தென்மாவட்டத்து தமிழர்களுக்கு இது மகத்தான தருணம். 35 ஆண்டுகால கனவொன்று நனவாகியிருக்கிறது. பசி / தாகம் தீர்க்கிற பெரியாறு அணை, இடையூறுகள் பல கடந்து 142 அடி உயரத்தை தொட்டிருக்கிறது. தேனி மாவட்டத்து, கம்பம் பள்ளத்தாக்கு மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
தனது உழைப்பாலும், தியாகத்தாலும் பெரியாறு அணையை உருவாக்கித் தந்து, தமிழர் பூமியின் தாகம் தீர்த்த கர்னல் ஜான் பென்னிகுக் பற்றி தெரிந்து கொள்வது இந்தத் தருணத்தின் முக்கிய கடமை. இந்தக் கட்டுரை மூலம்... அவருக்கு தனது நன்றியை சமர்ப்பிக்கிறது பூனைக்குட்டி!
பட்டினிச் சாவு
ஆங்கிலேய ஆட்சியில் விரிந்து பரந்த மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆந்திராவிலும், மகாராஷ்டிராவிலும் இப்போது நடப்பது போல... ஆனால், இன்னும் பல மடங்கு அதிகமாக பட்டினிச் சாவுகள் இயல்பாகிப் போன கால கட்டம். வறுமையை விரட்ட வழி தேடிய ஆங்கிலேயே அரசு, நீர்வள ஆதாரங்களை பெருக்கி, விவசாய உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டது. அணைகளை கட்ட நீர் ஆதாரங்களை கண்டுபிடிக்கும்படி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டது.
|
பெரியாறு அணை திறப்பு விழாவில் (கருப்புக் கோட், கையில் வெள்ளைத் தொப்பியுடன் பென்னிகுக்) |
அப்போது திருநெல்வேலி மாவட்டம் சுந்தர மலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் உருவாகும் பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோணி ஆறு, கட்டப்பனையாறு, எடமலையாறு, முல்லையாறு ஆகிய நதிகளின் தண்ணீர் ஒன்றாக சங்கமித்து பெரும் வெள்ளமாக 300 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் பாய்ந்து, கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அரபிக்கடலில் கலந்து வீணாவது கவனத்துக்கு வந்தது. இந்த தண்ணீரை தென்தமிழகம் நோக்கி திருப்பிவிடும் வகையில் பெரியாற்றில் அணைகட்டி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் கர்னல் ஜான் பென்னிகுக்.
தேங்கியிருப்பது தண்ணீர் மட்டுமல்ல...
|
அணை கட்டுமானப் பணிகளின் போது, ஓய்வாக ஒரு மாலைப்பொழுதில் மனைவி கிரேஸ் ஜார்ஜியானா மற்றும் நண்பர்களுடன் பென்னிகுக். |
ஆங்கிலேய பொறியாளர்களின் பத்தாண்டு உழைப்பாலும், உயிர் தியாகத்தாலும் உருவானது பெரியாறு அணை. அதனுள் தண்ணீர் மட்டுமல்ல... தியாக வேள்வியும் சேகரமாகிக் கிடக்கிறது. இந்திய ராணுவ ஜெனரலாக பணியாற்றிய லண்டனை சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் ஜான் மகனாக, 1841ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பென்னிகுக் பிறந்தார். 1860ம் ஆண்டில் ராணுவப்பொறியாளராக இந்தியா வந்தார். 1872ம் ஆண்டில் தென் ஆற்காடு மாவட்ட இன்ஜினியராகப் பொறுப்பேற்றார். 1874ம் ஆண்டில் பெரியாறு அணை சர்வே திட்ட அதிகாரியாக பதவியேற்றார். முதற்கட்டமாக பல்வேறு கட்ட சர்வே பணிகளை முடித்தார்.
1879ல் பென்னிகுக், லண்டனைச் சேர்ந்த கிரேஸ் ஜார்ஜியானாவை திருமணம் செய்தார். 1885ல் சென்னை ராஜதானி மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கிடையே பெரியாறு அணை தொடர்பாக 999 ஆண்டு காலத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.43 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பெரியாறு அணைக்கட்டும் பொறுப்பை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பென்னிகுக்கிடம் ஆங்கிலேய அரசு ஒப்படைத்தது. அணை கட்ட தேர்வு செய்த இடமே அற்புதமானது.
உயிர் தியாகம்
|
பெரியாறு அணைப்பகுதியில் பென்னிகுக் தம்பதி வாழ்ந்த வீடு. |
1885ம் ஆண்டு அக். 11ம் தேதி அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. அணைக்கட்டு வேலைகளுக்கான இயந்திரங்கள் வாங்க லண்டன் சென்ற பென்னிகுக், திரும்ப வரும்போது மனைவியையும் உடன் அழைத்து வந்தார். அணைக்கட்டு வேலை நடக்கும் இடத்திற்கு அருகில் கட்டப்பட்ட வீட்டில் குடியிருந்து கொண்டு தனது மேற்பார்வையில் வேலைகளை தொடங்கினார். பென்னிகுக் தம்பதியினர் குடியிருந்த வீடு இன்னும் பெரியாறு அணை அருகே உள்ளது. அடர்ந்த காட்டு பகுதியில் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் 4 ஆயிரத்து 290 மிமீ மழை பொழியும் இடத்தில் கடும் குளிர் புலி, யானை, கரடி போன்ற விலங்குகளுக்கு மத்தியில் அணை கட்டும் பணிகள் நடந்தன.
|
அணை கட்டும் போது உயிரிழந்த ஆங்கில இன்ஜினியர்கள், தொழிலாளர்களின் கல்லறைகள் (இடம்: பெரியாறு அணை அருகே) |
1890ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் அணையின் பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் இப்பகுதியில் ஏற்பட்ட காலரா நோயினால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும், ஆங்கிலப்பொறியாளர்களும் உயிரிழந்தனர். யானைகளால் மிதிக்கப்பட்டும், புலி கரடி போன்ற கொடிய விலங்குகளிடம் சிக்கி பலரும் இரையாயினர். இவர்களின் உடல்கள் கூட சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் அணை அருகே அடக்கம் செய்யப்பட்ட கல்லறை இன்றைக்கும் நினைவிடங்களாக உள்ளன. அணையின் கட்டுமானங்களை வெள்ளம் இழுத்து சென்று விட்டதால், மீண்டும் இத்திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்து விட்டது.
|
லோயர்கேம்ப் பென்னிகுக் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலை. |
மலைகுலைந்தாலும் நிலைகுலையாத பென்னிகுக் லட்சியத்தில் உறுதி கொண்டார். இங்கிலாந்து சென்று தன் மனைவி கிரேஸ் ஜார்ஜியானாவிடம் விவரங்களை விளக்கினார். தன் குடும்ப சொத்துக்களை விற்றார்.
அது போதாது என்பதை அறிந்த மனைவி தன் தங்க ஆபரணங்களை கழற்றி கொடுத்தார். அந்த நகைகளையும் விற்று பணத்தை கொண்டு வந்து, மீண்டும் அணை கட்டுமான பணியை தொடங்கினார்.
கிராவிட்டி அணை
|
நீர்மட்டம் 136 அடிக்கும் கீழாக இருந்தபோது... நீர்மட்டம் 142 அடியைத் தொட்ட போது... |
சுருக்கி, சுட்ட செங்கல், இஞ்சி கடுக்காய், கருப்பட்டி, தேக்குமரப்பட்டை போன்ற பொருட்களால் பெரியாறு அணையின் சுவர்கள் எழுப்பப்பட்டன. நீர்தேக்க பகுதியில் அணை சுவர் ஒரே நேர்கோட்டில் உள்ளது. எதிர் திசையில் காற்றின் வேகத்தை தடுப்பதற்காக அணை சுவர் சரிவாக அமைக்கப்பட்டது. அணையின் நீளம் 1,241 அடியாக கட்டப்பட்டது. நீர்தேக்க உயரம் 155 அடியாக உயர்த்தப்பட்டு, நீரில் அலைகள் ஏற்படும்போது பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக நீர்மட்ட உயரம் 152 அடியாக குறைக்கப்பட்டது. எத்தகைய நிலநடுக்கமும் அணையை பாதிக்காத வகையில் புவியீர்ப்பு சக்திக்கு இசைவான வகையில் அணை (Gravity Dam) வடிவமைப்பு அமைந்துள்ளது.
|
1)லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுக் நினைவு மணி மண்டபம். 2) பென்னிகுக் மற்றும் அவருக்கு பக்கபலமாக இருந்த இன்ஜினியர்களை பெருமைப்படுத்தும் விதமாக அணையின் முகப்பில் உள்ள கல்வெட்டு 3) அணையின் தலைமை இன்ஜினியராக பென்னிகுக் இருந்ததை காட்டும் கல்வெட்டு (பெரியாறு அணை) 4) பென்னிகுக் பயன்படுத்திய சாய்வு நாற்காலி (பெரியாறு அணையில் உள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் இருக்கிறது) 5) அணை கட்டுமானப் பணிக்கு தளவாடப் பொருட்கள் கொண்டு செல்ல பென்னிகுக் பயன்படுத்திய இரும்புப் படகு. |
1895ல் பெரியாறு அணையை கட்டி முடித்தார். அதே ஆண்டு அக்டோபர் 11ம் தேதியன்று கவர்னர் வென்லாக் தேக்கடிக்கு வந்து அணையை திறந்து வைத்தார். பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் வெளியேறிய தருணத்தில் கர்னல் ஜான் பென்னிகுக், மனைவி கிரேஸ் ஜார்ஜியானா மட்டுமல்ல... அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். பென்னிகுக்கின் தியாகத்தால் தமிழகத்தில் 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெற்றதுடன் 5 மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கிற குடிநீராகவும் பயன்படுகிறது.
வணங்குவோம்
காவிய நாயகன் பென்னிகுக்கை போற்றும் விதமாக தமிழக அரசு, பெரியாறு அணைப்பகுதியில், அணையைப் பார்த்தபடி இருக்கும் பென்னிகுக் சிலை, கூடலூர் அருகே லோயர் கேம்பில் சிலையுடன் நினைவு மண்டபம், உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்திலும், மதுரை பொதுப்பணித்துறை வளாகத்திலும் சிலைகள் அமைத்து நீங்கா புகழை உருவாக்கி உள்ளது. ஜனவரி 15ம் தேதி அவரது பிறந்த நாள். தமிழர் திருநாளாம், தை பொங்கல் விழா நேரத்தில் அவரது பிறந்த நாள் வருவது சிறப்புக்குரியது. அந்த நாளில் இன்றைக்கும் தேனி மாவட்ட விவசாயிகள் பொங்கல் வைத்து அவரை வழிப டுகின்றனர்.
(பெரியாறு அணை மூலம் தென் தமிழகம் பெறும் பாசன வசதிகள் குறித்த முழுமையான தகவல்களுக்கு... பார்க்க - ‘142 நிச்சயம்; 152 லட்சியம்’)
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
அருமையான பதிவு. எங்கள் தளத்திலும் பென்னிக்விக் பற்றி முன்பு எழுதியிருந்தோம். அதன் பின் பல இடங்களில் அவரைக் குறிப்பிட்டும் சில பதிவுகள். மாமனிதர்! பதிவு அருமை...
பதிலளிநீக்குபென்னிக்விக் பற்றி நாம் மறக்காமல் இருப்பது பாராட்டத்தக்கது
பதிலளிநீக்குபென்னி க்விக் பற்றி நாம் மறக்காமல் இருப்பது பாராட்டத்தக்கது
பதிலளிநீக்கு