வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஜல்லிக்கட்டும், சர்வதேச அரசியலும் - 2


ல்லிக்கட்டு கூடவே கூடாது என்று நாட்டின் வடபுலத்தில் இருந்து நிறைய, நிறைய குரல்கள் பெரும் பெரும் புள்ளிகளிடம் இருந்து வருகின்றன. காளைகளுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் எண்ணிக்கை ஒரே இரவில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இவர்களது திடீர் பாசம், அலங்காநல்லூர் பக்கம் மேய்ந்து கொண்டிருக்கிற பொலி காளைகளுக்கு தீராத விக்கலை ஏற்படுத்தியிருக்கலாம். எதனால் இந்தப் பாசம்? எலி ‘ஏதோ மாதிரி’ ஓடுகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும்தானே? இவர்களது காளைப் பாசத்துக்கு பின்னணியில் என்னதான் இருக்கிறது? ‘‘ஜல்லிக்கட்டு என்று இன்றைக்கும், ஏறுதழுவுதல் என்று அன்றைக்கும் அழைக்கப்பட்ட இந்த வீர விளையாட்டு பிறந்து, வளர்ந்து, திசைகளெங்கும் புகழ் சேர்த்த இடம், ஐந்து திணைகளில் ஒன்றான முல்லை நிலப்பரப்பு. இன்றைக்கு சதியின் பிடியில் சிக்கி நிற்கிற அந்த முல்லை விளைச்சலை... பேசாது நாம் மவுனித்துக் கடந்தால்... உலகம் வியக்கிற நம் முல்லை பண்பாடு பாலையாக திரிந்து விடாதா...?


ஒரு துளி ரத்தம்!


காளைகளுக்காக நரம்புகள் புடைக்க உரிமைக்குரல் எழுப்புகிற அறிவுஜீவிகள், ஜல்லிக்கட்டு, அதன் விதிகள் பற்றிப் படித்தார்களானால், மேற்கொண்டு பேசாமல் ‘மியூட் மோடு’க்கு போய் விடுவார்கள். ‘விரு விரு மாண்டி... விருமாண்டி’ படத்து கமலஹாசன் போல, ஆஞ்சநேய பகவான் போஸில் பறந்து போயெல்லாம் யாரும் காளையை அடக்க மாட்டார்கள். காளையின் முதுகில் குத்துக்கல் போல இருக்குமே... திமில், அதைப் பிடித்துக் கொண்டு அதிகப்பட்சம் 20 முதல் 30 அடி தூரம் (அல்லது 10 முதல் 20 வினாடிகள்) ஓடினால் அதுதாங்க ஜல்லிக்கட்டு. சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர் போல உற்சாகமாக வருகிற இளவட்டப் பையனுக்கு ஒரு பீரோ அல்லது சைக்கிள் பார்சல் பண்ணிக் கொடுத்து அனுப்பி விடுவார்கள். முதுகில் தொத்திக் கொண்டிருக்கிறவனை கொசுவைப் போல உதறி விட்டு ஓடினால்... காளை தான் ஆட்ட நாயகன். இதில் எங்கிருக்கிறது அனிமல் டார்ச்சர்? ஒரு விஷயம் புரிந்து கொள்ளவேண்டும். காளை உடலில் இருந்து துளி ரத்தம் வந்தால் கூட, ஆட்டம் நிறுத்தப்பட்டு விடுமாக்கும்!

முரட்டுக்காளை!

ப்புறம் எதற்காக காளைகள் மீது அப்படி ஒரு அக்கறை? பின்னணியில் இருக்கிறது சர்வதேச வணிக அரசியல். ஜல்லிக்கட்டில் வாகை சூடுகிற காளைக்கு அந்த ஏரியாவுக்குள் ஹீரோ அந்தஸ்து கிடைத்து விடும். சாம்பியன் காளையின் வீரத்தை மெச்சி, சுத்துப்பட்டி கிராமத்துக்காரர்கள், தங்கள் வீட்டுப் பசுக்களுடன் இனச்சேர்க்கைக்காக ‘இன்வைட்’ பண்ணுவார்கள். வீரியம் மிக்க அந்த முரட்டுக்காளை மூலமாக, மரபு (Gene) ரீதியாக படு வீரியமான ஒரு மாட்டினம் அந்த ஏரியாவில் தலையெடுக்கும். அடுத்த பல தலைமுறைகளுக்கும் வீரியம் கொண்ட உள்ளூர் மாட்டினம் நமது கிராமத்து மண்ணில் விரவிப் பரவி வாழும்.

காங்கேயம் காளைகள் இருக்கிறதே... போர்க்களத்தில் பீரங்கி வண்டிகளை இழுத்துச் செல்ல திப்பு சுல்தான் இதை பயன்படுத்தியதாக வரலாறு சொல்கிறது. அந்தளவுக்கு செம ஸ்ட்ராங். ஜல்லிக்கட்டுக்கு எதிராக இன்றைக்கு குரல் கொடுப்பவர்களின் நோக்கம்... நமது உள்ளூர் வீரிய மாட்டினங்களின் பெருக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதே. ஏனாம்?


வெள்ளைக்கார பசு!

ல்லிக்கட்டை எதிர்க்கிற தன்னார்வ அமைப்புகளின் பின்னணி என்ன என்று கூகுளில் அடித்துப் பாருங்களேன். மேற்கத்திய நாடுகளின் கை அங்கு இருப்பது தெரியும். சரி. வெளிநாட்டுக் காரர்களுக்கு நமது ஜல்லிக்கட்டு மீது என்ன வெறுப்பு? இருக்கிறது, மேட்டர். வணிக அரசியல் என்கிற படு விவகார மேட்டர். நம் வீட்டு குழந்தைகள் போஷாக்காக (??!!) வளரவேண்டும் என்கிற எக்கச்சக்க ஆர்வத்தில் நிறைய பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு பண்ணைகள் அமைத்து பால் பவுடர் தயாரிக்கிறார்கள். அவர்கள் ஊரில் இருந்து ஃப்ரவுன் ஸ்விஸ் (Brown swiss ), ஜெர்ஸி (Jersey), ஹால்ஸ்டீன் ஃப்ரீஷியன் (Holstein Friesians), ஹெர்ஃபோர்ட் (Hereford) போன்ற வெளிநாட்டு மாடுகளை இங்கு அழைத்து வருகிறார்கள். அந்த வெள்ளைக்கார பசுக்கள், நம்மூர் தொழுவங்களை ஆக்கிரமிக்க வேண்டுமென்றால், நம்மூர் அப்பாவி மாடுகளின் சாப்டரை க்ளோஸ் செய்யவேண்டும் இல்லையா? அதுதான் நடக்கிறது.

யானையைக் கேளுங்க...


ன்றில் இருந்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டில் சுமாராக 150 உள்ளூர் மாட்டு இனங்கள் இருந்தன. இன்றைக்கு நாற்பதுக்கும் குறைவான ரகங்களே உயிரைப் பிடித்துக் கொண்டு மிச்சம் இருக்கின்றன.
கமலை இறைப்பது, வண்டி ஓட்டுவது, ஏர் உழுவது... என்று அவை செய்த அத்தனை வேலைகளையும், இயந்திரங்கள் எடுத்துக் கொண்டன. என்பதால், நமது தொழுவத்தில் நிறைந்திருந்த மாட்டினங்களுக்கான தேவை முடிந்து போனது. ஜல்லிக்கட்டு விளையாட்டையும் நிறுத்தி விட்டால்... காளைகளுக்கும், இந்த மண்ணுக்குமான கடைசி கண்ணியும் அறுந்து விடும். காளைகள் மீது இவ்வளவு பாசம் காட்டுகிற தன்னார்வ புண்ணியவான்கள், நமது பக்கத்து மாநிலத்தில் பூரம் திருவிழா, அந்தத் திருவிழா, இந்தத் திருவிழா என்ற பெயரில் யானைகளை அலங்கரித்து டார்ச்சர் படுத்துபவர்களை தட்டிக் கேட்க வேண்டியதுதானே?


ஏ... சிங்கம் போலே...

‘‘மணிவரை மருங்கின் அருவி போல

அணிவரம்பு அறுத்த வெண்காற் காரியும்
மீன்பூத்து அவிர்வரும் அந்திவான் விசும்புபோல்
வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும்
கொலைவன் சூடிய குழவித் திங்கள்போல்
வளையுபு மலிந்த கோடுஅணி சேயும்
பொருமுரண், முன்பின் புகல்ஏறு பலபெய்து
அரிமாவும் பரிமாவும் களிறும் கராமும்
பெருமலை விடரகத்து ஒருங்குடன் குழீஇப்,
படுமழை ஆடும் வரையகம் போலும்
கொடிநறை சூழ்ந்த தொழூஉ..’’

- கலித்தொகையில் (முல்லைக்கலி 10 - 21) உள்ள இந்த பாடல் வரிகளை படித்துப் பாருங்கள்... நம் வீட்டு தொழுவத்தில் சிங்கம் போலவும், யானை போலவும், குதிரை போலவும் கம்பீரமாக நின்றிருந்த காளைகளையும், அவற்றின் மீது நம் முன்னோர் கொண்டிருந்த மாசறு அன்பையும் இந்த வரிகள் பகட்டின்றி படம் பிடித்துக் காட்டுகிறதில்லையா?

பண்பாட்டு அழிப்பு!


ண்மையிலேயே மாடு மீதோ... அதனிடம் குத்துப்படுகிற மனிதன் மீதோ வெளிநாட்டு தன்னார்வலர் குழுக்களுக்கு பாசம், அக்கறை இருக்குமேயானால்... அவர்கள் என்ன செய்யவேண்டும்?
இந்த வீர விளையாட்டை முறைப்படுத்த போராடலாம். விதிமுறைகளை கொஞ்சம் ‘டைட்’ ஆக்கி, மாட்டுக்கோ மனிதருக்கோ சிறு பாதகமும் ஏற்படாத அளவுக்கு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர வலியுறுத்தலாம். அப்படிச் செய்வார்களேயானால்... வரவேற்கலாம். ஆனால்... ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டு விளையாட்டையே தடை செய்யவேண்டும் என்கிற அவர்களது மூர்க்கப்பிடியின் பின்புலத்தில் மனித - மாடுகளின் மீதான அக்கறை தென்படவில்லை. பண்பாட்டு மரபுகளை ஒழிப்பதன் வாயிலாக, பன்னாட்டு ஆதிக்கத்தின் வேர்களுக்கு உரம் சேர்க்கிற முயற்சி இதுவென்பது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. நாமெல்லாம் என்றைக்கு உணர்ந்து கொள்ளப்போகிறோம்???

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...