கேரளா எவ்வளவோ போராடிப் பார்த்தது. தகிடுதத்தங்கள் செய்தது. ம்ஹூம்... பலனில்லை. உடைந்து விடும், தகர்ந்து விடும்... உலகமே அழிந்து விடும் என்றெல்லாம் கப்சா விட்டவர்கள், கதை எழுதி படம் எடுத்து பணம் பார்த்தவர்கள் அத்தனை பேர் முகத்திலும் அடுப்புக்கரி பூசி விட்டது முல்லைப் பெரியாறு. 136 அடியைக் கடந்து விட்டது. 142 அடியை நோக்கி கம்பீரமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
அடித்துக் கொட்டுகிற பருவமழை, இம்முறை அணையை 142 அடி உயரத்துக்கு (உச்சநீதிமன்றம் இப்போதைக்கு அனுமதித்திருக்கிற அளவு) கொண்டு சேர்த்து விடும் என தமிழக விவசாயிகள் மனதார நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கை பலிக்கும். ஆனாலும், இலக்கு 142 அடி அல்ல. அதற்கும் மேலே... முழு உயரமான 152 அடி தண்ணீர் தேக்குவதே லட்சியம். இந்தத் தருணத்தில்.... முல்லைப் பெரியாறு அணை, அதைச் சுற்றிச் சூழ்ந்த பிரச்னை, பாசனப்பரப்பு என சகல விஷயங்களும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை இங்கே.
அணையை உருவாக்கி நம்மிடம் ஒப்படைத்த கர்னல் ஜான் பென்னிகுக் பற்றியும் விரிவாக ஒரு கட்டுரை பூனைக்குட்டியில் தயாராக இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
பிறக்கும் இடம் தமிழகம்
பெரியாறு நதி மேற்கு தொடர்ச்சி மலையின் தமிழகப்பகுதியில் (சிவகிரி மலை) உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. பெரியாற்றின் நீரை கிழக்கு நோக்கி திருப்பி, மழை மறைவுப் பகுதியான, வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அணை கட்ட திட்டமிடப்பட்டது. வைகை ஆற்று நீர் போதுமான அளவிற்கு இல்லாததால், பெரியாறு நீரை வைகைக்கு கொண்டு வந்து, இங்கிருந்து தென் மாவட்ட விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
1790 மார்ச் 6ல் சென்னை மாகாணத்தின் மதுரை மாவட்டம் உதயமானது. 1798ல் முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி, தண்ணீர் முழுவதையும் மதுரை, ராமநாதபுரம் பகுதிக்கு கொண்டுவர மன்னர் சேதுபதி திட்டமிட்டார். போதிய நிதி வசதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை என அப்போது கைவிடப்பட்டது. 1807ல் மதுரை கலெக்டர் ஜார்ஜ் பேரிஸ் அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த பொறியாளர் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார். இது ஒத்துவராத திட்டம் என 1808ல் கார்டுவெல் தெரிவித்துவிட்டார்.
வைரஸ் திட்டம்
1867ல் மேஜர் வைரஸ் என்பவர் ரூ.17.50 லட்சத்தில் மதிப்பீடு செய்து அறிக்கை அளித்தார். இதற்கு தலைமை பொறியாளர் வாக்கர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போதும் தாமதமானது. 1876ல் சென்னை மாகாணம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணை திட்டம் மேலும் தாமதமானது. இறுதியாக 1882ல் ஆங்கில அரசால் ஏற்கப்பட்டு, கர்னல் ஜான் பென்னிகுக்கிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதற்காக அவர் 1884ல் தயாரித்த அறிக்கை, செலவு திட்டத்திற்கு ஒப்புதலும் கிடைத்தது. 1886 அக்டோபர் 29ல் திருவிதாங்கூர் சமஸ்தானம், சென்னை மாகாணத்திற்கிடையே 999 ஆண்டுகால ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கட்டுமானப் பணிகள் நடந்த போது பெரியாறு அணை |
மனைவியின் சங்கிலி
இந்த அணையில் மின் உற்பத்தி செய்ய 1955ல் திட்டம் வகுக்கப்பட்டது. 1970ல் கேரளாவுடன் செய்த ஒப்பந்தப்படி தமிழகம் 140 மெகாவாட் மின் நிலையத்தை அமைத்தது. தமிழகத்திற்கு வரும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
2.08 லட்சம் ஏக்கர்
பெரியாறு தண்ணீர் தந்த செழிப்பு... பச்சைப்பட்டு விரித்தது போல கம்பம் பள்ளத்தாக்கு. |
முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 144 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி - அல்லிநகர் ஆகிய நகராட்சிகள், மதுரை மாநகராட்சி, உசிலம்பட்டி, சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்கள் இந்த அணை நீரை நம்பித்தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1979 சிக்கல்
1979ம் ஆண்டில் கேரளாவிலிருந்து வெளியாகும் மலையாள மனோரமா நாளிதழ் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என செய்தியை கிளப்பி விட்டது. இதையடுத்து கேரள அரசு அணையின் நீர்மட்ட உயரத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்தது. கேரள மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அணையை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு அனைத்து விதமான முயற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டது. இதன் பின்னர் 152 அடியாக தேக்கலாம் என இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் பலப்படுத்திய பின்னரும் கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்கவில்லை. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வல்லுனர் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழு அறிக்கை அடிப்படையில் 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த 2006ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நியாயத்துக்கு வெற்றி
இந்த உத்தரவை கேரள அரசு ஏற்க மறுத்தது. அத்துடன் 2006 மார்ச் 18ம் தேதி கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டத்தையும் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதன்பேரில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் இந்திய நீர்வளத்துறை அமைச்சக முன்னாள் செயலாளர் தத்தே, இந்திய நீர் ஆணையத்தின் முன்னாள் தலைமை பொறியாளர் மொஹதா, தமிழக அரசு பிரதிநிதியாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரள அரசின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு அணையை பலமுறை ஆய்வு செய்து 25.4.2012ல் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது. இதில், அணை பாதுகாப்பாக, பலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு 2014 மே 7ம் தேதி தீர்ப்பளித்தது. இதன்படி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வளக்குழுவை சேர்ந்த அதிகாரி தலைமையில் 3 பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுப்படி அமைக்கப்பட்ட நாதன் தலைமையிலான குழு, அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தியுள்ளது. 1979ல் உருவான சிக்கலுக்கு 35 ஆண்டுகளுக்கு பின் 2014ல் நியாயமான தீர்வு கிடைத்துள்ளது.
கூடுதலாக 1.5 டிஎம்சி தேக்கலாம்
அணை நீர்மட்டம் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்வதன் மூலம் கூடுதலாக 1.5 டிஎம்சி நீரை தேக்கலாம். ஒரு டிஎம்சி மூலம் 10 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும். 1.5 டிஎம்சி மூலம் 15 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். ஏற்கனவே பாசன வசதி பெறும் 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கரில் விளையும் பயிரை காப்பாற்ற கடைசி கட்ட தண்ணீருக்கு இந்த 1.5 டிஎம்சி போதுமானது. 1.5 டிஎம்சி கூடுதல் தண்ணீரால் 2.08 லட்சம் ஏக்கரும் பயன்பெறும். 152 அடி வரை தேக்கினால் 4.5 டிஎம்சி தேக்கலாம். தமிழகத்திற்கு ஆண்டுதோறும் சராசரியாக 15 டிஎம்சி தண்ணீர் பெறப்படுகிறது. அதிகபட்சம் 30 டிஎம்சியும், வறட்சி காலத்தில் 8 முதல் 10 டிஎம்சி வரையிலும் தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது.
ஷட்டர்கள் அடைக்கப்படாததால், 136 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்ததும், தண்ணீர் வெளியேறி இடுக்கி அணைக்குச் செல்கிறது. (பழைய படம்) |
1979ம் ஆண்டுக்கு பின் அணை நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்ட பின்னர் 10 முறை அணை நிரம்பி தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. ஒரு முறை ஒரு டிஎம்சி முதல் 3 டிஎம்சி வரை தண்ணீர் இடுக்கி அணைக்குச் சென்றது. 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டிஎம்சி தண்ணீர் விணாக கடலுக்கு சென்றது.
முடிவுக்கு வந்த பித்தலாட்டம்
ஆசியாவின் இரண்டாவது பெரிய ஆர்ச் அணையான இடுக்கி டேம். |
கேரள பித்தலாட்டம் 1 |
கேரள பித்தலாட்டம் 2 |
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
விரிவான கட்டுரையாக, நிறைவான தகவல்களுடன் இருக்கிறது. எளியை£ன நடையாக இருப்பதற்கு பாராட்டு. பென்னிகுயிக் கட்டுரை எப்போது வரும்? அதை படிக்க ஆர்வமாக இருக்கிறேன். அந்தோணி தாஸ், கட்டப்பனா
பதிலளிநீக்குஇன்றைய தலைமுறையினர் படிக்க வேண்டிய
பதிலளிநீக்குஅருமையான வரலாற்று பதிவு.... வாழ்த்துக்கள் kk
குறிப்பு......
அனை கட்டுமானப்பணி தொடங்கிய ஆண்டு 1987 என்று தவறாக உள்ளது. 1887
தவறுக்கு மன்னிக்கவும். உடனே மாற்றி விட்டேன். மிக்க நன்றி சார்.
நீக்கு