திங்கள், 18 ஜனவரி, 2021

MASTER - சில விளக்கங்கள்

திரைப்படங்களையோ, திரைப்பட நடிகர்களையோ பிரமித்து கட்டுரை வெளியிடுவது பூனைக்குட்டியின் வழக்கமல்ல. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் கூட்டணியின் பிரமாண்ட பொங்கல் வெளியீடான மாஸ்டர் திரைப்படத்துக்கு பூனைக்குட்டி வரவேற்பு தெரிவித்து கட்டுரை வெளியிட்டிருப்பது, சில நண்பர்களிடையே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா ஆபத்து முழுமையாக முற்றுப்பெறாத நேரத்தில், தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதை ஊக்குவித்தல் சரியா என்று அன்பான கண்டிப்புகள் வந்தன. சில விளக்கங்கள்...

படிக்க: வெல்கம் MASTER!

பூனைக்குட்டி தளத்தை, அதன் துவக்கம் முதல் தொடர்கிற நண்பர்களுக்குத் தெரியும்... ஒருபோதும் நமது வலைத்தளத்தில் மலிவான சினிமா கட்டுரைகள், விமர்சனங்கள், புகைப்படங்கள் வந்ததே இல்லை. சினிமா படங்கள், நடிகர்கள், நடிகைகள் குறித்து படங்களுடன் நிறைய கட்டுரைகள் வெளியிட்டால்... தளத்துக்கு வரும் நண்பர்கள் எண்ணிக்கை தாறுமாறாக எகிறும். ஆனாலும், அந்த உத்தியை ஒருபோதும் பூனைக்குட்டி கையாண்டது இல்லை.


மது தளத்தில் இதுவரை 27 சினிமா கட்டுரைகள் மட்டுமே வந்திருக்கின்றன (இதையும் சேர்த்தால், 28!). சினிமாவுக்கு நாம் கொடுக்கிற முக்கியத்துவம் இவ்வளவுதான். இதில், எதுவொன்றும், வழக்கமாக நாம் காண்கிற சினிமா ஆராதனை கட்டுரைகள் அல்ல. திரைப்படங்கள் பேசுகிற அரசியல், பேசாத அரசியல், பின்னணியில் இருக்கிற அரசியல் குறித்து கட்டுரைகள் தீட்டப்பட்டிருக்கின்றன. மாற்று சினிமாக்கள், நவீன சினிமா தொழில்நுட்பங்கள் போன்றவை விவரிக்கப்பட்டிருக்கின்றன. மற்றபடி, ரசிக மனநிலையில் எந்த திரைப்படத்தையும், நடிகர், நடிகைகளையும் துதிபாடி ஒரு கட்டுரை கூட இல்லை. தளத்தில் உறுதி செய்து கொள்ளமுடியும்.


ப்புறம் எதற்காக வெல்கம் MASTER? காரணம் இருக்கிறது. கொரோனா முடக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தொழில்கள் பட்டியலில் சினிமாவும் இருக்கிறது. இன்னமும் இயல்புக்குத் திரும்ப முடியாத தொழில்துறை அது மட்டுமே. அதை நம்பி பல்லாயிரம், பல லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன (அதுபற்றி வெல்கம் MASTER கட்டுரை விரிவாக பேசி விட்டது). இந்தத் துறையும் இயல்புக்குத் திரும்பவேண்டும் என்பது மட்டுமே கட்டுரையின் நோக்கம்.


தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி அளித்தாலும் கூட, பொதுமக்களிடையே அச்சம் முழுமையாக அகலவில்லை. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி விடவில்லை. மீண்டும் மக்களை தியேட்டர் நோக்கி இழுத்து வரச் செய்கிற ஆற்றல் ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமே உண்டு. மாஸ்டர் படம் அதைச் செய்திருக்கிறது. இந்தத் திரைப்படம் ஓடுகிற தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல... பொதுமக்களும் கூட குடும்பத்துடன் திரண்டு வந்து தடுமாற்றத்தில் இருக்கிற தியேட்டர், சினிமாத்துறைக்கு புத்துயிர் கொடுக்கிறார்கள்.


சினிமாவையும், தியேட்டரையும் நம்பி வாழ்கிற கடைநிலை தொழிலாளரும் இழந்த வாழ்க்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்பது தவிர, அந்தக் கட்டுரைக்கு வேறெந்த நோக்கமும் நிச்சயமாக இல்லை. அதுவும் குறிப்பாக, நட்சத்திர துதியாராதனை இல்லவே இல்லை. அதற்கான தேவைகளும் இல்லை. ‘‘சினிமாத்துறை மீண்டு வரவேண்டும் தான். அதற்காக, வெளிக்காற்று புகாத திரையரங்குகளில் கும்பலாக  அமர்ந்து படம் பார்ப்பது, மீண்டும் கொரோனா ஆபத்துக்கு வழிவகுத்து விடாதா?’’ என்று நண்பர்கள் கேட்டிருந்தனர். தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் மட்டுமே சினிமாவை அணுகவேண்டும் என கட்டுரை வலியுறுத்தியிருக்கிறது.



து வெறும் திரைவிமர்சனக்  கட்டுரை அல்ல. திரைத்துறை என்கிற மாபெரும் தொழில்துறை மீண்டும் அதன் இயல்புநிலைக்குத் திரும்ப கொடுக்கப்பட்டிருக்கிற தார்மீக ஆதரவு. அவ்வளவே. மற்றபடி... மூன்று மணிநேரம் ஓடுகிற மாஸ்டர் திரைப்படத்தை மிக தற்செயலாக பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை. 2020, ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இந்தப் படம், பத்து மாத இடைவெளிக்குப் பிறகு இப்போது வந்திருக்கிறது. இந்த பத்து மாத சந்தர்ப்பத்தில் பலமுறை போட்டுப் பார்த்து ஷார்ப்பாக ட்ரிம் செய்திருந்தால், படம் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் விஜய், விஜய் சேதுபதி

பெ
ரிதாக போட்டிகள் இல்லாததால், பல மடங்கு வசூலை வாரிக் குவித்து விட்டது. அதேசமயம், விஜய் ரசிகர்களைக் கூட முழுமையாக திருப்திப்படுத்துகிற படமாக இது இல்லை. சென்டிமென்ட், அட்வைஸ், பழிக்குப்பழி... என்று விஜய் வருகிற காட்சிகளில் ஸ்பெஷலாக எதுவும் இல்லை. விஜய் சேதுபதி வரும் காட்சிகள் தான் ஓரளவுக்கு விறுவிறுப்பாகவும், நிமிர்ந்து உட்காருகிற மாதிரியாகவும் இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது, விஜய்க்கும் கொஞ்சம் விறுவிறுப்பாக காட்சி எழுதியிருக்கலாம். மூன்று மணிநேர படத்தில் அட்வைஸ் / எமோஷனல் காட்சிகள் பலவற்றை கத்தரித்து, ஒரு அரைமணிநேரத்தை குறைத்தால், படத்தில் இன்னும் கொஞ்சம் வேகம் கிடைக்கலாம். அனிருத்தின் பாடல்களும், இசையும் தியேட்டரோடு சரி. வெளியில் வந்தப்பிறகு எதுவும் மனதில் இல்லை. விறுவிறுப்பான காட்சியமைப்புகள் மூலம் ஒரு சினிமாவை தொய்வின்றி நகர்த்தத் தெரிந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதனால் தான், கமல்ஹாசன் தனது அடுத்த படத்தை இயக்க இவரை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார். மாஸ்டர், லோகேஷ் படமாக இல்லை. விஜய் படமாகவும் இல்லை!


- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


4 கருத்துகள்:

  1. பலரின் வாழ்வாதாரத்தையும் மனதில் தாங்கிய பதிவு... விமர்சனமும் நிறை குறையோடு அருமை ... வாழ்த்துகள் சார்...

    பதிலளிநீக்கு
  2. மனதளவில் ஏதோ பாதிக்கப்பட்டது போல் தெரிகிறது... இருந்தாலும் தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  3. தம்பி அருமையான கட்டுரை. விஜய்யை பெரிய குடிகாரராக காட்டி இருக்க வேண்டாம். அவர் திருந்துவது போல் காட்டி இருந்தாலும் அது எடுபடாது. இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் குடிக்க ஆரம்பித்தால் என்ன ஆவது...? மற்றபடி திரைத்துறை மேல் உங்களுக்கு உள்ள ஆதங்கம் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. மாஸ்டர், லோகேஷ் படமாக இல்லை. விஜய் படமாகவும் இல்லை... ஆனால் விஜய் சேதுபதிக்கு பேட்ட "ஜித்து" போல் வெத்தாக இல்லாமல் விக்ரம் "வேதா" போல் கெத்தாக அமைந்து விட்டது... தமிழ் திரையுலகத்திற்கும் தான்!!!

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...