புதன், 24 டிசம்பர், 2014

ஐயப்பா... ஏதாகிலும் செய்யப்பா!

டந்தவாரத்தில் ஒரு பின்னிரவு. அலுவலகப் பணி முடித்து, அதிகப்படியான பனியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வருகிற வழியில் ஒரு ஐயப்பன் கோயில். வெகு தூரத்தில் இருந்து அதை நெருங்கிக் கொண்டிருக்கும் போதே, கோயில் ஸ்பீக்கர்களில் இருந்து உரத்துக் கசிந்து வந்த அந்தப் பாடல், கொடும்  பனியையும் கடந்து என்னை கொஞ்சம் திடுக்கிட்டு நடுங்கச் செய்தது. மிக சமீபத்தில் வெளியாகி, டாஸ்மாக் பார்கள், தனியார் பஸ்கள், இளைஞர்கள் உல்லாசமாக சங்கமிக்கிற இடங்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிற படு பயங்கர குத்தாட்டப் பாடல் அது. ஐயப்பன் கோயிலில், குத்துப் பாடலு க்கென்ன வேலை என்கிற மனக் கிலேசத்துடன் கோயிலை இன்னும் நெருங்கினேன்.


கொஞ்சம் நெருங்கி, கோயில் நிலவரம் பார்வைக்குப் புலப்பட்ட போது எனது பதற்றம் இன்னும் சில டிகிரி எகிறியது. காரணம், முகம் முற்றாக மறைகிற  அளவுக்கு தாடி வளர்த்த / வளர்க்காத பல்வேறு ஐயப்ப சாமிகள், அந்த பாடலை ஆனந்தப் பெருக்கோடு அபிநயத்த படி கேட்டு புளகாங்கிதம் அடைந்து  கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தை கொஞ்சம் கூர்மையாக கவனித்த போது, அளவுக்கதிகமாக பக்திப் பெருக்கு தாண்டவமாடிக் கொண்டிருப்பது  தெரியவந்தது. ‘ஏ... இந்தா.. இந்தா...’ என்று உசுப்பேற்றுகிற வரிகள் வந்த போது, சில ஐயப்ப சாமிகள், உணர்ச்சி வசப்பட்டு கரகோஷங்கள் எழுப்பிய படியே  சரண கோஷங்களும் கூடுதலாக சேர்த்து முழக்கி, பாடலுக்கு இன்னும் மசாலா சேர்த்தார்கள்.

அடக்கொடுமையே... அய்யப்பன் கோயிலில், அடல்ஸ் ஒன்லி பாடலுக்கு ஆட்டம், பாட்டமா என என்னை நானே எதுகை, மோனையாய் நொந்து கொண்டு  கோயிலை மிகவும் சமீபித்தேன். மார்கழிப் பனி உடலை பாதித்து விடக்கூடாது என்பதற்காக இரு காதுகளையும் ‘ஷட் டவுன்’ செய்ய நான் பயன்படுத்தியிரு ந்த அந்த கம்பளி + கம்பியால் ஆன காது கவசத்தைக் கழற்றினேன். பாடல் வரிகள் இப்போது தெளிவாக காதில் விழுந்தது. வரிகளைக் கேட்டப் பிறகுதான்,  சுவாசம் சீரானது. நல்லவேளை. இது, ‘அந்த’ குத்துப்பாடல் இல்லை. அதே ராகம், அதே தாளம், அதே டெம்ப்டேஷன். வரிகள் மட்டும் வேறு. புத்தம் புதிதாக வந்து ஹிட்டடித்திருக்கும் குத்துப்பாடலை அப்படியே சுட்டு, வரிகளை மட்டும் ஐயப்பா... ஐயப்பா... என்று மாற்றி, பக்தி பெயிண்ட் அடித்திருக்கிறார்கள்.

இந்த குத்து பக்திப் பாடல், ஒரிஜினலுக்கு மிகவும் நெருக்கமாகவே இருந்தது. குத்துப்பாடலை படு கிறக்கமாக பாடிய பாடகி, பாடகரின் குரலை நகலெடுத்தது  போல, ஆட்களை தேர்வு செய்து இதற்கும் பாட வைத்திருக்கிறார்கள். சபாஷ். வரிகளும் கூட, நெருக்கமாகத்தான் மாற்றப்பட்டிருந்தன. ‘ம்.. ம்... ஏய்... ஏய்...’  என்கிற வரிகள், ‘சாமி.. சாமி... சரணம்... சரணம்...’ என்பதாகவும், ‘யப்பா... யப்பா..... ஏய்....’ என்று அனலடித்த வரிகள், ‘ஐயப்பா.. ஐயப்பா.... சாமீய்ய்ய்ய்...’  என்றும் படு இயல்பாக மருவியிருந்தன.

இப்போது, ஆடிக் கொண்டிருந்த ஐயப்ப சாமிகளை சற்றுக் கூர்ந்து கவனித்தேன். ஏறக்குறைய ஒரிஜினல் ஐயப்பன்  வயதையொத்த மாடர்ன் - டிரெண்டி - யூத் ஐயப்ப சாமிகளும், பதினெட்டு படிகளை கண்ணை மூடிக் கொண்டு தலைகீழாக கடந்து விடக்கூடிய அளவுக்கு  அனுபவம் வாய்க்கப்பெற்ற முதுநிலை ஐயப்ப சாமிகளும், ஒரே டெம்போவில் அந்த பாடலில் ஐக்கியமாகிக் கிடந்தனர்.

பிரசாதமாக அவர்கள் கொடுத்த சுடு பொங்கல், இரவுக் குளிருக்கு மிக உகந்ததாக இருந்தது. வாங்கிக் கொண்டு அங்கிருந்து கடந்த போது, சில கேள்விகள்  மனதில் மையம் கொண்டன. இது புதிதல்ல. அந்தந்த சீசனுக்கு வந்து ஆட்டம் போட வைக்கிற அத்தனை பாடல்களுமே, ஐயப்ப சீசனில் பக்திப்பாடல்களாக  அவதாரம் மாறி ஆட்கொள்வது பழைய விஷயம். பொதுவாக, கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள்... மேற்படி ஐயப்ப சாமிகளுக்கானவை. அதிகாலை  துவங்கி, பின்னிரவு வரை, அவர்களது பஜனை கோஷங்கள் முழுமையாக ஆக்கிரமித்திருக்கும். இருமுடி, விரதம், மலைவழிப்பாதை என்று சிறு வயதில்,  சபரிமலை பயணம் எனக்கும் வாய்த்திருக்கிறது. காலில் செருப்பு போடக்கூடாது. தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கக்கூடாது. அடுத்தவர் பயன்ப டுத்துகிற பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது என ஏகப்பட்ட கூடாதுகள்.

அதெல்லாம் விட உச்சம், இருமுடியை தலையில் சுமந்து கொண்டு சபரிமலைக்குக் கிளம்புகையில், ‘போய்ட்டு வர்றேன்...’ என்று சொல்லக்கூடாது. போனால்,  வருவது நிச்சயம் இல்லையாம்! இப்போதெல்லாம், பாத்ரூம் போய் விட்டு பாதுகாப்பாய் திரும்புவதற்குக் கூட ஒரு உத்தரவாதமும் இல்லை. போகிற வழியில்  புலி, யானை, சிறுத்தை, கரடி எல்லாம் ஏராளமாக திரியும். அதுகளுக்கு லஞ்ச் டைமாக இருந்தால்.... தொலைந்தது. கழுத்தைத் திருகி விடும் என்றெல்லாம்  மிரட்டி, எனது சபரிமலை பயணங்களை திகில் பயணங்களாக்கியிருக்கிறார்கள். ஐயப்பன் ஆசி பரிபூரணமாக இருந்திருக்கலாமோ... என்னவோ... ஒரு மர  அணில் கூட எனது பாதையில் கிராஸ் செய்ததில்லை.

யோசித்துப் பார்க்கையில், ஐயப்பன் குறித்த அதிகப்படியான புரிதல்கள் இல்லாமலே தமிழர்களோடும், தமிழகத்தோடும் அவர் மிகவும் நெருங்கியது எப்படி  என விளங்கவில்லை. புலிகளை நேசித்த கடவுள் என்பது காரணமாக இருக்குமா என தெரியவில்லை. உண்மையில், மற்ற கடவுள்கள் அளவுக்குக் கூட  ஐயப்பன் நமக்கு நெருக்கமில்லை. சிவபெருமான் என்று மனதில் நினைத்த நிமிடத்தில், கழுத்தில் பொம்மை பாம்புடன், முகத்தில் மிகை நடிப்புப் பொங்க...  ‘தட்சனின் யாகத்துக்கு எனக்கு அழைப்பு இல்லையா...? போ... தாட்சாயிணி... போ...!’ என்று ஒரிஜினல் சிவபெருமான் தோற்றுப் போகிற அளவுக்கு கம்பீரம்  காட்டி நிற்கிற சிவாஜிகணேசன் முகம் நினைவுக்கு வரும். சாமி கும்பிடும் போது கூட, சிவபெருமானாக சிவாஜிகணேசன் கட்டிய வேஷத்தை மனதில்  நினைத்து கும்பிட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். இதுபோல கிருஷ்ணனாக, பெருமாளாக, முருகனாக, ராமராக, நாரதராக, நிறைய நடிகர்கள் நடித்து, நமக்கு  அந்தக் கடவுள்களுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஐயப்பனுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டக்குறைவு என்றுதான் சொல்லவேண்டும். அவர் வேடத்தில் நடித்தவர்கள் எல்லாமே அதிகப்பட்சம் பத்து,  பதினைந்து வயது தாண்டாத சிறுவர்கள். என்பதால், ஐயப்பன் என்று நினைத்ததும்... சட்டென்று அவர் முகம் நினைவுக்கு வர மறுக்கிறது. கமலஹாசனோ,  ரஜினிகாந்தோ... அல்லது இளைய நடிகர்கள் விஜய், அஜித் போன்றவர்களோ... கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில் குறைந்தது விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன் போன்றவர்களையோ கூட, ஐயப்பன் வேடம் கட்டி சினிமா தயாரிக்கலாம்.
 ‘மலைடா... சபரிமலைடா....!’ என்று பஞ்ச் டயலாக் பொறி பறக்க...  ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா போன்றவர்கள் புராணகாலத்து டிரெஸ் போட்டுக் கொண்டு டான்ஸ் ஆடி, சேவகம் செய்கிறார்போல சினிமா எடுத்தால்... தமிழகத்தின்  பக்கம் திரும்பி நின்று அருளாசிகள் அள்ளி வழங்குகிற ஐயப்பனுக்கு நாம் செய்கிற பதில் மரியாதையாக, அது இருக்கும். கும்பிடத் தோன்றுகிற நேரத்தில்,  சிவகார்த்திகேயன் முக ஜாடையுடன் ஐயப்பனை நினைத்துப் பார்த்துக் கொள்ளவும் முடியும்.

கோயிலைக் கடந்து வெகு தூரம் வந்து விட்டேன். இப்போது புதிதாக வேறொரு குத்துப் பாடல் கோயில் ஸ்பீக்கரில் இருந்து ராகமாய் கேட்கிறது. இதுவும்,  ஐயப்பா... ஐயப்பா... என்பதாக பாடல் வரிகள் மாற்றி எழுதப்பட்ட பக்தி குத்துப்பாடலாகத்தான் இருக்கும். ஐயப்பனுக்கும், ஐயப்ப சாமிகளுக்கும் சரணம்.

வேறொன்றும் சொல்வதற்கில்லை!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. பூனைக்குட்டியின் நோக்கம் பிரசாதம். வரிசையில் நான்கைந்து முறை திரும்ப திரும்ப வாங்கியதால் ஐயப்ப சாமிகள் கோபப்பட வந்து கணனியில் உட்கார்ந்து இப்படி ஒரு கட்டுரை.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...