செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

குரோட்டா, பூரிமாயன், ஒண்டன்... இவுக யாரு?

மது பாட்டியும், தாத்தாவும் பேசிய பழமொழிகளைத் தொகுத்து புத்தகமாகப் போட்டு பாதுகாத்த ஹெர்மன் ஜென்சன் பாதிரியார் பற்றிப் படித்ததும் பல நண்பர்களுக்கு கண்களில் லேசாக ஈரக்கசிவு அடித்ததாக தகவல் வந்திருக்கிறது. ‘‘நாலு வீட்டுல கல்யாணமாம். நாய்க்கு அங்கிட்டு ஓட்டம்... இங்கிட்டு ஓட்டம். உள்ள போய் ஒழுங்கா உக்கார்ரா...னு சின்ன வயசில, தெருப்புழுதில சுத்தும் போது எங்க பாட்டி பழமொழி சொல்லித் திட்டும் சார். இப்ப பாட்டியும் இல்ல; பழமொழியும் இல்ல. அந்தச் சொலவடை எல்லாம் இப்ப யாருக்கு சார் ஞாபகம் இருக்கு...’’ என்று கண்ணைக் கசக்கினார் மலைப்பிரதேசமான மூணாறில் இருந்து தொலைபேசிய ஜெயபாலன்.


ஃபாதருக்கு விக்கல்?

டந்தவாரம் ‘திருக்கி வளக்கணும் மீசைய...’ கட்டுரை படித்ததும், ப்ளாஷ்பேக் அடித்திருக்கிறது ஜெயபாலன் சாருக்கு. மட்டுமல்ல; நிறையப்பேருக்கு. ஹெர்மன் ஜென்சன் பாதிரியாரை நன்றியுடன் நினைவுகூர்ந்து பேசினார்கள்; கடிதம் போட்டிருக்கிறார்கள். சொர்க்கத்தில் இருக்கிற ஃபாதருக்கு விக்கல் எடுத்திருக்கலாம். பழமொழி சப்ஜெக்ட் ஜம்ப் ஆவதற்குள் இன்னும் இரண்டு பேரை பார்த்து விடுவது நல்லது. ஹெர்மன் ஜென்சன் பாதிரியார் போல, இவர்களும் தமிழ் பழமொழிகளைத் தொகுத்து, பாதுகாத்து, இன்றைய நமது தலைமுறைக்குக் கொண்டு வந்து சேர்த்தவர்கள்.

பீ்ட்டர் பெர்சிவல்
முதலாவது, பீட்டர் பெர்சிவல் (Peter Percival, 1803 -– 1882). பிரிட்டன் தேசத்து நற்செய்தியாளர். தமிழகம் மற்றும் இலங்கை, யாழ்ப்பாணம் பகுதியில் தங்கியிருந்து தமிழ் வளர்த்தார். அவ்வையார் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழ் - ஆங்கில அகராதி உருவாக்கினார். தமிழ் பழமொழி்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட பெர்சிவல், சுமாராக 6 ஆயிரம் பழமொழிகளைத் தொகுத்து (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) வெளியிட்டார் (Tamil proverbs with their English translation, containing upwards of six thousand proverbs. Madras, Rigginbotham; London, H. S. King, 1877).

அக்கப்போர் - வைக்கப்போர்!

ரண்டாவது, ஜான் லாசரஸ் (Rev John Lazarus). தமிழ் இலக்கணம் குறித்து ஆய்வு செய்து ஆங்கிலத்தில் எழுதிய இவர் (Tamil grammar: designed for use in colleges and schools, Madras: Printed by Addison, 1878), பழமொழிகளையும் விட்டு வைக்கவில்லை. தேடிப் பிடித்து சேகரித்து பழமொழிகளின் தொகுப்பு (A dictionary of Tamil proverbs: with an introduction and hints in English on their meaning and application) வெளியிட்டார். ‘‘உடுத்தச் சேல இல்லையின்னு சின்னாத்தா வீட்டுக்குப் போனா... அவ, ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு எதுக்க வந்தாளாம்...’’ என்கிற பாட்டி காலத்து பழமொழி, அவர் காலத்தைக் கடந்து இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்றால்... ஹெர்மன் ஜென்சன், பீட்டர் பெர்சிவல், ஜான் லாசரஸ் போன்ற பாதிரியார்களே அதற்கு முக்கியக் காரணம் என்பதை மறக்கவேண்டாம் பிரதர்ஸ்ஸ்ஸ்.

டுத்தவாரம் யாரும் கேள்வி கேட்டு கடிதாசி அனுப்புவதற்குள், நானே சொல்லி விடுகிறேன். பழமொழி, சொலவடை என்று இரு சொற்பதங்கள் கையாளப்படுகிறதே... இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தானா? இல்லை. கொஞ்சூண்டு வித்தியாசம் இருக்கிறது. மக்களின் மனசுக்குள் இருப்பது, அவர்கள் பேசுகிற மொழியில், கலப்பு எதுவுமின்றி அப்படியே வந்து விழுந்தால், அது சொலவடை (அக்கப்போரு பிடிச்ச நாயி, வைக்கப்போருல படுத்துக்கிட்டு, தானும் திங்காதாம்; திங்கிற கழுதையவும் திங்க விடாதாம்...). பழமொழி என்பது அப்படி அல்ல. விஷயம் தெரிந்த யாராவது, சொலவடையை எடுத்து, லேசாக டிங்கரிங் வேலை பார்த்து கொடுத்தால், அது பழமொழி (அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?).

நரியை நம்பலாமா?


‘அதெல்லாம் சரி. எங்களுக்கு எதுக்கு சார் தீவிரவாத முத்திரை?’ என்று முள்ளம்பன்றிகள் சார்பில் ஒரு கடுதாசி வந்திருந்தது. மு.பன்றிகள் மன்னிக்க. இந்த வாரம் நரி. சரியா? விவகாரம் பிடித்த ஆசாமியை நம்மூரில் ‘நரித்தனம் பண்ணாதடா’ என்று சொல்கிறோம் இல்லையா? உண்மையில், நரிகளுக்கு ‘நரி குணம்’ எல்லாம் கிடையாதாக்கும். அதிவேகமாக அழிந்து வருகிற மிருகங்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிற நரிகள், ஏதேதோ ‘கில்மா’ வேலைகள் பார்த்து தங்கள் வயிற்றை நிரப்புகின்றனவே தவிர, நம்மைப் போல கூட இருந்து குழிபறிப்பது, டகால்டி வேலைகள் செய்து கழுத்தறுப்பது போன்ற குணங்கள், சுத்தமாக இல்லை. நரிகள் வந்தால், நம்பிப் பழகலாம் சரியா? நம்பினோரைக் கெடுக்காத நரிகளுக்கு தமிழில் குரோட்டா, பூரிமாயன், சம்பு, ஒரி, கோமாயு, ஊளன், ஒண்டன், இகலன், சிருகாலன் என்கிற பெயர்கள் இருக்கிறது தெரிஞ்சுக்கோங்க.

பிதாகரஸ் தேற்றம் இன்னும் விட்டபாடில்லை. தமிழில் இருக்கிற கணித, விஞ்ஞான விஷயங்களை பட்டியல் போடும் பணி துவங்கி விட்டது. அடுத்தவாரத்தில் இருந்து ஆரம்பிக்கலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...