புதன், 11 பிப்ரவரி, 2015

மோடியை பதம் பார்த்த ‘ஏ.கே. 49!’

டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள், எஞ்சிய மாநில மக்கள் அனைவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய புதிய ஒரு செய்தியைச் சொல்லி
யிருக்கின்றன. தேர்தல் வெற்றி என்பது உண்மையில், அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது அவரது ஆம் ஆத்மி கட்சிக்கானது அல்ல. டெல்லியில்  ஜெயித்திருப்பது அந்த மாநிலத்தின் ஒரு கோடியே 30 லட்சம் மக்களே. அந்த மாநிலத்தின் ஆம் ஆத்மிக்கள் (சாமானிய மனிதர்கள்) மட்டுமல்லாது, காஷ் ஆத்மிகளின் (விசேஷ / ஸ்பெஷல் மனிதர்கள்) கைகளிலும் கூட, இப்போது ‘விளக்குமாறு’ ஸ்டெடியாக நிற்கிறது.

மிழ் சினிமாவில் சங்கர் எப்படியோ; இந்திய அரசியலில் மோடி அப்படி. எல்லாமே பிரமாண்டம்தான். அணிகிற சட்டையில் கூட, (கஜினி  சினிமா கதாநாயகன் போல) பெயரை ‘நரேந்திர தாமோதர் மோடி... நரேந்திர தாமோதர் மோடி... நரேந்திர தாமோதர் மோடி’ என்று பச்சை  குத்தி வைத்திருக்கிற வித்தைக் காரர். சுதேசி, சுதேசி என்று பேசுகிற பின்புலத்தைச் சேர்ந்தவர். ‘மேக் இன் இந்தியா’ கொள்கையை அறிமுகப்படுத்தியவர். ஆனால், ஊசி பாசி முதல், ராணுவ தளவாடங்கள் வரை எல்லாமே உள்ளூரை ஒதுக்கி விட்டு, வெளிநாட்டு இறக்குமதி என்ற விடாப்பிடி முடிவுடன் தேசத்துக்காக உழைக்கிற செயல் புயல்.

ஆச்சு. டெல்லி சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலையில் மப்ளர் சுற்றிக் கொண்டு ஓட்டுக் கேட்கிற ‘ஆம் ஆத்மி’ அரவிந்த் கெஜ்ரிவால்  ஒருபுறம். மோடி, அமித் ஷா... என்று இந்திய அரசியலின் இப்போதைய மாஸ்டர் பேட்ஸ்மேன்கள் (!?) மறுபுறம். அரவிந்த் கெஜ்ரிவாலைப் பொறுத்தளவில், ஒரு க்ளீன் இமேஜ் சேர்த்து வைத்திருக்கிறார். ஐஆர்எஸ் முடித்து, டில்லி இன்கம் டாக்ஸ் அலுவலகத்தில் பணிபுரிந்தவர். பணிகாலத்திலேயே, அங்கு நடக்கிற ஊழல் விஷயங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக தேசிய,  சர்வதேச விருதுகள் வாங்கியவர்.

அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்து, பிறகு வெற்றுக் கோஷங்கள் வேலைக்கு ஆகாது என புரிந்து கொண்டு ‘ஆம் ஆத்மி (சாமானிய மனிதன்)’  கட்சியைத் துவக்கினார். கட்சியின் சின்னம்... ரொம்ப ஸ்பெஷல். குப்பைகளைக் கூட்டித் தள்ளுகிற விளக்குமாறு. அன்னா ஹசாரே கூட்டத்தில்,  அரவிந்த்துடன் இணைந்து கோஷம் போட்டவர்களில் கிரண்பேடியும் இருந்தார். காலச்சூழல்கள் இருவரையும் வெவ்வேறு திசைக்குப் பிரித்தன.  2013ம் ஆண்டு டெல்லி தேர்தலில் தனித்துக் களமிறங்கி 28 தொகுதிளை ஆம் ஆத்மி காரர்கள் ஜெயித்த போது யார் இந்த மஃப்ளர் காரர் என  அரசியல் தொழில் செய்வோர் திரும்பிப் பார்த்தனர்.

காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியமைத்த 49 நாட்களில் திடீரென ராஜினாமா செய்தார். 49 நாளில் ராஜினாமா செய்தவர் என்பதால், மோடி கூட  தனது தேர்தல் பிரசாரங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏ.கே. 49 என்று கிண்டலடித்திருக்கிறார் (ஏ என்றால் அரவிந்த், கே என்றால் கெஜ்ரிவால்,  49 நாள் ஆட்சி என்று அர்த்தம்!). இன்று பாரதிய ஜனதாவை போட்டுப் பார்த்து விட்டது ஏ.கே.49. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67ல்  அசைக்கமுடியாத வெற்றி. வெறும் 3 இடங்கள் மட்டுமே மோடி தலைமையிலான பாரதிய ஜனதா பார்ட்டிகளுக்கு.

டெல்லியில் தேர்தல் அறிவிப்பு வந்ததும் மோடியும், அமித்தும் தேடிப் பார்த்தார்கள். முதல்வர் வேட்பாளராக போஸ்டரில் படம் போட நல்லதாக  ஒரு முகம் தேவை. பார்ட்டிக்குள் யாரும் சிக்கிய பாடில்லை. தலையில் குல்லா மாட்டிக் கொண்டு கொஞ்ச காலம் அன்னா ஹசாரே பக்கத்தில்  உட்கார்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த கிரண் பேடியை பேசி அழைத்து வந்தார்கள்.

பேடி ஒன்றும் சாதாரணப் பெண்மணி அல்ல. மாஜி ஐபிஎஸ் அதிகாரி. துணிச்சலுக்கு உதாரணம் காட்டவேண்டுமானால், கண்ணை மூடிக் கொண்டு இவரை அடையாளம் காட்டலாம். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ‘நோ பார்க்கிங்’ ஏரியாவில் நின்றிருந்த அவரது காரை, கிரேன்  போட்டு கட்டித் தூக்கிக் கொண்டு போய் அபராதம் போட்டவர். ஆச்சர்யப்பட்டுப் போன இந்திரா காந்தி, அடுத்த நாள் வீட்டுக்கே அழைத்து  வந்து விருந்து கொடுத்து பாராட்டினார். அப்படி ஒரு துணிச்சல்.

ஒரே கோஷ்டியில் கோஷம் போட்டுக் கொண்டிருந்த அரவிந்தும், கிரணும் இப்போது டெல்லி தேர்தல் களத்தில் எதிரெதிர் முகாம். தேர்தல்  பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சில புதுமைகள் செய்தார். முதலில், 49 நாளில் ஆட்சியை ராஜினாமா செய்ததற்காக டெல்லியில்  தெருத்தெருவாகச் சென்று மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். அடுத்து, கிரண் பேடி, நரேந்திர மோடி என்று யாரையும் தரக்குறைவாக அல்லது  தர உயர்வாகவோ ஒரு வார்த்தை விமர்சனம் செய்யவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால்... என்ன செய்வேன் என்பதை மட்டும் முன்னிறுத்தி  பிரசாரம் செய்தார்.

டில்லி மக்கள் யோசித்தார்கள். இந்தாளுக்கு கடந்த தேர்தலில் 28 தொகுதி கொடுத்தது மகா தப்பு என்று முடிவு செய்திருப்பார்கள் போல.  தேர்தல் முடிவுகள் அவர்கள் எண்ணத்தை உறுதி செய்திருக்கின்றன. மொத்தமுள்ள 70ல் 67 தொகுதிகள் அரவிந்த் தரப்புக்கு. மூன்றே தொகுதிகள்  மட்டுமே பாரதிய ஜனதா மோடிக்கு. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட, (மத்திய) ஆளும்கட்சிக்கு இல்லாதது மகா பரிதாபம்.

எப்படி சாத்தியமானது இந்த வெற்றி? இந்தக் கேள்விக்கு பின்புலத்தில் டெல்லி மக்களின் தேர்ந்த அறிவு பளீச்சிடுகிறது. மொத்தமுள்ள 70 தொ குதிகளில் கிட்டத்தட்ட 10 தொகுதிகள் ஹை கிளாஸ் மக்கள் வசிக்கிற பகுதி. இந்த பத்துமே அரவிந்த் ஆத்மி கட்சிக்கு. அடுத்து 28 தொகுதிகள்  மிடில் இன்கம் மக்களின் பகுதி. இதில் 25 அவர்களுக்கே. எஞ்சிய 32 தொகுதிகள், வியர்வை சிந்துகிற மக்களின் பகுதி. அவர்களும் நம்பிக்கை  வைத்து ஆத்மிக்கு வாக்களிக்க... 67 சாத்தியமாகியிருக்கிறது. அதாவது, ஏழை எளியோர், பணக்காரர், நடுத்தர வர்க்கம், அனைத்து மதம், சமூகம்  என அனைவரும் கைகோர்த்து இந்த (தேர்தல்) திருவிழாவை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

காங்கிரஸ்காரர்கள்தான் ரொம்பப் பாவம். பாகிஸ்தான் அல்லது இலங்கையில் தேர்தல் முடிவுகள் வந்தால் எப்படி இருக்குமோ... அப்படித்தான்  இங்கு நிலைமை. தேர்தல் முடிவுகளில், அவர்கள் கட்சி பெயரைக்கூட காணோமே! நாமெல்லாம் அதிமுகவுக்கு ஓட்டு போடுவோம். விட்டால்,  திமுக. டெல்லி மக்கள் கொஞ்சம் மாற்றி சிந்தித்திருக்கிறார்கள். காங்கிரஸ், பாஜக இரண்டையும் விரட்டி விட்டு, புதிதாக ஒரு கட்சி. ஊழல்,  ஊழல் என்று நாறிக் கிடக்கிற காங்கிரசை அவர்கள், கட்சியாகவே பொருட்படுத்தவில்லை என்பது முடிவுகளில் தெரிகிறது. அடுத்து, வெறும் பே ச்சு, விளம்பர ஸ்டண்ட், மதவாத சர்ச்சைகள், சிறுபான்மையினரை சீண்டிப் பார்க்கிற செயல்கள், சமஸ்கிருதம், கோமாதா என்று பழமைவாதம்  பேசுகிற பாரதிய ஜனதாவும் நம்பிக்கைகளின் அடுக்குகளில் இருந்து வெளியே வந்து விட்டது.

தமிழக மக்கள் கொஞ்சம் பாவம். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக இங்கு முளைக்கிற கட்சிகளைப் பார்க்கிற போது, அதன் தலைவர்களின் பே ச்சுகளை கேட்கிற போது... திமுக, அதிமுகவே தேவலை என்று மீண்டும் அங்கேயே குத்தி விடுகிறார்கள்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

  1. ஏ.கே.49 னின் வெற்றியை டில்லி நகர் சென்றே செய்தி சேகரிப்பு களப்பணியாற்றியது போன்று வழங்கிய பூனைக்குட்டி க்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...