ஞாயிறு, 23 நவம்பர், 2014

அருவா.. கிருவா... தூக்கலாமா?


(தமிழ் இலக்கணத்தை எளிய நடையில் இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிற தொடர்)



‘‘சல சல சல இரட்டைக் கிளவி
தக தக தக இரட்டைக் கிளவி
உண்டல்லோ... தமிழில் உண்டல்லோ..

பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ... இரண்டும் ஒன்றல்லோ...’’

பாடலைக் கேட்டதும், அழகாய் குதித்து ஆடுகிற ஐஸ்வர்யா ராய் நினைவுக்கு வந்தால், நீங்கள் தமிழ் சினிமா ஆர்வலர். அதையும் தாண்டி இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான இலக்கணத்தின் இரட்டைக் கிளவி நினைவுக்கு வந்தால், தமிழ் ஆர்வலர். காதல், வீரம், பக்தி... எதுவாகவும் இருக்கட்டும். உணர்வுகளுக்கு அதிகம் மதிப்புக் கொடுக்கக் கூடிய மொழி தமிழ். ‘பொண்ணு சிரிக்குதுப்பா...’ என்று சொல்வதற்கும், ‘பொண்ணு கலகலன்னு சிரிக்குது...’ என்று சொல்கிறதுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறதா? ‘கலகலன்னு சிரிக்குது’ என்று கேட்கும் போதே, 32 பற்களும் காட்டி, பொண்ணு சிரிக்கிற அந்தக் காட்சி தத்ரூபமாக, மனதுக்குள் தென்றலடிக்கிற உணர்வோடு விளங்கி விடுகிறது. ‘கலகல’ என்கிற ஒரு வார்த்தை செய்கிற மாயம் இது.

ஜிலுஜிலுன்னா... கிறுகிறுக்குதா?

அதுதான், இரட்டைக் கிளவி (FREQUENTATIVE VERB). உணர்வுகளை ரொம்பவும் ஸ்ட்ராங்காக மனதுக்குள் உட்புகுத்துவதற்காக நமது இலக்கணம் செய்து வைத்திருக்கிற ஏற்பாடு இந்த ‘டபுள்ஸ் கிளவி’. ‘ஆளைப் பார்த்தாலே... கிறுகிறுக்குதே...’ கிறுகிறுக்குதேவும் இ.கிளவிதான்.

 ‘தென்றல் காத்து வீசுது’ என்று சொல்வதற்கும், ‘தென்றல் காத்து ஜிலுஜிலுன்னு வீசுது’ என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஜிலுஜிலுன்னு காத்து என்று படிக்கிற / சொல்கிற போதே... ஜிலுஜிலு மென்மை உணர்வை மேனி புரிந்து கொள்கிறதுதானே? ‘கிளவி’ என்றதும்... குட்டியாய் ஒரு குருவி ஏறி உட்கார்ந்து கொள்ள வசதியாக காது வளர்த்துக் கொண்டு உரலில் வெற்றிலை, பாக்கு இடித்துக் கொண்டிருக்கிற கிராமத்து பாட்டிகளை நினைத்து விடவேண்டாம். கிழவி என்றால்... கிராமம். கிளவி என்றால்... கிராமர். கிளவி என்கிற சொல்லுக்கு ‘சொல்’ என்கிற அர்த்தம் வகுத்திருக்கிறது தமிழ். தன்னியல்பாக கிளைத்து வருவதால் கிளவி (அதாவது, சொல்). அதுவே, இரண்டிரண்டு சொற்களாக கிளைத்து வந்தால்... அதுதான் இரட்டைக் கிளவி. (ரஜினி வழி... தனி வழி. அவரையோ, அவரது ‘லகலக’வையோ இந்த இலக்கணத்திற்குள் அடக்கி விடமுடியாது!).

விஷூவல் எபெஃக்ட்

பொருள் இல்லாத இரு சொற்கள் கூட்டணி அமைத்து வந்து, புதிதாக ஒரு பொருள் கொடுத்தால் அது இ.கிளவி. கூட்டணியைப் பிரித்தால்... ‘பொருள்’ கிடைக்காது. ‘பொண்ணு கலன்னு சிரிக்குது. காத்து ஜிலுன்னு வீசுது, ஆளைப் பார்த்தாலே கிறுக்குது...’ என்றெல்லாம் கூட்டத்தில் பேசிப் பாருங்கள். ஏற, இறங்க உங்களை ஒரு மாதிரியாகப் பார்த்து விடுவார்கள். ‘கலகல, ஜிலுஜிலு, கிறுகிறுக்க...’ என்று சொன்னால்தான் முகத்தில் எக்ஸ்பிரஷன் வரும். நெஞ்சு படபடன்னு அடிக்குது, குளிருக்கு கதகதப்பா இருக்கு, வளவளன்னு பேசாதடீ, திருதிருன்னு ஏன் முழிக்கிற? - இந்த வாக்கியங்களுக்கு படபட, கதகத, வளவள, திருதிரு போன்ற இரட்டைக் கிளவிகள் ஒரு விஷூவல் எபெஃக்ட் கொடுப்பதை கவனித்தீர்களா?

நாம் பேசுகிற ஒவ்வொரு குட்டியூண்டு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு இலக்கணம் இருக்கிறது. அது, தமிழின் சிறப்பு. இரட்டைக் கிளவி பார்த்த கையோடு, அதனுடன் நெருங்கிய தொடர்புடைய அடுக்குத் தொடரும் தெரிந்து கொண்டோமானால், இந்த வாரத்தை திருப்தியாக முடிக்கலாம். பஸ் டிக்கெட், பெட்ரோல், டீசல், காய்கறி விலையை ஏற்றியதும் நமது தெருக்களில் ‘போராட்டம்... போராட்டம்...’ என்று கிளம்புகிற கோஷம் நன்றாகவே பழகி இருக்கும்.

அரசியல் பக்கம் போனால், வாழ்க... வாழ்க; ஒழிக... ஒழிக... கோஷங்களும் கேட்டிருப்போம். அடுக்குத் தொடர் இல்லையானால், கோஷம் போடுவது தமிழில் சிரமமான விஷயமாகியிருக்கும்.
ஒரு சொல், இரட்டையாக (ஓடு... ஓடு) சேர்ந்து வந்தாலும், தனித்திருந்து பொருள் தந்தாலும், அது அடுக்குத் தொடர். போராட்டம், வாழ்க, ஒழிக, ஓடு.. இதை தனியாக பயன்படுத்தினாலும் அர்த்தம் புரிகிறதுதானே?


‘ரோட்டுல, கீட்டுல போகும் போது கலாட்டா, கிலாட்டா வந்தா என்னங்க பண்றது?’ என்று யாராவது கேட்டால், ‘அருவா, கிருவா எடுத்துகிட்டுப் போங்க’ என்று சொல்லக்கூடாது. ஏன்? அது, அடுத்த வாரம் மக்காஸ்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...