ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 5

ன விலங்குகளில் சகலகலாவல்லவன் பட்டத்துக்கு போட்டி வைத்தால், ‘அன் அப்போஸ்டாக’ சிறுத்தை ஜெயித்து விடும். தனுஷ் போல ஸ்லிம் பாடி.  மணிக்கு சுமாராக 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய திறன். மலையோ... மரமோ, எதுவாக இருந்தாலும் ஜாக்கிசான் போல தாவிக் குதித்து பாய்ந்து  ஏறக்கூடிய வல்லமை. ‘லாங் ஜம்ப்’ ஆற்றல். மைக்கேல் பெல்ப்ஸையே திணறடிக்க வைக்கும் அளவுக்கு நீச்சல் - இப்படி, எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆ க்டிவிட்டிகளில் சிறுத்தையை... புலி என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால், மக்களே... சிறுத்தைகளுக்கு இப்போது ஏழரைச் சனி காலமாக இருக்கலாம்.  கடகடவென இனம் அழிந்து வருகிறது. மீசையிலும், எலும்பிலும் மருத்துவக் குணம் இருப்பதாக யாரோ ‘கொளுத்திப் போட’ துப்பாக்கியுடன் வேட்டைக்கு  கிளம்புகிறது ஒரு கூட்டம்!

னது வால்பாறை பயணம், டிசம்பர் 29ம் தேதியன்று மாலைப்பொழுதில், ஏறக்குறைய கிளைமாக்ஸ் கட்டத்தை எட்டியிருந்தது. மறுநாளும் பஸ்கள் ஓடாது  என அதிகாரப்பூர்வமற்ற ஒரு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாகவே என்னை எட்டியிருந்தது. உள்ளூர் ஊடகத்துறை நண்பர் எனக்கான வாகன வசதிக்கு உறுதி  அளித்திருந்ததால், மறுநாள் காலை வால்பாறை வனப்பகுதிக்கு குட்-பை சொல்ல முடிவாகி விட்டது. அந்த மாலையில், மீண்டும் ஒரு வன உலா  கிளம்பினேன். ‘இருட்டறதுக்குள்ள வீடு திரும்பிடுங்க சாமீ... சிறுத்த நடமாடுது’ என்று கிளம்புகிறதுக்கு முன்னதாகவே எனக்கு எச்சரிக்கை மணி அடி க்கப்பட்டது. தேயிலைத் தோட்ட இடைவெளிகளுக்கு நடுவிலான குறுகல் பாதையில் நடந்து கொண்டே யோசித்தேன். சிறுத்தைக்கும், மனிதனுக்கும் என்ன  முன்ஜென்மப் பகையா? வாய்க்கால் வரப்புத் தகராறா? ஏன் தொடர்கிறது இந்த ரத்த மோதல்?

தமிழக வனப்பகுதிகளில் சுமாராக 14 ஆயிரம் சிறுத்தைகள் வசிப்பதாக மத்திய அரசின் புள்ளிவிபரக்குறிப்பு தெரிவிக்கிறது. வேட்டை மற்றும் சூழலியல் காரணங்களால் இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நீங்கள் இதைப் படிக்கிற நிமிடத்தில் எண்ணிக்கை இன்னும் குறைந்திருக்கலாம். சிறுத்தை -  மனித மோதல் நடக்கும் இடங்களில் முக்கியமானது வால்பாறை. ஒரு தேயிலைத் தோட்டத்துக்குள் அல்லது எஸ்டேட் குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்து  விட்டதானால், உடனடியாக வனத்துறையினர் கூண்டு வைத்து அதை பிடிக்கிறார்கள். பிடிபட்ட சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று  விடப்படுகிறது. இங்குதான் துவங்குகிறது சூழலியல் சிக்கல்.

கூண்டில் சிக்கிய எந்த மிருகமும் அதன் பிறகு நீண்ட காலம் உயிரோடு இருப்பதில்லை என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள். கூண்டுச் சிறைக்குள் சி க்கியதும், ‘அப்பாடா, இனி மூணு வேளை சாப்பாடு கேரண்டி’ என்று நம்மவர்களின் சிலரைப் போல அவை அகமகிழ்வு கொள்வதில்லை. மாறாக, இரும்புக்  கம்பிகளை மோதி உடைத்து வெளியேற அவை பெரும் முயற்சி செய்கின்றன. இதனால் அவற்றின் முகம், தலை, வாய் உள்ளிட்ட பாகங்கள் பலத்த காயத்து க்குள்ளாகின்றன. இந்தக் காயங்கள் ஆறும் வரை அவற்றால் உணவு உட்கொள்ள முடியாது. கூண்டில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் கூட, பல சிறுத்தைகள்  பட்டினி கிடந்தே பரலோகம் போய் விடுகின்றன.

அடுத்து, சிறுத்தையின் குணம் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நாய் குணம், குரங்கு குணம், எருமை குணம், பேய்க் குணம்... என்று மனிதக் குணம்  தவிர்த்து மற்ற எல்லாமே நம்மவர்களுக்கு இருக்கும். சிறுத்தைகளுக்கு அப்படி அல்ல. சிறுத்தை குணம் மட்டுமே இருக்கும். தனிமையில் இனிமை காணும்  சுபாவம் கொண்டவை இவை. இயல்பிலேயே மனிதர்களைக் கண்டால், (பயந்து) தூர விலகிப் போய்விடும். ஒவ்வொரு சிறுத்தையும் கானகத்தில் தனக்கென  ஒரு இடம் ஒதுக்கிக் கொண்டு அதற்குள் மட்டுமே சுற்றித் திரிந்து வாழ்க்கையை ஓட்டும். ஒன்றின் ஏரியாவுக்குள் மற்றொன்று என்ட்டர் ஆகாது. அப்படி  ஆனால்... சண்டைதான்.

இப்போது மேட்டருக்கு வரலாம். கூண்டு வைத்து பிடிக்கிற சிறுத்தையை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவார்கள் என்று சொன்னேன் இல்லையா?  அப்படி விடப்படுகிற அந்த ஏரியா, வேறொரு சிறுத்தையின் ஜாகையாக இருக்கலாம். இந்தச் சிறுத்தையைப் பார்த்ததும், ‘இது எங்க ஏரியா... உள்ள வராத’  என்று அது உறுமும். மனித டார்ச்சரில் இருந்து அப்போதுதான் தப்பி வந்த இந்தச் சிறுத்தை சற்று குழப்பத்தில் இருக்கும். முடிவெடுக்க முடியாது. ஆக,  அங்கு துவங்குகிறது சண்டை. முடிவில், எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது. ஒவ்வொரு முறை சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து காட்டுக்குள் கொண்டு  போய் விடுவதற்கு முன்பாகவும்... தெரிந்து கொள்ளுங்கள், அந்த இனத்தின் எண்ணிக்கையில் ஒன்றை நீங்கள் குறைக்கிறீர்கள்.

என்றால், சிறுத்தை பிரச்னையில் இருந்து எப்படித்தான் தப்பிப்பது? (மனிதர்களுக்கும் கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்கண்ணா... என்று கோவை பக்கம்  இருந்து நிறைய வாசகர்கள் தந்தி போல பாவித்து தபால் அனுப்பியிருக்கிறார்கள்). வால்பாறை டவுனில் இருக்கிற சூழலியல் ஆர்வலர்களைச் சந்தித்தேன்.  கேள்விகளை அவர்கள் முன் வைத்தேன். இனி அவர்கள் வார்த்தைகள்.... அப்படியே!

‘‘சார், நிஜத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்தவங்க எண்ணிக்கை தமிழகத்தில ரொம்ப கம்மி. அதுவும், இங்க சில பேர் சொல்றது மாதிரி ஆட்கொல்லி  சிறுத்தைனு எல்லாம் எதுவுமே இல்லை சார். இந்த வனப்பகுதியில திரியிற சிறுத்தையை நீங்க கூண்டு வெச்சி பிடிச்சிட்டிங்கனா... அந்த இடத்துக்கு வேறு  சிறுத்தை வந்திடும். இந்த சிறுத்தைக்கு தங்கறதுக்கு இடமே இல்லாம போயிடும். தங்கறதுக்கு தனக்குனு இடம் இல்லாததால, இரை தேடி அந்தச் சிறுத்தை  குடியிருப்பை தேடி திரும்பத் திரும்ப வர்ற நிலைமைக்கு தள்ளப்படுது. குடியிருப்புல இருக்கிற நாய், கால்நடைகள் மேல பாஞ்சிடுது. எஸ்டேட் குடியிருப்புல  வசிக்கிற மக்கள், அவங்க வீடுகளுக்கு பக்கத்தில புதர்கள் இல்லாம பாத்துக்கணும்...’’ பேசிக் கொண்டிருக்கும் போதே தேநீர் வந்தது. குடித்தோம்.

‘‘சிறுத்தைகளைப் பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு நிறைய இன்ட்ரஸ்ட்டிங் விஷயம் இருக்கு சார். பெரும்பாலும் தனியாகத்தான் திரியும். நைட்டுதான் வேட்டைக்கு  கிளம்பி வரும். வேட்டையாடுன விலங்கை, உயரமான மரத்துக்கு மேல தூக்கிக் கொண்டு போய் வெச்சி சாப்பிடும். வேற எந்த விலங்கும் பங்கு கேட்டு வந்திடாம இருக்கிறதுக்குத்தான் இந்த ஏற்பாடு. ரெண்டு நாளோ... மூணு நாளோ... அந்த உணவு தீர்ந்து போற வரைக்கும் கீழ இறங்காது. தன்னோட இடத்துக்கு வேறு சிறுத்தை வர்றதை விரும்பவே விரும்பாது...’’ சிறுத்தையைப் பற்றிக் கேட்டால் நிறையச் சொல்கிறார்கள். சிறுத்தைக்குக் கூட, அதைப் பற்றி  இவ்வளவு தெரிந்திருக்காது.

‘‘இன்னொரு முக்கியமான விஷயம் சார். மறக்காம எழுதுங்க. ஜனவரி 18ம் தேதி திருநெல்வேலி, திருமால் நகருக்குள்ள 3 வயசு சிறுத்தைக்குட்டி வீடுகளுக்குள்ள புகுந்தது பேப்பர்ல படிச்சிருப்பிங்க. வெளியில தெரியாத ஒரு உண்மையைச் சொல்றம் சார். அங்க வனத்துறைல அதிகாரியா இருந்த ஒருத்தரு,  குட்டியா இருக்கும் போதே அதை புடிச்சிட்டு வந்து வீட்டுல வளர்த்திருக்காரு. 3 வயசானதும், இனியும் இதை வளர்க்கறது கஷ்டம்னு, காட்டுக்குள்ள விட் டுட்டாரு. அது வேட்டையாடி சாப்பிட்டு பழக்கமில்லாத குட்டி. வெட்டிக் கொடுக்கிற கறியை மட்டும் சாப்பிட்டு வளர்ந்ததை காட்டுக்குள்ள விட்டா, அது  என்ன பண்ணும் சார்? அதான், திரும்பவும் ஊருக்குள்ள வருது. மறுபடியும் அதைப் புடிச்சி காட்டுக்குள்ள விட்டுருக்காங்க... இனி, அதோட  தலையெழுத்து...’’ - அவர்கள் சொல்வது எந்தளவுக்கு நிஜம் என்று தெரியவில்லை. ஆனால், இதை விடவும் மோசமான நிஜத்தை வன விலங்குகள் மீது நாம்  சுமத்திக் கொண்டிருக்கிறோம் என மனதுக்குப் பட்டது.

அதெல்லாம் சரி. இரை தேடி வருகிற சிறுத்தையிடம் கடிபடாமல் தப்பிப்பது எப்படி?
‘‘தன்னை விட உயரமான, பெரிய உருவத்தைப் பார்த்தால் சிறுத்தை பயப்படும் சார். பொதுவாவே, மனுசனைப் பார்த்தா ரொம்ப பயப்படும். தற்காத்துக் கொள்றதுக்காகத்தான் தாக்குது. தன்னைய விட உருவத்துல சின்னதா இருக்கிற குழந்தைகளை, இரைனு நினைச்சி கவ்விடும். அதனால, பொழுது சாஞ்சிடுச்சின்னா... சின்னக் குழந்தைகள தனியா வெளிய அனுப்பவேண்டாம். திடீர்னு ஒரு சிறுத்தையைப் பார்த்துட்டிங்கனு வெச்சிக்கோங்க... அதை அட்டாக்  பண்ற வேலையெல்லாம் வேண்டாம். நீங்க பேசாம இருந்தா, அதுவாவே ஒதுங்கிப் போயிடும். ராத்திரில வெளிய போனா, கட்டாயம் டார்ச் லைட் வெச்சிக்கோங்க. அப்படிப் போகும் போது சத்தம் போட்டு ஏதாவது ஒரு பாட்டு பாடிகிட்டோ... இல்லைனா, உங்க செல்போன் மியூசிக் பிளேயர்ல பாட்டை  சத்தமா போட்டுகிட்டோ நடந்து போகலாம். புதர் மறைவுல இருந்து சிறுத்தை உங்களைக் கவனிச்சாலும் கூட, இது நம்ம இரை இல்லைப்பா...னுவிலகிப் போயிடும்....’’
- அங்கிருந்து கிளம்பி வீடு திரும்பும் போது, எனது செல்போனில் சத்தமாக பாட்டு வைத்துக் கொண்டுதான் நடந்து வந்தேன். சிறுத்தைகளுக்கு சப்போர்ட்டாக பூனைக்குட்டியில் நான் கட்டுரை எழுதப் போகிற விஷயம், அவற்றுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லையே!

மறுநாள் மதுரை பயணத்துக்கான அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, அத்துமீறும் குளிரை அண்டவிடாத அளவுக்கு காவலாக கதகதப்பு கம்பளி  போர்த்தி படுத்திருந்த போது... தூக்கம் என்னை ஆட்கொள்கிற வினாடிக்கு கொஞ்சம் முன்பாக, அன்றைய மாலையில் அந்த சூழலியல் ஆர்வலர்கள் சொன்ன விஷயம் மீண்டுமொரு தரம் ஞாபகத்துக்கு வந்து போனது. ‘‘சிறுத்தை தாக்கி இறந்த மனிதர்கள் எண்ணிக்கை ரொம்ப கொறச்சல் சார். ஆண்டு சராசரினு பார்த்தா... ரெண்டு பேர்தான். ஆனா, மனிதனால சாகுற சிறுத்தைகளோட எண்ணிக்கையைக் கணக்கெடுத்தா... பிரமிச்சுப் போவீங்க சார். ஆயிரக்கணக்கான சிறுத்தைகள், விலங்குகள் செத்துகிட்டு இருக்கு. அதுகளுக்காக பேசறதுக்கு யார் இருக்கா...?’’
சத்தியமான வார்த்தை!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

* இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* இரண்டாம் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* மூன்றாம் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* நான்காம் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* குங்குமம் வார இதழில் வந்த வால்பாறை அவலங்கள் குறித்த கட்டுரையை படிப்பதற்கான இணைப்பு:

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...