வியாழன், 6 டிசம்பர், 2018

மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் - 5.0

‘‘இப்ப என்ன பண்றது டாடி? இவன் இந்த 2048ல இருந்து தப்பிக்கவே முடியாதா...? இவனை இங்க இருந்து எப்படியாவது அனுப்பிடணும்...’’

‘‘இங்க இருந்து அனுப்பறதா...?’’ சில வினாடி மவுனத்துக்குப் பிறகு டாக்டர் சி பேசினார்... ‘‘அவனுக்கும் பிரச்னை இல்லாம, நமக்கும் தொந்தரவு வராம இருக்கணும்னா... ஒரே ஒரு வழிதான் இருக்கு எல்...’’

‘‘என்ன அது?’’

‘‘அவன் கதையை முடிச்சிடலாம்!’’


(தொடரின் முதல் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 1)

(தொடரின் இரண்டாம் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 2)

(தொடரின் மூன்றாம் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 3.0)


டைம் மெஷின் இல்லை. அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானியும் போய்ச் சேர்ந்து விட்டார். நான் எதிர்காலத்தில் தவிக்கிறேன். அவர் இறந்த காலமாகி விட்டார். சரி. இந்தக் காலத்திலேயே செட்டிலாகி, ஏதாவது கிடைக்கிற வேலையை பார்த்து பிழைப்பை ஓட்டலாம் என்றால்... உதார் கார்டு என்கிறார்கள்... பிரைன் மேப்பிங் என்கிறார்கள். இங்கும் தாக்குப்பிடிக்க முடியாது போல இருக்கிறது. இந்தக் கொடுமைக்கு, 201ல், மாறவர்மபாண்டியன் அரண்மனையில் பாய்சன் கேஸாகவே என் கதை முடிந்திருக்கலாம். அரண்மனைச் சாவு என்று ஒரு அந்தஸ்தாகவாச்சும் இருந்திருக்கும்...

யோசித்துக் கொண்டிருந்த போது, அறை வாசலில் நிழலாடியது. காவி ஆடையில் எல் உள்ளே நுழைந்தாள். ‘கதையை முடிக்க வருகிறாளோ...’ - மனது உதறலடித்தது. ‘ச்ச்சே... இருக்காது. மலைக்கு மாலை போட்டிருக்கிற சாமிகள், அதுவும் இவளைப் போன்ற கன்னி... ஒரிஜினல் கன்னி சாமிகள், கொலைப் பழிகளில் ஈடுபடமாட்டார்கள்’.

‘‘தூங்கலையா டி?’’ - நட்பாக கேட்டாள்.

‘‘தூக்கம் வரலை எல்...’’ சில வினாடிகள் மவுனத்துக்குப் பிறகு கேட்டேன்... ‘‘நான் இனி 2018 போறது கஷ்டம்தான் எல். பேசாம 2048லயே இருந்திடட்டுமா? இங்க ஏதாவது ஒரு வேலை பார்த்து காலத்தை ஓட்டிடுவேன்...’’

‘‘உன்னைய பார்க்க ரொம்ப பாவமா இருக்கு. ஏதோ காட்டுக்குள்ள சிக்கி முழிக்கிறவன் மாதிரி. ஆனா, காட்டுக்குள்ள சிக்கியிருந்தா கூட, ஜிபிஎஸ் வெக்டர் ஸ்பேஸிங் யூனிட் வெச்சி பத்திரமா தப்பிச்சிடலாம். நீ வாழ்ந்த 2018 மாதிரி இப்ப இல்லை டி. உன் காலத்துல இருந்த வேலை வாய்ப்புகள் எதுவுமே இப்பக் கிடையாது. இப்ப உலகம் ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ்ல தான் இயங்கிகிட்டு இருக்கு....’’

‘‘ஆர்டிபீஷியல் இன்டலிஜென்ஸ்னா...?’’

‘‘AI.. அது உனக்கு புரியாது. நீ 2018 காரன். கடைசி 20 வருஷத்துல இந்த உலகம் ரொம்ப, ரொம்ப, ரொம்ப மாறிடுச்சி. இப்ப உள்ள உலகத்தைப் பத்திச் சொன்னா, உன்னால புரிஞ்சுக்கக் கூட முடியாது. உனக்கு புரியிற மாதிரி சொல்லணும்னா... இது நீ வாழ்ந்த பூமி இல்லை. இது வேற புது கிரகம் மாதிரி. உன் காலத்துல போர் போட்டு தண்ணி குடிச்சிங்கதானே...?’’

‘‘ஆமா. அப்புறம் ஆர்ஓ வாட்டர் வந்திச்சி...’’

‘‘இப்ப நாங்க அட்மாஸ்ஃபியர்ல இருந்து தண்ணி உருவாக்கி குடிக்கிறோம். பயன்படுத்துறோம். போர் எல்லாம் போட்டு, பூமியில இருந்து எடுக்கமுடியாது. எடுக்கக்கூடாது...’’

‘‘ஏன் எடுக்கக்கூடாது?’’

‘‘அது அப்படித்தான். தண்ணீர் என்பது சர்வதேச சட்டத்தின் கீழ் இருக்கு. அதை நாம சுதந்திரமா உபயோகிக்க முடியாது. உனக்கு தெரியாது... இப்ப இது ஒற்றை உலகம். ஒரே சட்டம். ஒரே கரன்ஸி. ஒரே நடைமுறை. ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனா, சட்டம் உலகம் முழுக்க ஒண்ணுதான். வல்லரசு நாட்டின் அதிகார மையங்களோட விருப்பங்கள், உலகம் முழுமைக்குமான சட்டமா மாறிடும். நாம எல்லாம் அதுக்கு கட்டுப்பட்டு நடந்தா... இங்க வாழமுடியும். இல்லைனா...’’

‘‘வல்லரசுன்னா.... அமெரிக்காவா?’’

வள் பதில் சொல்லவில்லை. சிரித்தாள். ‘‘ரைட். இதெல்லாம் தெரிஞ்சு உனக்கு ஆகப்போறது ஒண்ணுமில்லை. உனக்கு ஒரே நாள் டைம். விடியறதுக்குள்ள எப்படியாவது தப்பிச்சிடணும். இல்லைனா...’’

‘‘என் கதையை முடிச்சிடுவீங்க. அப்படித்தானே...?’’


வள் சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். ‘‘அப்படி இல்லை டி. உன்னைய நாங்க சட்டவிரோதமாக வெச்சிருக்கோம். நீ இந்த காலத்து மனுஷன் இல்லைனு தெரிஞ்ச உடனே உன்னை அரசாங்கத்திடம் நாங்க ஒப்படைச்சிருக்கணும். அப்படி ஒப்படைச்சா, உன்னை வெச்சி ஆராய்ச்சி பண்றோம்கிற பெயர்ல சித்ரவதை பண்ணி கொன்னுடுவாங்க. ஒண்ணு தெரியுமா? நீ வாழ்ந்துகிட்டிருந்த, உன்னோட மூதாதையர்கள் வாழ்ந்துகிட்டிருந்த காலம்தான், இந்த பூமியோட பொற்காலம். நீ இந்த இயந்திர உலகத்தில வந்து மாட்டியிருக்கக் கூடாது. இங்க மனிதர்களை பார்க்கலாம். மனிதத்தன்மையை பார்க்கமுடியாது...’’

‘‘நான் என்ன வேணும்னா வந்தேன் எல்?’’

‘‘நம்மோட செயல்களில் கவனமா இருக்கணும் டி. எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. நாம கடந்துகிட்டிருக்கிற நாட்களில், ஏதோ ஒரு நாள், நம்மோட ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழா புரட்டிப் போட்டுரும். அது எந்த நாள்னு நமக்கு தெரியாது. ஆனா, கவனமா இருந்தா தப்பிச்சிடலாம்...’’

நான் எதுவும் பேசவில்லை.

‘‘நான் உனக்காக ரொம்ப யோசிச்சேன். ஒரு சின்ன நாட் கிடைச்சிருக்கு. ஆனா, அது எந்தளவுக்கு வொர்க் ஆகும்னு தெரியலை. உன்னைய நாங்க பார்த்த முதல் நாள்... ஹாஸ்பிடல் ஸ்ட்ராங் ரூம்ல உன்னோட பிரைன் ரீடிங் பண்ணோம். மானிட்டர்ல உன்னோட ஹிஸ்டரியை பார்த்தோம். சாமியப்பனும், நீயும் பேசின அந்த உரையாடல்ல, ஒரு முக்கியமான பார்ட். ஒரு எமர்ஜென்சி சிச்சுவேஷன்ல, இந்த டைம் மெஷினை வெச்சி எப்படி தப்பிக்கிறதுனு உனக்கு டீச் பண்ணார். அதை நீ சரியா மூளையில உள்வாங்காததால... எங்களால கிளியரா மானிட்டர்ல பார்க்கமுடியலை. அது மட்டும் கேட்ச் பண்ணிட்டா... நீ 2018க்கு போறதுக்கு வாய்ப்பு இருக்கு டி...’’

வள் சொன்னதும், தலையில் ரெண்டு குட்டு குட்டிக் கொண்டு யோசித்தேன். யோசித்தேன்... யோசித்தேன்... யோசித்துக் கொண்டே இருந்தேன். எதுவும் பிடிபடவில்லை.


‘‘ரொம்ப குழப்பிக்காத. அப்பா இப்ப வீட்ல இல்லை. உன்னை இன்னொரு முறை பிரெய்ன் மேப்பிங் செஞ்சு பாக்குறேன். சாமியப்பன் சொன்ன அந்த எமர்ஜென்சி எக்ஸிட் பாயிண்ட் மட்டும் ஞாபகம் வந்திடுச்சினா... நீ தப்பிச்ச!’’

வசர, அவசரமாக என்னை அழைத்துச் சென்று பெட்டில் படுக்க வைத்தாள். தலைக்கு மேலே ஏகப்பட்ட இயந்திர சமாச்சாரங்கள் என்னை உற்றுப் பார்த்தன. பக்கத்தில், நாம் மெகா சீரியல் பார்க்க பயன்படுத்துகிற அளவில் ஒரு பெரிய மானிட்டர். அதில் இருந்து இரு வயர்களை இழுத்து, என் தலையில் ஏதோ ஜெல் தடவி பொருத்தினாள். இதயத்தில் ஒரு வயர்.

‘‘ரைட். கண்ணை மூடிக்கோ...’’

மூடிக் கொண்டேன்.

‘‘இயல்பா இரு. நல்ல ஆழமா மூச்சை இழுத்து விடு.’’

யல்பாக இருந்தேன். ஆழமாக மூச்சை இழுத்து விட்டேன்.

‘‘இப்ப, நீ 2018ல இருக்க. ரைட்? புரபஸர் சாமியப்பனோட லேப்ல இருக்க. ஓகே.? உன்னோட டைம் மெஷின் திடீர்னு பிராப்ளம் ஆகிடுச்சின்னா... என்ன பண்றது, எப்படி அதை வொர்க் பண்ண வெக்கிறதுனு, சாமியப்பன் உனக்கு ஒரு எமர்ஜென்ஸி கோட் இப்பச் சொல்லப் போறார்.... அவர் சொல்றதை நல்லா கவனமாக கேளு. ரெடி... சாமியப்பன் பேச ஆரம்பிச்சிட்டார்... கேளு...’’

 ‘‘புரபஸர்... டைம் மெஷின்ல டிராவல் பண்ண ஆசையா இருந்தாலும் கூட, எனக்கு பாக்டீரியா, வைரஸ் அளவுக்குக் கூட சயின்ஸ் பத்தித் தெரியாதே,’’ என்றேன்.

 ‘‘அதுதான் எனக்கு வேணும் டைகர். சயின்ஸ் நல்லா தெரிஞ்ச ஆளா இருந்தா, எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஏதாவது செஞ்சு, காரியத்தைக் கெடுத்திடுவான். உன்னை மாதிரி ஒண்ணும் தெரியாத ஆளுதான், சொல்ற விஷயத்தை கரெக்டா புரிஞ்சிகிட்டு, கச்சிதமாக வேலையை முடிப்பான்.’’ - முதல் பாகத்தில் நானும், சாமியப்பனும் பேசியது வீடியோ போல எனது மனதிலும், பக்கத்து மானிட்டரிலும் ஓடியது. அரை கண்களை லேசாக திறந்து பார்த்தபோது, பக்கத்து மானிட்டரில் சாமியப்பனின் நரைத்த முடி தோற்றம் மங்கலாக தெரிந்தது.


 ‘‘பயப்படவே வேண்டாம் தம்பி. இது ரொம்ப ஈஸி. இங்கிருந்து பஸ் பிடித்து விருதுநகர் போய் திரும்புவதை விடவும் சுலபம்.’’

 ‘‘சுலபமாகவே இருக்கட்டும் சார். போகப்போறது விருதுநகர் இல்லையே. கி.பி. 201ல மனிதர்கள் எப்படி இருப்பாங்க; என்ன மொழி பேசுவாங்க எதுவும் எனக்குத் தெரியாதே...’’

 ‘‘டைகர்னு பேர் வெச்சிக்கிட்டு இப்படி பயப்படலாமா டைகர்?’’
- நானும் அவரும் பேசிய அடுத்தடுத்த காட்சிகள் நினைவுக்கு வந்து கொண்டிருக்கும் போதே... சட்டென கரண்ட் கட் ஆனது போல, மூளை ஒரு கலங்கு கலங்கி... 201ல் மாறவர்மபாண்டியனின் அரண்மனை சீக்வன்ஸ் காட்சிக்கு வந்தது.

க்கென கண்களைத் திறந்தேன்... ‘‘ஸாரி எல். இவ்வளவுதான் ஞாபகம் வருது. சாமியப்பன் சொன்ன அந்த சீக்ரெட் கோட் ஞாபகம் வரலையே...’’

‘‘நோ ப்ராப்ளம்... இன்னொரு டிரை பண்ணலாம்...’’

மீண்டும் மானிட்டரை இயக்கி, ‘‘கண்களை மூடிக் கொண்டு இயல்பா இரு. நல்ல ஆழமா மூச்சை இழுத்து விடு.’’ என்றாள். பழைய வீடியோதான் இம்முறையும் ஓடியதே தவிர... சீக்ரெட் கோட் மட்டும் வரவே இல்லை.

வெறுத்துப் போய் பெட்டில் இருந்து எழுந்து உட்கார்ந்தேன். எனக்கெதிரே எல் படு அப்செட்டாக எழுந்தாள். ‘‘ச்சே... கடைசி வாய்ப்பும் போச்சு. ஒரு விஷயத்தை ஒழுங்கா கேட்டு ஞாபகம் வெச்சிக்க மாட்டியா...? இனி உன் கதை அவ்வளவுதான் போ...’’ கோபமாக நகர்ந்தாள்.

‘‘என் கதை அவ்வளவுதானா...?’’ கிளைமாக்ஸ் நெருங்கியதும் வீராவேசம் கொள்ளும் தமிழ் சினிமா ஹீரோக்கள் போல, எனக்குள் எனர்ஜி லெவல் ஜிவ்வென எகிறியது. ‘‘நோ...’’ நான் போட்ட சத்தம் கேட்டு எல் திடுக்கிட்டு திரும்பினாள்.

‘‘இல்லை எல். நான் 2018க்கு போறது உறுதி...’’

‘‘எப்பிடிர்றா...’’ எல் நம்பமுடியாமல் கண்களை விரித்து அதிசயப்பட்டு கேட்டாள்.

‘‘உன்னோட டெஸ்ட் எல்லாம் வேஸ்ட். நான் நம்புறது கோஸ்ட்...’’

‘‘இதென்ன புதுக் குழப்பம்...’’

‘‘ஒய்ஜா போர்டு தெரியுமா... ஒய்ஜா போர்டு?’’

‘‘கேள்விப்பட்டிருக்கேன். இறந்தவங்களோட ஆவிகளோட பேசுறதுக்கான ஒரு மீடியம். ரைட்?’’

‘‘கரெக்ட். அதை வெச்சி, சாமியப்பனோட ஆவிகிட்டயே பேசிறப் போறேன். உங்க பேச்சைக் கேட்டு 2048ல சிக்கி சின்னாபின்னமாகி நிக்கிறேன் புரபஸர். காப்பாத்துங்கனு உதவி கேக்கப் போறேன்...’’

‘‘இதெல்லாம் சுத்த ஹம்பக். நம்பற மாதிரி இல்லை. எனக்கு நம்பிக்கையும் இல்லை. சரி. உன் ஆசையை கெடுக்கலை. எப்படியோ நீ தப்பிச்சா சரி. என்ன பண்ணனும் சொல்லு...’’

க்கத்து சுவரில் மாட்டியிருந்த ஒய்ட் போர்டை கழட்டி தரையில் படுக்கை வசத்தில் பரப்பினேன். ‘‘மார்க்கர் கொடு...’’ கேட்டு வாங்கி... போர்டில் ஏ முதல் இசட் வரை, 1, 2, 3, எஸ், நோ என ஒரு ஒய்ஜா போர்டை அவசர அடியில் தயார் செய்தேன்.

‘‘ஒரு கேண்டில் மட்டும் இருந்தா போதும்...’’

‘‘அய்யோ. அதெல்லாம் இப்ப புழக்கத்தில் இல்லையே டி...’’

‘‘சரி. பிரச்னை இல்லை. உன்னோட பூஜை ரூம்ல இருந்து ஒரு விளக்கு கொடு...’’

கொடுத்தாள். போர்டின் நடுவில் வைத்தேன். பெரிய கிளாஸ் எடுத்து அந்த விளக்கை மூடினேன்.

கிளாஸ் மீது கை விரலை வைத்தோம். ‘‘கண்ணை இறுக்க மூடி, சாமியப்பனோட ஆவியை மனசுல நெனச்சிக்கோ...’’

‘‘சாமியப்பனையே எனக்கு தெரியாது. அவரோட ஆவியை எப்படி தெரியும்?’’

‘‘ப்ச்ச்... நான் தப்பிக்கணும்னு ஆசைப்பட்டா... அவரோட ஆவியை மனசுல நெனச்சுக்கோ..’’

‘‘ஓ.கே.’’

சாமியையும், சாமியப்பனையும் சேர்த்தே கும்பிட்டு விட்டு, ஒய்ஜா போர்டில் கவனம் பதித்தேன்... ‘‘புரபஸர்... நான் பேசுறது கேக்குதா? நான் தான் உங்க டைகர்...’’

ம்ளர் நகர்வதாக இல்லை.

‘‘புரபஸர்... நீங்க செஞ்சு கொடுத்த டைம் மெஷின்ல ஏறி மாறவர்மபாண்டியனை பார்க்கப் போனேன்... ஞாபகம் வருதா?’’

ம்ளர் அப்படியே இருந்தது.

‘‘புரபஸர் சார்... இப்ப நான் 2048ல மாட்டிகிட்டேன். டைம் மெஷின் படுத்துருச்சி. எப்படி தப்பிக்கிறது?’’

ம்ளர் துளி அசைவின்றி இருந்தது.

‘‘புரபஸர்... நீங்க மனசு வெச்சா மட்டும்தான் நான் 2018க்கு திரும்ப முடியும்... ப்ளீஸ்...’’

ம்ளர் குத்துக்கல்லாக நின்றது.

‘‘யோவ் வெட்டி ஆராய்ச்சி சாமியப்பன். என் பொழைப்பில மண்ணைப் போட்டுட்டியேய்யா... இப்ப நான் எப்படி 2018 போறது? உன் ஆராய்ச்சி ஆர்வத்துக்கு நான்தானா ஊறுகாய்?’’ - கொதித்தெழுந்து கத்த...

ர்ர்ர்ர்ர்...ரென எனக்கு பின்னால் இருந்து டால்பி ஆரோ சவுண்ட் எஃபெக்டில் ஒரு உறுமல் சத்தம் கேட்டது. நானும், எனக்கெதிரே எல்லும் திடுக்கிட்டு, வியர்த்து, விறுவிறுத்து திரும்பிப் பார்த்தோம். சுவரில் மாட்டியிருந்த ஸ்பீக்கர் பழைய கால கடிகார பெண்டுலம் போல இடதும், வலதுமாக படு வேகத்தில் ஊசலாடியது. அதில் இருந்து அந்த கர்ர்ர்ர்ர்ர் சத்தம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

‘‘அய்யய்யோ... டி.. நான் போறேன். பேய், பிசாசெல்லாம் நிஜமேதானா...? எனக்கு பயமா இருக்கு...’’ - எல் வேக, வேகமாக எந்தரித்தாள்.

‘‘டை..........கர்...’’ - சாமியப்பனின் குரலேதான்...

‘‘மண்குதிரையை நம்பி ஆத்துல இறங்கின மாதிரி, உன்னைய நம்பி, ஆராய்ச்சில இறங்கினேன் பாரு... என் மூளைய, உனக்கு முன்னால உட்கார்ந்திருக்காளே... அவளோட செருப்பை வாங்கித்தான் அடிக்கணும்...’’ - சாமியப்பனின் கோபத்தில் நியாயம் இருப்பது போல தோன்றினாலும், எல் முன்பாக அவர் எனது இமேஜை டேமேஜ் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

‘‘புரபஸர் சார்.. கோபப்படாதீங்க...’’ எனது சார்பாக எல் அந்த ஸ்பீக்கரை பார்த்து பேசினாள். ‘‘இப்ப இவனை பத்திரமா 2018க்கு அனுப்பணும்னா உங்க உதவி தேவை. ப்ளீஸ் ஹெல்ப். நீங்க மட்டும் இந்த ஹெல்ப் பண்ணா, நானும் என்னோட டாடியும் அடுத்து நாங்க கண்டுபுடிக்கிற பயோ டார்னிஷிங் விஷூவல் மாடுலன்ஸூக்கு உங்க பேர் வெச்சிடறோம்...’’

ஸ்பீக்கரின் இடது, வலது ஆட்டம் நின்றது. சாமியப்பன் யோசிப்பாராய் இருக்கும்.

‘‘ஓகே. நான் என்ன பண்ணனும்...’’ - சாமியப்பனின் ஸ்பீக்கர் குரலில் கடுமை குறைந்திருந்தது. விளம்பர வெறி மனிதனை மட்டுமல்ல... ஆவிகளையும் கூட விட்டு வைக்காது போல.

‘‘டைம் மெஷின் காலாவதி ஆகிடுச்சி புரபஸர். இப்ப என்ன பண்றது?’’

‘‘அப்பவே சொல்லிக் கொடுத்தனே... ஒழுங்கா கேக்கறது இல்லையா? 2018ல் சொல்லிக் கொடுத்த மேட்டருக்கு, 2048லயா வந்து டவுட் கேப்ப?அதுவும் செத்து சுண்ணாம்பானப் பிறகு...?’’

நான் கப்சிப்.

‘‘சரி... விடு. இப்படியெல்லாம் வரும்னு எதிர்பார்த்துத்தான் ஒரு எமர்ஜென்சி எக்ஸிட் கோட் கிரியேட் பண்ணி வெச்சிருந்தேன். அதை டைம் மெஷின் நேவிகேஷன் மானிட்டர்ல டைப் பண்ணு. பண்ணிட்டனா, அதோட பேட்டரியோட எக்ஸ்ட்ரா பவர், இனிஷியேட் ஆகி, கடைசியா ஒரு தடவை ஸ்டார்ட் ஆகும். நொடி நேரத்தை வீணாக்காம, உடனடியா ஓடிப்போய் ஊர் சேர்ந்திடு...’’

2018 போலவே, அதே கண்டிப்புக் குரலில் உத்தரவிட்டார். அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தபடியே, ‘‘சரி, அந்த சீக்ரெட் கோட் சொல்லுங்க புரபஸர்; நோட் பண்ணிக்கிறேன்...’’ என்றேன்.

‘‘ஞாபகம் வெச்சிக்கிற மாதிரி, சின்ன பாஸ்வர்ட் தான். நல்லா கேட்டுக்கோ... ஜீபூம்பா. இதுதான் சீக்ரெட் கோட். எங்க சொல்லு பாப்பம்...’’

‘‘பூஜீம்பா...’’

‘‘நீ இந்த ஜென்மத்துல 2018க்கு போக மாட்ட...’’

‘‘புரபஸர், கோபப்படாதீங்க. நான் கத்துக் கொடுத்து, அனுப்பி வெச்சிடறேன்...’’ - எல் என்டர் ஆனதும் சமாதானமடைந்தார் சாமியப்பன்.

‘‘பார்த்து பத்திரமா போய்ச் சேருப்பா... வரட்டா....’’ - சுவரில் மாட்டியிருந்த ஸ்பீக்கர் மீண்டும் அதன் இயல்பு நிலையடைந்தது. கர்த்தருக்குள் நித்திரையடைந்து விட்டார் போலிருக்கிறது.

‘‘ரைட் டி. இனி நிமிஷ நேரம் வீணாக்கக்கூடாது. கம்மான்...’’ என்னை தட்டி எழுப்பினாள். ஒரு வினோத வடிவ நாற்காலியை கொண்டு வந்து போட்டாள். ‘‘இதில உட்கார்ந்துக்கோ. இந்தா உன்னோட டைம் மெஷின். உன்னோட பாக்கெட்டில இருந்து எடுத்து பத்திரமா வெச்சிருந்தேன்...’’

டைம் மெஷின் பவர் பட்டனை லாங் பிரஸ் செய்து உயிர்ப்பித்தேன். நேவிகேஷன் மானிட்டர் பச்சையாக ஒளிர்ந்தது. கோட் வேர்ட் டைப் செய்தால் முடிந்தது. மீண்டும்... 2018. எனக்கு திடீரென ஏனோ 2048ஐ விட்டுச் செல்ல மனம் கனத்தது.

‘‘எல், இன்னும் ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போகட்டா...’’

‘‘ரொம்பக் கஷ்டம். ஆபத்தும் கூட. கவர்மென்ட் கையில சிக்கின... தொலைஞ்ச...’’

‘‘2048ல, மதுரை எப்படி இருக்கும்னு சுத்திக் கூட பாக்கலையே எல்?’’

‘‘அதான், திரும்ப வருவேல்ல...? நாம திரும்ப மீட் பண்ணுவோம்ல... அப்ப நல்லா சுத்திப் பார்க்கலாம். அடுத்து வரும்போது, விண்ஃபீல்டுல ஊர் சுத்தலாம். இப்ப டைம் வேஸ்ட் பண்ணாம, ஓவரா ஃபீல் பண்ணாம ஊர் கிளம்புற வழியைப் பாரு...’’

‘‘டைம் மெஷின் இதோட அவ்வளவுதான். இனி எப்படி நான் 2048க்கு வரமுடியும் எல்?’’ முகமெல்லாம் சோகமாகக் கேட்டேன்.

‘‘அடேய் 2018 காரா....., இன்னும் 30 வருஷம் கழிச்சு, நீ எப்படியும் 2048க்கு வந்துதான ஆகணும். நம்பிக்கையோட கிளம்பு. நான் உன்னைய மறக்க மாட்டேன். என்னோட பிரெய்ன்ல இன்ஸ்டால் பண்ணியிருக்கிற நியூரான் டைரில உன்னோட நினைவுகளை குறிச்சு வெச்சிக்கறேன். 30 வருஷம் கழிச்சு நாம கண்டிப்பா மீட் பண்ணுவோம்... குட்-பை...’’

‘‘ஒரு காபி குடிச்சிட்டு கிளம்பட்டுமா...?’’

ன் கையில் இருந்த டைம் மெஷின் நேவிகேஷன் மானிட்டரை தொட்டு அழுத்தி, ஜீ... பூ... ம்... பா... - அவளே எழுத்துகளை அழுத்த... அந்த மைக்ரோ செகண்டில்... நாற்காலியில் அமர்ந்திருந்த எனது உடல் ஒரு வினாடி பயங்கரமாக உதறி குலுங்கியது. கண்களுக்குள் ஆயிரம், ஆயிரம் நட்சத்திரங்கள் மின்னி ஒளிர்ந்தன. பல்லாயிரம் மடங்கு வேகத்தில் ராட்டினம் சுற்றுவது போல இருந்தது. நான் 2048ல் இருந்து விடைபெறப் போகிற மிக, மிகக் கடைசி வினாடி என்று புரிந்தது. கடைசியாக ஒருமுறை அவள் முகம் பார்த்து... ‘‘30 வருஷம் கழிச்சு, மறந்திடாம, கட்டாயம் என்னைய மீட் பண்ணுவியா எல்...’’ என்று நான் கேட்டு முடிப்பதற்குள்... அல்லது கேட்க நினைப்பதற்குள்...

‘‘எங்கடா மச்சான், ஒரு வாரமா ஆளையே காணோம். ஊரெல்லாம் உன்னை தேடிகிட்டு இருக்கோம்...’’ - டவுன்ஹால் ரோட்டில் தற்செயலாக எதிரே சந்தித்த நண்பன் என் கைகளை அழுத்திப் பிடித்த படி கேட்டான்!


(மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்... - இப்போதைக்கு - முற்றும்!)

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் - 

7 கருத்துகள்:

 1. அட்டகாசம்..... அபார கற்பனை திறன்...

  வாழ்த்துகள் பல...

  பதிலளிநீக்கு
 2. சூப்பர் சார். இன்னும் சில வாரங்கள் கதை வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். டைகர், எல், சாமியப்பன் கதாபாத்திரங்களை மறக்கவே முடியாது.

  பதிலளிநீக்கு
 3. சங்கரசுப்பிரமணியன், கோவைபுதூர்6 டிசம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:16

  மாறவர்மபாண்டியன் - மறக்கமுடியாத பாண்டியன். எல், டைகர் நினைவில் நிற்கிறார்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. Excellent story..
  Excellent writing.
  Enjoyed very much.

  பதிலளிநீக்கு
 5. இன்னும் சில வாரங்கள் பயணப்பட்டிருக்கலாம்.
  ஆனாலும் உங்கள் கற்பனை திறன்
  அருமை
  அதுவும் தற்போது நடக்கும் நிகழ்வுகளோடு இணைப்பது
  இளையராஜா பாடல்களில் இடையில் ஒலிக்கும் லல்லல்ல லல்லல்லல போன்று அபாரம்.

  பதிலளிநீக்கு
 6. அற்புதமான தொடர் தோழர். சிரி்கக மட்டுமல்ல. சிந்திக்கவும் வைத்து விட்டிர்கள். இன்னும் சில வாரங்கள் தொடர் நீண்டிருக்கலாம் என தோன்றுகிறது. நகைச்சுவை எழுத்தின் மூலம், சமூக ்ககருத்துக்களை சொல்லும் உங்கள் யுக்தி தொடரவும், வெற்றியடையவும் வாழ்த்துகிேிறன்.

  நெல்லை சத்யா

  பதிலளிநீக்கு
 7. நல்ல கற்பனை. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...