சனி, 25 அக்டோபர், 2025

டா ர் க் - two

 ‘‘இந்த பூமி உருண்டையில், சாத்தியப்படுத்தவே முடியாது என வரையறுக்கப்பட்ட செயல்களையும் சாத்தியமாக்கும் வல்லமை, வருங்காலத்திற்கு உண்டு...’’

- டாக்டர் வெஸ்லி ஆர்தரின் எழுதப்படாத டைரியின் முதல் பக்கத்தில் இருந்து!

(முதல் பாகம்... டா ர்  க் - one)


டா  ர்  க்  - தினகரன் தீபாவளி மலர் 2025-ல் வெளியான சிறுகதை

பொழுது அதன் பிறகு படு வேகமாக நகர்ந்தது. ஒரு மிகப்பெரிய மருத்துவ அற்புதத்துக்கான முதல் நகர்வு புதன் கிழமை துவங்கியது. காலையில் தேவாலயம் சென்று திரும்பியவர், ஒரு சிரிஞ்ச்சில் டபிள்யூ - 6 சீரம் மருந்து நிரப்பிக் கொண்டார். உள்ளே சென்று வேறு ஒரு மருந்து எடுத்து வந்து, அதை இரு சிரிஞ்ச்களில் நிரப்பினார். என் பக்கம் திரும்பியவர் ‘‘ஆரம்பிக்கலாமா?’’ என்றார் புன்னகையுடன். கட்டை விரல் உயர்த்திக் காட்டினேன். ‘‘வாழ்த்துகள் டாக்டர் வெஸ்லி...’’

‘‘இந்த டோஸ் எனக்கு. இதில் ரேடியோ ஆக்டிவ் சப்ஸ்டென்ஸ் கொஞ்சம் கலந்திருக்கு. என் கூடவே இருக்கிற உங்களுக்கு அதுனால எந்த பாதிப்பும் வந்திடக் கூடாது. அதனால, முன்னெச்சரிக்கையா, இந்த ரேடியோ ஆக்டிவ் கன்ட்ரோல் இன்ஜெக்‌ஷனை இந்த மூணு நாளும் நீங்களும் போட்டுக்கோங்க. இது இடுப்பிலயே போட்டுக்கலாம். எந்த பாதிப்பும் வராது. பக்க விளைவுகள் எதுவும் இருக்காது!’’

சொன்ன படியே, அளவில் பெரிதாக இருந்த சிரிஞ்ச்சை என்னிடம் கொடுத்தார். அவரிடம் இருந்து மருந்து நிரம்பியிருந்த சிரிஞ்ச் வாங்கிக் கொண்டேன். நாற்காலியில் அமர்ந்தவரை இலகுவாக்கி, இடது கழுத்தின் பின்புறம், நரம்பை தேடி கண்டறிந்து, ஊசியை மெல்ல செலுத்தினேன். சுருக் வலியில் ஒரு வினாடி உடல் அதிர்ந்தவர், மறு வினாடியே சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். நரம்பின் உட்புகுந்த ஊசியின் வழியாக மருந்தை மெதுவாக இன்ஜெக்ட் செய்தேன். முடிந்தது முதல் டோஸ். தடுமாறிய படி எழுந்தவர், கீழே வைத்திருந்த இரு சிரிஞ்ச்களையும் எடுத்து எனக்கும், லின்ஸிக்கும் செலுத்தினார்.

றுநாள் வியாழக்கிழமை இரண்டாவது டோஸ் போடும் போதே தளர்ந்து விட்டார். வெள்ளிக்கிழமை காலையில் படுக்கையில் இருந்து அவரால் எழ முடியவில்லை. ‘‘சத்யன்... இப்ப மூணாவது டோஸ் எனக்கு போட்டுரு. ராத்திரி 8 மணிக்கு, மெமரி ரீடென்ஷன் சப்ளிமென்டரி இன்ஜெக்‌ஷன்... போட்டு விட்டுரு. அதுக்கு அப்புறம் நீங்க இங்க இருக்கவேண்டாம். ரேடியேஷன் இருக்கலாம். கதவை மூடிட்டு  பக்கத்து ரூமுக்கு போயிடுங்க. ஞாயிற்றுக்கிழமை காலையில 10 மணிக்கு திரும்பி வாங்க. கதவைத் திறந்தா... என்னுடைய புதிய உயிர்த்தெழுதலை நீங்க பார்ப்பீங்க...’’ மருந்து வேலை செய்வதால் ஏற்பட்ட வேதனைகளை சமாளித்துக் கொண்டு புன்னகை மாறாமல் பேசிய வெஸ்லியின் இடது கழுத்தில் மூன்றாவது ஊசியை செலுத்தினேன்.

‘‘ரெஸ்ட் எடுங்க டாக்டர். ராத்திரி 8 மணிக்கு வர்றேன்...’’

தவை சாத்தி விட்டு வெளியே கிளம்பியவன், இலக்கின்றி நடந்தேன். குட்டிக்கானம் ஜங்ஷன் வந்து, ஒரு டீ வாங்கிக் கொண்டு மலைச்சாலையின் விளம்பில் அமர்ந்து கொண்டேன். எதிரே விரிந்து பரந்திருந்த பனி மூடிய பள்ளத்தாக்கை ஆழமாகப் பார்த்த படியே டீயை குடித்தேன். பனி நிறைந்த குளிர் காற்று உடலை வருடியது. எனக்குள் ஏதேதோ எண்ண ஓட்டங்கள். அப்படியே, அந்த சாலையோர சுவரில் மல்லாந்து சாய்ந்தேன். மூன்று நாட்கள் ரேடியோ ஆக்டிவ் கன்ட்ரோல் இன்ஜெக்‌ஷன் போட்டிருந்தது உடலை தளர்வடையச் செய்திருந்தது. மாலையில் லின்ஸி வரும் வரை நேரம் போகவேண்டும். ஒரு ஆட்டோ அமர்த்திக் கொண்டு அம்மச்சி கொட்டாரம் சென்றேன். சிதிலமடைந்திருந்த பாதையின் வழியாக குலுங்கிய படி சென்ற ஆட்டோ என்னை மிகவும் மேலும் சோர்வடையச் செய்தது.

ம்மச்சி கொட்டாரம்... கைவிடப்பட்ட பழமையான அந்த அரண்மனை, முதல் பார்வைக்கே என்னை கவரவில்லை. ஏதோ அமானுஷ்ய வலை மூடிய வீடு போல இருந்தது. அங்கே இருக்கப் பிடிக்காமல் மீண்டும் கிளம்பினேன். எங்கெங்கோ சுற்றி விட்டு, வீடு திரும்பிய போது மணி 6 ஆகி இருந்தது. எனக்காக லின்ஸி காத்திருந்தாள். இருவரும் டாக்டரிடம் சென்றோம். அவர் இப்போது பேசும் ஆற்றலை இழந்திருந்தார். கண்கள் மட்டும் திறந்திருக்க, கருவிழிகள் லேசாக அசைந்தன. அவரது நினைவுகளை பாதுகாப்பதற்கான மெமரி ரீடென்ஷன் சப்ளிமென்டரி இன்ஜெக்‌ஷனை உள்ளே இருந்து லின்ஸி எடுத்து வந்து தர, கையில் சிரிஞ்சுடன் மெதுவாக டாக்டர் வெஸ்லி ஆர்தரை நோக்கிச் சென்றேன்.

ரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவரருகே அமர்ந்தேன். டாக்டரின் விழிகள் கூர்மையாக என்னைப் பார்த்தன. சிரிஞ்ச்சை உயர்த்திப் பிடித்தப் பிறகு, அவரது விழிகளைப் பார்த்தேன்.


‘‘டாக்டர் வெஸ்லி ஆர்தர்... என்னை மன்னிச்சிடுங்க...’’ கையில் இருந்த கண்ணாடி சிரிஞ்ச்சை கீழே போட்டு கால் ஷூவால் அழுத்தி மிதித்து சுக்குநூறாக உடைத்தேன். எனக்கு பின்னால், லின்ஸி அதிர்ந்து போய், ‘‘சத்யன்...’’ என்று கூச்சலிட்டாள். சிறிய தடுமாற்றத்துடன், குலுங்கி நிமிர்ந்து நாற்காலியில் இருந்து எழுந்தேன். தளர்ந்த உடலை தாங்கி நிற்கத் தடுமாறி... அருகில் இருந்த சுவரில் சாய்ந்தேன். அதே வேகத்தில் பாக்கெட்டில் இருந்து செமி ஆட்டோமெடிக் பிஸ்டலை உருவி எடுத்தேன். 4.5 எம்எம். ஜெர்மன் தயாரிப்பு. லின்ஸியை குறிவைத்து நீட்டினேன்.

‘‘லின்ஸி அசையாத. சொல்றதை கேட்டு நடக்கலைனா சுட்டுத் தள்ளீருவேன். இந்தாள் புண்ணியத்தில 80 வயசுல இருந்து 30 வயசு இளமைக்கு திரும்பியிருக்க. வாழ வேண்டிய வயசு ரெண்டாவது முறையா உனக்கு கெடச்சிருக்கு. அதை அனுபவிக்காம வீணாக்கிடாத....’’

‘‘சத்யன்... என்ன பண்ணீட்ட? டாக்டர் நிலைமை இனி என்ன ஆகும்? அவர் பாவம் இல்லையா?’’

வளது பதற்றம் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. ‘‘டாக்டர் செத்துட மாட்டார். ரெண்டு நாள்ல 25 வயசு பையனா மாறிடுவார். நிஜமாவே சாதனை தான். ஆனா, பரிதாபம்! அவர் யார்னு அவருக்கே தெரியாது. எந்த ஞாபகமும் அவருக்கு இருக்காது. இந்த விஞ்ஞானம், பூகோளம், மருந்து, மாத்திரை, லேப்... எதுவும் அவர் நினைவுல இருக்காது. இந்த ஆராய்ச்சி, அறிவியல் எதுவும் இல்லாத ஒரு புது வாழ்க்கையை இந்த தேயிலை எஸ்டேட்டுல வாழ அவர் பழகிக்க வேண்டியதுதான்...’’

னக்குப் பின்னால்... படுத்திருந்த டாக்டர் வெஸ்லியின் கருவிழிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்க, ‘‘சத்யன், நீ யாரு? ஏன் இப்டி பண்ற...?’’ அவர் மனதில் இருந்த கேள்வியை லின்ஸி கேட்டாள்.

‘‘எனக்கு நேரம் இல்லை லின்ஸி. நான் சீக்கிரம் கிளம்பணும். மதுரை போகணும். அங்கயிருந்து சென்னை. அங்க இருந்து நாளைக்கு நைட்டு லண்டன் பிளைட். ஒண்ணும் புரியலையா? எந்த மல்டிநேஷனல் பார்மா கம்பெனிக்காக இந்த வெஸ்லி ஆர்தர் வேலை பார்த்தாரோ, அதே கம்பெனிக்காகத்தான் நானும் வேலை பார்க்க இங்க வந்தேன். மருந்து கண்டுபிடிக்கிறது வெஸ்லி ஆர்தருக்கான அசைன்மென்ட். கண்டுபிடிச்சதும், அவர் கதையை முடிச்சிட்டு, அந்த மருந்து பார்முலாவை எடுத்து வர்றது எனக்கான அசைன்மென்ட். ஒண்ணு தெரியுமா? என்னை இங்க அனுப்பி வெச்சதே, இவரோட கூட்டாளி வில்மர்ட் தான்...’’

னக்கு லேசாக தலைசுற்றியது. ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் போலிருந்தது. சீக்கிரம் முடித்து விட்டு கிளம்ப வேண்டும்.

‘‘லின்ஸி, இவரைக் கொல்றதுதான் எனக்கான அசைன்மென்ட். நான் தான் பரிதாபப்பட்டு விட்டுட்டு போறேன். இனி இவரால எதுவும் செய்ய முடியாது. உன்னை, என்னை, இந்த மருத்தை... ஏன் இந்த உலகத்தில இதுவரைக்கு அவர் கடந்து வந்த எதுவுமே அவர் ஞாபகத்திலயே இருக்காது. அப்புறம் எதுக்கு ஒரு குண்டு வேஸ்ட் பண்ணி அவரைக் கொல்லணும்? சரி! சீக்கிரம், சீக்கிரம்... அவரோட இந்த பார்முலா எங்க இருக்கு... எடுத்துக் கொடு’’

னக்கெதிரே லின்ஸி தடுமாறினாள்.

‘‘லின்ஸி எனக்கு நேரம் இல்லை. அந்த பார்முலா ஃபைல் எடுத்துத் தர்றியா...’’ துப்பாக்கியை உயர்த்திய படி கேட்டேன்.

‘‘சத்யன்... சத்யன்... அவர்.. டாக்டர் அந்த பார்முலாவை பேப்பர்ல எழுதல...’’

‘‘அப்றம்?’’

‘‘இங்க எழுதி வெச்சிருக்காரு...’’ தலையைத் தொட்டுக் காட்டினாள். ‘‘மூளையில எழுதி வெச்சிருக்காரு. எந்தப் பேப்பர்லயும் இல்லை...’’

னக்கு கால்கள் அதிர்ந்தது. ‘‘பொய் சொல்லாத...’’

‘‘சத்யம் சத்யன்’’ என்னை நெருங்கி வந்த அவளை பிடித்துக் கீழே தள்ளி விட்டு, அவரது லேபரட்டரி அறைக்குள் நுழைந்தேன். எனது கண்கள் லேசாக இருட்டி, தலைசுற்றியது. சுவரைப் பிடித்த படி ரிசர்ச் புத்தகங்கள் இருந்த ஷெல்பை ஆவேசமாகக் கீழே கவிழ்த்தேன். உள்ளிருந்த புத்தகங்கள் தரையெல்லாம் சிதறி விழுந்தன. வெறி கொண்டவன் போல ஒவ்வொரு புத்தகமாக பிரித்துப் பார்த்து, வீசி எறிந்து விட்டு, அடுத்த புத்தகம் பிரித்துப் பார்த்து... ஒரு நீல நிற ஃபைல் தனித்துக் கிடந்தது.

பாய்ந்து, அதை எடுத்தேன். பிரித்தேன். உள்ளே ஒரு ஒற்றை காகிதம். டாக்டர் எப்போதும் பயன்படுத்தும் டர்க்கய்ஸ் நீல நிற மையில், ஒற்றைப் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த மிகச்சுருக்கமான கடிதம்!

‘‘டியர் சத்யன்... இந்தக் கடிதத்தை நீ எடுத்து படிக்கக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகக்கூடாது என்பதே எனது பிரார்த்தனை. எனது பிரார்த்தனைகள் கேட்கப்படாது போய், ஒருவேளை நீ இந்தக் கடிதத்தை எடுத்து படிக்கிற சூழல் உருவாகுமானால்... உனக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். நீ எனக்கு மட்டுமல்ல, உனக்கும் சேர்த்தே துரோகம் இழைத்து விட்டாய்...’’

னது கண்கள் பார்வையிழந்தது போல மிகவும் இருட்டின. கண்களை அழுந்தத் தேய்த்த படி, அந்தக் கடிதத்தை மேலும் தொடர்ந்தேன்.

‘‘உன்னை முழுவதும் நம்பினேன். ஆனாலும் ஏதோ ஒரு அச்சம் எனக்குள் உள்ளூற உறைந்து கிடக்கவே செய்கிறது. நடமாட முடியாமல் நான் படுத்துக் கிடக்கும் நிலையில் நினைவுகள் திரும்புவதற்கான மருந்தை நீ எனக்கு ஒருவேளை செலுத்தாமல் ஏமாற்றி விட்டால்..? ஏஜ் ரிவர்சலுக்குப் பிறகு நான் இன்னொரு லின்ஸி போல நடைபிணமாக அல்லவா வாழவேண்டும்? அப்படி நடந்தால்... அது மிகப்பெரிய துரோகம் அல்லவா? அப்படி ஒரு துரோகம் செய்பவரை சும்மா விடமுடியுமா?’’

பார்வை மிகவும் மங்கலாக... கடிதத்தை எனது கண்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு வந்து... எஞ்சிய வரிகளை ஆவேசத்துடன் படித்தேன்.

‘‘ரேடியேஷன் ஆகும் என்று சொல்லி, மூன்று நாட்கள் உனக்கு ஊசி போட்டேன் இல்லையா? ஸாரி சத்யன். அது பொய். ரேடியேஷன் எதுவும் இந்த மருந்தில் இல்லை. அது, மூளையை முடக்கக்கூடிய மருந்து. மூளையில் நமது நினைவுகள், பழக்க வழக்கங்கள், சகலமும் ஸ்டோர் ஆகி இருக்கும் நியோ கார்டெக்ஸ், பிரிஃப்ரன்ட்ல் கார்டெக்ஸ், அமிக்டலா, செரிபெல்லம் மண்டலங்களை முடக்கி வைத்து விடும். இன்னும் கொஞ்சநேரத்தில நீ நினைவு இழந்துடுவ. உன்னை பழைய நிலைமைக்கு கொண்டு வர, உனது நினைவுகளை மீண்டும் மீட்டெடுக்க ஒரு மாற்று மருந்து இருக்கு. அது எனக்கு மட்டும் தான் தெரியும். 48 மணிநேரத்தில அதை செலுத்துனா நீ இயல்புக்கு திரும்ப முடியும். ஞாயிற்றுக்கிழமை ஈவ்னிங் வரை டைம் இருக்கு... நீ நியாயமா நடந்து, நான் ஏஜ் ரிவர்சல் ஆகி நார்மலா திரும்புனா ஞாயிற்றுக்கிழமை உனக்கு அந்த மருந்து கொடுத்து பழைய சத்யனா மாத்துறேன். சண்டே சந்திக்கலாம்! ஆல் தி பெஸ்ட்...’’

ந்த காகிதத்தை கிழித்து எறிந்து விட்டு ஆங்காரமாக எழுந்தேன். எனது நினைவுகள் அழியப் போகிறது. எனது வாழ்க்கை தொலையப் போகிறது. உடனடியாக ஏதாவது செய்தாகவேண்டும்... எழுந்தேன். எழுந்த வேகத்தில் கண்கள் இருட்டி... கீழே சாய்ந்தேன். எனது நினைவு அடுக்குகள் படு வேகமாக சுழன்று, சுழன்று என்னுள் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தன. உணர்விழந்து மயங்கிக் கிடந்த எனது காதுகளுக்குள், ‘‘சத்யன்... சத்யன்’’ என்று யாரோ கூப்பிடுவது புயல் காற்றைக் கடந்து வரும் ஒலியோசை போல இலக்கின்றி துல்லியமற்றுக் கேட்டது!

***

ரு வாரத்துக்குப் பிறகு...

‘‘இடுக்கி எஸ்பி ஆபீசா... சார், குட் மார்னிங். பீர்மேடு டிஎஸ்பி பேசறேன். இந்த கேஸ் கொஞ்சம் குழப்பமா இருக்கு. வெளிநாட்டு பையன். 25 வயசு இருக்கும். அவனோட பேரு, விபரம் எதுவும் அவனுக்கே தெரியலை. இங்க ஏன் வந்தான், அவன் யாருனு விசாரிச்சுப் பார்த்தோம். ஒண்ணும் தகவல் கிடைக்கலை. அவனோட ஒரு பொண்ணும், இன்னொரு இளைஞனும் இருக்காங்க. அவங்க கண்டிஷனும் அதே. ஏதாவது டிரக் யூஸ் பண்ணி மூளை பிசகி இருக்கான்னு தெரியலை. தொடுபுழா டிஸ்ட்ரிக்ட் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கோம். மெடிக்கல் ரிப்போர்ட் வந்ததும் அப்டேட் பண்றேன் சார். அங்க கொஞ்சம் புக்ஸ், கெமிக்கல்ஸ் இருந்தது. எல்லாம் தீயில் கருகி இருந்தது. என்கொயரி நடந்துகிட்டிருக்கு சார்...’’

போனை வைத்து விட்டு, பள்ளிக்குந்நு வீட்டில் இருந்து எடுத்து வந்த, தீயில் லேசாக கருகியிருந்த அந்த டைரியை மீண்டும் புரட்டினார் டிஎஸ்பி. எந்தப் பக்கத்திலும் ஒரு வார்த்தை கூட இல்லை. முதல் பக்கத்தில் மட்டும், வெஸ்லி ஆர்தர் என்று கையெழுத்திட்டு, ஒற்றை வரியில் இப்படி எழுதியிருந்தது...

‘‘இந்த பூமி உருண்டையில், சாத்தியப்படுத்தவே முடியாது என வரையறுக்கப்பட்ட செயல்களையும் சாத்தியமாக்கும் வல்லமை, வருங்காலத்திற்கு உண்டு...’’

நிறைவடைந்தது


(முதல் பாகம்...
டா  ர்  க் - one)

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


5 கருத்துகள்:

  1. கதை அருமை தம்பி. அறிவியல் புனைவுகள் அருகிவிட்ட இந்தக் காலத்தில் சுருக்கமாக அருமையான சிறுகதை எழுதி இருக்கிறீர்கள். சுஜாதா ஸ்டைல். நீங்கள் இதுபோல் இன்னமும் நிறைய எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்....

    பதிலளிநீக்கு
  2. கதைக்களம் சுவாரஸ்சியமானது. ஆர்தர் டைரி வரிகள் தான், சாத்தியமாக்காததை, எதிர்காலம் சாத்தியமாக்கும். மலையாள சினிமா போல் மெல்ல மெல்ல கதை சொல்ல தொடங்கி, ஒரு ஹை பிச்சில் சஸ்பென்சை ஏற்றி, இறுதியில் டுவிஸ்ட் வைத்து கதை நிறைவடைந்துள்ளது. இத்துடன் நிற்காமல் கதையை அடுத்த பாகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டுமென விழைகிறேன். அதேபோல் உங்களது அனைத்து கதைகளின் முக்கிய கதாபாத்திரங்களை ஒரு நாவல் போல் தொடரலாம். அதற்கான கதைகளம் ஏற்கனவே இங்குள்ளது.

    பதிலளிநீக்கு
  3. மிக நேர்த்தியான உயிர் அறிவியல் வார்த்தைகள் மூலம் ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு . அதெற்கெல்லாம் மேலே அறிவியல் இந்த பூமியில் எத்தனை மாற்றங்களை உருவாக்கும் என்பதும் அதை மனிதன் தனக்கே உரிய சுய நலத்தால் என்னெவெல்லாம் செய்வான் என்பதையும் உணர்த்துகிறது.


    பீர்மேடு மலைப்பகுதி க்குள் இந்த கதை மூலம் சென்று வந்த உணர்வை தருகிறது.

    பதிலளிநீக்கு
  4. முருகநோலன், பிட்லி கண்ணில் இந்த கதை பட்டால்... தமிழில் தரமான சயின்ஸ்
    பிக் ஷன் மூவி ரெடியாகிடும்... ஆனால் வி(க)தை நீங்க போட்டது சார்...

    பதிலளிநீக்கு
  5. சார்...... கதையைப் படித்தேன். மிகவும் அருமையாக இருந்தது.
    கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை இருந்த விறுவிறுப்பும், எதிர்பாராத திருப்பங்களும் அசர வைத்தன. ஒரு தனிமையான மலைப்பிரதேசத்தை (ஏலப்பாறை, குட்டிக்கானம், வாகமண்) தேர்ந்தெடுத்து, அதை உலகளாவிய ரகசிய 'டார்க் ரிசர்ச்' பின்னணியுடன் இணைத்தது உங்களது சிறப்பான படைப்பாற்றலைக் காட்டுகிறது.
    குறிப்பாக, சத்யனின் துரோகம் வெளிப்படும் காட்சியும், இறுதியில் வெஸ்லி ஆர்தரின் "ரேடியேஷன் பொய்" மற்றும் சத்யன் தனது நினைவுகளை இழக்கும் அந்த இறுதிக் கட்டமும், ஒரு சிறந்த க்ளைமாக்ஸ்! அறிவியல் புனைகதைக்குரிய நம்பகத்தன்மையையும், பரபரப்பையும் மிகச் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறீர்கள்....

    சத்யன், பேராசையினால் துரோகம் செய்தபோது, கண்டுபிடிப்பின் பலனை அனுபவிக்க முடியாமல், இறுதியில் எல்லாவற்றையும் இழந்து, நினைவுகூட இல்லாத நிலைக்கு ஆளானான். நேர்மையற்ற வழியில் வரும் வெற்றி ஒருபோதும் நிலைக்காது என்பதை இந்த கதை விளக்கி கூறியிருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு கதையைப் படித்த போது எழுத்தாளர் சுஜாதாவை ஞாபகப்படுத்தியது.
    தொடர்ந்து இதுபோல பல சிறந்த படைப்புகளை எழுதுவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது எழுத்துப்பயணம் மென்மேலும் சிறக்கட்டும்!
    வாழ்த்துக்களுடன்,
    கம்பம் விஜி.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...