மனதின் ஓரம் வலிக்கிறதா...?
போரும்... அது தருகிற வலியும் அனுபவித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே நரகம். மற்றவர்களுக்கு அது வெறும் செய்தி மட்டுமே. இலங்கையில் கொத்துக் கொத்தாக குழந்தைகள், பெரியவர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது... அந்தப் படங்களைப் பார்த்த போது நெஞ்சின் ஓரம் லேசாக வலித்திருக்கும். உள்ளுக்குள் மனிதம் மிச்சம் இருப்பதின் அடையாளம் அது. இப்போது கூட, கிரைமியா பிரச்னையை மையமாக வைத்து அமெரிக்கா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு ரஷ்யா மீது புதிய போர் தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. போர்களுக்கு எதிராக உலகம் உரத்து குரல் எழுப்ப வேண்டிய முக்கிய காலகட்டத்தில், அதன் வலியை உணர்த்துகிற இரு உலகப் புகைப்படங்கள் (நன்றி: கெட்டி இமேஜஸ், ஏஎப்பி) இங்கு பதிவு செய்யப்படுகின்றன. மனித வாழ்வியலின் வேதனை தருணங்கள், புன்னகை தருணங்கள்... அவையும் கூட பதிவாகியிருக்கின்றன. பாருங்கள். கருத்துக்களை (கட்டாயம்) எழுதுங்கள்.
எங்க வீடு எங்க?
‘‘படுத்து, உறங்கி, பாடம் படித்து... வளர்ந்த எங்கள் வீடு இங்கேதான் இருந்தது. இப்போது இல்லை. நவ நாகரீக கட்டிங்களுக்கு மத்தியில், கூரை வேய்ந்த எங்கள் குடிசைகள், அழுக்காக... அசிங்கமாக அவர்கள் கண்களில் பட்டிருக்கிறது. அரசாங்கங்கள் அவர்கள் கையில். மோதி, மிதித்து, உடைத்து, தகர்த்து விட்டார்கள். மாடி மேல் மாடி கட்டும் அம்பானிக்கு, அதுபோல இன்னும் ஆயிரம் கட்டிடங்கள் கட்டமுடியும். எங்களுக்கு, இந்தக் குடிசைதான் அரண்மனை. வீடு என்பது செங்கல்லும், சுண்ணாம்பும் கலந்து கட்டப்படுவது அல்ல... அது உணர்வுகளால் எழுப்பப்படுவது என்று பாடப்புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது... கூடவே, கண்களில் கண்ணீரும்..!’’
- மும்பையின் ‘வளர்ந்த’ பகுதியான திருபாய் அம்பானி நாலெட்ஜ் சிட்டி பகுதியில் இருந்த ‘ஆக்கிரமிப்பு’ குடிசைகள் அகற்றப்பட... எங்கள் வீட்டை எதற்காக இடிக்கிறீர்கள் என கண்ணீரால் கேள்வி எழுப்பும் பிஞ்சுகள்.
இதுதான் எங்கள் வீடு!
மின்தடை ஏற்பட்டு, மின் விசிறி ஒரு நிமிடம் நின்று போனாலும்... எவ்வளவு சிரமமாக இருக்கிறது? அரசபடைகள் அன்றாடம் மோதிக் கொள்கிற சிரியாவின், தெர் அல் சோர் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதெல்லாம் பெரிய சிரமமில்லை. எந்த நேரமும் வெடித்து விழுகிற குண்டுகளில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு, பூமிக்கு அடியில் தோண்டப்பட்ட இதுபோன்ற பதுங்கு குழிகள் மட்டுமே பாதுகாப்பு. சுவாசிக்க காற்று கிடைத்தாலே பெரிய விஷயம். கன்னத்தில் வழிவது கண்ணீரா, வியர்வையா என்று வித்தியாசம் பிரித்து அறிகிற திறமையெல்லாம் எப்போதே விடைபெற்றுப் போய் விட்டது.
பிதாவே... இவர்களை மன்னியும்!
சிரியாவில் நடக்கிற உள்நாட்டு யுத்தத்தில் (மார்ச் 2011ல் துவங்கி... இன்று வரை) உயிரிழந்த அப்பாவி மக்களின் தோராய எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரம். இன்னும் தொடர்கிறது சோகம். வடக்குப்பகுதி நகரமான அலெப்போவில் நடந்த விமானப்படை தாக்குதலில் படுகாயமடைந்த பச்சிளம் பிஞ்சுகளை சுமந்து கொண்டு ஓடுகிறார் இந்த பரிதாப தந்தை. நித்தமும் பழகி விட்டதால் கண்ணீரும், அழுகையும் கூட நினைவுத்தடத்தில் இருந்து நிரந்தரமாக நீங்கி விட்டது.
நல்லா படம் புடிங்க!
ஜாதீயக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி புதுடெல்லியில் ஒரு பேரணி நடந்தது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், மேட்டர் அதுவல்ல. கைகளில் கம்பு, பதாகைகளுடன் அணிவகுத்துச் செல்கிறவர்களை கூட விட்டு விட்டு, கேமரா கொண்டு படம் பிடிக்கிறவரை எப்படி உற்றுப் பார்க்கிறது பாருங்கள் குழந்தை! இந்த சுய விளம்பர மோகம்தான்... வளர, வளர வெறி கொண்டு அதிகரித்து, திருமண, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழாக்களின் போது, பல்லெல்லாம் காட்டி சிரித்த படியும், கன்னத்தில் கை வைத்து அமர்ந்தது போலவும் பிளெக்ஸ் பேனர்களுக்கு பிற்காலத்தில் போஸ் கொடுக்க வைக்கிறது!
- பூனைக்குட்டி -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக