ஞாயிறு, 14 மே, 2017

பூமி மனிதருக்கு சொந்தமல்ல... மனிதர் தான் பூமிக்கு சொந்தம்!

‘‘பூமி மனிதருக்குச் சொந்தமல்ல; மனிதர்கள்தான் பூமிக்குச் சொந்தம் (The Earth does not belong to man; Man belongs to the Earth)’’ - இது, திணையியல் கோட்பாடுகளின் ஒற்றை வரி சாராம்சம். இந்த ஒற்றை வரிக்குச் சொந்தக்காரர்... முகங்களில் வரி, வரியாக நிறையச் சுருக்கம் விழுந்த ஒரு செவ்விந்திய பழங்குடி மனிதர் என்றால் நம்பமுடிகிறதா? இந்த ஒற்றை வரிக்குப் பின்னால் இருக்கிறது ஒரு கதை. பொருளாதார வல்லாதிக்க சக்திகள், இந்த பூமியை, அதன் மடியில் தவழ்கிற ஆதிவாசி மக்களை எப்படி சூறையாடி, துவம்சம் செய்து விடுகிறார்கள் என்பதை விளக்குகிற கதை!


வருமா உலகப்போர்?


சூழல் அறிவியல் (Environmental Science) இன்று உலகின் பாடுபொருள். உலக நாடுகள் உச்சி மாநாடுகள் நடத்தி சூழல் பாதுகாப்பு குறித்து விவாதித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில், எந்தெந்த நாடுகள் அதிகம் சூழலை வதம் செய்கின்றனவோ... அவைதாம் அதிக கவலையுடன் விவாதம் நடத்துகின்றன. நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்கே போய்க் கொண்டிருக்கிற அபாயமான காலகட்டம் இது. அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகவே என்று மரத்தடி ஜோதிடம் போல சூழலியல் காரர்கள் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். பழந்தமிழர் வாழ்வியல் முறை படித்தால் போதும், அடுத்த உலகப்போரை வராமல் தடுத்து விடலாம்.

நீர் மேலாண்மையைப் பொறுத்தளவில், நம்மவர்களை அடித்துக் கொள்ள யவனத்திலோ... புவனத்திலோ, எங்குமே ஆளில்லை. நீர்நிலைகளை 47 வகைகளாகப் பிரித்து வைத்ததுடன் (இந்தத் தொடரில் விரிவாக படித்திருக்கிறோம்... மறந்திருக்காதுதானே?) அதை பாதுகாப்பது, பராமரிப்பது, பங்கிடுவது என சகலமும் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

‘‘குளந்தொட்டு கோடு பதித்து, வழி சித்து
உளந்தொட்டு உழவயலாக்கி - வளந்தொட்டு
பாடு படுங்கிணற் றோடென்றிவ்வைம் பாற்
கடுத்தான் ஏகுசுவர்க்கத் தினிது...’’

- ஒரு ஏரியை எப்படி அமைக்கவேண்டும் என்று இந்தப் பாடலில் (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான) சிறுபஞ்சமூலம் விளக்கம் தருகிறது. நீர் நிர்வாகம் பற்றி நம்ம ஊரில்தான் பாடம் படிக்கவேண்டும் என்கிறார் சர்வதேச நீரியல் நிபுணர் சான்ட்ரா போஸ்டெல் (Sandra Postel is director of the Global Water Policy Project, Freshwater Fellow of the National Geographic Society, and author of several books, including Pillar of Sand: Can the Irrigation Miracle Last? and numerous articles on global water issues).

யார் இந்த சுக்வாமிஷ்?


ந்த பூமி இன்றைக்கு எதிர்கொள்கிற மிகப்பெரிய பிரச்னை - காடுகள் அழித்தல். பொதுமக்கள் நலனுக்காக, பொருளாதார வளர்ச்சிக்காக... என்று உதவாத காரணங்கள் சொல்லி, இயற்கை அழிக்கப்படுகிறது.
ஆதிகாலம் தொட்டு இயற்கையோடு இரண்டறக் கலந்து அங்கு வாழும் ஆதிவாசி மக்களின் வேர்கள் பிடுங்கப்படுகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் (Seattle, Washington) துறைமுக வர்த்தக நகரத்தின் ஆதி மனிதகுல வரலாறு தெரியுமா? செவ்விந்திய பழங்குடி சுக்வாமிஷ் (Suquamish) இனக்குழு வசித்து வந்த பகுதி இது. பிரிட்டன் கடற்படை அதிகாரி ஜார்ஜ் வான்கூவர் (Captain George Vancouver) புதிய நிலப்பரப்பு கண்டறியும் தனது கடற்வழிப் பயணத்தின் போது 1792ல் இந்தப்பகுதியை கண்டுபிடிக்கிறார்.

மெரிக்காவின் 14வது ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் பியர்ஸ்க்கு (Franklin Pierce, 14th President of the United States, In office: March 4, 1853 -– March 4, 1857) இந்த ஏரியா மீது ஒரு கண். ஒரு விலை கொடுத்து சுக்வாமிஷ் பழங்குடிகளை அகற்றிவிட்டு, அந்தப்பகுதியை துறைமுக நகரமாக்க திட்டமிடுகிறார். அதிகாரிகளை அனுப்பி, ஆதிவாசி மக்களின் தலைவரான சியாட்டிலிடம் (Chief Seattle 1786 – June 7, 1866) - பின்னாளில், இவர் பெயரே அந்த நகருக்கு சூட்டப்படுகிறது - பேச்சுவார்த்தை நடத்துகிறார். வல்லாதிக்க அமெரிக்காவின் பேச்சை மீற முடியுமா? மீறினால்... அந்த ஆதிவாசிகள் கதி என்ன? ஆதிவாசி இனக்குழு தலைவர் சியாட்டிலுக்கு அது புரிகிறது. ஜனாதிபதி பியர்ஸ்க்கு உருக்கமாக அவர் ஒரு கடிதம் எழுதுகிறார்...

பூமியை வாங்கமுடியுமா?

மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்களே...

இந்த பூமி மனிதருக்குச் சொந்தமல்ல; மனிதர்கள்தான் பூமிக்குச் சொந்தம். மனிதனது பேராசை மிக்க செயல்கள், பூமியை வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக ஒரு நாள் மாற்றிவிடும்.

பூமித்தாய்க்கு என்னவெல்லாம் நிகழ்கின்றனவோ, அதெல்லாம் அவனது குழந்தைகளுக்கும் நடக்குமில்லையா? பூமியை தாய் என்று எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். அதை நீங்களும் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

நிலத்தை எப்படி விலைக்கு வாங்க / விற்கமுடியும்? காற்றும், நீரும் எங்கள் சொத்துக்கள் அல்ல. தாயாகிய பூமியையும், சகோதரனாகிய விண்ணையும் ஆடு, மாடு போல வாங்கி விற்கமுடியுமா என்ன? (Humans need to remember that they do not create or sustain Mother Earth. Mother Earth creates and sustains us. Instead of seeking to dominate and control Earth, we need to respect and cooperate with Earth and our fellow inhabitants - including animals and plants).


- அந்த பழங்குடியின தலைவனின் கடிதம் இப்படியாக விரிகிறது. இந்தக் கடிதத்தின் வரிகளைப் படித்தீர்களா? அவை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பறம்புமலையை ஆண்ட நமது பாரி மன்னன் பேசியதன் சாரம் என்பது தெரியுமா? புவி பாதுகாப்பு குறித்த சூழலியல் அக்கறையுடன், யவன வணிகர்களுக்கு அவன் ஆற்றிய உரையை சங்க இலக்கியங்களில் நீங்கள் படித்ததுண்டா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

4 கருத்துகள்:

  1. ஆவலுடன் தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கட்டுரை நன்றாக உண்மையை எடுத்து உரைக்கிறது.எப்படி என்றால் ,சமீபத்தில் நான் அந்தமான் சென்று இருந்தேன்.அங்கு ஆதிவாசிகள் வசிப்பிடம் வழியாக காடுகளை அழித்து அதன் வழியாக 25 ஆண்டுகளுக்கு முன்பாக சாலை ஏற்படுத்தி உள்ளனர்.ஆனால் இப்போது கண்டு பிடித்து உள்ளனராம் ,அந்த சாலை இல்லாமல் வேறு வழியாக மிகவும் பக்கமாக ஆதிவாசிகளையும்,காட்டையும் தொந்திரவு செய்யாமல் சாலை ஏற்படுத்தி கொண்டிருக்கலாம் என்று.என்ன செய்ய ,இந்த சாலையினால் காடும் அழிந்து கொண்டு உள்ளது.ஆதிவாசிகளும் எண்ணிகையில் குறைந்து விட்டனர்.விட்டு இருந்தால் காட்டை ஆதிவாசிகள் பார்த்து கொண்டு நன்றாக இருந்திருப்பார்கள்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...