சும்மா... சும்மா!
மலையிலும், வனத்திலும் வாழ்ந்தவர்களை விடவும், மருத நிலத்துக்காரர்களுக்கு ஓய்வு அதிகம் கிடைத்தது. கவலைகளும் குறைவாக இருந்தது. அப்புறம் என்ன... சும்மா இருக்கிற மனசு, சும்மா இருக்குமா? காலையில் கதவைத் திறந்து வெளியே வந்ததும், பளீச்சென இருக்கிற வாசலையும், அதில் டிசைன், டிசைனாக மாக்கோலம் இடப்படுகிற அழகையும் பார்த்ததும்... ‘சுந்தரி நீயும்... சுந்தரன் ஞானும்...’ என்று ‘கவித... கவித...’ எழுதவோ, பாடவோ தோணும்தானே? எழுதித் தள்ளியிருக்கிறார்களாக்கும். சங்க இலக்கியங்களைப் பாருங்கள். உலகின் எந்தப்பகுதி நதிக்கரை நாகரிகக்காரர்களை விடவும் பெட்டராக நம்மாட்கள் பின்னி எடுத்திருக்கிறார்கள்.
போயே போச்சு... போயிந்தே!
‘‘குளிரும் பருவத்தேஆயினும், தென்றல்
வளி எறியின், மெய்யிற்கு இனிதாம்; ஒளியிழாய்!
ஊடி இருப்பினும், ஊரன் நறு மேனி
கூடல் இனிது ஆம், எனக்கு...’’ (ஐந்திணை ஐம்பது - 30)
- அந்தக் காலத்து பெண்களின் மனதை அப்படியே படிக்கிறது இந்தப் பாடல். வயலில் விளைந்து வந்த வருமானத்தை வாரிச் சுருட்டிக் கொண்டு டான்ஸ் பார்க்க கிளம்பி விட்டார் சார். மேடம் அவர் மேல் மகா கோபமாக இருக்கிறார். ‘வரட்டும். உண்டு, இல்லைனு ஒரு வழி பண்ணீடறேன்...’ என்று காத்திருக்கிறார். கையிருப்பு கரைந்ததும்... போன மச்சான் திரும்ப வந்தார் கதையாக லேசாக தயங்கித் தயங்கி வீட்டுக்கு வருகிறார் சார். மேடம் எப்படி ரெஸ்பான்ஸ் செய்திருப்பார் என்று யோசிக்க முடிகிறதா...? இல்லை... நீங்கள் நினைப்பது போல இல்லை. கோபமெல்லாம் மறந்து, தடபுடல் கவனிப்பு! பக்கத்து வீட்டு தோழிக்கு செம டென்ஷன். ‘ஏண்டீ.. இவளே! அந்த மனுஷன் வந்ததும் உண்டு இல்லைனு ஒரு வழி பண்ணுவன்னு பார்த்தா... இப்படி பல்லை காட்டிகிட்டு நிக்கிற?’ என்கிறார் கோபமாக.
வாழ வைக்கும் பெரியாறு
தடம் புரண்டது ஏன்?
மருத நிலம் என்பது ஆறு, ஏரி என நீர்ப்பிடிப்பான, நீர்வளம் அதிகம் கொண்ட பகுதி. மண்ணைக் கொத்தி பண்படுத்தினார்கள். எருது பூட்டிய ஏர் கொண்டு நிலத்தை உழுது பக்குவப்படுத்தினார்கள். எரு விட்டு விதை விதைத்தார்கள். நீர்பாய்ச்சி நெல் வளர்த்தார்கள். தாய் மனது போல நிலம் வஞ்சகமில்லாமல் வாரிக் கொடுத்தது. விதைத்ததற்கும் மேலாக, பல மடங்கு அள்ளிக் கொடுத்தது. பணம் புரண்டது. வந்த பணத்தில் அடுக்கடுக்காய் வீடுகள் கட்டி ஆடம்பர வாழ்க்கை பழகினார்கள். பொருள் மிகுந்ததால், உழைப்புக்கான அவசியம் குறைந்தது. கிடைத்த ஓய்வு நேரத்தில் கலை வளர்ந்தது. மிகுதியான பொருளும், ஓய்வுமே தடம் புரட்டியது!
‘‘கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
காரத்தின் வெய்ய, என் தோள்...’’ (ஐந்திணை ஐம்பது 24)
அவர் கிளம்பிப் போய் ஆறு வாரமாச்சு. தற்செயலாக, அவரது நண்பரைப் பார்க்கிறார் தலைவி. மனதில் இருக்கிற வருத்தமெல்லாம் வார்த்தைகளைச் சூடிக் கொண்டு அருவியாகக் கொட்டுகிறது. ‘‘முன்பெல்லாம் நெருங்கி அணைக்கையில், சந்தனக் குழம்பு போல எனது தோள்கள் அவருக்கு குளிர்ச்சியாக இருந்தன. இப்போது என்னைப் பார்த்தாலே ஏன் பிடிக்காமல் போகிறது? புண்ணிற்கு இடுகிற மருந்து போலல்லவா எனது தோள்கள் அவருக்கு எரிச்சல் தருகின்றன...?’’ என்று ஆதங்கம் ஊற்றெடுக்க கண்ணீர் சிந்துகிறாள் தலைவி.
- மருத நிலத்தின் கூறுகளை சமரசங்களின்றி பதிவு செய்கின்றன சங்க இலக்கியங்கள். கற்பனை செரிவுகளின் பிரமாண்ட வீச்சையும் இங்கு பார்க்க முடிகிறது. அந்த மண்ணின் மாந்தர்களின் குணநலன்களையும் அறிந்து கொள்ளமுடிகிறது. எந்த மறைப்புமின்றி, அந்த நிலத்தை உள்ளது உள்ளபடி படம் பிடித்து காட்டுகிற பாங்கில்... நமது சங்க இலக்கியங்கள் உலகளவில் உயர்ந்த மதிப்புப் பெறுகின்றன.
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
அழகாகச் சொல்லி உள்ளீர்கள். நகைச்சுவை இழை ஓட...எளிதாக மனதில் நிற்கும் வகையில்....அதுவும் இப்போதைய இளைஞர்கள், இப்படிச் சொன்னால் ஆர்வத்துடன் கேடப்பார்கள்...பதியவும் செய்யும்...ரசித்தோம்..
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்...
நீக்குSuperb (From Mobile)
பதிலளிநீக்குநன்றி DD தோழர்.
நீக்குவரவர இளமை டாலடிக்கிறது BRO
பதிலளிநீக்குரெம்ப ரெம்ப எளமையான மொழி நம்மிது ப்ரோ BRO
நீக்கு