வியாழன், 14 ஜனவரி, 2021

வெல்கம் MASTER!


சினிமா, மீண்டும் அதன் துள்ளலான இயல்புக்குத் திரும்புகிறது. பத்து மாதங்களுக்குப் பிறகு தியேட்டர்களை, தியேட்டர்களுக்கே உரித்தான கொண்டாட்ட மனநிலையில் காணமுடிகிறது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்துக்கு, அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் அளிக்கும் மிக உற்சாகமான வரவேற்பு, பல்லாயிரம் கோடிகள் புழங்கும் திரைத்துறையின் முகத்தில் வண்ணப்புன்னகையை வரைந்திருக்கிறது.


ராசரி இந்தியர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு - சினிமாக்கள். ஆயிரம் அபத்தங்களை சுமந்து வந்தாலும் கூட... விரக்தி, ஏமாற்றம், தோல்வி என திசையலையும் எளியவர்களின் மனநிலையை இலகுவாக்கி திருப்பி அனுப்பும் ஆற்றல் கொண்டவை அவை. ஆகவே, இந்திய சமூகத்தில் சினிமாவுக்கு மிக உயர்ந்த இடம் உண்டு. பிடித்த நடிகரின் படம் வெளியாகிற தினம், கொண்டாட்ட தினமாகவே மாறிவிடுகிறது. சினிமாவை ஆன்மா என்றால், தியேட்டர்களே அவற்றைச் சுமக்கும் உடல்கள். கொரோனா அச்சுறுத்தல், பொது முடக்கங்களால் இவை பத்து மாதங்களாக முடங்கிக் கிடந்தன.


கேரளாவின் மன்னார்காடு தியேட்டரில் ரசிகர் கொண்டாட்டம்...

2
020, மார்ச் 25ம் தேதி இந்தியாவில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. பல, பல ஆயிரம் கோடிகள் புழங்குகிற கண்ணுக்குத் தெரியாத மாய வர்த்தகமான சினிமாத்தொழில் நொடித்து முடங்கியது. அதை சார்ந்து வாழ்ந்து வந்த பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கை தொலைத்தனர். சினிமாத் தொழில் என்றதும் கோடிகளிலும், லட்சங்களிலும் ஊதியம் பெறுகிற நட்சத்திரங்கள், கலைஞர்கள், அவர்களைச் சார்ந்திருப்பவர்களே நம் எண்ணங்களில் வந்து மறைவார்கள். சினிமாவின் எல்லை அதையும் கடந்தது. மிகப் பெரியது. பிரம்மாண்டமானது.


திரைத்துறைக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லாத மிக எளிய மனிதர்களுக்கும் இந்தத் தொழில் வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகிற தியேட்டர்களைப் பாருங்கள். விளிம்பு நிலை மனிதர்கள் எத்தனை பேருக்கு அந்தத் தியேட்டர் வாழ்வாதாரமாக இருக்கிறது என்று அறியலாம். டிக்கெட் கொடுப்பவர், சரி பார்ப்பவர், அரங்குகளுக்குள் ரசிகர்களை கண்காணிப்பவர், அங்குள்ள தின்பொருள் கூடங்களில் இருக்கும் விற்பனையாளர்கள், வாகன நிறுத்துமிட பாதுகாவலர்கள்... தியேட்டர் என்பது, இதுபோல கண்ணில் படாத இன்னும் எத்தனையோ பேருக்கு நிழல் தரும் ஆலமரம்.


நாம் படம் பார்க்கச் செல்கிற தியேட்டர்களில் ‘ரெப்’ என்ற பெயரில் ஒரு பணியாளர் இருப்பார். கவனித்திருக்கவே மாட்டோம். தியேட்டருக்கும், இவருக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இருக்காது. படத்தை விநியோகிக்கும் நிறுவனத்தின் பிரதிநிதி இவர். ஒரு விநியோக நிறுவனத்தில் நிறைய ‘ரெப்’ இருப்பார்கள். இவர்கள் நிரந்தரப் பணியாளர்கள் அல்ல. ஒரு படத்துக்கு விநியோக உரிமை பெற்ற நிறுவனம், படம் வெளியாகிற தியேட்டர்களுக்கு, தனது பிரதிநிதியாக இந்த ‘ரெப்’களை அனுப்பி வைக்கும். ஒவ்வொரு காட்சியிலும், விற்பனையாகும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை தியேட்டர் நிர்வாகத்தால் முறையாக கணக்குக் காட்டப்படுகிறதா என்று கண்காணித்து, விநியோக நிறுவனத்துக்கு தெரிவிக்கவேண்டியது இவர்கள் பணி.



ரு நாளைக்கு இவர்களது ஊதியம் அதிகம் போனால் முன்னூறு ரூபாயைத் தாண்டாது. அந்தப்படம், சம்பந்தப்பட்ட தியேட்டரில் ஓடும் வரை மட்டுமே இவர்களுக்கு வேலை. படத்தை தியேட்டரில் இருந்து தூக்கி விட்டால், அந்த முன்னூறு ரூபாய் வருமானமும் இல்லாமல் ஆகிவிடும். வேறு விநியோக நிறுவனத்தில் வேலை தேடியாக வேண்டும். பெரும்பாலும் உடலுழைப்பு செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், இந்த ‘ரெப்’ தொழிலுக்கு வருகிறார்கள். 2020, மார்ச் 25க்குப் பிறகான நாட்கள், இவர்களது வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டன.


நிச்சயமற்ற எதிர்காலம் காரணமாக பல தியேட்டர்கள், இழுத்து மூடப்பட்டன. வணிக வளாகங்களாக, அமேசான் போன்ற நிறுவனங்களின் பொருள் சேமிப்பு கிடங்குகளாக மாறியவை சில. இடித்து தரைமட்டமாக்கி, இடமாக விற்கப்பட்டவை பல. கொரோனா காலத்தில் தமிழகத்தில் மூடப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கை நூறை தாண்டும் என்கிறது புள்ளிவிபரம். சென்னையின் மிகப்புகழ் பெற்ற, 53 ஆண்டுகளாக இயங்கி வந்த ‘பிரம்மாண்ட’ அகஸ்தியா போன்ற தியேட்டர்களே மூடப்பட்ட தகவல் வந்தபோது, சினிமா உலகம் அதன் அஸ்தமனத்தை சமீபிக்கிறது என்றே தோன்றியது. அதை உறுதி செய்வது போன்றே அடுத்தடுத்த நிகழ்வுகளும் அமைந்தன.


கேரளாவிலும் வசூல் சாதனை...

ம்பது சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதியுடன் 2020, நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் மீ்ண்டும் திறக்கப்பட்டன. கொரோனா பீதி காரணமாக, தியேட்டர்கள், மீண்டும் தியேட்டர்களாக தங்கள் இழந்த முகத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. திரையரங்குகள், திரை அகற்றப்பட்ட வெறும் அரங்கங்களாக மாறவேண்டிய நெருக்கடியை நோக்கிச் சென்றன. மிகப்பெரிய நட்சத்திரங்களின் சினிமாக்கள் வெளியாகி, முடங்கிக் கிடக்கிற ரசிகர்களையும், பொதுமக்களையும் மீ்ண்டும் தியேட்டருக்கு இழுத்து வந்தால் மட்டுமே இந்தத் தொழில் பிழைக்கும் என்கிற நிலைமை. மாஸ்டர் அந்தப் பணியைச் செய்திருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல... தென்னிந்திய திரைப்படத்துறைக்கு வாழ்வளிக்க வந்த ரட்சகன் - மாஸ்டர். பொதுமுடக்கத்திற்குப் பிறகு கேரளாவில் மீ்ண்டும் தியேட்டர்கள் திறக்க பெரும் தயக்கம் இருந்தது. மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்ட மலையாள ரசிகர்களை மீண்டும் தியேட்டர்கள் நோக்கி கிளப்பிக் கொண்டு வர அம்மாநில தியேட்டர் அதிபர்கள் சங்கம் கையில் எடுத்த துருப்புச்சீட்டு - மாஸ்டர். ஜனவரி 13ம் தேதி, இங்கு வெளியான அதே நாளில் கேரள மாநிலம் எங்கும், அங்குள்ள தியேட்டர்களிலும் மாஸ்டர் படம் வெளியாகி, பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. மலையாள மக்கள் தியேட்டர்களை மொய்க்கிறார்கள். மக்களின் அச்சத்தை அகற்றி, அவர்களை மீ்ண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர இதுபோன்ற பெரிய படங்களால் மட்டுமே முடியும்.


திருவனந்தபுரம் ‘மாஸ்டர்’ தியேட்டர் லிஸ்ட்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் உண்மையில் கடந்த ஆண்டு - 2020 - ஏப்ரலில் வெளியாகியிருக்க வேண்டிய படம். கொரோனா பொது முடக்கம் காரணமாக, ரிலீஸ் ஆகமுடியாமல் முடங்கிக் கிடந்தது. பல முன்னணி நட்சத்திரங்களின் சினிமாக்கள் அடுத்தடுத்து OTT எனப்படுகிற ஆன்லைன் தளங்களில் வெளியாகத் துவங்கின. பாதுகாப்பான, ஓரளவுக்கு லாபகரமான ஆன்லைன் வெளியீடுக்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டபோது... தியேட்டர்களில் சினிமா பார்க்கிற அந்தக்காலம் இனி... திரும்ப வராத கடந்தகாலமாகி விடுமோ என்ற அச்சம் திரை ரசிகர்கள் மனதில் நிரம்பியது.


நிச்சயமற்ற இந்தச் சூழலிலும், வெளியிட்டால் தியேட்டரில் மட்டுமே என்று, மாஸ்டர் படக்குழு உறுதியாக நின்றது. இன்று வெளியாகி மக்களை தியேட்டருக்கு மீண்டும் ஈர்த்திருக்கிறது. மாஸ்டர் வெளியாகி இருக்கிற தியேட்டர்களில் ரசிகர்களும், பொதுமக்களும் அலைமோதுகிற காட்சிகள், திரைத்துறையினருக்கு புது நம்பிக்கை அளித்திருக்கும். எல்லாம் சரி. அப்படியானால், கொரோனா பயத்தை தூக்கி வீசி விடலாமா? உயிரை விடவும், சினிமா முக்கியமா என்ற கேள்வி இயல்பாக எழலாம்.


சினிமா பார்க்காமல் இந்த பத்து மாதங்களில் யாரும் உடல் மெலிந்து விடவில்லை தான். அதேசமயம், அனைத்துமே இயல்பை நோக்கித் திரும்புகிற போது, திரைத்துறையும் படிப்படியாக இயல்புக்கு திரும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமில்லையா? தமிழகம் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு எப்போதோ திரும்பி விட்டது. நமது கடைத்தெருக்களைப் பாருங்கள். கொரோனாவை நினைத்து அச்சப்பட இப்போது யாருக்கும் நேரமில்லை. பஸ்களில் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டு பயணம் செய்கிறது. திருவிழாக்கள், திருமணங்களில் மக்கள் கொரோனா மறந்து குவிகிறார்கள். வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று அரசாங்கங்கள் அறிவிப்பதற்கு முன்பாகவே, நம் மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொண்டார்கள். இன்றைய தேதியில் கொரோனாவுடன் மட்டுமல்ல... இன்னும் சில காலங்கள் கழித்து கொரோனாவின் பேத்தி வந்தால், அதனுடனும் வாழ நம்மவர்கள் தயார்.

‘மாஸ்டர்’ தியேட்டர்களில் Go Corona Go....

தற்காக, கட்டுப்பாடுகள் அத்தனையும் களைந்து விடத் தேவையில்லை. போதிய முன்னெச்சரிக்கை, முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் நாம் மீண்டும் நமது வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டியது அவசியம். தெருவில் புதிதாக நுழையும் போது பற்களை விகாரமாக்கிக் கொண்டு வெறியோடு விரட்டுகிற நாய், அடுத்தடுத்த நாட்களில் ஒரு முறைப்பை மட்டும் காட்டி விட்டு வேறு வேலையைக் கவனிக்கப் போகிறதா இல்லையா? நாமும், கடிநாய் இருக்கிறது என்கிற கவன உணர்வுடன் ஏரியாவை கடக்கிறோம் இல்லையா? கொரோனா இருக்கிறது என்ற கவன உணர்வை மனதில் நிரம்பக் கொண்டு, மருத்துவ நிபுணர்களும், அரசாங்கங்களும் வலியுறுத்துகிற எச்சரிக்கையுடன், இழந்த உலகிற்கு மீண்டும் நாம் திரும்பலாம்.


ச்சரிக்கையுடன், இயல்புக்குத் திரும்புங்கள்... என்பதே மாஸ்டரும், அது ஓடுகிற திரையரங்கங்களும் நமக்குச் சொல்கிற சேதி!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


4 கருத்துகள்:

  1. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் அனைவருக்குமான அவசியமான பதிவு சார்... "கோ கொரோனா கோ... நோ கொரோனா நோ"ன்னு மத்திய அமைச்சர்களே காமெடி பண்ணிட்டு இருக்கும்போது...கொரோனா குறித்து குழப்பமான மனநிலையில் உள்ளவங்களுக்கு "மாஸ்டர்" ரிலீஸ் வச்சே சும்மா நச்சுன்னு தெளிவா "கிளாஸ்" எடுத்துட்டீங்க சார்...எச்சரிக்கையுடன், இயல்புநிலைக்கு திரும்புவோம்...சார்...

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...