plural). பன்மையை குறிக்க ‘இரு, ஈர்’ என்கிற சொற்களை பயன்படுத்துகிறோம். எங்கே இரு, எங்கே ஈர்? அதே பார்முலாதான். உயிரெழுத்துக்கு முன் ஈர், மெய்யெழுத்துக்கு முன் இரு போட்டால் போச்சு.

ஈருடல், ஈருயிர், ஈராயிரம். ஈரைந்து (நாட்கள்) - ஓகே.யா?
இரு வாசல், இரு பக்கம், இரு நாட்கள் - சரிதானே?

பேராண்மை... சரியா?
னது ஆச்சு. இன்னும் ஒன்று பார்த்து விட்டு, இந்த வாரத்தை முடித்துக் கொள்ளலாம். ஒரு, ஓர், இரு, ஈர் போலவே பெரிய, பேர் என்கிற சொற்களும் அடிக்கடி பயன்படுத்துகிறோம். எங்கே பெரிய, எங்கே பேர்? சிம்பிள். உயிரெழுத்துக்கு முன் பேர்; உயிர்மெய் எழுத்துக்கு முன் பெரிய.
பேரவை, பேராண்மை, பேராசிரியர், பேராசை, பேரீச்சம் (பழம்), பேரூராட்சி - புரிஞ்சிடுச்சிதானே?
பெரிய மாமா, பெரிய காடு, பெரிய பாறை, பெரிய மாடு, பெரிய மனிதன் - கேட்ச் பண்ணீட்டிங்களா?

‘ஆ’ - இது நாடு முழுக்க இப்போது சர்ச்சை கிளம்புகிற ஒரு மேட்டர். ‘ஆ’ பற்றி மேலதிகமாக அடுத்தவாரம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

  1. English is a beautiful but funny language. Rules change according to words also,
    It is an hour and NOT a hour;
    The vowel rule slips here. Exceptions are common in English.
    Please explain to your readers why its an hour.and NOT a hour.
    Thanks

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...