புதன், 17 பிப்ரவரி, 2016

அத்திரி, பத்திரி... கத்திரிக்கா!

ப்போது மட்டுமல்ல... ஆதிகாலத்திலும் சரி. கணக்கில் நம்மாட்கள் புலியாக, சிங்கமாக, சிறுத்தையாக... ஏன் டைனோசராகக் கூட இருந்திருக்கிறார்கள். கிரேக்க, ரோம வணிகர்கள் கப்பலேறி வந்து முத்து, பவள கடை விரித்து நம்மோடு வியாபார டீலிங் செய்திருக்கிறார்கள் (மதுரை மாவட்டம், கீழடியில் கிடைத்திருக்கிற அகழாய்வில் இந்த விஷயம் அறிவியல்பூர்வமாகவே நிரூபணம் ஆகியிருக்கிறது). பல ஆயிரம் பொற்காசுகள் புழங்குகிற வர்த்தகம் அது. இரண்டையும், இரண்டையும் கூட்டுவதற்கு இப்போது நாம் பயன்படுத்துகிற கால்குலேட்டர்கள் எல்லாம் அப்போது இல்லை. என்ன செய்தார்கள் நம் முன்னோர்கள்?


வேர்க்கடலை மடிக்கலாமா?

த்தின வாணிகக் கணக்கு, முத்து பவளக் கணக்கு, எண்ணெய் கணக்கு, படியாள் கணக்கு என்று, அது எந்த வகை கணக்காக இருந்தாலும், ஒரு சில வினாடிகளில் மனதுக்குள் போட்டு அசத்தியிருக்கிறார்கள் நமது ஃபோர் பாதர்ஸ். ‘‘அஞ்சு மரக்கலம் பவளத்தை இறக்கீருக்கியா? சரி... ஐ மூணா... 15. நா மூணா 12. ரெண்டையும் கூட்டி, நாலை கழிச்சா, 23. இந்தா... பெரிசு, இந்த அசலூர்க்கார தம்பிக்கு 23 பொற்காசு பொட்டலத்தை கட்டிக் கொடுத்து, இவுக கூட்டத்துக்கு வயிறார நல்ல சாப்பாடு போட்டு அனுப்பு...’’ என்று அடிக்கிற அடியில்... யவன வணிகர்கள் கிடுகிடுத்துப் போவார்கள். மேத்ஸ் டியூஷன் படிக்கக் கூட விண்ணப்பம் போட்டிருப்பார்கள். அந்தளவுக்கு நமது முன்னோர்கள் கணக்கில் டாப் டக்கர்ஸ்.

சும்மா திரைக்கதை எழுதி விட்டு எஸ்கேப் ஆகி விடுகிற மேட்டர் இல்லை. மேலே இருக்கிற பாராவில் படித்த விஷயம்... சாமி சத்தியம். சந்தேகம் இருக்கிறவர்கள், காரி நாயனார் எழுதிய கணக்கதிகாரம் புத்தகம் வாங்கி (கொஞ்சம் காஸ்ட்லி சார்) புரட்டிப் பார்க்கலாம். பிரமிக்க வைத்து விடுமாக்கும். கணக்கதிகாரத்துக்கும் முன்பாக ஓரம்பம், கிளராலயம், அதிசாகரம், கலம்பகம், திரிபுவனதிலகம், கணிதரத்தினம், சிறுகணக்கு என எக்கச்சக்கமாக தமிழ் கணித நூல்கள் நம்மிடம் இருந்திருக்கின்றன. நாம் வேர்க்கடலை மடிக்க பயன்படுத்தி விட்டதால், பெரும்பாலான நூல்களை இழந்து விட்டு, கடைசியாக இப்போது கால்குலேட்டர்களை நம்பி கணக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

சங்ககால டூயட்?

பொன்னி நதி பாய்ந்த சோழ நாட்டின், கொறுக்கையூர் பகுதியைச் சேர்ந்த காரி நாயனார் எழுதிய கணக்கதிகாரம் மட்டுமே ஆதித் தமிழர்களின் கணிதப் புலமையை மெய்ப்பிக்க நாம் வைத்திருக்கிற கடைசி ஆதாரம். 15ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது இந்த நூல். நிறைய சூத்திரங்கள் இருக்கின்றன. பெரிய, பெரிய சிக்கல்களை எப்படி சுலபமாக முடிச்சவிழ்ப்பது என்று கைபிடித்துக் கற்றுத் தருகிறது கணக்கதிகாரம். ஒரு உதாரணம்:

‘‘விட்ட மதனை விரைவா யிரட்டித்து
மட்டு நான்மா வதினில் மாறியே- எட்டதினில்
ஏற்றியே செப்பிடி லேறும் வட்டத்தளவும்
தோற்றுமென பூங்கொடிநீ சொல்...''

- பூங்கொடிநீ சொல் என்று முடிவதால், சங்க காலத்து இளம்ஜோடிகளின் டூயட் பாடல் என்று இதை கருதி விடவேண்டாம். இது அந்த ‘கணக்கு’ அல்ல; அரிய கணிதம். வட்டத்தின் சுற்றளவைக் கண்டுபிடிப்பதற்கான கணித சூத்திரம் இது. இப்படி இன்னும் எக்கச்சக்கம் இருக்கிறது. தொடர்ந்து பார்க்கலாம். இப்போது... குதிரை. ‘குதிரை ஏறாமல் கெட்டது; கடன், கேளாமல் கெட்டது’ என்று தெக்கத்திப் பக்கம் ஒரு சொலவடை உண்டு. நாம் பயன்படுத்தாமல் விட்டு விட்டதால், குதிரை என்கிற நான்குகால் பாய்ச்சல் மிருகத்துக்கு தமிழ் மொழி சூடிய பல அழகான பெயர்கள் கெட்டது.

வாசி - தூசி!


குதிரைக்கு தமிழில் என்னென்ன பெயர்கள் இருக்கின்றன? அத்திரி, பத்திரி, புரவி, பரி, கத்துகம், கனவட்டம், துரங்கம், குந்தம், கோரம், குரகதம், கோணம், கொக்கு, கொய்யுளை, சடிலம், கோடை, தூகம், பாடலம், கிள்ளை, பாய்மா, துரகதம், வாசி, உன்னி, தூசி, கந்தருவம், கற்கி, அரி, அயம், இவுளி, மா, அச்சுவம் - இத்தனையும் குதிரை என்கிற ஒற்றை விலங்குக்கு நம்மொழி சூட்டி மகிழ்ந்த பெயர்கள். அழகான அரபிக் குதிரைகளின் உடல் பழுப்பு நிறத்தில் சும்மா டாலடிக்கும். அதன் பளபளப்பான முடி, டாலடிப்புக்குக் காரணம். அந்த செம ஷைனிங் முடிக்கு குசை, மேசகம், சுவல் என்று பெயர் இருக்கிறதாக்கும் (அத்திரி, பத்திரி... கத்திரிக்கா என்று என்ன அர்த்தத்தில் பாட்டு எழுதினார்கள் என்று தெரியவில்லை).

ட்டுரை முடியிற கட்டத்துக்கு வந்தாச்சு. வெளிநாட்டு விருந்தினரை இன்னும் காணமே... என்று வருத்தப்படேல். தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத மெகா பெருமை சேர்த்த வெள்ளைக்காரத் துரை அடுத்தவாரம்... நம்மை சந்திக்கக் காத்திருக்கிறார். சரியா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...