புதன், 10 மே, 2017

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!


 குடிநீருக்காக குடங்களுடன் பெண்கள் நீள்சாலைகளில் வெயிலை ஊடறுத்து நடந்து கொண்டிருக்கிறார்கள். தண்ணீருக்கு வழியின்றி, விவசாயிகள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் பரிதவிப்பான இந்தக் காட்சிகள். மறுபுறம், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுகிறது. பாலாற்றைத் தடுத்து ஆந்திரம் அணை கட்டுகிறது. பெரியாற்றில் புதிய அணைக்கு கேரளம் ஆயத்தம் செய்கிறது. பிரச்னை, இன்டர்நேஷனல் லெவலிலும் தொடர்கிறது. பிரம்மபுத்ராவின் குறுக்கே மெகா அணை கட்டுகிறது சீனா. ‘அணை கட்டுறது நல்லதுதானங்க? தண்ணீரை சேமிச்சு, எதிர்கால தேவைக்கு வெச்சுக்கலாமே? அது ஒரு தப்பா?’ என்று சிலர் மடக்குப்பிடி போடலாம். கேள்வியில் நியாயம் இருப்பது போலத் தெரிந்தாலும்... அதிக நியாயங்களில்லை சகோஸ்!



விபரீத சவால்!


ரு கரைகளை மீறி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய அந்த கருப்பு வெள்ளை காலங்களில், உபரி நீரை சேமிக்க நீர்நிலைகள் அமைக்கப்பட்டன. நமது இலக்கியங்களில் உதாரணம் இருக்கிறது. அன்றைக்கு அது சரியும் கூட. நதிகள் பிளாட்டுகளாக மாறி விட்ட இன்றைய அபாய காலகட்டத்தில் புதிய அணைகள் என்பவை, எதிர்காலத்தின் மீது இடப்படுகிற கேள்விக்குறிகள். தவிரவும், இயற்கை சமநிலைக்கு எதிரான விபரீத சவாலும் கூட. எப்படி?

வான் சிறப்பு!

ழை பெய்து, அந்தத் தண்ணீர் சீராக ஓடி கடலில் கடக்கவேண்டும். இது இயற்கை வகுத்து வைத்திருக்கிற நியதி. ஆற்றில் தவழ்ந்து செல்கிற தண்ணீர், பூமியில் படிந்திருக்கிற பல வகை தாதுக்களையும் வாரி எடுத்துக் கொண்டு கடலுக்குச் செல்கிறது. இந்தத் தாதுக்கள், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஊட்டம் வழங்குவதுடன், கடலின் இயல் சமநிலை கெடாமலும் பாதுகாக்கின்றன. அடிக்கு ஒன்றாக அணை கட்டி, மழைத் தண்ணீர் கடலுக்குப் போகாமல் தடுத்து விட்டால்... கடல் வளம் கெட்டுப் போகும். மீன் வளம் குறையும். இன்னும் பிற எதிர்மறை விளைவுகள் ஏற்படும். மழை நீர், கடலில் சென்று சேரவேண்டும் என்பது சூழலியல் அறிவியல். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய திருக்குறளில் (வான் சிறப்பு: 17) இந்த சூழல் அறிவியல் விளக்கப்பட்டிருக்கிறது.

‘‘நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான்நல்கா தாகி விடின்’’

- முறையான மழை பெய்யாவிட்டால், அந்த மழை நீர் கடலைச் சென்று சேராவிட்டால், மாபெரும் சமுத்திரமாக இருந்தாலும் கூட, அது தனது வளத்தை இழக்கும் என்கிறார் வள்ளுவர். முல்லையும், குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பிழந்து, நடுங்கு துயருறுத்து, பாலையென்பதோர் படிவம் கொண்டது, இப்படித்தான் மக்களே.

‘கரு’ இதுதான்!

பாலை நிலத்து மக்களின் தெய்வம் கொற்றவை. பருந்து, கழுகு மாதிரியான பறவைகள் வசித்திருக்கின்றன. வழிப்பறி, சூறையாடுதல் - இதுதான் ஏரியா மக்களின் பிரதான தொழில். வழிப்பறி மூலம் வருமானம் பார்த்து, பிழைப்பு ஓட்டியிருக்கிறார்கள். இவர்கள் ஆறலைக் கள்வர் (ஆறு + அலை + கள்வர் = வழியில் மறித்துத் துன்புறுத்துகின்ற திருடர்) என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் எக்கச்சக்கமாக குறிப்புகள் இருக்கின்றன.

‘‘கான்உயர் மருங்கில் கவலை அல்லது
வானம் வேண்டா வில்ஏர் உழவர்
பெருநாள் வேட்டம் கிளைஎழ வாய்த்த
பொருகளத்து ஒழிந்த குருதி...’’ (அகநானூறு- 193: 1-4)

அடர்ந்த காட்டில், கூட்டமாகக் கிளம்பிப் போய் வியாபாரிகள், வழிப்போக்கர்களை தாக்கி, படுகாயப்படுத்தி கொள்ளையடிப்பது இவர்களது வேலையாம் (!?).

தலைவி... தலைவிதி!

ந்த ஏரியாவில் ஒரு பொண்ணோ, பையனோ... பிரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து ஓகே ஆகி விட்டது என்றால்... தலையைச் சொறிந்து கொண்டு அப்பா, அம்மாவிடம் சம்மதத்துக்கு காத்திருப்பதில்லை. யாருக்கும் தெரியாமல் ராவோடு ராவாக எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்! இதற்கு உடன்போக்கு எனப் பெயராம்.

‘‘சென்றனள் மன்றஎன் மகளே
பந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே...’’

- ‘‘கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வளத்தேனே... இப்படி சொல்லாமக் கொள்ளாம ஓடிட்டாளே... இப்ப நான் என்ன பண்ணுவேன்? பந்து, பாவை, கழங்கு... அவ வெச்சு விளையாடின பொருளைப் பாக்கும் போதெல்லாம், ஞாபகம், ஞாபகமாக வருதே. அய்யோ, நான் என்ன பண்ணுவேன்...’’ என்று, ஓடிப் போன மகளை நினைத்து ‘பாலை’ தாய் புலம்புவதை ஐங்குறுநூறு (377) பதிவு செய்திருக்கிறது.

பாலை நிலத்தின் கருப்பொருளாக தொல்காப்பியம் குறிப்பிடும் மேற்கண்ட விஷயங்கள், அந்த நிலப்பரப்பின் மீது ஒரு நல்ல இமேஜை ஏற்படுத்துவதாக இல்லைதானே? அடுத்து மன உணர்வுகளைக் காட்டுகிற உரிப்பொருள் - பிரிதலும், பிரிதல் நிமித்தமும். காலையில் கிளம்பி, மாலையில் திரும்புகிற வேலையா திருட்டும், கொள்ளையும்? வீடு வந்தால்தான் ஆச்சு. சிக்கினால் பெண்டு நிமிர்த்தி விடுவார்கள். அதுவும் அடிக்கடி நடக்கும். தலைவனை பிரிந்து கிடப்பதே பாலை நிலத்து தலைவிக்கு தலைவிதி.

விடைபெறலாமா?


ச்சைப்பசேல் குறிஞ்சி மலையில் துவங்கிய நமது ஐந்திணைப் பயணம், பட்டை வெயில் கொளுத்துகிற பாலை நிலத்துடன் முடிகிற கட்டத்துக்கு வந்து விட்டது. இந்தப் பயணம் நமக்குக் கற்றுத் தருகிற சேதி... ரொம்ப சிம்பிள். தமிழர்கள் வசிப்பது தமிழ்நாடு, கன்னடர்களது கர்நாடகம்... என்று இன்றைக்குப் போல இனத்தின் அடிப்படையில், மொழியின் அடிப்படையில், அரசியல் அடிப்படையில் நிலங்களை தொல்காப்பியர் பிரிக்கவில்லை. மாறாக, இயற்கையின் அடிப்படையில், இயற்கைச் சூழலியல் அடிப்படையில் நிலங்களை அவர் பிரி்த்து வைத்திருக்கிறார். அவரது ஆழ்ந்த சூழலியல் அறிவியல் பார்வையை / அறிவை, இங்கு நீங்கள் உணரமுடியும்.

லையும், மலை சார்ந்த கேரளா முழுக்க குறிஞ்சி நிலம் என்று நீங்களாக ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. பனிஷ்மென்ட் ஏரியாவான ராமநாதபுரத்தை பாலை என்றும் பட்டம் கட்டி விடக்கூடாது. இயற்கையை இயற்கையாக பாதுகாத்து வைத்திருக்கிற வரை... பாலை என்கிற ஒரு நிலப்பரப்பு, நமது வரைபடத்தில் இருக்காது. பாதுகாக்கத் தவறுகிற பட்சத்தில்.... பாலை தவிர வேறெதுவும் வரைபடத்தில் இருக்காது.

து, இன்றைய தேதிக்கு, தொல்காப்பியத்தில் இருந்து நமது மூளைக்குள் பதிய வைக்கவேண்டிய / மற்றவர்களுக்கும் பரப்ப வேண்டிய மிக முக்கியப் பாடம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. தொல்காபியத்தில் உள்ள தகவல்களை மிக அருமையாக எடுத்து சொன்னதுடன் ,ராமநாதபுரம் என்றாலே அரசு ஊழியர்கள் அனைவர் இடத்திலும் உள்ள ஒரு எண்ணத்தை அழகாக தெளிவுபடுத்தி இன்றைய நிலையில் உள்ள தேவையை எழுத்தில் உணர்த்தி உள்ளீர்கள்.அருமை.வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...