வியாழன், 1 ஜனவரி, 2015

‘ஐ’ சுட்ட கதையா; சொந்தக்கதையா?

மிழ் சினிமா இயக்குனர் சங்கரை... மன்னிக்கவும். ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. பிரமாண்டம் என்கிற தமிழ் வார்த்தைக்கு நிஜ  அர்த்தத்தை இவரது சினிமாக்களில் பார்க்கலாம். ஹீரோவும், ஹீரோயினும் ஒரு டூயட் பாடவேண்டும் என்று ஆசைப்பட்டால்... சுற்றுச்சூழல் தொலைந்தது.  மலையை தீவைத்து கொளுத்துவார். பாறைகளுக்கு பெயிண்ட் அடிப்பார். இன்னும் என்னென்ன அக்கப்போர் இருக்கிறதோ... அத்தனையும் செய்வார். ஆனால், சுற்றுச்சூழல் கெடுகிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ரசிக்க பழகிக் கொள்ளவேண்டும். மலை தீப்பிடித்து எரிந்து நிஜத்தில் நீங்கள்  பார்த்திருக்கிறீர்களா? பார்க்கத்தான் முடியுமா? ஷ்ஷ்ஷங்கர் படங்கள் இல்லையென்றால், இதெல்லாம் எப்படி பார்ப்பதாம்?


ஹீரோவோ, ஹீரோயினோ டீ குடிக்கிற சீன் எடுப்பதற்குக் கூட ஹெலிகாப்டர் ஷாட் வைத்து சில கோடிகள் செலவு செய்கிற நபர் இவர். அந்த வகையில்,  ஹாலிவுட் இயக்குனர்கள் கூட இவரைப் பார்த்து பிரமித்துப் போனதாக தகவல்கள் கைவசம் இருக்கின்றன. புரட்சி இயக்குனர் என்று நியாயமாக இவருக்கு  பட்டம் கொடுத்திருக்கவேண்டும். முதல் படத்திலேயே, இட ஒதுக்கீடு விஷயத்தை விமர்சனம் செய்து கதை செய்கிற துணிச்சல் எத்தனை பேருக்கு வரும்?

படம் எடுக்க பல கோடி செலவு, இப்போது பலரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். என்பதால், அடுத்தகட்டத்துக்கு போய்விட்டார் ஷ்ஷ்ஷங்கர். ‘ஐ’  படத்தின் ஆடியோ ரிலீசுக்கு அவர் செய்த செலவில், சில படங்களை தயாரித்து வெளியிட்டு விடலாம். அமெரிக்காவில் இருந்து அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகரை  தனி விமானம் அமர்த்தி அழைத்து வந்து, புதிய புரட்சி செய்திருக்கிறார். காசை கரியாக்குகிறார் என்றெல்லாம் பார்க்காமல், காசை கலையாக்குகிறார் என்ற  மாற்றுப்பார்வை பார்த்தால், ஷ்ஷ்ஷங்கரின் அருமை புரியும்.

அதெல்லாம் சரி. சமீபகாலமாக, (இல்லை... இல்லை... மிக நீண்டகாலமாகவே) தமிழ் சினிமாக்கள் போஸ்டரில் துவங்கி கதை, காட்சியமைப்பு, ஆடை  அலங்காரம் உள்பட சகல விஷயங்களிலும் ஆங்கில, கொரிய, ஜப்பானிய இன்னும் பல ஐரோப்பிய, ஆப்ரிக்க படங்களில் இருந்து உருவல் செய்து வறுவல்  போட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், ஷ்ஷ்ஷங்கர் மாதிரி ஓரிருவர் இருப்பதால்தான் தமிழ் சினிமா மானம், இன்னும் கப்பல் ஏறாமல் இரு க்கிறது என்று பூனைக்குட்டி போன்ற அப்பாவி ரசிக சிகாமணிகள் நம்பிக் கொண்டிருந்தனர். அதிலும் விழுந்து விட்டது இடி (பிரமாண்ட இடி!).

‘ஐ’ என்று படம் தயாரித்திருக்கிறார் இல்லையா ஷ்ஷ்ஷங்கர். அதுவும் உருவல் - வறுவல் படமே என்று ஆங்கில சினிமா அதிகம் பார்த்துத் தொலைக்கிற  நண்பர்கள் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள். ‘தி ஹன்ச்பேக் ஆஃப் நோடர் டேம்’ என்று 1939ல் வந்த ஆங்கிலப் படம் மற்றும் 1980ல் வெளியான 'தி ஃப்ளை' என்ற இரு சினிமாக்களின் உட்டாலக்கடிதான் ‘ஐ’ சினிமாவாம். இந்த மெசேஜ் மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஷ்ஷ்ஷங்கர் மீதுதான் நம்பிக்கை இருக்கிறது. ‘ஐ’ வரட்டும்...  மெசேஜ் போட்டவர்களின் முகத்தில் கரியைப் பூசட்டும்!

தமிழ் சினிமாவும்... உருவல்களும், 
பூனைக்குட்டியில் மேலும் படிக்க:

சூப்பர் காப்பி ஸ்டார்!

காப்பிஹாசன்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

5 கருத்துகள்:

  1. சிந்திக்கவும் சிரிக்கவும் அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  2. அடடா...! யும் மாட்டிக்கிட்டதே...!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  3. பூனையாரை தமிழக அரசு காப்பியடிப்பதினை பிடிக்கும் பறக்கும் படையில் சேர்ந்துவிடலாம்.பூனைப்படை பாதுகாப்பு பணி மட்டும் செய்யும் எனில் இங்கே புலனாய்வு அல்லவா செய்கின்றது. பூனையாரின் கலக்கலில் மெர்சலாயிட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. புரியாத புதிரை புரியும் படி பதிவுஅருமை

    பதிலளிநீக்கு
  5. ஆரம்ப கட்டத்தில்தான் கையில் இருக்கும் கதைகள் வெளியாகும். அப்புறம் இப்படித்தான் உருவி சமாளிக்க வேண்டும். டைம் இருக்காதே யோசிப்பதற்கு....அதான் பிஸியாகிட்டோம்ல

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...