ஞாயிறு, 21 டிசம்பர், 2014

சூப்பர் காப்பி ஸ்டார்!

‘திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள்’ என நடிகர்ஸ், இயக்குனர்ஸ் உங்களுக்கு சேதி அனுப்புகிறார்களா...? ரைட். நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.  ‘ஆங்கில டிவிடிகளை பார்த்து திருடுவதை நீங்கள் நிறுத்துகிற நாளில், திருட்டு டிவிடியில் படம் பார்ப்பதை நாங்களும் நிறுத்திக் கொள்கிறோம்...’ என்று  பதில் சேதி அனுப்புங்கள். இந்த ஜென்மத்தில், திருட்டு டிவிடி பற்றி இனி அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள்.


ள்ளிக்கூடத்துக்கு கையைப் பிடித்து கூட்டிச் சென்று. அங்கிருக்கும் யாரோ ஒரு அழகான குழந்தையை காட்டி, ‘இதுதான் எனது பையன்...’ என்று சொல்வதற்கும், ஆங்கிலப் படங்களை அப்பட்டமாக காப்பி அடித்து படம் எடுத்து, ‘எப்படி இருக்கு என்னோட மூவி மேக்கிங்?’ என்று காலர் உயர்த்திக்  கேட்பதற்கும், சத்தியமாக வித்தியாசம் இல்லை. ஆனால், தமிழ் சினிமாக்காரர்கள் நிலைமை இன்றைக்கு அப்படித்தான் இருக்கிறது. அடுத்தவர் குழந்தையை  தனதென்று கூறி ஆனந்தப்பட்டுக் கொள்கிற பரிதாப நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள். காரணம் இன்னதென்று விளங்கவில்லை.

தமிழில் வெளியாகிற 100 சினிமாக்களில் 97 சினிமாக்கள் ஆங்கில, கொரிய, ஜப்பானிய சினிமாக்களை காப்பியடித்தே வெளியாகிக் கொண்டிருக்கின்றன.  கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக தான்சானியா, உகாண்டா படங்களை காப்பியடிக்கிற திறமைசாலிகளும் இங்கிருக்கிறார்கள். எந்தெந்த இயக்குனர்,  நடிகர்ளை நீங்கள் மேதைகள் என்றும், ஞானிகள் என்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்கள் அத்தனை பேருமே உருவல் பார்ட்டிகள்தான்.  உலகின் ஏதோ ஒரு மூலையில் வெளியாகிற, வெளியில் தெரியாத படத்தை, தேடிப்பிடித்து சுட்டு, காட்சியமைக்கிறவர் மிகத் திறமையான படைப்பாளர்.

சந்திராயன் விண்கலம் தயாரித்து அனுப்பிய செலவுக்கு ஏறக்குறைய நெருக்கமான முதலீட்டில், சூப்பர் நட்சத்திரத்தின் சினிமா ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா... என்று கோபால் பல்பொடி விற்கிற அத்தனை நாடுகளிலும், அதையும் தாண்டியும் அந்தப் படத்துக்கு  ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருப்பதாக ‘பில்டப்’ கொடுக்கப்பட்டது. டிசம்பர் 12ம் தேதி தலைவன் பிறந்தநாளன்று படம் அவதரித்தது. முதல் காட்சியில்,  திரையரங்குகளில் நிற்பதற்குக் கூட இடமில்லை. பக்கத்தில் இருந்தவர் இடுப்பில் ஏறி உட்கார்ந்தெல்லாம் படம் பார்த்துத் திரும்பியதாக ரசிகர்கள் பிற்பாடு  பேட்டி கொடுத்தார்கள். அடுத்த காட்சி திரையிட்ட போது, தியேட்டரில் விட, பக்கத்து டீக்கடையில் கூட்டம் அதிகமிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த சினிமாவின் கதை திருடப்பட்டதாக நீதிமன்றங்களில் வழக்கு மேல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ‘அதெல்லாம் திருடவே இல்லை. நாங்களே ரூம்  போட்டு சிந்தித்து காட்சி அமைத்திருக்கிறோம்’ என்று படத்தோடு தொடர்புடைய மேதைகள் சத்தியம் செய்தார்கள். பூனைக்குட்டிக்கு ஒரு பிரத்யேக  வீடியோ கிடைத்திருக்கிறது. சூப்பர் நட்சத்திரத்தின் படக்காட்சிகள் எப்படி தயாராகிறது என்பதை இந்த இரண்டு நிமிட வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


 இந்த வீடியோவை தற்போது யூ டியூப் உள்பட சகல இணையவெளிகளில் இருந்தும் படக்குழுவினர் மிரட்டி நீக்கி விட்டனர். ஆனாலும்,  உண்மைக்கான சாட்சியமாக, சூப்பர் காப்பி ஸ்டாரின் வீடியோ இங்கு வெளியிடப்படுகிறது.

ரசிகர்கள் எழுதப்போகிற கடுமையான விமர்சனங்களுக்கு முன்கூட்டியே பதில் அளிக்க சித்தமாகியிருக்கிறது பூனைக்குட்டி. ‘காப்பி காட்சிகளுக்கு நடிகர்கள்  எப்படி பொறுப்பாவார்கள்? படத்தை எடுக்கிற இயக்குனர்கள் மீதுதானே குற்றம் சாட்டவேண்டும்?’ என்று கேட்கலாம். உண்மைதான். ஆனால், சூப்பர்  நட்சத்திரம் மற்றும் உலக நாயகன் போன்றவர்கள், தங்கள் படங்களில் நேரடியாக ஆளுமை செலுத்தக் கூடியவர்கள். அவர்கள் படங்களின் சகல  விஷயங்களுக்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டியது தார்மீகக் கடமை.

கூடுதல் தகவல்:
உலக நாயகன் சாரின் உருவல் வேலைகளை தெரிந்து கொள்ள பூனைக்குட்டியின் ‘காப்பி ஹாசன்’ படிக்கவும். இணைப்பு இங்கே..
‘காப்பி  ஹாசன்’
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...