வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஜல்லிக்கட்டும், சர்வதேச அரசியலும் - 1

‘அய்யா... மாடு குத்திபுடுச்சுய்யா... கொடலு சரிஞ்சி மயங்கிக் கெடக்கறாருய்யா...’ - ஜல்லிக்கட்டு தினத்தின் மாலைநேரங்களில், அரசு மருத்துவமனை வராண்டாக்களில் இந்த கதறல் ஒலி கேட்டிருக்கலாம். ‘இன்னும் எத்தனை நாள் சார், இந்த ரத்தக்களறி...?’ - மனிதநேயத்தில் அக்கறை கொண்டவர்கள், ஜல்லிக்கட்டை எதிர்க்க எடுத்து வைக்கிற வாதம் இது. ‘காளைகளுக்கும் நம்மைப் போல உணர்வுகள் இருக்கு சார். ஜல்லிக்கட்டுங்கிற பேர்ல அதை கொடுமைப்படுத்துறோம். வாலை கடிச்சு காயப்படுத்துறாங்க. சாராயத்தை குடிக்க விட்டு மூர்க்கமாக்குறாங்க. சுத்த காட்டுமிராண்டித்தனமான செயல் சார் இது...’ - மிருகநேயத்தில் அக்கறை கொண்டவர்கள் வைக்கிற வாதம் இது. இரண்டும் எந்தளவுக்கு சரி? இவர்கள் சொல்வதில் நியாயம் இருப்பது போல தெரிகிறதே... நியாயம் இருக்கிறதா? ஜல்லிக்கட்டை தடை செய்து விடலாமா?


மொகஞ்சதாரோ முத்திரை!


கோர்ட் படிக்கட்டுகளில் இன்றைக்கு ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தோன்றிய இடம், முல்லை நிலப்பகுதி என்றால் ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், நிஜம். ‘சங்க இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு பற்றி தகவல் இருக்கா சார்? ஜல்லிக்கட்டு பத்தி நம்ம சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுது சார்?’ என்று கேள்வி உங்களிடம் எழுகிறதா. இப்டிக் கேட்டா எப்டி? தமிழர்கள் வரலாற்றை புரட்டும் போது... அவர்களது நீண்ட, நெடிய வாழ்க்கை முழுவதும் காளைகளும் இணைந்தே பயணித்து வருவதை சங்க இலக்கியங்கள் உறுதி செய்கின்றன. ஜல்லிக்கட்டு வரலாற்றை சுருக்க்க்க்க்கமாக பார்ப்பதற்கு இதை விடவும் சரியான தருணம்  கிடைக்காது.

யிரம், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்ம தாத்தாஸ் எழுதி வைத்திருக்கிற சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல் என்கிற பெயரில் ஜல்லிக்கட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் மொகஞ்சதாரோ பகுதியில் நடந்த அகழாய்வில் கிடைத்த ஒரு முத்திரையில், நம்ம ‘அலங்காநல்லூர் ஆட்டம்’ சித்தரிக்கப்பட்டிருக்கிறதாக்கும். சிந்து சமவெளி நாகரிகம் என்பது சின்ன வயதில் வரலாற்றுப் புத்தகங்களில் படித்து விட்டு மறந்து போகிற மேட்டர் அல்ல. அது நூற்றுக்கு நூறு சதவீதம் நமது தமிழ் நாகரிகம் என்று உலக மொழியியல் ஆய்வாளர்கள் நீண்ட, நெடிய ஆய்வுகள் செய்து உறுதி செய்திருப்பது உங்களுக்கு தெரியும்தானே?


யெஸ் மேம்...!


லக நாகரிகங்களை கொஞ்சம் டீடெய்லாக ஆய்வு செய்து பார்க்கையில் வெகு சில ‘நாகரிகர்கள்’ மட்டுமே மாடுகளை வீட்டு விலங்குகளாக வைத்து ‘ப்பா... ப்பா...’ என்று இழுத்துக் கொண்டு திரிந்திருக்கிறார்கள். அதில் நம்ம தமிழ் நாகரிகமும் ஒன்று. வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்து, அந்தக் குழந்தை பருவத்துக்கு வந்து விட்டால், பக்கத்து ஊர் சந்தைக்கு டாடி கிளம்பிப் போய் காளைக் கன்று ஒன்றை கையில் பிடித்து வருவார். குழந்தையோடு, குழந்தையாக வீட்டில் காளைக்கன்றும் வளரும். சகல சத்தான ஆகாரங்கள், புஷ்டி பானங்கள் சாப்பிட்டு அதுவும் திமுதிமுவென வளரும். ‘பொண்ணுக்கு வயசாகிட்டே போகுது பாரு... நான் கண்ண மூடுற காலத்துக்குள்ள அதுக்கொரு கால் கட்டு போட்டுருப்பா...’ என்று வீட்டில் இருக்கிற ஓல்ட் பாட்டீஸ் லேசாக முணுமுணுக்க ஆரம்பிப்பார்கள்.

‘என் கண்ணே பட்டுரும் போல இருக்கு. நம்ம பொண்ணுக்கு ஒரு நல்ல பையனாப் பாத்திருங்க...’ என்று எதிரொலி கிளம்பியதும் கல்யாணக் களை வீட்டில் எட்டிப் பார்க்கும். சரியாக, அந்த நேரத்தில், காளையும் தனது வாலிப வயதுக்கு வந்திருக்கும். ஆங்கில படங்களில் வருகிற அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகர் போல சிக்ஸ் பேக், செவன் பேக் பாடியுடன் பார்க்கவே பயமுறுத்துகிறது போல நிற்கும். வெளியாட்கள் பார்த்தால் வெலவெலத்துப் போவார்கள்.

ஆனால், வெளியில் தான் புலி. ‘ட்ட்டேய்... அங்க என்னடா பண்ணுற...’ என்று வீட்டில் இருக்கிற பொண்ணு லேசாக குரல் எழுப்பினால் போதும்... பூனைக்குட்டி போல வாலை மடக்கிக் கொண்டு பம்மிய படி ஓடி வந்து ‘யெஸ் மேம்’ என்று நிற்கும்.


இளவட்டங்களா... வாங்கடா!


குறிஞ்சி நில காடு போல அடர்த்தியான மீசை வளர்த்து வைத்திருக்கிற அப்பா, அதற்கடுத்த நாள் ஒரு ஓபன் காம்படீஷன் அறிவிப்பார். ‘வீரமுள்ள நம்மூர் இளவட்டங்க வாங்கடா. எங்காளையை அடக்கறவனுக்கு, எங்க வீட்டு லட்சுமியை கல்யாணம் பண்ணித் தர்றேன்டா...’ என்று ஆல் எடிஷன் விளம்பரம் கொடுப்பார். ‘அட! இதென்னங்க கண்றாவி. கல்யாணம் பண்ணுறதுக்கும், காளையை அடக்குறதுக்கும் என்னங்க சம்பந்தம் இருக்கு?’ என்று நீங்கள் இந்த இடத்தில் கிராஸ் பண்ணி ஒரு கொக்கி வீசலாம். சங்க காலத்து டீன்ஏஜ் பெண்களைப் பற்றி தெரிந்திருந்தால், இந்த கொஸ்டீன் வந்திருக்காது.

“கொல் ஏற்றுக்கோடு அஞ்சுவானை மறுமையும் 
புலலாளே, ஆயமகள்
அஞ்சார் கொலைஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர்துறந்து
நைவாரே ஆயமகள்...”

முல்லைக்கலியின் மூன்றாவது பாடல், முல்லை நிலத்து ஆயர் பெண்ணின் மனதை இப்படி படித்துச் சொல்கிறது. இன்றைக்கு போல சல்மான், ஷாருக் கான்கள் மாதிரி இருப்பவர்களை அவர்கள் அழகனாக கருதியதில்லை. வீரம் இருக்கணுமாம்! வீரம் இருக்கிறவன் தான் நிஜமான ஆணழகன் என்று அவர்கள் கருதினார்கள். பாடலின் முதல் வரியை படித்துப் பாருங்களேன்... தனது வீட்டில் வளரும் காளையின் கூரிய கொம்புகளைக் கண்டு அஞ்சி, பின்னங்கால் பிடறியில் பட ஓடுகிற ஆண் மகனை அவள் இந்தப் பிறவியில் மட்டுமல்ல... மறு, மறு, மறு பிறவிகளிலும் கூட கணவனாக அடைய விரும்பமாட்டாளாம்!

ல்லவேளை... சங்க காலத்து பெண்கள் போல, இந்தக் காலத்து பெண்கள் இல்லை. இருந்திருந்தால்... நம்மாட்களில் பாதிப் பேர் கல்யாணமே வேண்டாம் என்று சன்னியாசம் கிளம்பியிருப்பார்கள்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

ஜல்லிக்கட்டுக்கு எதிரான குரல்களுக்கு பின்னணியில் இருக்கிற சர்வதேச வணிக அரசியல், பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் கூட்டுச் சதி குறித்த தகவல்கள்... கட்டுரையின் அடுத்த பாகத்தில்.
(பின்குறிப்பு: ‘தினகரன்’ நாளிதழில் வெளியாகும் ‘நம்மொழி செம்மொழி’ தொடரின் 107வது அத்தியாயத்தில் இருந்து மேற்படி தகவல்கள் எடுத்துக் கையாளப்பட்டிருக்கின்றன)

1 கருத்து:

  1. If contemporary tamilians are such great warriors why can't they participate in wrestling, boxing, or archery? Why should they always have to prove their might with innocent animals like bullfight or cockfight?

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...