திங்கள், 1 ஆகஸ்ட், 2016

வாக்ரிபோலியும், ஒரு தங்க நாணயமும்!

ரு ஜெனரல் நாலெட்ஜ் கேள்வியுடன் இந்த வாரத்தை ஆரம்பிக்கலாம். ‘வாக்ரிபோலி (Vagriboli)’ என்று ஒரு மொழி இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ் இலக்கிய நூல் ஒன்று, இந்த மொழியில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. வாக்ரிபோலியில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த மகத்தான பெருமையுடைய இலக்கியம் எது? ஆன்ஸர் யோசித்து வையுங்கள். நான்கு பாராக்கள் கழித்து பதில் பார்க்கலாம்.


டாலடிக்கும் நட்சத்திரம்!


திகாலை நேரத்தில் எழுந்திரிக்கிற பழக்கம் இருக்குமானால், கீழ்வானில் பளபளப்பான, டாலடிக்கிற ஒரு ‘நட்சத்திரத்தை’ பார்த்திருக்கலாம். விடிவெள்ளி என்று அழைக்கப்படுகிற அது, உண்மையில் நட்சத்திரம் அல்ல. அது ஒரு கோள் (planet). சூரிய பேமிலியில், சூரியனில் இருந்து இரண்டாவதாக அமைந்துள்ள வெள்ளி (Venus) கோள் அது. அறிவியல் வளர்ச்சி அதன் உச்சத்தில் இருக்கிற இன்றைய காலகட்டத்திலேயே நம்மாட்களில் நிறையப் பேருக்கு அது நட்சத்திரமா, கோளா என்று குழப்பம் இருக்கும்.  வானத்தில் இயங்கிக் கொண்டிருப்பவற்றை நட்சத்திரங்கள் (Stars) என்றும், கோள்கள் (Planets) என்றும் இரு பெரும் பிரிவாக பிரிக்கலாம். நட்சத்திரத்துக்கும், கோளுக்கும் என்ன வித்தியாசம் என்று கூடத் தெரியாமல் நிறையப் பேர் சினிமாவுக்கு டிக்கெட் எடுக்க கியூவில் நின்று கொண்டிருக்கிறோம்.

யூ மீன்... நாள்மீன் - கோள்மீன்?

னால் மக்களே..., 2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வசித்த நமது முன்னோர்களுக்கு அந்தக் குழப்பம் இருந்ததில்லை. சொல்லப் போனால், அவர்கள் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்கள். நம்மைப் போல அவர்கள் Astronomy படித்தவர்களில்லை. ஆனாலும், வான சாஸ்திரத்தில் பின்னி எடுத்திருக்கிறார்கள்.

சங்க இலக்கியங்களில், பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பட்டினப்பாலையில், இந்தப் பாடலைப் படிங்களேன்...
‘‘நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்
நாள்மீன் விராஅய கோள்மீன் போல... (பட்டினப்பாலை  67, 68)’’

- இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்பாக எழுதப்பட்ட நூல் இது. எழுதியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். ‘நீல் நிற விசும்பு’ என்றால் நீல நிறமுடைய வானம் என்று அர்த்தம். அடுத்த வரியைப் பாருங்கள். ‘நாள்மீன் விராஅய கோள்மீன் போல’ - வானத்தில் இயங்குபவற்றை நாள்மீன் (நட்சத்திரம்), கோள்மீன் (கோள்கள்) என்று எவ்வளவு தெளிவாக பகுத்து வைத்திருக்கிறார் பாருங்கள் கடியலூர் காரர்? எந்த யுனிவர்சிடியில் அவர் சயின்ஸ் படித்தார்? அல்லது, அவர் அறிந்து வைத்திருந்த சயின்ஸ், இன்றைக்கு எந்த யுனிவர்சிடியில் இருக்கிறது?

திருவள்ளுவர் எதிரியா?



னி, அந்த வாக்ரிபோலி மேட்டருக்கு வரலாம். நரிக்குறவர்கள் என்று அழைக்கப்படுகிற சமூகத்தினர் பேசுகிற மொழி இது. இந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்கிற மெகா, மகா சிறப்பு கொண்ட நூல்... வேறென்ன. நம்ம திருக்குறள்தான். திருக்குறளின் சிறப்புகள் பற்றி எழுதச் சொன்னால், ஆயிரம் பக்கங்களுக்கு எழுதலாம். நாமெல்லாம், படிக்கிற காலத்தில் மனப்பாடம் செய்யப் பயந்து கொண்டு, திருவள்ளுவரை ஒரு எதிரியாகப் பாவித்திருக்கலாம். நிஜத்தில், நமது மொழியின், இனத்தின் பெருமை அவர். நமது வீட்டில் இருக்கிற பொருளின் அருமை நமக்குத் தெரியாது. திருக்குறளும், திருவள்ளுவரும் கூட அப்படியே. வெளிமாநிலத்துக் காரர்களும், வெளிநாட்டுக்காரர்களும் இன்றைக்கும் படித்துப் படித்து வியந்து பிரமிக்கிறார்கள்.

திசையெங்கும் குறள்!



திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து (Sacred Kural, 1886) வெளியிட்டவர் ஜி.யு.போப் (George Uglow Pope, 1820, ஏப்ரல் 24 - 1908 பிப்ரவரி 12) என்று இந்தத் தொடரின் 53வது வாரத்தில் விரிவாக படித்திருக்கிறோம். அவர் தவிர,இன்னும் நிறைய வௌ்ளைக்கார அண்ணாச்சிகள் நமது திருக்குறளை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்த்து உலகின் சகல திசைகளுக்கும் கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள். கிண்டர்ஸ்லி (Kindersley), எல்லிஸ் (F.W. Ellis), ட்ரூ (W.H. Drew), சார்லஸ் கி.கோவர் (C.E. Gover), ராபின்ஸன் (E.G. Robinson), லாசரஸ் (Rev. G. Lazarus), ஸ்காட் (T.M. Scott), பாப்லி (H.A. Popley) ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

வீரமாமுனிவர் எனப்படுகிற பெஸ்கி பாதிரியார் (Father Constantine Joseph Beschi), டாக்டர் கிரால் (Dr. Graul) ஆகியோர் லத்தீன் மொழியிலும் ஏ.எப். காம்மர்ஸ் (A.F. Commers), பிரிட்ரிக் ரூகர்ட் (Friedrich Ruckert) இருவரும் ஜெர்மன் மொழியில் திருக்குறளை கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள். இ. ஏரியல் (E. Ariel), டிடூமாஸ் (P.G. De Dumast), எம். லெமரேஸ், லூயி ஜெகோலியா (Louis Jacolliot), ஃபான்டெய்னோ (G.de. Barrigue de.Fontainieu) ஆகியோர் பிரெஞ்சு மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளனர்.

திருக்குறளை வரிக்கு வரி படித்துப் பிரமித்துப் போய், தனது பெயரையே தமிழ் படுத்திக் கொண்ட ஒரு பிரிட்டீஷ் கலெக்டர் பற்றி உங்களுக்குத் தெரியுமா? திருவள்ளுவரின் உருவம் பதித்த தங்க நாணயங்கள் வெளியிட்டும், ஊரில் நலத்திட்டப் பணிகள் செய்கிற இடத்தில் எல்லாம் பொருத்தமான திருக்குறளை தேர்வு செய்து கல்வெட்டாகவும் பொறித்து திருக்குறள் காட்டிய வழியில் வாழ்ந்து பெருமை சேர்த்த / நமக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழும் அந்த வெள்ளைக்காரத் துரை பற்றி அடுத்தவாரம். சரியா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...